நெருங்கும் கர்நாடக தேர்தல் – வெறிபிடித்து அலையும் காவிக் கும்பல்

கர்நாடக மாநிலத்தில் சென்ற முறை நடந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை நடத்தியே பாஜக வெற்றி பெற்றது. இம்முறையும் பாஜகவிற்கு ஆட்சியமைக்கும் அளவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவேதான் மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் தங்களது பாசிச நச்சு அரசியலைக் கையிலெடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடக்கவிருக்கிறது. அம்மாநிலத்தில் தங்களது ஆட்சியை எப்பாடுபட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனக் காவிக் கும்பல் களமிறங்கியுள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர் ஒருவரை காவிக் கும்பல் கடந்த சனிக்கிழமையன்று அடித்துக் கொன்றுள்ளது. இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே நடந்து வந்த இதுபோன்ற கொலைகளைத் தற்போது தென்மாநிலங்களிலும் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

பாஜக, தான் ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் பசுவதை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து இஸ்லாமியர்களைக் குறிவைத்து தாக்க, அடித்துக் கொல்ல, தனது காவி பாசிசக் குண்டர் படைகளுக்கு சட்டரீதியான உரிமை வழங்கியுள்ளது. அதே போன்றதொரு சட்டம் கர்நாடகாவிலும் 2020ம் ஆண்டே கொண்டுவரப்பட்டது. தற்போது தேர்தல் நெருங்குவதால் இஸ்லாமியர்களை ஒடுக்க அந்தச் சட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

கர்நாடகாவின் உள்ளூர் சந்தையில் மாடுகளை வாங்கிச் சென்ற இத்ரீஸ் பாஷா என்ற இஸ்லாமியரை வழிமறித்து கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்துள்ளது பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரிலான காவி பாசிச குண்டர்படை.

கடந்த சனிக்கிழமையன்று இரவு சந்தையில் வாங்கிய மாடுகளை  வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்ற இத்ரீஸ் பாஷா என்ற இஸ்லாமியரை புனித் கெரேஹள்ளி என்பவன் தலைமையிலான குண்டர்படை ராம்நகரா அருகே தடுத்து நிறுத்தியுள்ளது.

 

கெரேஹள்ளி, யுவபடை மற்றும் இராம் சேனாவின் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படம்; நன்றி தி வையர்.

பசுக்களை கடத்துவதாகக் கூறி இத்ரீஸ் பாஷாவையும், அவரது வாகன ஓட்டுநர் சையத் ஜாஹீரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.  இத்ரீஸ் பாஷா மாடுகளை வாங்கியதற்கான ஆவணங்களை காட்டியபோதும் அவரை தாக்குவதை நிறுத்தவில்லை. அவரை பாகிஸ்தானுக்கு போ என்றும் மேலும், அவரிடம் 2 இலட்சம் பணம் கேட்டும் மிரட்டியுள்ளது. அவர் பணம் தர மறுத்ததால் மேலும் காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொலை செய்து சாலை ஓரத்திலேயே இத்ரீஸ் உடலை போட்டுச் சென்றுள்ளனர்.

வடமாநிலங்களில் நடப்பது போன்றே இங்கேயும் போலீசும், பசுப்பாதுகாப்பு குண்டர்களும் ஒன்றுக்குள் ஒன்றாக வேலைசெய்கின்றனர். இத்ரீஸ் பாஷாவைக் கொலை செய்த பிறகு போலீசில் சென்று இத்ரீஸ் பாஷாவும், வாகன ஓட்டுநர் சையத் ஜாஹீரும் பசுக்களை கடத்துவதாக, இந்த பசுபாதுகாப்பு குண்டர்கள் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

போலீசாரும் தங்கள் பங்கிற்கு, காவி பாசிச குண்டர்களால் தாக்கப்பட்ட, சையத் ஜாஹீரை பசுக்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்து கரசேவை செய்துள்ளனர். அதன் பிறகே சாத்தனூர் அருகே சாலையில் அனாதையாக கொல்லப்பட்டு கிடந்த இத்ரீஸ் பாஷாவின் உடலை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

தற்போது விசயம் ஊடகங்களில் அம்பலமாகி, பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளதால், சையத் ஜாஹீர் அளித்த புகாரின் பேரில் புனித் கெரேஹள்ளி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளான். அவனது குண்டர்படையின் மற்ற இந்துத்துவ வெறியர்கள் கைது செய்யப்படவில்லை.

கர்நாடக மாநிலத்தில் சென்ற முறை நடந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை நடத்தித்தான் பாஜக வெற்றி பெற்றது. இம்முறையும் கூட பாஜகவிற்கு ஆட்சியமைக்கும் அளவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவேதான் மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் தங்களது பாசிச நச்சு அரசியலைக் கையிலெடுத்துள்ளனர்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக நேரடியான வன்முறைத் தாக்குதல்களை நடத்தும் அதே சமயம் அரசியல் ரீதியிலும் அவர்களுக்கெதிரான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. அதனை கடந்த மாதம் அதிரடியாக நீக்கிய அம்மாநில அரசு, அந்த நான்கு சதவிகித இடஒதுக்கீட்டை, கர்நாடக ஓட்டுவங்கியில் செல்வாக்கு மிக்க சாதிகளான லிங்காயத்திற்கும் வொக்கலிகாவுக்கும் பிரித்து வழங்கியது. இதன் மூலம் இஸ்லாமியர்களை, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரின் இடஒதுக்கீட்டிற்கு எதிரியாக நிறுத்தியிருக்கிறது.

கடந்த வாரம் அம்மாநிலத்திற்கு வந்திருந்த அமித்ஷா, “மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு அரசியல் சட்டப்படி வழங்கப்படவில்லை. காங்கிரஸ் அரசு தனது பிளவுவாத அரசியலால் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது. பாரதிய ஜனதா கட்சி அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது.” என்று பெருமையாக பேசியுள்ளார்.

இதற்கு முன்னரும் கூட இஸ்லாமியர்களை, பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு எதிராக நிறுத்தும் வேலையை கர்நாடகாவில் காவிகள் செய்துள்ளனர். திப்பு சுல்தானைக் கொன்றது ஆங்கிலேயர்கள் அல்ல, இரண்டு வொக்கலிகா தலைவர்கள்தான் திப்புவைக் கொன்றனர் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்துக்களுக்கு எதிராக திப்பு சுல்தான் இழைத்த கொடுமைகள் தாங்காமல் உரி கெளடா மற்றும் நஞ்சே கெளடா சகோதரர்கள் திப்புவைக் கொன்றதாக ஒரு கதையைக் கட்டியுள்ளனர். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் குலைநடுக்கம் என அழைக்கப்பட்ட மாவீரன் திப்பு சுல்தானை ஆங்கிலேயர்களும், மராத்திய பேஷ்வாக்களும் நயவஞ்சகமாகக் கொன்றனர் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட உண்மை. அதனையே திரித்து திப்புவைக் கொன்றது வொக்காலிக சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று பொய் பரப்புகின்றனர்.

கடந்த மாதம் மோடி கர்நாடகா வந்த போது அவரை வரவேற்க வைக்கப்பட்ட அலங்கார வளையத்தில் இந்த இரு சகோதரர்களை வாழ்த்தும் அளவிற்கு காவிகளின் பிரச்சாரத்தில் இது பிரதான இடம் பிடித்தது.

இது குறித்து மேடைதோரும் முழங்கிவரும் காவிகள் அது போதாதென்று உரி மற்றும் நஞ்சே கௌடா சகோதரர்கள் குறித்த திரைப்படம் ஒன்றை எடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இவர்களது பொய்யைத் தாங்க முடியாமல் வொக்காலிக சமூகத்தைச் சேர்ந்த முக்கிய மடாதிபதியான நிர்மலானந்தநாதா மகாசுவாமி என்பவர் இவ்வாறு பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இருந்தும் அவர்கள் தங்களது பொய்ப்பிரச்சாரத்தை நிறுத்துவதாக இல்லை.

தற்போது கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தேர்தல் தேதி நெருங்க நெருங்க தங்களது வன்முறை வெறியாட்டத்தை காவிக் கும்பல் ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் (30/03/2023) ராம நவமி ஊர்வலம் என்ற பெயரில் கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தின் சென்னராயப்பட்டினம் பகுதியில் இஸ்லாமியர் குடியிருப்பு பகுதியில் ஊர்வலமாக சென்ற பஜ்ரங்தளத்தை சேர்ந்த குண்டர்கள் வேண்டுமென்றே இஸ்லாமிய வெறுப்பு முழக்கங்களை எழுப்பியதுடன் அந்தப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மீது கல்வீசித் தாக்கியுள்ளனர். இதனால் கோபமடைந்த இஸ்லாமியர்கள் திருப்பித் தாக்கியதில் பஜ்ரங்தளைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் இதுவரை அமைதியாக இருந்த அந்தப் பகுதியில் கலவரம் நடக்கும் அளவிற்கு சூழல் மாறியுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் தொடர்ச்சியாகத்தான் தற்போது பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் இஸ்லாமியரை அடித்துக் கொன்றுள்ள செயலையும் பார்க்க வேண்டியுள்ளது. அடுத்த மாதம் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ளதால் அதற்குள்ளாக மாநிலம் முழுவதையும் பதற்றத்திற்குள் கொண்டு செல்லவேண்டும் எனத் திட்டமிட்டு காவிக் கும்பல் களமிறங்கியுள்ளது.

  • அறிவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன