வேதாந்தாவிற்காக பழங்குடியினரை ஒடுக்கும் பாசிச பாஜக அரசு!
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஒடிசா மாநிலத்தின் ராயகடா, கலஹண்டி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடிகளும் தலித்துகளும் வேதாந்தா நிறுவனத்தின் நில ஆக்கிரமிப்புக்கும் போலீசின் அடக்குமுறைக்கும் எதிராக, ”எங்கள் திஜ்மாலி மலையை ஆக்கிரமிக்காதே” எனும் முழக்கத்தோடு தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
ஒடிசா மலைகளில் அலுமினியத்தைத் தயாரிப்பதற்கான பாக்சைட் தாது எனும் மூலப் பொருள் குவிந்து கிடக்கிறது. அங்குள்ள கலஹண்டி மாவட்டத்தில் உள்ள லஞ்சிகர் நகரில் வேதாந்தா நிறுவனம் தனது அலுமினிய சுத்திகரிப்பு ஆலையைக் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து இயக்கி வருகிறது.
வேதாந்தாவின் அலுமினிய சுத்திகரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து முழுமையான செயல்திறனுக்குக் குறைவாகவே இயங்கி வருகிறது. இதனால் கடந்த பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது துணை நிறுவனமான ஸ்டைர்லைட் மூலம் ஒடிசாவின் நியாம்கிரி மலையின் கீழ் புதைந்திருக்கும் பாக்சைட் வளத்தை அபகரிப்பதற்கான சுரங்கக் குத்தகையை வென்றது. ஆனால் பழங்குடி மக்களின் தீரமிக்க போராட்டத்தினாலும் அவர்கள் நடத்திய சட்டப் போராட்டத்தினாலும் இச்சுரங்கத் திட்டம் முறியடிக்கப்பட்டது.
சுமார் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நியாம்கிரி மலையில் சுரங்கம் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் அங்குள்ள பழங்குடி மக்களின் கிராம சபைகளுக்கே உள்ளது எனக் கடந்த ஏப்ரல் 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு ஐந்தாவது அட்டவணையின் கீழ் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகளும் அவர்களின் கிராம் சபை அதிகாரமும் புறந்தள்ளப்படுகிறது. மோடி அரசு கொண்டு வரும் புதிய சட்டங்கள் மலைகளையும் காடுகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தாரைவார்ப்பதைக் கிராம சபை தீர்மானம் கட்டுப்படுத்தாது என்று அறிவிக்கிறது.
ஒடிசாவில் பா.ஜ.க மாநில அரசு ஆட்சியைக் கைப்பற்றிய மூன்று மாதங்களிலேயே இலண்டனில் இருந்து பறந்து வந்து வேதாந்தா நிறுவனத்தின் தலைவரான அனில் அகர்வால் பா.ஜ.க மாநில முதல்வரைச் சந்தித்த பின்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை அம்மாநிலத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே திஜ்மாலி மலை சுரங்கக் குத்தகையைக் கைப்பற்றிய வேதாந்தா தற்போது கியோன் ஜாரில் ஒரு உலோகக் கலவை ஆலையையும், இரண்டு புதிய அலுமினிய ஆலைகளையும் அமைக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறது.
இதுமட்டுமின்றி ஒடிசாவில் ஏற்கனவே குத்ருமாலி மலையில் அதானிக்கும், பாப்ளிமாலி மலையில் பிர்லா குழுமத்திற்கும், கோடிங்காமாலி மலையில் ஒடிசா சுரங்கக் கழகத்திற்கும் சுரங்கக் குத்தகை வழங்கப்பட்டுள்ளன.
மோடி ஆட்சியின் கீழ் தற்போது நியாம்கிரி மலையை விட இரண்டு மடங்கு அதிகளவில் பாக்சைட் கனிமத்தைக் கொண்டிருக்கும் திஜ்மாலி மலையிலும் அதன் அடிவாரத்திலும் சுரங்கத்தை அமைப்பதற்காக வேதாந்தாவின் மைத்ரி எனும் துணை நிறுவனம் குத்தகை ஏலத்தை வென்றிருக்கிறது.
இதன்படி வேதாந்தா நிறுவனம் திஜ்மாலி மலையின் கீழ் புதைந்திருக்கும் 311 மில்லியன் டன் அளவிலான பாக்சைட்டை ஆண்டொன்றுக்கு 9 மில்லியன் டன் அளவில் வெட்டி எடுக்க முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்திற்காக ஒடிசா அரசு சுமார் 700 ஹெக்டேர் வனநிலம் உள்ளிட்டு 1550 ஹெக்டேர் நிலத்தை வேதாந்தா நிறுவனத்திற்கு அபகரித்துக் கொடுத்திருக்கிறது.
இதிலிருந்து வெட்டியெடுக்கப்படும் பாக்சைட் தாதுவையே வேதாந்தா நிறுவனம் லஞ்சிகரில் அமைத்திருக்கும் தனது அலுமினிய சுத்திகரிப்பு ஆலையில் முழு செயல்திறனில் இயக்குவதற்கான மூலப் பொருளாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது. வேதாந்தாவின் சுரங்கத் திட்டத்தால் தங்களது எதிர்கால வாழ்வு பாதிக்கப்படும் எனக் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்குள்ள பழங்குடிகளும், தலித்துகளும் போராடி வருகின்றனர்.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும், பழங்குடி மக்களும் போராடி வருகின்றனர். ஆனால் போராடும் மக்கள் மீது அரசுப் படைகளின் அடக்குமுறை, நில அபகரிப்பு என இரட்டை வெறி நாடு முழுவதுமுள்ள மக்கள் மீது ஏவப்பட்டு வருகிறது.
மோடி அரசு கூறுவது போல வளர்ச்சிக்குத்தான் திஜ்மாலி மலை ஆக்கிரமிக்கப்படுகிறது என்றால், அங்குள்ள மக்களிடம் முறையாகக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அவர்களின் ஒப்புதலோடு இச்சுரங்கத் திட்டத்தைத் தொடங்கியிருக்க வேண்டும்.
ஆனால் ஒடிசா போலீசோ, அப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் மீது சுரங்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடியதற்காகப் பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டதற்காகச் சுமார் 170 பேர் மீது கலவரம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி மற்றும் ஆயுதப் பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 1000 பேருக்கும் மேலாகப் போலீசாரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர். அம்மக்களை அவர்களது கிராமங்களிலிருந்து வெளியேற விடாமலும் நடமாட முடியாமலும் போலீசாரும் துணை இராணுவத்தினரும் முடக்கி வைத்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 2023 ஆம் ஆண்டு கலஹண்டி மாவட்ட நிர்வாகத்தால் சுரங்கத் திட்டத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நகர்ப்புறங்களில் இருந்தும் லாரிகள் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். கிராம சபை ஒப்புதல் என்ற பெயரில் போலியான கையெழுத்துக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற அப்பழங்குடி மக்களோ போலீசாராலும் துணை இராணுவத்தினராலும் தடுக்கப்பட்டனர். ஆனால் இதையும் மீறி இரவு முழுவதும் மலைப்பாதையின் வழியாக நடந்தே வந்து கிராம சபைக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
தற்போது வரையிலும் வெளியாட்கள் யாரும் அம்மலைக் கிராமத்திற்குள் நுழைய முடியாமல் போலீசு தடுத்து வருகிறது. போலீசின் அடக்குமுறைக்கும் வழக்குகளுக்கும் அஞ்சி அக்கிராமத்தின் பல ஆண்கள் காடுகளில் தற்போது தஞ்சம் புகுந்துள்ளனர்.
பா.ஜ.க அரசின் கீழ் நீதிமன்றமும் பழங்குடி மக்களுக்கு எதிராகவே நிற்கிறது. திஜ்மாலி சுரங்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடியதற்காகப் போலீசால் கைது செய்யப்பட்ட 8 பேரைப் பிணையில் விடுவிப்பதற்கான நிபந்தனையாகக் காசிப்பூர் போலீஸ் நிலைய வளாகத்தைத் தினமும் காலையில் சுத்தம் செய்ய வேண்டும் என ஒடிசா மாநில நீதிமன்றம் சாதிய நோக்கில் நிபந்தனையொன்றை விதித்திருக்கிறது. இத்தீர்ப்பு ஒடிசாவில் பா.ஜ.க அரசு ஆட்சியைக் கைப்பற்றிய பிறகே அளிக்கப்பட்டிருக்கிறது.
இத்தனையும் போதாதென்று, அமைதி வழியில் போராடும் பழங்குடிகளையும், தலித்துகளையும் வன்முறையாளர்களாகச் சித்தரித்துத் தனது அடக்குமுறையை நியாயப்படுத்தும் நோக்கில் ஒரு சதியைப் பா.ஜ.கவின் டபுள் எஞ்சின் சர்க்கார் அரங்கேற்றியிருக்கிறது.
ஒடிசாவில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து வேதாந்தாவின் சுரங்கத் திட்டத்தை விரைவுப் படுத்துவதற்காகச் சாலைகள் அமைக்கும் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தங்கள் கிராமத்தில் சாலையை அமைக்கக் கூடாது என அம்மக்கள் கடந்த இரண்டு மாதங்களாகத் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
சாலை அமைக்க வரும் வாகனங்கள் நுழைய முடியாதபடித் தடுப்பணைகள் அமைத்து அங்கு வசித்து வருகின்றனர். சுழற்சி முறையில் கூடாரத்தில் தங்கிச் சாலை அமைப்பதைத் தடுத்து வருகின்றனர். பழங்குடிகள் கூட்டமாகச் சாலை அமைக்கும் பணியை எதிர்ப்பதால் பா.ஜ.க மாநில அரசு பாரதிய நாகரிக் சுரக்ஷா (BNS) 163 பிரிவின் கீழ் காசிப்பூர் உள்ள சுங்கர் பஞ்சாயத்தில் கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பேருந்துகளிலும், பொலீரோ வாகனங்களிலும் வரும் போலீசார், அங்குள்ள பழங்குடி மக்களிடம், திஜ்மாலி மலை விற்கப்பட்டுள்ளது என்றும் அம்மக்கள் அங்குத் தங்க உரிமை இல்லை என்றும் பட்டாவைக் கேட்டுத் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள்.
இதன் உச்சக்கட்டமாகக் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதியன்று திஜ்மாலி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடும் முன்னணியாளரான மாஜி என்பவரைக் கைது செய்வதற்காகச் சுமார் 200 போலீசார் 12 பிரிவுகளாக வந்துள்ளனர். அக்கிராமங்களில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு வீடு வீடாகச் சோதனை என்ற பெயரில் தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளனர்.
அதிகாலையில் நடத்தப்பட்ட போலீசாரின் இத்தேடுதல் வேட்டையின் போது கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டுள்ளது. பெண்கள் உட்பட 60 பழங்குடியினர் இருட்டில் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால் அக்கிராம மக்கள் போலீசாரைத் தாக்கியதாகவும் பல போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஒடிசா பா.ஜ.க அரசு கபடநாடகமாடி வருகிறது.
கலஹண்டி மாவட்டத்தில் நடைபெற்று வரும் போலீசாரின் கொடூரத் தாக்குதலுக்கு எதிராகவும் பா.ஜ.க அரசின் கார்ப்பரேட் நலனுக்கு எதிராகவும் அங்குள்ள ஜனநாயக சக்திகள் குரல் எழுப்பி வருகின்றன.
மோடி அரசு மக்களுக்கான அரசு அல்ல; அது கார்ப்பரேட் முதலாளிகளின் மூலதனத்தைக் காப்பதற்காகச் சொந்த நாட்டு மக்களை அடக்குமுறைக்குள்ளாக்கும் கார்ப்பரேட் நலன்களுக்கான அரசுதான் என்பதையே ஒடிசாவில் தொடரும் மக்கள் போராட்டம் மீண்டும் நிருபித்துக் காட்டுகிறது. கார்ப்பரேட் நலன்களைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் எதிரியை வீழ்த்துவது ஒன்றுதான் நாட்டு மக்களின் முன்னுள்ள ஒரே வழி. மோடி அரசுக்கெதிரான போராட்ட ஒற்றுமையைக் கட்டியமைப்பதுதான் நாட்டு மக்களின் இன்றைய அவசரத் தேவையாக இருக்கிறது!
- தாமிரபரணி



