மக்களின் மீது பாயும் போலீஸ் ஆளும்வர்க்கத்தினரிடம் வாலாட்டுவது ஏன்?

செப்டம்பர் 29, 2026
மக்களின் மீது பாயும் போலீசு, ஆளும் வர்க்கத்தின் குற்றங்களுக்கு முன் வாலைச் சுருட்டிக் கொள்கிறது. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கொலை வழக்குகளில் நீதிக்காகப் போராடிய மக்களை ஒடுக்கிய போலீசும், கிரானைட் வீரமணி விவகாரத்தில் நடந்துகொண்ட விதமும் அதன் வர்க்கத் தன்மையை அம்பலப்படுத்துகின்றன.

“நாய் வாலை நிமிர்த்த முடியுமா, போலீசைத் திருத்த முடியுமா” என்ற சொலவடை போலீசின் காட்டுமிராண்டித்தனத்தைக் குறிப்பதற்காகப் பரவலாகப் பயன்படுத்தக்கூடிய ஒன்று. இதையே வர்க்கக் கண்ணோட்டத்தில் சொன்னால், தங்களது அடிப்படை உரிமைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடும் உழைக்கும் மக்களை, ஆளும்வர்க்கத்தின் நலனுக்காக அதன் காவல் நாயாக இருந்து ஒடுக்குகின்ற வேலையைச் செய்கின்ற அரசின் பிரதான ஒடுக்குமுறைக் கருவிதான் போலீசு .

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேரைக் கொன்றதாகட்டும், வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது கடுமையான ஒடுக்குமுறையை ஏவியதாகட்டும், தண்ணீர், மின்சாரம், டாஸ்மாக் மூட வேண்டி தெருக்களில் போராடும் மக்களின் மண்டையை உடைத்து பொய்வழக்குப் போடுவதாகட்டும் இவையனைத்தையுமே ஆளும்வர்க்க நலனுக்காகவே போலீஸ் செய்கிறது.

ஆனால் நம்மிடமோ, பத்து சவரன் திருட்டுப் போனால் ஐந்து சவரனை ஆட்டையைப் போட்டு மீதமுள்ள ஐந்து சவரனோடு போட்டோ எடுத்து “போலீஸ் உங்களது நண்பன்” “பெண்களின் பாதுகாப்பே எங்களது மூச்சு” என்று விளம்பரப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் மக்கள் போலீசை நம்புவதில்லை. “பிரச்சினைன்னு போலீஸ் ஸ்டேஷன் போனா இருக்கறதையும் புடுங்கிக்கிட்டு விட்டுறுவானுங்க” என்பதே மக்களின் மனநிலை.

இருந்தாலும் இந்த முதலாளித்துவ அரசுக் கட்டமைப்புக்குள் கொலை, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள், சட்டவிதிமீறல்கள் என அன்றாடம் நாம் பாதிக்கப்படுவதனால் தவிர்க்க இயலாதவாறு போலீசை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் போலீசோ மக்களை அதிகாரத் திமிரோடுதான் அணுகுகிறது. கடந்த வாரம் கூட கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்திய மக்கள் மீதே வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழகப் போலீசு.

மதுரை ஆனையூர் கூடல் புதூரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் தமிழ்ச்செல்வன். இந்த மாதம் ஐந்தாம் தேதி, விளையாட வெளியே சென்றவன் வீடு திரும்பவில்லை. மறுநாள் அருகில் உள்ள ஒரு குட்டை முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சந்தேகத்துக்குரிய மரணம் என்று போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் இக்கொலை தொடர்பான உண்மை அறியும் குழுவின் அறிக்கையோ, வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால் தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறது. பெற்றோர்களும் இதே சந்தேகத்தையே எழுப்புகின்றனர். எனவே இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றவும் சிபிசிஐடி விசாரணைக்கு விட உத்தரவிடக் கோரியும் தமிழ்ச்செல்வனின் உறவினர்களும் பல்வேறு சமூக அமைப்புகளும் மூன்று வாரமாகப் போராடி வருகின்றனர்.

போலீஸோ, எந்தக் கோணத்தில் வழக்கு நடத்த வேண்டும் என்று எங்களுக்கு மேலிருந்து சொல்லப்படுகிறதோ அதன்படிதான் நடத்த முடியும். நீங்கள் சொல்வதைப் போல் செய்ய முடியாது என்று மிரட்டியிருக்கிறது. கொலைக் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று கமிஷனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியவர்களைப் பலாத்காரமாகக் கைது செய்துள்ளது போலீஸ்.

மேலும் கமிஷனர் அலுவலகம் நோக்கி பதாகையுடன் சென்ற தமிழ்ச்செல்வனின் உறவினரைப் பெண் என்று கூடப் பாராமல் இரண்டு கால்களுக்கிடையே அந்தப் பெண்ணின் தலையை ஒரு போலீஸ் இருக்கியிருக்கிறார் மற்றொரு போலீஸ் காலைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். கொலை செய்யப்பட்டு மூன்று வாரங்களாகியும் கொலைக்கான காரணங்களையும் குற்றவாளிகளையும் கண்டுபிடிக்காத போலீஸ் நீதிக் கேட்டுப் போராடுகின்ற மக்களைத் தண்டித்துள்ளது.

கடந்த வாரம் காளையார் கோவில் கொடிக்காடு கண்மாய்க்கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இருவர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இவ்வழக்கில், கொலை செய்த ஐந்து பேரை போலீஸ் கைது செய்துள்ளது. ஆனால் கொலையாளிகளோ, நாங்கள் கொலை செய்யத் திட்டமிட்டது இவர்களையல்ல, ஆள் மாறிவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளதாகப் போலீஸ் தரப்புக் கூறுகிறது. அப்படியென்றால் யாரைக் கொல்லத் திட்டமிட்டார்கள்? இக்கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு இரண்டு நாட்களாகப் போராடிய அப்பகுதி மக்களை அடித்து விரட்டியிருக்கிறது சிவகங்கை போலீஸ். மேலும் போராடியவர்களில் எழுபது பேரின் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். உண்மையைக் கண்டுபிடியுங்கள் எனப் போராடிய மக்கள் மீது எதற்கு வழக்கு?

இவ்விரு கொலையிலும் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் நீதி வேண்டியும், விசாரணைகளில் ஒருசார்பாகவும், மெத்தனமாகவும் நடந்துகொள்ளும் போலீஸை கண்டித்து போராடும் மக்கள் மீது ஏன் அடக்குமுறையை ஏவ வேண்டும், பொய்வழக்குகளைப் போட வேண்டும் என்பதே மையமானக் கேள்வி. இதே போலீசும் அதிகார வர்க்கமும் பாலியல் பொறுக்கி கிரானைட் வீரமணியை எவ்வாறு அணுகியது?

இருபது வருடங்களுக்கும் மேலாக பல சிறுமிகளைப் பாலியல் ரீதியாகச் சீரழித்து வந்துள்ளான் கிரானைட் தொழிலதிபரான வீரமணி. 2003இல் இவனது பாலியல் துன்புறுத்தலினால் ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக போலீசு கூறுகிறது. குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர் ஒருவர் கடந்தாண்டு கொடுத்த புகாரின் அந்தாண்டு அக்டோபரில் வீரமணி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இவ்வழக்கை விசாரித்த போலீசோ, இவ்வழக்கு குறித்து போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதைக் கைவிடப்பட வேண்டும் என்று இந்தாண்டு பிப்ரவரியில் நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி மேற்கொண்டு விசாரணைக்கு உத்தரவிடவே, கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல, இவனது பாலியல் குற்றங்களின் விவரங்களும் அதற்கு உடந்தையாக அதிகாரமட்டத்தில் இவனுக்கு இருந்த தொடர்புகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன. இருபது வருடங்களாகப் போலீசுக்கு வீரமணியின் பாலியல் குற்றங்கள் தெரியாமலா இருந்திருக்கும். பல வருடங்களாக போலீசின் கண்காணிப்பிலிருந்து வீரமணி தப்பித்தது எப்படி? கடந்தாண்டு போடப்பட்ட வழக்கில் இருந்து தப்பிப்பதற்கு கூட எழுபது கோடிவரை, போலீசுக்கும் அதிகாரிகளுக்கும், வீரமணி செலவழித்திருப்பதாகப் பத்திரிக்கைகள் கூறுகின்றன.

மேற்சொன்ன நிகழ்வையும் வீரமணி வழக்கையும் போலீஸ் கையாண்டதை ஒப்பிட்டுப் பாருங்கள். சாதாரண மக்கள் என்றால் காட்டுமிராண்டிகளாக நடந்து கொள்வதும், விசாரணையைத் தாமதப்படுத்துவதும், பொய்வழக்குப் போடுவதும், சிறையிலேயே கொலை செய்வதையும் தனது உரிமையாகக் கருதும் போலீசு அதிகார வர்க்கத்தினர், தொழிலதிபர்கள் தொடர் குற்றங்கள் செய்தாலும் வாலை ஆட்டிக் கொண்டு அவர்களைக் காப்பாற்றும் நாயாக நடந்து கொள்வதே வெளிப்படையாகத் தெரிகிறது.

போலீசின் ஆராஜகங்களுக்காக அவர்களைச் சட்டங்கள் மூலமாகத் தண்டிப்பதற்கோ அல்லது மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக மாற்றுவதற்கோ தற்போதைய அமைப்பில் வாய்ப்பும் இல்லை. காரணம் வர்க்கச் சமூகத்தில் ஆளும்வர்க்கத்தின் நலனுக்காக பெரும்பான்மை மக்களை ஒடுக்குவதே போலீசின் பணி. எனவே அதனைக் கலைப்பதைத் தவிர வேறெந்த வழியும் இல்லை.

  • மாணிக்கம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன