பாலியல் குற்றவாளி வீரமணியை என்கவுண்டர் செய்யுமா தமிழ்நாடு போலீசு?
சிறு குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்கில் கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டிருக்கிறான். வீரமணியின் பாலியல் குற்றங்களுக்கு துணையாக இருந்த அவனது கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வீரமணி கைது செய்யப்பட்டது, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது, போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டது உள்ளிட்ட புகைப்படங்களோ அல்லது அவர்களது கூட்டாளிகள் கைது உள்ளிட்ட படங்களோ கூட முன்னணி பத்திரிக்கைகளில் வெளிவரவில்லை. அந்த அளவிற்கு வீரமணி குறித்த தகவல்களைப் பாதுகாக்கின்றனர். கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாலும் கோடீஸ்வர முதலாளியான வீரமணிக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு இராஜ மரியாதையுடன் நடத்தப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.
தற்போதுள்ள தவெக அரசு வீரமணியைக் கைது செய்திருந்தாலும், இதனை திமுகவிற்கு எதிராக இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதுதான் அவர்களது நோக்கம். விஜய் உட்பட பல தவெக அமைச்சர்கள் தங்களது பிரச்சார மேடையில் திமுகவினைத் தாக்கிப் பேசியிருக்கிறார்கள்.
அதுமட்டுமன்றி பாலியல் குற்றவாளி வீரமணி, குழந்தைகளுடன் இருக்கும் காணொளி செய்தித் தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கப்பட்டு ஒளிபரப்பட்டுள்ளது. இது யாரால் கொடுக்கப்பட்டது என்பதைக் கூட தவெக அரசு கண்டுகொள்ளவில்லை. துளிர் என்ற குழந்தைகள் பாதுகாப்புத் தன்னார்வத் தொண்டு அமைப்பு குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை காணொளிகள் பகிரப்படுவதைத் தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் குழந்தைகளின் காணொளிய ஒளிபரப்பக் கூடாது எனத் தடைவிதித்துவிட்டு கூடவே இந்த வழக்கு குறித்து யாரும் விவாதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறது.
பொதுவாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து விவாதிக்கலாம் ஆனால் குறிப்பாக வீரமணி வழக்கு குறித்தும், அதன் உண்மைச் சம்பவங்களின் பின்னணி (factual matrix) குறித்தும் விவாதிக்கக் கூடாது எனத் தனது தீர்ப்பில் உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.
வீரமணி வழக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகளை வெளியிடுவதற்குத் தடை விதிப்பது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தனியுரிமையையும் விசாரணையின் நலனையும் பாதுகாக்கும் நடவடிக்கை. அது சரியானதுதான். ஆனால், அதே நேரத்தில் வழக்கின் பின்னணி, கடந்த கால விசாரணை எவ்வாறு கையாளப்பட்டது, தமிழ்நாடு போலீசு வழக்கை முடித்து வைக்க முயற்சி செய்தது, அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் பங்கு என இவை அனைத்தும் குறித்த பொது விவாதத்தையும் இந்தத் தீர்ப்பு முடக்குகிறது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு அவசியம், ஆனால் அந்தப் பாதுகாப்பு என்ற பெயரில், வழக்கைச் சுற்றியுள்ள அதிகாரிகள், அரசியல் தொடர்புகள், இந்த வழக்கு விசாரணையின் முந்தைய நடவடிக்கைகள் மற்றும் அரசின் பொறுப்பு குறித்து பொதுமக்கள் விவாதிக்கும் உரிமையும் சேர்த்து முடக்கப்பட்டுள்ளது.
இதே போன்று பொது வெளியில் விவாதிக்கக் கூடாது என கடந்த காலங்களில் நீதிமன்றம் தடை செய்த வழக்குகள் என்னவாகின என்பது குறித்து இன்றைக்கு யாருக்கும் தெரியாது. சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் போக்ஸோ வழக்கிலும், கலா சேத்ரா வழக்கிலும் நீதிமன்றம் இதே போன்ற தடையை விதித்தது.
பத்மா சேஷாத்ரி வழக்கில் விசாரணை நடைபெற்ற போது பல பெற்றோர்கள் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் குறித்து ஏற்கெனவே பல முறை புகாரளித்தும் அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் நிர்வாகம் அவரைப் பாதுகாத்ததாகக் கூறினார்கள். ஆனால் அது குறித்து எந்த விசாரணையும் இல்லை. குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை அளித்திருக்கிறது, ஆனால் நிர்வாகம் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படவில்லை, நீதிமன்றத் தடையின் காரணமாக பெற்றோர்களது கருத்து பொது வெளியில் விவாதிக்கப்படவும் இல்லை.
இதே நிலைதான் கலா சேத்ரா வழக்கிலும் நடந்தது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு அந்த வழக்கு ஊற்றி மூடப்பட்டுவிட்டது. வழக்கு குறித்து விவாதிக்கக் கூடாது என உத்தரவிடுவது பல நேரங்களில் குற்றவாளிக்கும், அவரது நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களுக்கும் சாதகமாகவே முடிந்திருக்கிறது.
நீதிமன்றம் இப்படி என்றால், போலீசைப் பற்றிக் கூறவே வேண்டியதில்லை. இந்த வீரமணி குழந்தைகள் மீது பாலியல் வன்முறையை ஏவுகிறான் என்பது 2003 ஆம் ஆண்டே போலீசுக்குத் தெரியும், அதிகார வர்க்கத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும் தெரியும். இருந்தும் எல்லா அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் பொது நிகழ்ச்சிகளில் இவனோடு மேடையில் ஒன்றாகப் பங்கேற்பது, கை குழுக்குவது என நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். காங்கிரசுக் கட்சியில் ப.சிதம்பரம் தொடங்கி மூன்று மாதங்களுக்கு முன்னர் அமைச்சர்களான தவெகவினர் வரை எல்லோரும் இதனைச் செய்திருக்கிறார்கள்.
ஒருவருக்கு பண பலமும் அரசியல் செல்வாக்கும் இருக்கிறது எனத் தெரிந்துவிட்டாலே தமிழ்நாடு போலீசு அவரிடம் பணிவு காட்டத் தொடங்கிவிடும். பல சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வீரமணியைக் கையாள்வது போன்று மற்ற குற்றவாளிகளைப் போலீசு கையாள்வதில்லை. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று கோவையில் 14 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். இதே போன்று 2010-இல் கோவையில் இரண்டு குழந்தைகள் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் என்கவுண்டர் செய்து கொன்றனர். ஆனால் வீரமணியைக் கைது செய்தது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கே கூடத் தெரிவிக்காமல் இரகசியமாக கைது செய்திருக்கின்றனர். புகைப்படம் கூட பத்திரிக்கைகளுக்குக் கொடுக்கவில்லை.
பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள் மட்டுமல்ல சாதாரண குற்றங்களைச் செய்தவர்களையும் கூட நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் முன்னதாக கடுமையாகத் தாக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு போலீசு. பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கை கால்கள் உடைக்கப்பட்டு கட்டுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நாம் தினந்தோரும் செய்திகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வீரமணியின் முன்னாள் சுட்டு விரலைக் கூட போலீசார் நீட்ட மாட்டார்கள்.
ஒரு வழக்கில் ஒருவர் மீது சந்தேகம் என்றால் சினிமாவில் வருவது போல போலீசார் அவரை விரட்டியெல்லம் பிடிப்பதில்லை. அவரது குடும்பத்தில் இருக்கும் நெருங்கிய உறவினர்களையோ, தந்தையையோ, தாயையோ, மனைவியையோ பிடித்து வந்து போலீஸ் ஸ்டேசனில் வைத்து மிரட்டி குற்றம் சாட்டப்பட்டவரை ஸ்டேசனுக்கே வரச் செய்து கைது செய்வதுதான் போலீசாரின் வழக்கம். இந்த வழக்கப்படி வீரமணியின் குடும்பத்தை நடத்துவார்களா தமிழ்நாடு போலீசார்.
சாதாரண கோயில் காவலாளி திருபுவனம் அஜித்தை அடித்தே கொன்ற தமிழ்நாடு போலீசின் அதிகார போதையானது, பணபலமும், அரசியல் செல்வாக்கும் கொண்ட வீரமணியைப் பார்த்ததும் (போதையிலிருந்து) தெளிந்து மண்டியிட்டுவிட்டது. அதனால்தான் 2003-இல் அவனைத் தப்புவித்தார்கள், 2025-இல் தப்புவிக்க முயற்சித்தார்கள்.
சாதாரண மனிதனை கைது செய்யும்போது போலீசாரின் அதிகாரம் பாய்ந்து செல்கிறது. அதிகாரமும் பணமும் கொண்ட ஒருவரை கைது செய்யும்போது அதே போலீசார் மிகவும் மென்மையாக நடந்து கொள்கிறார்கள். குற்றவாளி எனத் தெரிந்தே அவனைத் தப்புவிக்க முயற்சிக்கிறார்கள்
- சந்திரன்
