பாலியல் பொறுக்கி ’கிரானைட் வீரமணி’ மட்டுமா குற்றவாளி?
அமெரிக்காவில் பாலியல் பொறுக்கி எப்ஸ்டீனின் குற்றச் செயல்கள் பொதுவெளிக்கு வந்தது. அந்தப் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்டது எப்ஸ்டீன் என்ற தனிநபர் மட்டுமல்ல, மாறாக பெண் குழந்தைகளை சட்டவிரோதமாக கடத்திய எப்ஸ்டீன், அவனுக்கு உதவிய புரோக்கர்கள், இக்குற்றத்தில் முக்கிய பங்குதாரர்களாக இருந்த கார்ப்பரேட் பெரும்பணக்காரர்கள், இக்குற்றக் கும்பலால் பயனடைந்த அரசியல்வாதிகள், பல ஆண்டுகளாக நடந்து வந்த இக்குற்றத்தை கண்டுகொள்ளாமல் பாதுகாத்து வந்த அதிகார வர்க்கம், நீதித்துறையினர் என அனைவரும்தான் கூட்டுக் குற்றவாளிகள்தாம்.
அதேபோல, தற்போது கிரானைட் வீரமணியை தமிழ்நாட்டின் எப்ஸ்டீன் என்று சொல்லும் போதும், நாம் வீரமணியை மட்டும் குற்றவாளியாகச் சொல்லவில்லை. மாறாக, 20 ஆண்டுகளாக இப்பாலியல் குற்ற நடவடிக்கைகளின் அங்கமாக இருந்த புரோக்கர்கள், இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள், வீரமணியால் பயனடைந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் என அனைவரையும் சேர்த்துதான் சொல்கிறோம்.
முதலில் வீரமணியின் இந்தப் பாலியல் பொறுக்கித்தனம் எப்படி வெளியில் வந்தது என்பதை பார்க்கவேண்டும். கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் உள்ள குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர் ஒருவரின் அலுவலகத்திற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஒரு Pen drive-ஐ கொடுத்துள்ளார். அதில், ஒருவன் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ இருந்திருக்கிறது. வீரமணிக்கு நெருக்கமான சாந்தி என்பவரது வீட்டில் வைத்துத்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு, அந்தக் குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர் சட்டவிரோத கடத்தல் தடுப்புப் பிரிவில் (ITPU) புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகார் மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு அக்டோபர் 9-ஆம் தேதி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2026 பிப்ரவரி 20-ஆம் தேதி சட்டவிரோதக் கடத்தல் தடுப்புப் பிரிவின் உதவி ஆணையர் இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தார். அந்த அறிக்கையில் இவ்வழக்கு குறித்து போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறி ’மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதைக் கைவிடப்பட வேண்டும் (further action be dropped)’ என்று நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்தது, போலிசு தரப்பு.
இதற்கு அவர்கள் சொன்ன காரணம்தான் வினோதமானது. “இந்த வீடியோ 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது; அதனால் அதன் அசல் காட்சிகளை மீட்க முடியவில்லை; வீடியோவில் இருக்கும் அந்த குழந்தையை அடையாளம் காணமுடியவில்லை; இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று வீரமணி மறுத்துள்ளார்; இந்த வீடியோவில் உள்ள வீடு தன்னுடையது அல்ல என்று சாந்தி கூறுயுள்ளார்; சாந்தியின் வீட்டைச் சுற்றி இருக்கும் அக்கம் பக்கத்தினர் போதுமான சாட்சிகள் (statements) சொல்லவில்லை”. இதுதான் இந்த வழக்கை கைவிடவேண்டும் என்று போலிசு சொல்வதற்கான காரணங்களாகும். அதாவது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மறுத்துவிட்டார்கள் அதனால் எங்களுக்கு வேறு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறது தமிழ்நாடு போலீசு!
ஆனால் இந்த மொன்னையான காரணங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாமல் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த அடிப்படையில்தான் இவ்வழக்கு மீண்டும் ஜூலை 2026-இல் மாதம் விசாரிக்கப்பட்டது.
புதிய விசாரணையின்போது, தேனாம்பேட்டையில் உள்ள சாந்தியின் வீட்டில் போலிசு சோதனை நடத்தி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட அசல் (original) வீடியோ பதிவு ஒரு மின்னணு சாதனத்திலிருந்து கைப்பற்றியுள்ளனர். மேலும், சாந்தி எழுதியதாகக் கருதப்படும் ஒரு கடிதம், அலைபேசிப் பதிவுகள் ஆகியவற்றையும் போலிசார் கைப்பற்றினர். மேலும், இந்த Pen drive-ல் இருந்த வீடியோவில் இருப்பது வீரமணிதான் என்பதையும் சென்னை போலிசார் உறுதிபடுத்தியுள்ளனர்.
மேலும், சாந்தி, அவரது கணவன் மகேந்திரன் சிம்மன் ஆகியோருக்கு தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொடுத்துள்ளார், வீரமணி. அங்கே சாந்தியும் மகேந்திரனனும் பல மைனர் குழந்தைகளை அழைத்து வந்து வீரமணிக்கு இரையாக்கியுள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் போலிசார் கைப்பற்றியுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பல 12 முதல் 15 வயதுடையவர்கள்.
வீரமணி வீட்டின் பின்பக்க வாசல், அவனது படுக்கையறை, அவனது அலுவலகத்தில் இருந்த இரகசிய அறை ஆகியற்றை இந்த பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடையாளம் காட்டியுள்ளார்கள். மேலும், 2003-ஆம் ஆண்டில் ஒரு மைனர் பெண் வீரமணியால் தற்கொலை செய்து கொண்டது குறித்து வீரமணிக்கு சாந்தி அனுப்பிய குறுஞ்செய்தியையும் போலிசு கண்டுபிடித்துள்ளனர். இதிலிருந்து கடந்த 20 ஆண்டுகளாக வீரமணி தனது செல்வாக்கை பயன்படுத்தி பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
சென்ற ஆண்டில் அந்த வீடியோவில் இருப்பது வீரமணிதான் என்றுகூட உறுதிப்படுத்த முடியாமல் இருந்த போலிசால், தற்போது ஜூலையில் மறு விசாரணை தொடங்கி இவ்வளவு ஆதாரங்களை திரட்ட முடிந்திருக்கிறது. திமுக ஆட்சியில் கைவிடப்பட இருந்த வழங்கு தற்போது தவெக ஆட்சியில் இப்படி பூதகரமாக அம்பலப்பட்டிருக்கிறது. இதனை பார்க்கும் சராசரி மக்கள் யாரும், திமுக ஆட்சியில் அதிகாரிகளும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் வீரமணியை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள் என்றுதான் யோசிப்பார்கள். அது இயல்பானதுதான்.
ஆனால், திமுகவின் ஊதுகுழலான ‘தினகரன்’ பத்திரிகை பதறியடித்துக் கொண்டு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், கிரானைட் வீரமணி ஆந்திராவைச் சேர்ந்த கிரானைட் தொழிலதிபர்களுக்கு போட்டியாக இருந்ததாகவும், சென்னை அருகே வீரமணிக்கு சொந்தமாக 99 ஏக்கர் நிலத்தை ஆந்திரா கிரானைட் ரெட்டி கும்பல் வாங்க முயற்சித்ததாகவும் அதனை வீரமணி மறுக்கவே ஆந்திரா ரெட்டி கும்பல் வீரமணியைப் பழிவாங்கும் நோக்கில் தவெக அரசை வைத்து இந்த வழக்கை பயன்படுத்துவதாகவும் எழுதியுள்ளது, ‘தினகரன்’. மேலும், சாந்திக்கும் வீரமணிக்கும் சொத்து பிரிப்பது குறித்த தகராறு இருப்பதாகவும், இதனால் சாந்திதான் வீரமணியைப் பழிவாங்க அந்த வீடியோவை Pen drive-ல் போட்டு கசியவிட்டார் என்றும், சாந்தி வீரமணிக்கு இடையிலான இந்த முரண்பாட்டை ஆந்திராவின் ரெட்டி கும்பல் பயன்படுத்திக் கொள்கிறது என்றும் ‘தினகரன்’ கூறுகிறது. தினகரன் இக்கட்டுரையை வெளியிட்டதும் திமுகவின் இணையக் கூலிப் படைகள் அனைவரும் இதை யூடியூப்களிலும் பேசிப் பரப்பி வருகின்றனர்.
மறுபுறம், ‘திமுக மறைக்க முயன்ற குற்றத்தை தவெக வெளிக்கொண்டு வந்திருக்கிறது; திமுக காப்பாற்ற முயன்ற பாலியல் குற்றவாளி வீரமணியை தவெக கைது செய்திருக்கிறது’ என்று தவெக இணைய கூலிப்படை பிரச்சாரம் செய்து வருகிறது. இவையெல்லாம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவிற்கு எதிராக பயன்படுத்துவதற்காகத்தான் என்று தவெக மீது குற்றம் சாட்டுகிறது திமுக. ஆம் உண்மைதான். தவெக இந்த வழக்கை தீவிரமாக நடத்துவதன் நோக்கம், ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் குற்றவாளிக்கு தண்டனையும் கிடைக்க வேண்டும்’ என்பதாக இருக்க வாய்ப்பே இல்லை. தவெக இடைத் தேர்தலுக்காகத்தான் இதைச் செய்கிறது.
அதேபோல், திமுகவும் அவ்வாறுதான் செயல்படுகிறது. அதற்கு ’தினகரன்’ வெளியிட்ட அந்தக் கட்டுரையே சாட்சி. அக்கட்டுரை முழுக்க ‘தமிழ்நாட்டு கிரானைட் முதலாளி வீரமணியை வீழ்த்த ஆந்திரா ரெட்டி கும்பல் இந்த பாலியல் குற்றத்தை பயன்படுத்திக்கொள்வதாக’ சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு வரி கூட இந்த பாலியல் குற்றத்தின் ‘கொடூரங்கள்’ பற்றி பேசப்படவில்லை.
இப்போது கிடைக்கும் ஆதாரங்கள் ஏன் திமுக ஆட்சியில் கிடைக்கவில்லை, பிப்ரவரி 2026 திமுக ஆட்சிக் காலத்திலேயே ஏன் இந்த வழக்கு அவசரமாக ஊற்றிமூடப்பட்டது என்று பொதுவெளியில் எழும் கேள்விகளுக்கு மறைமுகமாக பதில் அளிக்கும் விதமாக தினகரன் ஒரு அயோக்கியத்தனமான பதிலை எழுதியுள்ளது. ‘தவெக ஆட்சியில் வீரமணிக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் சாட்சிங்கள் எதுவும் போலிசால் கண்டுபிடிக்கப்படவில்லை, மாறாக சாந்திதான் [தன் சொந்த ஆதாயத்திற்காக] ஆந்திரா ரெட்டி கும்பலுக்கு உதவும் வகையில் போலீசுக்கு ஆதாரங்களை கொடுத்துள்ளார்’ என்ற வகையில் எழுதியுள்ளது.
அதாவது, திமுக, தவெக இரண்டு ஆட்சியிலும் போலிசால் தானாக இந்த ஆதாரங்களைக் கண்டறிய இயலவில்லை என்பதைப் போலவும், இப்போது சாந்தி திரட்டிக் கொடுத்ததால்தான் ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்பதைப் போலவும், மற்றபடி விசாரனையை ஊற்றி மூடியதில் எங்களுக்கு எங்கள் ஆட்சியின் கீழிருந்த போலிசுக்கோ நோக்கமில்லை என்பதைப் போலவும் நயவஞ்சகமாக எழுதியுள்ளது.
ஆனால், இதிலிருந்து தர்க்க ரீதியாக சில கேள்விகள் எழுகிறது. வீரமணியும் சாந்தியும் குழந்தைகளை பாலியல் ரீதியில் வேட்டையாடிய குற்றத்தில் முக்கிய கூட்டாளிகள். இந்த கூட்டாளிகளுக்குள் சண்டை வந்து அவர்களாகவே ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கும் வரையில் போலீசுக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று சொல்ல வருகிறதா, அந்தக் கட்டுரை?! 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நடந்து வந்த குற்றங்களுக்கான ஆதாரங்களை கூட போலிசால் கண்டுபிடிக்க முடியாது குற்றவாளிகளே அதனை போலீசுக்கு கொடுத்தால்தான் உண்டு என்று சொல்கிறதா அந்தக் கட்டுரை?!
மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடும் உள்ளூர் செயல்பாட்டாளர்கள் முதல் தங்களது உரிமைகளுக்காக போராடும் மாணவர்கள் வரையில் அனைவரின் ஃபோனையும் ஒட்டிக் கேட்டு வேவு பார்க்கும் உளவுத்துறை ஏன் 20 ஆண்டுகளாக நடந்து வந்த குற்றத்தை பற்றி எதுவுமே தெரியாமல் இருந்ததாக இவர்கள் பேசுவதெல்லாம் பச்சையான அயோக்கியத்தனமன்றி வேறில்லை!
2003-ஆம் ஆண்டிலே வீரமணியால் ஒரு சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தற்போது விசாரணையில் தெரியவருகிறது. அப்படியென்றால், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அடுத்தடுத்து முதலமைச்சர்களாக இருந்த கருணாநிதி, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் ஆகிய அனைவரின் ஆட்சியிலும் இந்த பாலியல் வேட்டை தொடர்ந்து நடந்து வந்துள்ளது. அதைப் போலிசு கண்டுபிடிக்காமல் இருந்திருக்கிறது என்பதைவிடக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது என்பதே உண்மை.
இதுதான் என்ற இன்றைய நிலை. பணக்காரர்களால், அதிகார வர்க்கத்தால் ஏழைகளும் ஒடுக்கப்பட்ட மக்களும் வெறுமனே பாதிக்கப்படுவதில்லை, அவர்கள் கொடூரமாக வேட்டையாடப்படுகிறார்கள். அதனை கண்டுகொள்ளாமலும், வெளியே தெரியாமலும் பார்த்துக்கொள்ள ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் ஒத்திசைவாய் வேலை செய்கிறது. இந்தக் கட்டமைப்பின் அங்கமாக உள்ள வீரமணி போன்ற பெரும் பணக்காரர்கள், சாந்தி போன்ற புரோக்கர்கள், அவர்களுக்காக ஒவ்வொரு ஊரில் ஏழை பெண்களை குழந்தைகள் குறிவைத்து வேலை செய்யும் உள்ளூர் புரோக்கர்கள், வீரமணியால் பயனடையும் கட்சிகளும் அரசியல்வாதிகளும், இந்த குற்றங்களை நடக்க அனுமதிக்கும் கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள் – என அனைவரும்தான் குற்றக் கும்பல். தண்டிக்கப்பட வேண்டியது கிரானைட் வீரமணி மட்டுமல்ல, இவர்கள் அனைவரும்தான்.
- கலைச்செல்வன்
