80’s புகைப்படமும் ஏ.ஐ. நிறுவனங்களின் இலாபமும்!
செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட செல்ஃபி (selfie) புகைப்படம் உங்களிடம் இருக்கிறதா? நீங்கள் பெரும்பாலும் ஆம் என்றே பதில் கூறலாம்.
AI என்பது தற்போது நாம் பயன்படுத்தும் ஒரு கருவி மட்டுமல்ல; அது நாம் உருவாக்கும் படைப்புகளில் தீவிர மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
AI தொழில்நுட்பம் நமக்காக எழுதுகிறது, வரைகிறது, ஏன் நமக்காகச் சிந்திக்கவும் செய்கிறது. தற்போது AI நம் வாழ்க்கையில் தொடர்ந்து ஒன்றிணைந்து வருவதால் அது நாம் உருவாக்கும் படைப்பை மட்டுமல்ல, நம் தோற்றத்தை வரையறுக்கும் விதத்தையும் மாற்றியமைக்கிறது
AI புகைப்படம் மூலம் நாம் விரும்பும் கதாபாத்திரங்களாக நம்மை மாற்ற முடியும். உங்களை பல்வேறு சூழல்களிலும், இடங்களிலும் நீங்கள் கற்பனை செய்து புகைப்படங்களை உருவாக்கவும் முடியும். AI ஆல் உருவாக்கப்பட்ட செல்பி புகைப்படம் மூலம் மனிதர்களுக்கு பிடித்த வகையில் இளவரசராகவோ, அல்லது இயந்திர மனிதனாகவோ (cyberpunk) ஒரு சில நொடிகளிலேயே உருவாக்கித் தரப்படுகின்றன.
ஒருபோதும் உயிர்பெற்று வரமுடியாத AI செல்பிகள் நாம் யாராக இருக்க விரும்புகிறோம் என்பதை நமக்கு அடையாளப்படுத்துகின்றன. AI புகைப்படம், குறுஞ்செய்தி முதல் LinkedIn பக்கம் வரை நம் ஆழ்மனதில் விரும்பும் கற்பனையான தோற்றத்தை வடிவமைக்கின்றன
இவ்வாறு சமூக ஊடகங்கள் நம்மிடையே பெருமளவில் மாற்றத்தை தற்போது கொண்டு வந்திருக்கின்றன. இன்று சமுக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆகும் புகைப்படங்களின் போக்குகள் (trends) ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் புதிய போக்குகளில் நாமும் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நமது புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் பதிவிடுகின்றோம். இப்படி நாம் பதிவிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமுக வலைத்தளங்களில் காட்டுத்தீ போலப் பரவுகின்றன.
தற்போதைய புதிய போக்குகளை எடுத்துக் கொண்டால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் 1980-ஆம் ஆண்டு காலப் பாணியிலான புகைப்படங்களைப் பதிவிடுவது என்பது வேகமாகப் பரவி வருகிறது. இது போன்ற புதிய புதியப் போக்குகள் இணையத்தில் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறது. இதில் நாமும் நம்மைத் தொடர்ந்து இணைத்துக் கொண்டே வருகிறோம்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்னாப்சாட்டில் (Snapchat) நாய் காதுகள் மற்றும் வெளியே நீட்டி ஆட்டும் நாக்கு போன்ற தோற்றத்தைத் தரும் ‘ஃபில்டர்கள்’ (filters) தான் பிரபலமாக இருந்தன
ஆனால் இன்றோ ஒரு சில வார்த்தைகளைக் கொண்டே உங்கள் முகம், சுற்றுப்புறம், உடை, சிகை அலங்காரம் போன்றவற்றை எளிதாக AI தொழில்நுட்பம் மாற்றிக் கொடுக்கிறது.
தற்போது வேகமாக பரவி வரும் புதிய போக்கான 1980 ஆண்டுகாலப் புகைப்படத்திற்காக நீங்கள், ChatGPT-யில் ஒரு புகைப்படத்தைக் கொடுத்து, 1980-களின் தோற்றத்தை மாற்றுமாறு கேட்டால். ஒரு சில நொடிகளில் உங்களுக்கு நினைவில் கூட இல்லாத அல்லது நீங்கள் வாழ்ந்திருக்காத ஒரு காலத்தின் தோற்றத்தைப் பெற முடியும்.
இப்படி AI தொழில்நுட்பம் மூலம் ஒரு சில நொடிகளிலேயே உருவாக்கி தரப்படும் புகைப்படங்கள் நமக்கு வேடிக்கையாகத் தோன்றுகின்றன. ஆனால், ஒரே கிளிக்கில் நிகழும் அந்த மாற்றத்திற்குப் பின்னால், அந்தப் புகைப்படத்தை உருவாக்கத் தேவைப்படும் கணிசமான கணினி ஆற்றலும், 40 ஆண்டிற்கு முந்தைய தோற்றத்தில் இருக்க வேண்டும் என்ற மோகத்திற்கு பின்னால் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் கொள்ளை இலாபமும் அடங்கியுள்ளன.
AI மூலம் 1980 ஆம் ஆண்டு கால தோற்றத்தில் புகைப்படத்தைப் பயனர்கள் பெறுவது முதன் முறையல்ல. இதற்கு முன்பும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பலப் போக்குகள் மக்களிடம் பரப்பப்பட்டன.
2022 ஆம் ஆண்டில் லென்சா AI யின் மேஜிக் அவதார்ஸ், பயனர்களின் செல்பியைக் கலைநயமிக்க உருவப்படங்களாக மாற்றிக் கொடுத்து செயற்கை நுண்ணறிவு மோகத்தைத் துரிதப்படுத்தியது.
இதன் பின்பு பழைய நினைவுகளை தூண்டும் எபிக்கின் AI இயர்புக் புகைப்படங்கள், 2023 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த AI புகைப்படம் மக்களுக்கு 1990ஆம் ஆண்டு கால அமெரிக்கப் பள்ளி மாணவ/மாணவிகள் போன்ற தோற்றத்தை உருவாக்கி கொடுத்தது. எபிக்கின் AI இயர்புக் மூலம் உருவாக்கப்பட்ட அமெரிக்க பாப் பிரபலங்களின் புகைப்படங்கள் டிக்டாக்கில் வேகமாக பரவியது.
இதே ஆண்டில் AI ஆல் இயங்கும் பார்பி அவதார்களும் பிரபலமடைந்தன. செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பார்பியின் புகைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானதாக மாறியது. நீங்கள் விரும்பும் காட்சி உலகத்தை தேர்ந்தெடுக்கத் தூண்டியது.
இதன் பிறகு 2025 ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அளவும், நுட்பமும் வேகமாக வளர்ந்தன. OpenAI எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் தனது புகைப்பட உருவாக்கத்தை அறிமுகப்படுத்தியப் பிறகு, 2025-ஆம் ஆண்டில் ஸ்டுடியோ கிப்ளி பாணியில் புகைப்படப் போக்கு வேகமாக பரவியது. இதன் மூலம் மக்கள் தங்களின் செல்ஃபிக்கள், குடும்பப் புகைப்படங்கள் மற்றும் புகழ்பெற்ற காட்சிகளை கிப்ளி பாணியிலான படங்களாக மாற்றினர்.
இதன் பின்பு கூகிளின் நானோ பனானா எனும் AI தொழில்நுட்பம் புகைப்படங்கள், இளமைக்காலப் படங்களைப் பிரத்யேகமானத் திருத்தங்களுடன் மேலும் ஒரு படி முன்னெடுத்துச் சென்றது.
இவ்வாறு கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் தொடர்ந்து AI தொழில்நுட்பங்கள் பரவி வருகின்றன. இது வெறும் தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல. மக்கள் ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ (generative AI) தொழில்நுட்பத்தை எவ்வளவு விரைவாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கான அறிகுறியாகவும் இருக்கிறது என்பதை இது போன்ற புதிய போக்குகள் நமக்கு உணர்த்துகிறது.
இதை மக்களின் சமூக வலைத் தளப் பழக்க வழக்கங்கள் என கடந்து செல்ல முடியுமா? இதன் பின்னால் இருக்கும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் வணிகத்தையும் கொள்ளையும் ஒரு சில புள்ளி விபரங்களிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.
கூகுள் நிறுவனத்தின் தரவின்படியே, அதன் நானோ பனானா அறிமுகப்படுத்தப்பட்ட பின் 50 கோடிக்கும் அதிகமான படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இதன் மூலம் ஜெமினி 10 மில்லியனுக்கும் அதிகமானப் புதிய பயனர்களைத் தன்வசம் ஈர்த்திருக்கிறது என்றும் கூறுகிறது.
லென்சா AI மோகத்தின் மூலம் புகைப்படங்கள் பரவிய காலக்கட்டத்தில், தினசரி 4.3 மில்லியனுக்கும் அதிகமான AI புகைப்படச் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டன.
போட்டோரூமின் அதிகாரப்பூர்வ பார்பி செல்ஃபி ஜெனரேட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 1.3 கோடிக்கும் அதிகமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளன.
OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் தனது ChatGPT-இல் படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே, உலகம் முழுவதும் 13 கோடிக்கும் அதிகமான மக்கள் அந்த வசதியைப் பயன்படுத்தி 70 கோடிக்கும் அதிகமானப் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்,
இன்று நாம் காணும் வைரலான (viral) போக்குகள் அனைத்தும் ஒரே மாதிரியான செயல்முறைகளையே கொண்டிருக்கின்றன. ஒரு செயலியிலோ அல்லது ChatGPTயிலோ உங்கள் தனிப்பட்டப் புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும்; ஆனால் அந்தப் பயன்பாட்டு விதிமுறைகளை (terms) நீங்கள் பெரும்பாலும் படித்திருக்கவே மாட்டீர்கள். பின்னர், ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில் உங்களைக் காட்டுமாறு AI கருவிக்கு ஒரு கட்டளையை (prompt) நீங்கள் கொடுக்கும் போது நீங்கள் விரும்பிய புகைப்படம் உங்களுக்கு கொடுக்கப்படுகின்றன.
‘Pew Research என்ற நிறுவனத்தின் ஆய்வு, சுமார் 56 சதவீத மக்கள் ஒரு ஆன்லைன் சேவையைப் பயன்படுத்தும் போது அதன் தனியுரிமைக் கொள்கைகளை முழுமையாகப் புறக்கணிக்கின்றனர் எனக் கூறுகிறது.
1980 ஆம் ஆண்டு காலப் புகைப்படங்களைப் பெறுவதற்காக இந்திய பயனர்களும் chatGPT யின் தனியுரிமைக் கொள்கையை முழுவதுமாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதற்க்கான வாய்ப்புகள் மிகக்குறைவே.
2025-ஆம் ஆண்டில் கிப்ளிபாணியிலான புகைப்படப் போக்கு ஏற்பட்டபோது, டிஜிட்டல் உரிமைக் குழுவான SFLC-யின் மூத்த சட்ட ஆலோசகரான அர்ஜுன் டி’சௌசா, எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படக்கூடிய பயோமெட்ரிக் தகவல்களைப் பயனர்கள் ரகசியமாக வழங்கி வருவதாக எச்சரித்தார்
OpenAI-என்ற நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கையின்படி, அது பயனர் கேட்கும் தகவல்கள் மற்றும் பதிவேற்றப்பட்டப் பிற உள்ளடக்கங்கள் உட்பட பயனர் உள்ளடக்கத்தைச் சேகரித்துக் கொள்கிறது. ஏன், பின்னூட்டங்கள் உள்ளிட்ட தரவுகளையும் கூட அந்நிறுவனம் தன்னிடம் தக்க வைத்துக் கொள்கிறது. இது போன்ற தரவுகள் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு ஒரு தரவுச் சுரங்கமாக மாறிவிடுகின்றன.
1980 ஆண்டு கால பாணி என்று புதியதாக அறிமுகப்படுத்தப்படும் போக்குகளின் புகைப்படங்களின் தரவுச் சுரங்கத்திலிருந்தே AI நிறுவனங்கள் தனது பட மாதிரிகளுக்குப் பல ஆதாரங்களைப் பயன்படுத்திப் பயிற்சி அளிக்கின்றன. ஆனால் இது போன்ற மக்களின் வைரல் செல்ஃபிகள், பயிற்சித் தரவாக மாறுகிறது என்பதை வெளிப்படையாக எந்த AI நிறுவனங்களும் ஒத்துக் கொள்வதில்லை..
செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தனது கொள்ளை இலாபத்திற்காக போட்டி போட்டுக் கொண்டு அறிமுகப்படுத்தும் 1980 ஆண்டுகால புகைப்படங்கள் போன்ற புதியப் போக்குகள் மக்களின் ஆர்வத்தை தூண்டி அதற்கு பழக்கப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பயனர்கள் பற்றிய தரவுச் சுரங்களையும் எளிதாக சேமித்து வைத்துக் கொள்கிறது.
1980 ஆண்டு கால செல்பி என்பது வெறும் புகைப்படம் மட்டுமல்ல. இப்புகைப்படங்கள் மூலம் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் கொள்ளை இலாபமீட்ட வழிவகுக்கும் ஒரு தரவுச் சுரங்கம்.
நாம் வெறுமனே 1980 ஆண்டுகாலப் புகைப்படத்தைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றி மகிழ்கிறோம். ஆனால் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களோ தமது போட்டிக்காகவும், இலாபத்திற்காகவும் இது போன்ற புதிய புகைப்படப் போக்குகளை வரும் காலங்களில் அறிமுகப்படுத்தக் காத்திருக்கின்றன.
- தாமிரபரணி
