அரசியல் கோமாளி விஜயின் வெற்றி ஏன், எப்படி நடந்தது?
“அரசியல் உலகம் முழுவதையும் வானத்தில் இருந்து இடிவிழுந்தாற்போலத் தாக்கியதொரு சம்பவம் நடைபெற்றது. … எல்லோரும் அதைப் பார்த்து அதிசயத்தார்களே தவிர, ஒருவரால் கூட அதைப் புரிந்துகொள்ள இயலவில்லை” என்று 1852-ஆம் ஆண்டில் பிரான்சில் லூயி போனபார்ட் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி, மன்னனாக முடிசூட்டிக் கொண்ட சம்பவம் குறித்து எழுதினார், எங்கெல்ஸ்.
1848-52-ஆம் ஆண்டுகளின் பிரான்சின் வர்க்கப் போராட்ட நிலைமையும், இன்றைய தமிழக நிலைமையும் வேறானவை என்றாலும்கூட, கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் த.வெ.க. 35% வாக்குக்களைப் பெற்று 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிகழ்வு, அதேபோல எல்லோருக்கும் அதிர்ச்சிகரமாகவும் விளங்காப் பொருளாகவும் உள்ளது. உண்மையில், திமுக, அதிமுகவுக்கு மட்டுமல்ல, விஜய்-க்கே அதிர்ச்சியும் திகைப்பும் அளிக்கும் ஒரு தேர்தல் முடிவுதான் இது. இது கனவா? இல்லை நனவா? என்று புரியாமல் அவரும் தவெக-வினரும் திகைத்துப் போயுள்ளனர். மறுபுறம், இது கொடுங்கனவாய் இருந்தால் என்ன என்று திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் நினைக்கின்றனர். பல்வேறு இழுபறிகள், குதிரை பேரங்கள், பரபரப்புகளுக்குப் பிறகு விஜயும் முதலமைச்சராகிவிட்டார்.
ஒருபுறம், விஜயின் வெற்றி, “ஒரு மெளனப் புரட்சி” என்று வர்ணிக்கப்படுகிறது. ‘எம்.ஜி.ஆர்., என்.டி.ஆருக்குப் பிறகு மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளார்; கடந்த ஐந்தாண்டுகளாக திமுக போட்ட ஆட்டத்திற்கெல்லாம் முடிவு கட்டிவிட்டார்; கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஒரு புரட்சியையே நிகழ்த்தி, இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்; நிகழவே நிகழாது என்றிருந்த அரசியல் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிவிட்டார்; இலங்கை, வங்கதேசத்தில் நடந்ததைப்போன்ற தமிழ்நாட்டின் ஜென்-சி (Gen Z) எழுச்சி இது’ – என்றெல்லாம் விதந்தோதப்படுகிறது.
இன்னொருபுறம், இது விஜயின் திரைக்கவர்ச்சியாலும் சினிமா மோகத்தாலும் சமூக வலைத்தளங்களின் (குறிப்பாக, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களாலும்) நேர்ந்துவிட்ட ஒரு “விபத்து” என்பதுபோல விளக்கப்படுகிறது. ‘வடமாநிலங்களைப் போலன்றி தமிழ் மக்கள் அரசியல் புரிதலுள்ளவர்கள்’ என்ற நம்பிக்கை பொய்த்துப்போய்விட்டது; மக்கள் சினிமா மோகத்திற்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-க்கும் சதிக்கோட்பாடுகளுக்கும் பலியாகிவிட்டனர்; வீட்டில் குழந்தைகள் அடம்பிடிப்பதைக் கேட்டு பெற்றோர்கள் தவெகவுக்கு வாக்களித்துவிட்டனர்; மக்கள் நலத் திட்டங்களை அமலாக்கிய திமுகவை விடுத்து அரசியல் அனுபவமற்ற சினிமாக்காரனைத் தேர்ந்தெடுத்துவிட்டனர்’ – என்றெல்லாம் விவரிக்கப்படுகிறது. சினிமா கவர்ச்சி, நாயக பிம்பம், தேர்தல் அரசியலில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் – ஆகியவை குறித்த ஏராளமான கட்டுரைகளை இதற்கு உறுதுணையாக முதலாளித்துவ அறிவு ஜீவிகளும் எழுதிக் குவித்து வருகின்றனர்.
வேறுசிலரோ இது மின்னணு வாக்குப் பதிவு எந்திரம், எஸ்.ஐ.ஆர். நடைமுறையின் மூலம், பா.ஜ.க. ஆடும் சித்துவிளையாட்டு என்கிறனர். தான் நேரடியாக அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றால் மக்களுக்குச் சந்தேகம் ஏற்படும் என்பதால், விஜயை வைத்துக் கொண்டு பா.ஜ.க. தமிழ்நாட்டில் தன் வேலையை அரங்கேற்றவே அவரை வெற்றிபெற வைத்துள்ளது – என்று அடிப்படையற்ற வாதத்தை அவிழ்த்துவிடுகின்றனர்.
தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயகன் திரைப்படத்தை முடக்கியது, தனிப்பெரும் கட்சியாக வளர்ந்தபோதும் ஆளுநர் மூலம் ஆட்சியமைக்க விடாமல் தடுத்தது போன்ற தன்னுடைய பிரச்சனைகளுக்கே பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடத் துணிவும் தெளிவும் இல்லாத அரசியல் கோமாளியான விஜய், ‘தன்னுடைய வியூகங்கள் மூலம் ஆட்சியைப் பிடித்துவிட்டார்’ ‘மெளனப் புரட்சியை நடத்திவிட்டார்’ என்பது ஒரு நகைச்சுவையே! இத்தகைய அடிப்படையற்ற வாதங்களைத் தவிர மேற்கூறிய பிற காரணிகள் அனைத்தும் விஜயின் வெற்றியில் பங்காற்றியுள்ளன என்பது மறுக்கவியலாத உண்மைதான். ஆனால், 20 முதல் 60 வரை அனைத்து வயதினரிடையேயும், மாநகரம் முதல் கிராமங்கள் வரை அனைத்து வர்க்கப் பிரிவினரிடையேயும் 35% வாக்குகள் பெற்று விஜய் வெற்றி பெற்றுள்ளதற்கு இவைதான் அடிப்படை என்று பார்ப்பது தவறானதும், மேலோட்டமானதுமாகும். வெறும் சினிமா மோகத்தாலும் இன்ஸ்டாகிராமின் தாக்கத்தாலும் “இந்த விபத்து” அல்லது “அதிசயம்” நிகழ்ந்துவிட்டது என்று பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
உண்மையில், தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவரும் வர்க்கப் போராட்ட நிலைமைகளே விஜயின் வெற்றிக்கு டித்தளமாய் அமைந்தன. விஜய் போன்றதொரு அரசியல் கோமாளி, ஒரு மாபெரும் தலைவனாக உருவெடுப்பதற்குச் சாதகமான புறநிலைமைகள் தமிழ்நாட்டில் கனிந்திருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. என சகல ஓட்டுக் கட்சிகளாலும் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் அமலாக்கப்பட்ட உலகமயம், தனியார்மயம், தாராளமயம் (உ.த.தா.) என்று மறுகாலனியாக்கக் கொள்கையின் விளைவாக, மக்கள் எதிர்கொண்ட வாழ்க்கைப் பிரச்சனைகளும்; அதிலிருந்து “தம்மை யாரேனும் மீட்க மாட்டார்களா” என்ற தவிப்பும்தான் விஜயை ஒரு “மீட்பனாக” மக்கள் கருதுவதற்கு அடிப்படையாக அமைந்தன.
கடந்த 50 ஆண்டுகால ‘திராவிட ஆட்சியிலும்’, 5 ஆண்டுகால ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியிலும் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு, பொருளாதாரம், கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள் என அனைத்திலும் முன்னேறியுள்ளது என்று என்னதான் திமுகவின் அடிவருடிகள் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், உண்மை நிலைமை வேறாக இருக்கிறது. மக்கள் அனுதினமும் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, இந்தியப் பொருளாதாரத்தின் இழுவை எந்திரமாகக் (engine) கருதப்படும் மாநகரங்கள், நகர்ப்புறங்களிலேயே ஐ.டி. தொழிலாளிகள் முதல் ஸ்விகி, சொமேட்டோ ஓட்டும் கிக் தொழிலாளர்கள் வரை மாதாந்திர செலவுகளைச் சமாளிப்பதே பெரும் சிரமமாக உள்ளது. பிரம்மாண்டமான நகரமயமாக்கல், மெட்ரோ கட்டுமானங்கள் என தனியார்மயக் கொள்கையின் “வளர்ச்சிப் பாதையின்” இயல்பான விளைவாக நிலம், வீட்டுமனைகளின் விலைகள் பலமடங்கு வீங்கிக் கொண்டே வருகின்றன. தமது குடும்ப வருமானத்தில் ஏறத்தாழ சரிபாதியை வீட்டு வாடகைக்கோ அல்லது வீட்டுக் கடனை அடைப்பதற்கோதான் ஆகப்பெரும்பாலான மக்கள் செலவழிக்கின்றனர்.
“இந்தியாவின் மருத்துவ ஹப்” என்று பீற்றிக் கொள்ளப்படும் தமிழ்நாட்டில், 80 சதவீத குடும்பங்களால் திடீரென ஏற்படும் சுகாதாரச் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலையே இருக்கிறது. மருத்துவத் துறையில் படிப்படியாகத் தனியார்மயத்தைப் புகுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட “காப்பீட்டுத் திட்டங்களின்” விளைவாக, மக்களின் மருத்துவ செலவுகள் குறையவில்லை; மாறாக, தமது கைகளில் இருந்து செலவு செய்வது (out of pocket expenditure) பலமடங்கு அதிகரித்துள்ளது. குடும்பத்தில் யாராவது ஒருவர் நோய்வாய்ப்பட்டுவிட்டால், அந்தக் குடும்பத்தின் மொத்த சேமிப்பும் கரைந்து, அவர்கள் கடன் வாங்க வேண்டிய அளவிற்கு மருத்துவச் செலவுகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. “கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில்” திமுகவால் பீற்றிக் கொள்ளப்படும் தமிழ்நாட்டில், ஆரம்பப் படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை தனியார் கல்வி நிறுவனங்கள் அடிக்கும் கட்டணக் கொள்ளை சகிக்க முடியாததாக உள்ளது.
இவ்வாறு மக்கள் தமது வருமானத்தின் பெரும்பகுதியை (சொல்லப்போனால் வருமானத்தை மீறி கடன் வாங்கித்தான்) கல்வி, மருத்துவம், இருப்பிடம் ஆகியவற்றுக்குச் செலவு செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். தங்கத்தை அடகு வைத்துக் கடன் பெறும் போக்கு நாடெங்கிலும்போலவே, தமிழ்நாட்டிலும் தீவிரமாகியுள்ளது. இத்துடன், பெட்ரோல், டீசல், எரிபொருள் முதல் உணவுப் பொருட்கள் வரை விலைவாசி அனுதினமும் உயர்ந்துகொண்டே வருகிறது. ஆனால், அதற்கு நேரெதிராக மக்களின் மாதச்சம்பளம் சரிந்துகொண்டே போகிறது. நிரந்தர வேலை முறை முற்றாக ஒழிக்கப்பட்டு அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தமயம் கண்ட்ராக்ட்மயம் தலைவிரித்தாடுகிறது. இரண்டு மூன்று பட்டப்படிப்புகள் படித்தாலும் இளைஞர்கள் தகுதிக்கேற்ற வேலை பெற முடியாமலேயே தவிக்கின்றனர். வேலையின்மை அல்லது தகுதிக்கேற்ற வேலையின்மையால் சமூகத்திலும் வீட்டிலும் மரியாதையோ கண்ணியமோ இன்றி, திருமணம் செய்துகொள்ளக் கூட வழியின்றி இளைஞர்கள் துயரப்படுகின்றனர். இவ்வாறு மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்க்கை நெருக்கடிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சுருங்கச் சொன்னால், கடந்த 30 ஆண்டுகளாக உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற மறுகாலனியக் கொள்கை தமிழ்நாட்டு மக்களின் கழுத்தில் ஒரு சுருக்குக் கயிறைப் போல இறுக்கி வருகிறது. இதை ஆளும் வர்க்கங்களும் அரசும் உணராமல் இல்லை. அதனால்தான், நூறுநாள் வேலைத் திட்டம், மாதாந்திரம் 1000 ரூபாய் உரிமைத் தொகை, இலவச விடியல் பயணம் – என்று பல்வேறு இலவச, கவர்ச்சிவாதத் திட்டங்கள் மூலம் மக்களின் ஆத்திரத்தை மட்டுப்படுத்தும் முயற்சிகளை எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஆளும் வர்க்கங்களும் முன்னெடுத்து வருகின்றன. மேற்கண்ட நிலைமைகளில் வாடும் மக்கள் இதை “நல்ல திட்டங்கள்” என்றுதான் பார்க்கின்றனர்; ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், நடைமுறையில் இவையெல்லாம் பிரச்சனையைத் தீர்ப்பதற்கோ, தணிப்பதற்கோ மாறாக, புண்ணுக்குப் புனுகு தடவும் நடவடிக்கையாகவே இருக்கின்றன. எனவேதான், “ஸ்டாலின் செய்த பல்வேறு நலத்திட்டங்களை வாங்கிக் கொண்டு, நன்றி விசுவாசமின்றி தவெகவுக்கு மக்கள் வாக்களித்துவிட்டனர்” என்று கூறுபவர்களால் இந்நிலைமையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
இதே மறுகாலனியாக்கக் கொள்கையின் விளைவாக, கொள்கையற்ற அரசியல் எல்லாக் கட்சிகளிலும் கோலோச்சுகிறது. பெரியாரிசம், அண்ணாயிசம், காந்தியிசம் என மக்களிடம் கொள்கையைக் கூறி வாக்குக் கேட்பதெல்லாம் 90-களோடு படிப்படியாக அழிந்துபோய், கவர்ச்சிவாதத் திட்டங்கள், இலவசங்களை வாரியிறைப்பது, சாதிமத அணிசேர்க்கை அமைப்பது – போன்ற உத்திகளின் மூலமே திமுக., அதிமுக உள்ளிட்ட சகல கட்சிகளும் ஓட்டுப் பொறுக்குகின்றன. பொதுவுடைமை, காந்தியம், பெரியாரியம் எனக் கொள்கை வழிப்பட்ட அரசியல் கோலோச்சிய காலத்தில் அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர்., “அண்ணாயிசம்” என்ற ‘கொள்கையை’ ஒப்புக்காகவாது சொல்லிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், 2020-களில் எந்த “இசத்தையும்” “கொள்கையையும்” சொல்லிக் கட்சி நடத்த வேண்டிய தேவை விஜய்-க்கு இல்லாமல் போய்விட்டது. பொதுவுடைமையைத் தவிர மேற்கூறிய கொள்கைகளெல்லாம் ஆளும் வர்க்க, சீர்திருத்தவாதக் கொள்கைகள்தாம். ஆனால், அரசியல் களத்தில் (குறிப்பாகத் தேர்தல் அரசியல் களத்தில்) கொள்கை வழிப்பட்ட அரசியல் விவாதங்களும் சண்டைகளும் அற்றுப்போனதன் விளைவாக, மக்கள் இருக்கும் ஆளும் வர்க்கக் கொள்கைகளில் கூட “எது தமக்குத் தேவை; தேவையில்லை” என்று பார்ப்பதற்கும் தேர்வு செய்வதற்கும் இயலாமல் போயுள்ளது. இத்தகைய நிலைமையில் உள்ள மக்களுக்கு, திமுகவை எதிர்த்து விஜய் பேசும் பஞ்சு டயலாக்குகளே போதுமானதுதான். எனவே, “விஜய்-க்கு வாக்களித்தவர்கள் கொள்கைக்காக வாக்களிக்கவில்லை” என்று கூறுபவர்கள், இந்த வர்க்கப் போராட்ட நிலைமையின் தொடர்ச்சியைக் காணத் தவறுகிறார்கள்; வெறும் “நாயக பிம்பதால் நேர்ந்த விளைவு” என்று சுருக்கிப் பார்க்கின்றனர்.
கட்சிகள் கொள்கைச் சண்டைகள் போடவில்லை, கொள்கையைக் கூறி மக்களைத் திரட்டவில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கூறியவாறான வாழ்க்கை நெருக்கடியில் உழலும் மக்கள், அதற்கெதிராகப் போராடி அரசியல் அறிவைப் பெறுவதைக்கூட ஆளும் வர்க்கம் முற்றாகத் தடைசெய்தது. உ.த.தா. கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இணையாகவும் ஒத்திசைவாகவும் பேச்சுரிமை, எழுத்துரிமை, பத்திரிக்கைச் சுதந்திரம், சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை போன்ற அனைத்து ஜனநாயக உரிமைகளையும் எல்லாக் கட்சிகளும் எல்லா அரசாங்கங்களும் பறித்தன. தமிழ்நாட்டில், மாநிலம் தழுவிய அளவில் (ஜல்லிக்கட்டைத் தவிர) கடந்த 30 ஆண்டுகளாக எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை என்றே கூறலாம். எல்லாத் துறைகளிலும் தொழிற்சங்கங்கள் படிப்படியாக ஒழிக்கப்பட்டு, தொழிலாளிகள் தமது அடிப்படைக் கோரிக்கைகளுக்குக் கூட ஒன்றுசேர முடியாத நிலைமையை திமுக., அதிமுக அரசாங்கங்களும் ஆளும் வர்க்கமும் உருவாக்கினர். அதேபோல, மாணவர்கள் அரசியலபடுவதைத் தடுக்க, கல்லூரி, பல்கலை வளாகங்களில் சங்கங்கள், மாணவர் பேரவைத் தேர்தல்களை முற்றாகத் தடைசெய்துவிட்டனர். இதற்கு இணையாக, சிபிஐ, சிபிஎம் போன்ற போலி கம்யூனிஸ்டுகளும்., பிழைப்புவாத, காரியவாத, பொருளாதராவாதத் தொழிற்சங்கத் தலைமைகளும் செய்த எண்ணற்ற துரோகங்கள், சீரழிவுகளின் விளைவாக மக்கள் வெறுப்புக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாகினர். (தற்போது புதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்த்துக் கூட போலி கம்யூனிஸ்டுகள் சம்பிரதாயமானதொரு போராட்டத்தையே நடத்தினர் என்பதை நினைவில் கொள்க).
இவையனைத்தின் விளைவாக மக்களில் ஆகப் பெரும்பாலோர் நிலவும் முதலாளித்துவக் கொள்கையில் கூட “எது தமக்குத் தேவையானது” என்று சிந்திக்கவும் தெரிவு செய்யவும் இயலாமல் போயுள்ள்ளது.
பாசிச எதிர்ப்பைப் பொறுத்தவரையிலும் இதேதான். 2014-இல் மோடி கும்பல் ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து, தமிழகத்தில் அரசியல் விவாதங்கள் ஓரளவு அரும்பத் தொடங்கின. பல்வேறு புரட்சிகர, சீர்திருத்தவாத அமைப்புகள் மோடி எதிர்ப்பையும் பா.ஜ.க. எதிர்ப்பையும் தொடர்ந்து விதைத்தனர். இவை ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் துலக்கமாக வெளிப்பட்டன. ஆனால், திமுக போன்ற ஆளும் வர்க்கக் கட்சிகளோ மக்களின் பா.ஜ.க. எதிர்ப்பிற்கு முகங்கொடுக்க மட்டுமே அல்லது ஓட்டுப் பொறுக்குவதற்கு உட்பட்டு மட்டுமே பா.ஜ.க. எதிர்ப்பை மேற்கொண்டனர். மக்கள் பா.ஜ.க. தங்களுக்கு எதிரான கட்சி என்ற புரிதலைக் கொண்டிருந்தாலும், அது ஒரு காவி பாசிச பயங்கரவாதக் கும்பல் என்ற கருத்து அறவே ஏற்படுத்தப்படவில்லை. மேலும், “பா.ஜ.க. தமிழ்நாட்டில் நுழைந்துவிடும்” என்ற ஒரு தீவிரமான அரசியல் பிரச்சனையை, திமுக தனது தவறுகளையெல்லாம் மூடி மறைப்பதற்கான ஒரு மூடுதிரையாகப் பயன்படுத்திக் கொண்டது. 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதன் மக்கள் விரோதப் போக்கை மறைக்கவும்; ஊழலை மறைக்கவும்; பாட்டிலுக்குப் பத்து ரூபாய் வாங்குவதை மறைப்பதற்கும் கூட “பா.ஜ.க. உள்ளே வந்துடும்” என்ற அரசியலை திமுக கைக்கொண்டது. எனவே, “பாசிச எதிர்ப்பு” “பா.ஜ.க. நுழைந்துவிடும்” என்ற தீவிரமான, அபாயமான அரசியல் பிரச்சனை மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச் செய்யப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டுவிட்டன. புரட்சிகர அமைப்புகள் இவ்வரசியலை மக்களிடையே கொண்டுசென்றால்கூட, அவர்கள் திமுக கைக்கூலிகள் என்று பார்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஒப்பளவில் காவி பாசிசக் கும்பல் தமிழகத்தில் பலவீனமாக இருப்பது, மேற்கூறிய செயல்பாடுகளின் ஆகியவற்றின் விளைவாக “பா.ஜ.க. நுழைந்துவிடும்” என்பதை மக்கள் ஒரு நொண்டிச்சாக்காகத்தான் (lame excuse) பார்க்கும் நிலையில் இருத்திவைக்கப்பட்டுள்ளனர்.
விஜய், சீமான் போன்ற அரசியல் கோமாளிகள் இந்நிலைமையை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். “பாசிசமாவது; பாயசமாவது” “அவங்க பாசிசம்னா நீங்க யாரு” “தமிழ்நாட்டுத் தேர்தலை ஏன் டெல்லியோடு முடிச்சுப் போடுறீங்க” “சும்மா பாசிசம் பாசிசம்னு மக்களை ஏமாத்தாதீங்க” – என்பது போன்ற வாதங்கள், பஞ்சு டயலாக்குகள் மக்களிடையே எடுபடுகிறதென்றால், மக்களிடையே பாசிச எதிர்ப்பை தீவிரமாகக் கொண்டு செல்லப்படாத நிலைமயும், பாசிச எதிர்ப்பு அரசியலை மதிப்பிழக்கச் செய்துள்ள நிலைமையுமே அடிப்படை. இத்தகைய நிலைமையில் விஜய் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசாத, போராடாததை மக்கள் ஏன் மிகப்பெரிய பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்?!
தொகுத்துக் கூறுவதென்றால், ஒருபுறம், 30 ஆண்டுகளாக உ.தா.த. கொள்கைகளின் விளைவாக சொல்லொணாத் துயரில் மக்கள் உழன்று வருகின்றனர்; மறுபுறமோ, சமூகத்தில் கொள்கைவழிப்பட்ட அரசியல் அற்றுப்போய், அதற்கெதிரான தன்னெழுச்சியான போராட்டங்கள் உருவாகிவிடாதவாறு ஆளும் வர்க்கங்களும் அரசும் வெற்றிகரமாகத் தடுத்து வருகிறார்கள். இந்த நிலைமையில் மக்களின் துயரமும் வலியும் வேதனைகளும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. மக்களின் வாழ்வு விரக்தியும், சலிப்புமான ஒன்றாகி, சகிக்கமுடியாததாக மாறிவருகிறது.
இந்த வர்க்கப் போராட்ட நிலைமைகள் மக்கள் ஒரு மீட்பனை அல்லது இரட்சகனை (messiah) எதிர்பார்ப்பதற்கான பொருத்தமான புறநிலையாகும்; இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், விஜய் போன்றதொரு அரசியல் கோமாளி திடீரென அவதரிக்கையில் அவனை மீட்பனாக நம்புவதற்குச் சாதகமான புறநிலையாகும். தம் சொந்தக் கரங்களால் போராடி அரசியல் புரிதலைப் பெற முடியாத, எதிரிகளையும் நண்பர்களையும் அடையாளம் காணமுடியாத நிலையில் இருத்திவைக்கப்பட்டுள்ள மக்கள், விஜய் போன்ற ஒரு மீட்பன் தம் வாழ்வில் ஏதேனும் ஒளிவிளக்கேற்றுவான் என்று கருதுவது அதிசயமானதொன்றும் அல்ல, இயல்பானதே! இத்தகைய நிலைமைகளில், மீட்பன் தன்னை மீட்பான இல்லையா என்றுதான் மக்கள் மதிப்பிடுவார்களே அன்றி, அவர் தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கமானவாரா? தூய்மையானவரா? என்று பார்க்க வாய்ப்பில்லை. அதனால்தான் கரூர் படுகொலை, சொந்தவாழ்வில் ஒழுக்கமற்றதன்மை – போன்றவற்றை மக்கள் பெரிய பொருட்டாகக் கருதவில்லை.
சரி, ‘மக்கள் திரைக்கவர்ச்சியில் வாக்களிக்கவில்லை; மாற்றத்திற்காகவே வாக்களித்தனர்’ என்றால் அந்த மாற்றத்தை ஏன் விஜயகாந்துக்குகோ, மக்கள் நலக் கூட்டணிக்குகோ., சீமானுக்கோ, கமலஹாசனுக்கோ வழங்கவில்லை என்று கேள்வி எழலாம். இங்குதான் மீட்பரின் தனித்துவங்கள் (peculiarities) வருகின்றன. மீட்பருக்குச் சாதகமான புறநிலைமைகள் இருந்தாலும், எல்லாராலும் தம்மை மீட்பராக அவதரிக்க முடிவதில்லை. மற்றெல்லா நடிகர்களைவிட விஜய்-க்குக் கிட்டிய எல்லையற்ற சினிமா வெளிச்சமும் ஊடக வெளிச்சமும் இங்குதான் முக்கியப் பங்காற்றுகின்றன. சீமானுக்கும், கமலஹாசனுக்கும், மக்கள் நலக் கூட்டணிக்கும் கொடுக்கப்படாத ஊடக வெளிச்சம் நடிகர் விஜய்க்குக் கொடுக்கப்பட்டது. ஆனந்த விகடன் பத்திரிகைதான் விஜயின் முதல் அரசியல் மேடையை அமைத்துக் கொடுத்தது. அன்று தொடங்கி இன்று வரை விஜயை ஊடகங்கள் அனைத்தும் தொடர்ந்து ஒரு பெரிய அரசியல் சக்தியாகக் காட்சிப்படுத்தி வருகின்றன.
ஊடகங்கள் விஜயின் பிரச்சாரங்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்தன. அவர் தூங்கி எழுந்தது, பல் துலக்கியது முதல் பிரச்சாரத்திற்குக் கிளம்பியது வரை நேரலையில் ஒளிபரப்பினார்கள். கரூர் சம்பவத்திற்குப் பிறகு தனது வீட்டிற்குள் பதுங்கிக்கிடந்த விஜயை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, ஊடகங்கள் அனைத்தும் அவரது வீட்டு வாசலில் விஜயின் தரிசனத்திற்காகக் காத்துக்கிடந்தன. விஜய்க்குக் கொடுக்கப்பட்ட ஊடக வெளிச்சத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட, தங்களை மாற்றுச் சக்திகளாக முன்னிறுத்திக்கொண்ட விஜயகாந்துக்கும், சீமானுக்கும், கமலஹாசனுக்கும் கொடுக்கப்படவில்லை. மொத்தத்தில், ஊடகங்கள் அனைத்தும் விஜயை “மக்களை இரட்சிக்க வந்த மீட்பராக”த் தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்பதை வெற்றிகரமாகச் செய்து முடித்தன.
பிரான்சில் 1848 முதல் 1852 வரையிலான வர்க்கப் போராட்டம் தோற்றுவித்த உறவுகளும் நிலைமைகளும் சந்தர்ப்பங்களும் “ஒரு கோமாளித்தனமான சாதாரண நபர், எப்படி ஒரு மாவீரனின் பாத்திரத்தை ஆற்றுவதைச் சாத்தியமாக்கின” என்பதை மார்க்ஸ் தனக்கே உரிய மேதமையுடன் விவரித்தார். அனைவரும் அதிசியத்துப் பார்த்த, ஆனால் யாராலும் புரிந்துகொள்ள முடியாத அச்சம்பவத்தை, மேற்கூறிய வர்க்கப் போராட்ட நிலைமைகளின் “இயற்கையான, அவசியமான விளைவுதான்” என்று விளக்கி நிறுவினார். அதேபோலத்தான் விஜயின் வெற்றியும் அற்புதமோ அதிசயமோ அல்ல; தமிழ்நாட்டின் வர்க்கப் போராட்ட நிலைமைகளின் “இயற்கையான, அவசியமான விளைவாகவே” விஜய் போன்றதொரு அரசியல் கோமாளி வெற்றி பெற்றுள்ளார். ஒருவேளை தமிழ்நாட்டில் மேற்கூறிய வர்க்கப் போராட்ட நிலைமைகள் இல்லாமல், அவை வேறுவிதமாக இருந்திருந்தால் தமிழ் மக்கள் விஜயைக் குப்பையைப் போலத் தூக்கியெறிந்திருக்கக் கூடும். ஊடகங்களோ மக்களின் மனநிலைக்குப் பயந்து விஜயை மாற்றாக முன்னிறுத்தியிருக்கவும் முடியாது.
மழை, வெயில், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏன் நடக்கின்றன என்று அறியாமல் இருந்தபோது கடவுளைத் தொழுத மக்கள்; இயற்கை அறிவியல் வளர்ந்த பிறகும் கடவுளைத் தொழுகிறார்கள். ஏன்? இயற்கையின் புதிர்களை அறிவியல் அவிழ்த்துவிட்டாலும் சமூகத்தின் புதிர்களை அது அவிழ்க்கவில்லை. தம் வாழ்க்கையில் நடக்கும் இடி, மின்னல், புயல் போன்ற பிரச்சனைகளுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் மக்கள் இன்னமும் கண்டறியவில்லை. எனவே, ‘கடவுள்தான் தன்னை மீட்க வேண்டும்’ என்று கருதிச் சரணடைகின்றனர். கடவுளை இரட்சகராகக் கருதும் அதே புறநிலைமைகள்தான், விஜய் போன்ற இரட்சகரையும் கடவுளாகக் கருதுவதற்கும் அடிப்படையாகும். அதாவது, உ.தா.தா பொருளாதாரக் கொள்கைகள்தான் தமது வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு அடிப்படை என்றும்; அதை மாற்றினால்தான் தம் வாழ்வும் மாறும் என்றும் அறியாத மக்கள் திமுக., அதிமுக., காங்கிரசு., பாஜக போன்ற “கெட்டவர்கள்” ஆள்வதால்தான் நம் வாழ்வு இப்படி இருக்கிறது என்று கருதுகிறார்கள். எனவே, நல்லவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் தம் வாழ்க்கையில் மாற்றம் வந்துவிடாதா என்று ஏங்குகின்றனர்; யாரேனும் மீட்பன் வரமாட்டான என்று ஏங்குகின்றனர்.
கடவுள் குறித்த மூட நம்பிக்கையையும் இரட்சகர் குறித்த மூட நம்பிக்கையையும் விரட்டும் மாமருந்து வர்க்கப் போராட்ட நடைமுறையே ஆகும். மக்கள் உ.தா.த. கொள்கைகளுக்கு எதிராகவும் பாசிச அபாயத்திற்கு எதிராகவும் போராடப் பயிற்றுவிக்கப்படும்போதுதான் சமூகத்தின் புதிர்களைப் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள். தமது வாழ்க்கை ஏன், யாரால், எதனால் இப்படி உள்ளது என்பதையும் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள். தமது எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்பதையும் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள். அத்தகைய வர்க்கப் போராட்டக் களத்திற்கு மக்களை இழுத்துவருவதுதான் நாம் செய்யவேண்டிய அவசர, அவசியப் பணி!
