“மூத்த” பத்திரிக்கையாளர்கள் என அழைக்கப்படும் மணி மற்றும் எஸ்.பி இலட்சுமணன் ஆகிய இருவரும் தவெக தலைவர் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தை கரூர் துயரச்சம்பவத்திற்கு முன்பு, கரூர் துயரச்சம்பவத்திற்கு பின்பு என இரண்டாகப் பிரித்துள்ளனர்.
நடிகர் விஜய் ”அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்” என்று மணியும், ”தமிழ்நாடு அரசியலுக்கு இலாயக்கில்லை” என்று எஸ்.பி. இலட்சுமணனும் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளனர்.
விகடன் குழுமப் பத்திரிக்கையான ஜூனியர் விகடன் ஏன் ஓடி ஒளிகிறீர்கள் விஜய்? என்ற தலைப்பிட்டு அக்டோபர் 04, 2025 அன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் “மக்களிடம் செல்… மக்களுடன் வாழ்… மக்களிடம் கற்றுக்கொள்… மக்களுக்குச் சேவையாற்று” என்ற பேரறிஞர் அண்ணாவின் சொற்களை மைக்கில் வாசித்தால் மட்டும் போதாது விஜய். செயலிலும் அது பிரதிபலிக்க வேண்டும் என்று தலைப்பிற்கு கீழே பதிவு செய்திருந்தது. மேலும், கரூர் துயரச்சம்பவம் குறித்து நடிகர் விஜய் -க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருப்பதுடன், சிட்டி ரோபோவுக்கும் ”சுய முடிவெடுக்காத உங்களுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது”, கரூர் துயரச்சம்பவம் ”விபத்து அல்ல அலட்சியம்” என்றும் மிகக்கடுமையாக விமர்சித்திருக்கிறது.
இரண்டு மூத்த பத்திரிக்கையாளர்களும், 99 வயதான ஜூனியர் விகடனும் கரூர் துயரச்சம்பவத்திற்குப் பிறகுதான், தவெக தலைவர் நடிகர் விஜய் தமிழக மக்களால் தூக்கியெறியப்பட வேண்டியவர் என்று கூறமுடியும் என்றால் உங்களுக்கான ”மூத்த” என்ற அடைமொழியும், பத்திரிக்கைத்துறையில் 99 வருடம் அனுபவம் கொண்ட பாரம்பரிய பத்திரிக்கை என்று சொல்வதற்கும் வெட்கமாக இல்லையா?
கரூர் துயரச்சம்பவத்திற்கு முன்னால் இந்த மூத்தவர்கள் தவெக தலைவர் நடிகர் விஜயை எப்படியெல்லாம் மார்க்கெட் செய்தார்கள் என்பதைத் திரும்பி பார்க்கும் பொழுதுதான் இவர்கள் அறிவு நாணயமற்றவர்கள் என்பதையும், மக்களை நம்பவைத்து ஏமாற்றி வருகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளமுடியும்.
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ‘ என்ற புத்தக வெளியீட்டிற்கு நடிகர் விஜயை சிறப்பு விருந்தினராக விகடன் குழுமம் அழைத்திருந்தது. இந்நிகழ்வு அம்பேத்கரின் நினைவு தினமான டிசம்பர் 6, 2024 அன்று சென்னையில் நடைபெற்றது என்பது வாசகர்களாகிய உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். அதில் நடிகர் விஜய் -க்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தையும், அவரை ராப் பாடகர் அறிவு போற்றிப்பாடியதையும், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’என்ற புத்தகத்தை அம்பேத்கரே வழங்குவது போன்ற AI வீடியோ நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டதையும், விஜய்யிடமிருந்து முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த் தெல்தும்டே பெற்றுக்கொண்டதையும், தமிழகத்தில் புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து இருக்கிறார். புதிய வரலாற்றை உருவாக்கும் மேடையாக இந்த மேடை உருவாகி இருக்கிறது என்று ஆதவ் அர்ஜூனா பேசியதையும் தமிழக மக்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
அஜித்குமார் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் நடந்த லாக்கப் மரணங்களுக்காக நீதி கோரி சென்னையில் ஜூலை 13, 2025 அன்று தவெக சார்பில் நடிகர் விஜய் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது, சில முழக்கங்களை முன்வைத்தனர். அதில் ”உயிரின் மதிப்பு தெரியுமா.. மன்னராட்சிக்குப் புரியுமா”என்று திமுகவிற்கு எதிராக முழக்கமிட்டனர்.
இந்த போராட்டத்திற்குப் பிறகு மூத்த பத்திரிக்கையாளர் மணி, விஜய் ஒரு ஆரோக்கியமான அரசியலைக் கையிலெடுத்திருக்கிறார். அது குறித்த விவாதம் சமூகத்தில் எழுவது நல்லது. இந்த அரசு தன்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ளவதற்கு ஒரு வாய்ப்பாக விஜயோட இந்த போராட்டத்தைப் பார்க்கவேண்டும் என்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.
அதேசமயம் “இது நடப்பதற்காகக் காத்துக்கிடந்த ஒரு நிகழ்வு. திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூரில் அவர் பேசியபொழுதே அரசு விழித்திருக்கவேண்டும். கரூரைப்போல் நடக்காததுதான் ஆச்சரியமே ஒழிய. கரூரில் நடந்தது வருத்தமே ஒழிய ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது இயற்கை பேரிடர் இல்லை. மனிதனால் உருவாக்கிய பேரழிவு. விஜய் முதல் குற்றவாளி, இதனை எதிர்ப்பவர்கள் ஒன்று விஜய்யின் கண்மூடித்தனமான ஆதரவாளர்களாக இருக்க வேண்டும், இரண்டு குருட்டுத்தனமான திமுக எதிர்ப்பாளர்களாக இருக்கவேண்டும், மூன்று விபரம் அறியாதவர்களாக இருக்கவேண்டும்” என்று கரூர் சம்பவத்திற்குப் பிறகு பேட்டி அளித்துள்ளார்.
தவெக-வின் இரண்டாவது மாநாடு நடந்து முடிந்தபிறகு மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி. இலட்சுமணன், “விஜய் முதல் மாநாட்டில் பேசிய விசயத்தை இன்னும் கொஞ்சம் உறுதிப்பட அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் தனது தாக்குதலைக் கூர்மைப்படுத்தியுள்ளார். அதில் முதல் முறையாக அதிமுகவை பற்றிப்பேசத்தொடங்கியது அரசியல் அரங்கில் கவனிக்கப்படவேண்டியது, ஓட்டு, அரசியல், ஆட்சி என்பதையெல்லாம் விடுங்கள் இந்த மாதிரி பிரபலங்கள் அரசியலுக்கு வரும்போதெல்லாம் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யுங்கள் என்று நான் எப்போதும் சொல்வேன். எம்ஜிஆர்-ஐ புகழ்ந்து பேசியது அதிமுகவின் ஓட்டைப் பெறுவதற்காகத்தான். மாறாக அதிமுகவை புகழ்வதற்காக இல்லை. இதன்மூலம் விஜய் ஒரு பக்கா அரசியல்வாதியாக மறியிருக்கிறார் என்று பார்க்கிறேன். பொதுவாக மற்றவர்களைப் பலவீனப்படுத்தி தன் பக்கம் இழுப்பதுதான் அரசியல்” என பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார்.
கரூர் துயரச்சம்பவத்திற்கு முன்பு விஜய் மக்களுக்கான பிரச்சனையை கையில் எடுக்கிறார். விஜய் ஒரு பக்கா அரசியல்வாதியாக மாறிவிட்டார். விஜய் புதிய கருத்தியல் தலைவராக உருவெடுத்து இருக்கிறார் என்ற கருத்தை தொடர்ந்து சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் பரப்பினால் சாமானிய மக்கள் எப்படிப் பார்ப்பார்கள்? தங்கள் துன்பங்களையும், துயரங்களையும் மீட்கவந்த மீட்பராகத்தானே அவர்களால் விஜையைப் பார்க்கமுடியும். அப்படியான ஒரு மீட்பர் தனது பகுதிக்கு வரும்பொழுது எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று கருதுவதில் என்ன தவறிருக்கமுடியும். ஆனால் இதே மூத்த பத்திரிக்கையாளர்கள் மக்களுக்கும் கொஞ்சம் அறிவிருக்கவேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற நிகழ்வுகளைக்தவிர்க்கமுடியாது என்று பாதிக்கப்பட்ட மக்களுக்குப்பாடம் எடுக்கிறார்கள்.
அறிவுநாணயம் இருக்கக்கூடிய ஒரு பத்திரிக்கையாளன் இப்படிப் பேசமுடியுமா? விஜய்யை ஏற்றிப்போற்றிப் பேசியதற்காகக் கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்திடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கவேண்டாமா? பத்திரிக்கை தர்மம் என்று பேசினால் இது அறம் கொன்ற செயல் ஆகாதா?
பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க, பெண்கள் இரவு 8 மணிக்கு மேல் வெளியில் வரக்கூடாது, ஆண்களைக் கவரும் விதமாக ஆடை அணியக்கூடாது என்று பேசுவதற்கும், மக்களுக்கு அறிவிருக்கவேண்டும் என்று பேசுவதற்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா?
கரூர் துயரச்சம்பவத்திற்குப் பிறகுதான் விஜயின் உண்மையான முகம் தெரிந்தது போலப் பாசாங்கு செய்வது மக்களை மீண்டும் நம்ப வைத்து ஏமாற்றுவதற்குத்தான். இரசிகனின் பாக்கெட்டில் பிளேடு போட்டு ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்குபவன் எப்படி யோக்கியனாக இருக்கமுடியும்? குறைந்தபட்சம் சினிமாத்துறையில் இருக்கும் பாலியல் சுரண்டல்களையாவது எதிர்த்து உச்ச நட்சத்திரமான விஜய் வாய் திறந்ததுண்டா? விஜய் ஆயிரக்கணக்கான கோடிகளை வைத்திருக்கிறார், பேரும், புகழும் பெற்ற உச்ச நட்சத்திரமாகத் திகழ்கிறார், ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்குவதை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார் என்றால் என்ன பொருள்? என்று பூடகமாக கேள்வி எழுப்புகிறார்கள் இந்த ஞானசூனியங்கள்.
அதாவது பணக்காரனுக்கு பணத்தின் மீது பற்றிருக்காது என்று இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பதை மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அறிந்து வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு அரசியல்வாதிகள் கைகளில் இல்லாத பணமா, சொத்தா? இருந்தும் அவர்கள் ஏன் மீண்டும் மீண்டும் ஊழல் செய்து பணத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பமாக இருக்கிறது கருணாநிதியின் குடும்பம். விஜயை விட பலமடங்கு பணம் சம்பாதிக்கும் தொழில்களை நடத்திவரும் அந்தக் குடும்பத்தில் இருந்து அந்த வாய்ப்புகளையெல்லாம் உதறிவிட்டு உதயநிதி அரசியலுக்கு வருகிறார் என்று புகழ்ந்தால் அதனை ஏற்க முடியுமா?
குடும்பமே இல்லாத ஜெயலலிதா, ஒரு நடிகையாக நிறைய பணம் சம்பாதித்திருந்த ஜெயலலிதா, முதலமைச்சர் பதவிக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதா, இன்னும் சுருக்கமாக சொன்னால் பேரும் புகழும் பெற்ற அதே ஜெயலலிதாதான் சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி.
தங்களது சொத்தை பாதுகாக்கவும், பலமடங்காக பெருக்கிக் கொள்ளவும், அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளவுமே விஜய் போன்ற நடிகர்கள் சினிமாவை விட்டு அரசியலுக்குள் வருகிறார்கள். இது எல்லாம் இந்த “மூத்த” பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாதது அல்ல. இந்த உண்மையை மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து, ஆகவே மக்களே விஜய்யிடம் சூதானமாக இருங்கள் என்று எச்சரித்திருந்தால், மக்களைப் பார்த்து அறிவிருக்கிறதா என்று கேள்வியெழுப்புவதில் பத்திரிக்கையாளர்களாகிய உங்களுக்கு ஒரு தார்மீகம் இருக்கிறது என்று புரிந்துகொள்ளமுடியும்.
இன்றைக்குத் தேர்தல் வெற்றிகளைச் சித்தாந்தமோ, தலைவர்களின் மீதான அபிமானமோ தீர்மானிப்பதில்லை. மக்களைச் சென்றடைய செலவு குறைவான சுவொரொட்டி, சுவரெழுத்து, பிரசுரம் போன்ற செலவு குறைவான பிரச்சாரங்களெல்லாம் தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்ட பிறகு. தொலைக்காட்சி ஊடகங்களிலும், இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும், தனிப்பட்ட அலைபேசி அழைப்புகள் மூலமாகவும் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியிருக்கும் சூழலில், ஒரு கட்சி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவது அல்ல குறைந்தபட்சம் மரியாதையுடன் தோற்க வேண்டும் என நினைத்தால். கூட ஒரு தொகுதிக்கு குறைந்தது 10 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும்.
அப்படியென்றால், ஒரு சட்டமன்ற தேர்தலுக்கு 234 x 10 = 2340 கோடி செலவு செய்யவேண்டும். இது தவெக-வுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் என நினைக்கின்ற எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும். இத்தனை கோடிகளை செலவு செய்து முதலமைச்சராக அமர்வது இலஞ்சம், ஊழல், பசி, பட்டினி, தரமான கல்வி, கல்விக்கான வேலைவாய்ப்பு, சுகாதாரமான இருப்பிடம், தண்ணீர் என மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை எல்லாம் செய்துகொடுப்பற்குத்தான், அதற்காகத்தான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று, “மூத்த” பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களும், பாரம்பரிய பத்திரிக்கை என மார்தட்டிக் கொள்பவர்களும், நம்மை நம்பச் சொல்கிறார்கள். இவர்கள் எல்லாம் விஜயை வைத்துப் பிழைப்பவர்கள். நாளை அரசியல் சூழல் மாறும் போது இதே ஆட்கள் மீண்டும் விஜய் புகழ் பாடுவார்கள். தற்போது உச்சநீதிமன்றத்தில் கரூர் வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்ட உடனேயே இவர்களது நடவடிக்கை மாறத் தொடங்கிவிட்டது. இடத்திற்கும் சூழலுக்கும் தக்கபடி நிறத்தை மாற்றும் பச்சோந்திகள் இவர்கள்.
- மகேஷ்
செய்தி ஆதாரம்:
https://www.youtube.com/shorts/GNn3EZtZ7Bc
https://www.youtube.com/watch?v=9OWZec3yvT8
https://www.youtube.com/watch?v=e4xPn7lh4q8
https://www.youtube.com/watch?v=K65azHCYwQ0
https://www.youtube.com/shorts/y2zT85A_Mzc
https://www.youtube.com/watch?v=AmZyqxrlmVE
https://www.bbc.com/tamil/articles/cz7qw742nejo
https://minnambalam.com/tvk-vijay-prostest-for-ajithkumar-lockup-death/