கரூரில் நடந்த தவெக-வினரின் தேர்தல் பரப்புரையின் போது 42 பேர் கொல்லப்பட்ட பெருந்துயரம் நடந்து 72 மணி நேரத்திற்குப் பிறகு தவெக தலைவர் நடிகர் விஜய் காணொளி ஒன்றை வெளிட்டார். அதில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தவெக நிர்வாகிகளும், விஜய் இரசிகர்களும், பெலிக்ஸ் போன்ற “மூத்த பத்திரிக்கையாளர்களும்”, மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி போன்றவர்களும் கரூரில் நடந்த படுகொலை குறித்து ஆதாரம் எதுவும் இல்லாத சதிக்கோட்பாடுகளை முன்வைத்து விஜய்க்கு ஆதரவாக செய்திகளைப் பரப்பி வந்த நிலையில், தனது நிழல் வாழ்க்கையில் ஒரு இயக்குநர் சொல்லிக்கொடுத்ததை எப்படி அச்சுப்பிசகாமல் ஒப்பித்து நடிப்பாரோ, அதற்குச் சற்றும் குறைவில்லாமல் மேற்கூறிய சதிக்கோட்பாடுகளை அப்படியே வாந்தியெடுத்திருக்கிறார் நடிகர் விஜய்.
”கரூரில் மட்டும் ஏன் நடந்தது? எப்படி நடந்தது?” என்று கேள்வி எழுப்பி, அதற்கு கரூர் மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும் என்று பதிலளித்துள்ளார். மேலும் “CM சார் உங்களுக்கு என்னைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏதாவது இருந்துச்சுனா, என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள். அவங்க மேல கை வைக்காதீங்க. நான் ஒன்னு வீட்டில இருப்பேன் அல்லது ஆபிசில் இருப்பேன் என்னை என்ன வேணாலும் செய்யுங்கள்” என்று தவெக தலைவர் நடிகர் விஜய் பேசியுள்ளார்.
நடிகர் விஜயும், மற்றவர்களும் சொல்ல வருவது என்ன? திமுக தோற்று விடுவோம் என்ற பயத்தில் தன்னுடைய அரசியல் பயணத்தை அழிப்பதற்காக கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி 41 உயிர்களைப் பறித்துள்ளது. இந்த துயரச்சம்பவத்திற்கு தானோ, தனது கட்சியினரோ, இரசிகர்களோ பொறுப்பில்லை என்று கூறியுள்ளார்.
தன்னைக் காண வந்த மக்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காதது பற்றியோ, மதியம் 12 மணிக்கு வருவதாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துவிட்டு இரவு 7 மணிக்கு வந்தது பற்றியோ, சாலை நெடுக்கிலும் தன்னைப் பின்தொடரும் இரசிகர்களை உற்சாகமூட்டுவதாக எண்ணிக்கொண்டு தனது பேருந்தின் விளக்கை அணைப்பதும், போடுவதுமாக இளைஞர்களின் உயிருடன் விளையாடியதைப் பற்றியோ தவறு என்று ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஏனென்றால் தன்னை நம்பிவந்த மக்கள் அனைவரும் தனக்காக உயிர்த்தியாகம் செய்து தமிழ்நாட்டின் முதல்வராகத் தன்னை அழகு பார்க்க வந்தவர்கள் என்று கருதுகிறார்.
இப்படி தன்னைக் கருதிக்கொள்வதற்கு ஒரு அடிப்படை இருக்கிறது. அது பத்திரிக்கைகளும் காட்சி ஊடகங்களும் விஜய் குறித்து உருவாக்கியிருக்கும் மிகப்பெரிய நாயக பிம்பம். திரைப்படங்களுக்கு உள்ளே கதாநாயகனது பிம்பத்தை உயர்த்திக் காட்டுவது போலத் திரைக்கு வெளியே நிஜத்தில் அவரை ஒரு தன்னிகரற்ற திரைக்கலைஞாக, நடன இயக்குநர்களைவிட மிக நேர்த்தியாக நடனமாடக் கூடியவராக காட்சிப்படுத்துவதுடன் அவரது நடிப்புக்கும், நடனத்திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம் தான் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அவரை விரும்புவதற்கான காரணம் என்று பத்திரிக்கைகள், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகின்றன.
நடிகர் விஜயை மார்க்கெட் செய்வதற்காகவே இசை வெளியீட்டு விழா, பட வெளியீட்டிற்கு முன்பான புரோமோசன் எனத் தனது இரசிகர்களின் சட்டைப்பையை பிளேடு போடுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல், எதிர்காலத்தில் ஒரு தலைவனாகப் பரிணமிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டே இந்த மேடைகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த்தை எவ்வாறெல்லாம் கொம்புசீவி விட்டார்களோ, அதற்குச் சற்றும் குறைவில்லாமல் நடிகர் விஜயையும் கொம்புசீவினார்கள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ரஜினிக்கு பட வசனங்களில் அரசியலைச் சேர்த்தது போல விஜய்கு படத்தலைப்பே ”தலைவா” என்று வைப்பது. ரஜினி படவிழாக்களில் கமலைப் புகழ்வதைப்போல், விஜய் சூட், கோட் போட்டு அஜித் மாதிரி வருவதாக படவிழாவில் கூறுவது. எல்லாவற்றிற்கும் மேலாக ரஜினியை வைத்து விஜயை ஒரு காக்கா எனக் கதைசொல்ல வைப்பது, அதற்குசப் பதில் சொல்லும் விதமாக ஒரு குட்டிக்கதை சொல்லித் தான் ரஜினியைவிட மேலானவன் என்று கூறுவது. சக நடிகர்களை வைத்து நேரம் தவறாதவர், எளிமையானவர், மற்றவர்களை மதிக்கக்கூடியவர், படப்பிடிப்பில் ஏற்படும் விபத்துக்களைக்கூடப் பொருட்படுத்தாமல் நடிக்கக்கூடியவர் என்று அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் எழுப்பப்பட்டிருப்பதை ஒருமுறை நன்கு நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
இப்பொழுது சொல்லுங்கள், நடிகர் விஜயை தமிழக மக்கள் தலைவனாகப் பெறுவதற்கு மா தவம் செய்திருக்கவேண்டும் என்று விஜய் கருதுவதில் என்ன வியப்பிருக்க முடியும்.
மேற்கூறிய செய்திகள் அனைத்தையும் நேர்மறையில் கூறி ஊட்டி வளர்க்கப்பட்ட இளைஞர் கூட்டம் தனது சுய அறிவை இழந்து விஜயின் பின்னால் சென்று சாவது ஒரு கசப்பான உண்மையென்றாலும் அதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. விஜய் ஒரு நடிகன், நன்றாக நடிக்கிறான் என்பதைத் தாண்டி வேறொன்றும் அறியாத மக்கள் ஏன் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளவேண்டும்? விஜய் சொல்லும் சதிக்கோட்பாடுகளுக்கு ஏன் இறையாக வேண்டும்? என்பதுதான் மிகமிக முக்கியமானது.
தங்களது புரிதலுக்கு அப்பாற்பட்ட, தங்களது அறிவிற்கு அப்பாற்பட்ட, தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தரவையோ, ஆதாரத்தையோ, சம்பவத்தையோ எதிர்கொள்ளும் போது அவர்களது மனம் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து ஒரு வடிவத்தை ( PATTERN) உருவாக்கிக் கொள்கிறது. அதாவது மலைப்பாம்பு சந்திரனை விழுங்கிவிடுகிறது.
சந்திரனை மலைப்பாம்பு விழுங்க முடியாது என்ற அறிவியல் உண்மை இருந்தாலும், தாங்கள் கொண்டிருக்கும் மூடநம்பிக்கையின் காரணமாக, தங்களது புரிதலுக்கு அப்பாற்பட்ட, தங்களது அறிவிற்கு அப்பாற்பட்ட, தங்களது (மூட)நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் ஆதாரங்களை நம்பமுடியவில்லை.
திமுக, அதிமுக உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் மக்கள் பணத்தை கொள்ளையடித்து தனக்கு மட்டுமில்லாமல் அடுத்து பத்து தலைமுறைக்குச் சொத்துசேர்த்து வைத்துக்கொண்டு சுகபோகமாக வாழ்ந்து வருகிறார்கள். ஓட்டுப்போட்ட மக்களைத் தேர்தல் முடிந்தவுடன் தெருவில் அம்போ என விட்டுச்சென்று விடுகின்றனர் என்ற கருத்து பெருவாரியான மக்களிடத்தில் உள்ளது என்பது ஒரு உண்மை.
மக்களிடம் உள்ள இந்தக் கருத்திற்கு ஒரு அடிப்படையிருக்கிறது. ஜெயலலிதாவிற்குப் பிள்ளை குட்டிகள் கிடையாது. அவர் தமிழக மக்களுக்காகவே அயராது உழைத்தவர். மக்கள் பணத்தை கொள்ளையடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர் நடித்தே கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்துள்ளார். அதனால்தான் முதல்வருக்கான மாதச் சம்பளமாக 1 ரூபாய் வாங்கினார், இரும்பு பெண்மணி, ஆங்கிலப்புலமை பெற்றவர், கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவர் என்றெல்லாம் அவர் மீது ஒளிவட்டம் சூட்டப்பட்டது. இறுதியில் நடந்தது என்ன? சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி. தீர்ப்புக்கு முன்பே இறந்து போனதால் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்.
அத்துடன் முடிந்துவிடவில்லை. ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டார். அவரது கால்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில்தான் அவர் புதைக்கப்பட்டார் என்று பல ஆதாரங்களை சமூக ஊடகங்களும், பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் வெளியிட்டன. எதற்காக? ஜெயலலிதா நல்லவர்தான். அவர்களுடன் இருந்தவர்கள் தான் இப்படிச் செய்துவிட்டார்கள் என்ற சதிக்கோட்பாட்டின் மூலம் மக்களை நம்ப வைப்பதற்காகத்தான். மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து சொத்துசேர்த்த முதன்மைக் குற்றவாளி ஜெயலலிதாவிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழக்கூடாது என்பதற்கான சதிக்கோட்பாடுதான் என்று புரிந்துகொள்ளவேண்டும்.
இதனை எதிர்க்கட்சிகள் ஏன் பேசாமல் மௌனம் காக்கின்றன என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்த சதிக்கோட்பாடு எம்ஜிஆர், நேதாஜி என பலருக்கும் இருக்கிறது. எனவே இது ஜெயலலிதாவிடம் இருந்து தொடங்கவும் இல்லை, அவருடன் முடியவும் இல்லை.
செந்தில் பாலாஜி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் அமைச்சராக இருந்தபொழுது டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்கச் சொன்னதாகவும், அதனை கரூர் கம்பெனி என்ற பெயரில் கட்டாய வசூல் செய்தார் என்றும், இவ்வாறு கொள்ளையடித்த பணத்தின் மூலம் கரூரில் ரௌடிகளை வைத்துக்கொண்டு எதைவேண்டுமானாலும் செய்யக்கூடியவராக இருக்கிறார் என்ற பிம்பம் அதிமுக, பாஜக கட்சிகள் மூலம் கட்டியமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறுவது செந்தில் பாலாஜி ஒரு யோக்கியர் என்பதற்காக அல்ல. அதிமுக, பாஜகவிடம் இது குறித்த ஆதாரம் எதுவும் இல்லை என்பதாலும், தங்களுடைய அமைச்சர்கள் இந்தத் துறையில் இருந்துகொண்டு எதைச் செய்தார்களோ அத்தைதானே செந்தில் பாலாஜியும் செய்யமுடியும் என்ற உண்மையை மறைத்து தங்களை சுத்தமானவர்கள் என்று காட்டிக்கொள்வதற்கான ஒரு சதிக்கோட்பாடு என்று புரிந்துகொள்ள வேண்டும். உண்மையிலேயே மக்களின் மீது அதிமுகவிற்கோ, பாஜகவிற்கோ அக்கறை இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? தன்னிடம் உள்ள சாட்சியங்களை நீதிமன்றத்திடம் சமர்ப்பித்து செந்தில் பாலாஜிக்கு தண்டனை வாங்கிக்கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு தண்டனை வாங்கித்தராத நிலையில் நடிகர் விஜய் ”பாட்டிலுக்கு 10 ரூபாய் …” எனப் பாட்டுப்பாடுவது எதற்காக? தான் நல்லவன், செந்தில் பாலாஜி அயோக்கியன். இப்படிப் பட்டவனுக்கும், இந்த கரூர் பெருந்துயரத்திற்கும் சம்பந்தம் இருக்காத என்ன? என்ற சதிக்கோட்பாட்டை விஜய் பரப்புகிறார். உண்மையிலேயே கரூரில் கொள்ளப்பட்ட 41 உயிர்கள் மீது தவெகவினருக்கோ, இரசிகர்களுக்கோ, தலைவனாவதற்கே பிறவி எடுத்துள்ளதாகக் கருதிக்கொண்டிருக்கும் இழிபிறவி விஜய்கோ அக்கறையிருந்தால் தங்களிடம் உள்ள ஆதாரத்தைக் கொடுத்து செந்தில் பாலாஜிக்கோ, திமுகவினருக்கோ தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க முடியும் அல்லவா?
அப்படியென்றால் விஜயை எதிர்க்கும் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தவெகவினரும், விஜய் இரசிகர்களும், கட்சித் தலைவர் விஜயும் தான் 41 உயிர்கள் பறிபோனதற்கான காரணம் என்பதை அமுதா ஐஏஎஸ் போன்ற அதிகாரிகளைக் கொண்டு நீதிமன்றத்தில் மூலம் விஜய்கும், விஜய் கட்சியினருக்கும் தண்டனை பெற்றுத் தருவார்களா என்று வினவலாம்?
”பெற்றுத் தருவார்கள்” என்று நம்பினால் நாம் சதிக்கோட்பாட்டிற்கு இறையாகிறோம் என்று பொருள். நம்மால் ”பெற்றுத் தர முடியும்” என்று நம்பினால் சதிக்கோட்பாட்டை அனைத்துக் கட்சியினருக்கும் இறையாக்குகிறோம் என்று பொருள்.
இனிமேலும் மக்களிடமுள்ள சினிமா கவர்ச்சியை மூலதனமாக வைத்துக்கொண்டு கட்டியெழுப்பப்படும் ”நாயக” மாயைகளுக்கும், சதிக் கோட்பாடுகளுக்கும் இறையாகாமல். சந்திரனை மலைப்பாம்பு விழுங்க முடியாது என்ற அறிவியல் உண்மை கற்போம், கற்பிப்போம்.
- மகேஷ்