அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
கரூர் தவெக கூட்டத்தில் ஏதுமறியாப் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்டு 42 பேர் அகால மரணம் அடைந்துள்ள செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது. தனது சுயநலத்திற்காக பொறுப்பின்றி செயல்பட்டு மக்களை பலிகொடுக்கும் ஒரு அரசியல்வாதிதான் விஜய் என்பதை விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை இந்த சம்பவம் நிரூபிக்கிறது.
இது குறித்து கருத்து கூறும் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை மனதில் கொண்டு “இனி இதுபோல் நடக்க கூடாது” என்று யாருக்கும் நோகாமல் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், உண்மையில் இது ஏழைகளை கிள்ளு கீரையாக கருதும் ஒரு கார்ப்பரேட் அரசியல்வாதியின் பச்சை படுகொலை என்கிறோம்.
இந்த துயரம் எப்படி நிகழ்ந்தது? விஜய் கரூருக்கு நன்பகல் 12 மணிக்கு வர ஏற்றுக்கொண்டு மாலை 7.30 மணிக்குத்தான் வந்தார். இதற்கிடையே காலையிலிருந்து வெயிலில் சோறு, தண்ணீர் இல்லாமல் காத்துக்கிடந்த மக்கள் சோர்வடைந்திருந்தனர். இந்நிலையில் காலதாமதமாக வந்த விஜய் ஆங்காங்கே காத்திருந்த மக்களுக்கு தனது முகத்தை காட்டாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோன்றி பேசினார். சினிமாவில் பார்த்த விஜயை எப்படியாவது ஒரு முறை நேரில் அருகில் இருந்து பார்த்துவிட வேண்டும் என கூட்டம் ஓடிவர நெரிசல் ஏற்பட்டு செத்து மடிந்துள்ளனர்.
ஒரு மணி நேர கூட்டத்தை கூட ஒழுங்காக நடத்த தெரியாமல் தன்னை நம்பியோரை பலிகொடுத்துவிட்டு திரும்பிகூட பார்க்காமல் ஓடிய ஒரு நபர் நாட்டை ஆட்சி செய்ய ஆசைப்படுவதுதான் இன்றைய அரசியல். எந்த தகுதியோ, திறமையோ, பொறுப்புணர்ச்சியோ. மக்கள் மீது பற்றோ இல்லாத ஒழுக்க கேடான விஜயின் பேராசைதான் இந்த மரணங்களுக்கு காரணம்.
இனி இது போல் நடக்காமல் இருக்க யாரேனும் உத்திரவாதம் கொடுக்கமுடியுமா? இனியும் இதுபோல் நடக்கவே நிறைய அடிப்படைகள் உள்ளன. ஏனென்றால் மக்களை அரசியல்படுத்துவதை விட கவர்ச்சிவாத அரசியலில் மூழ்கடிக்கவே நம்மை அடக்கி ஒடுக்கும் ஆளும் வர்க்கம் விரும்புகிறது.
தவெக இளைஞர்களை அரசியல் அற்ற தற்குறிகள் என்று பேசுகிறோம். இளைஞர்கள், மாணவர்கள் இந்த நிலைக்கு ஆளானதற்கு இன்றைய அரசியல் கட்சிகளுக்கு பங்கு இல்லையா? ஒரு காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்திய மாணவர்களின் அரசியல் உணர்வு இன்று எங்கே போனது? மாணவர்கள் அரசியலில் ஈடுபடகூடாது என்று கூறி திராவிடக் கட்சிகள் கல்லூரி, மாணவர் சங்க தேர்தலை தடை செய்தது, மக்களை சீரழிக்கும் சினிமா, சீரியல்களுக்கும் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் தேவையற்ற ஒளிவட்டம் கொடுப்பது போன்ற பல காரணங்களால் மாணவர்கள், இளைஞர்கள் பண்பாட்டு ரீதியாக சீரழிந்து குருட்டு நம்பிக்கையில் உழன்று வருகின்றனர்.
தனியார்மயம் தாராளமய கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி விவசாயம், சிறுதொழில்கள் அழிந்து வாழ்வே கேள்விகுறியாகிவரும் இன்றய நிலையில் மாணவர்கள், இளைஞர்கள் இவ்வாறு அரசியலற்று இருப்பதைத்தான் ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன.
மாவீரன் பகத்சிங் இளைஞர்களால்தான் நாட்டுப்பற்றோடும் தியாக உணர்வோடும் மக்களுக்காக போராடமுடியும் என்றார், ஆகவே, நாட்டிற்காக மாணவர்கள், இளைஞர்கள் அரசியலில் ஈடுபடும் போதுதான் விஜய் போன்ற நடிகனின் அரசியல் கட்சி யாருக்கான கட்சி என்பதை உரசி பார்க்கும் திறன் அவர்களுக்கு வரும். அப்போதுதான் கரூர் படுகொலை போன்ற நிகழ்வுகள் தடுக்கப்படுவதோடு நாட்டில் நிலவும் சாதி, மத, இனவெறி, சுரண்டல், ஊழல், பாசிசம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.
தமிழக அரசே!
- TVK :தலைவன் விஜய் உள்ளிட்ட நிர்வாகிளை கொலை வழக்கில் கைது செய்!
- உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா இரண்டு கோடியும் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்ந்தோருக்கு ரூ1 கோடியும் விஜயின் சொத்திலிருந்து பெற்று இழப்பீடு வழங்கு!
உழைக்கும் மக்களே!
- மக்களை முட்டாளாக கருதி கொள்கை கோட்பாடின்றி அரசியல் செய்யும் தற்குறி அரசியல்வாதிகளின் கூட்டங்களை புறக்கணிப்போம்!
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
97901 38614