யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025):
உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட்
மயமாக்குவதற்கான சதி!
அரங்க கூட்டம்

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பேராசிரியர் ப. சிவக்குமார் மற்றும் பேராசிரியர் வீ. அரசு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பேராசிரியர் ரமேஷ் தொகுத்து வழங்கி உரையாற்றினார். குடியாத்தம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் மேனாள் முதல்வர் பேராசிரியர். ப. சிவக்குமார் அவர்கள் […]

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பேராசிரியர் ப. சிவக்குமார் மற்றும் பேராசிரியர் வீ. அரசு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பேராசிரியர் ரமேஷ் தொகுத்து வழங்கி உரையாற்றினார்.

குடியாத்தம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் மேனாள் முதல்வர் பேராசிரியர். ப. சிவக்குமார் அவர்கள் தனது உரையில் கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் கல்வி என்பது எப்படிப் படிப்படியாக தனியார்மயமாக்கப்பட்டது என்றும் அதனை எதிர்த்து நடைபெற்ற மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் குறித்தும் விளக்கினார். இப்போது மோடி அரசு கொண்டு வந்திருக்கும் தேசியக் கல்விக் கொள்கை என்பது அடிப்படைக் கல்வியை கற்பிப்பதை விட திறன் மேம்பாடு என்ற பெயரில் சந்தைக்குத் தேவையான தொழிலாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது என விளக்கினார். அத்துடன் இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று மிகப்பெரிய மக்கள் திரள் இயக்கமாக மாற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர். வீ. அரசு அவர்கள் தனது உரையில் தேசியக் கல்விக் கொள்கையென்பது எவ்வாறு உயர்கல்வியில் காவி பாசிச சித்தாந்தத்தை புகுத்துவதற்கான முயற்சி என்பதையும், அதன் அடியொற்றி வெளியிடப்பட்டிருக்கும் யு.ஜி.சி.யின் வரைவு விதிகள் ஒவ்வொன்றும் எவ்வாறு பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ்.சின் கையாட்களைக் கொண்டு நிறப்புவதற்கான சதி என்பதையும் அம்பலப்படுத்திப் பேசினார். தமிழகத்தின் இன்றைய உயர்கல்வியின் அவல நிலையைத் தனது உரையில் சுட்டிக்காட்டிய பேராசிரியர் அதனைச் சரி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.

இறுதியாக உரையாற்றிய பேராசிரியர் ரமேஷ், மோடி அரசு கொண்டுவந்திருக்கும் தேசியக் கல்விக் கொள்கை என்பதே ஏகாதிபத்தியங்களின் தேவைக்கு ஏற்ப கூலி அடிமைகளை உற்பத்தி செய்யும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தினார். ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தின் போது கரும்பு வெட்டவும், தேயிலை பறிக்கவும் உலகம் முழுவதும் இந்தியத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாகக் கொண்டு சென்றது போல, சமீபத்தில் இஸ்ரேலில்  நடந்த போருக்கு மத்தியில் கட்டிட வேலை செய்யவும், ஜெர்மனியிலும் ஜப்பானிலும் வயதானவர்களுக்குச் சேவை செய்வதற்கான தொழிலாளர்களை வழங்கவும், 37 லட்சம் இந்தியத் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்ய 16 நாடுகளுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். அதுமட்டுமன்றி இந்தியாவில் தொழில் தொடங்க வரும் பன்னாட்டு நிறுவனங்களில் எந்த உரிமையும் இன்றி 12 மணிநேரம் வரை வேலைசெய்யும் அடிமைகளை உருவாக்குவதற்காகத்தான் 3ம் வகுப்பு, 5ம் வகுப்புகளிலேயே மாணவர்களை வடிகட்டும் வேலையைச் செய்கிறார்கள் எனவும் இது தேசியக் கல்விக் கொள்கையல்ல, ஏகாதிபத்தியக் கல்விக் கொள்கை எனவும் விளக்கிப் பேசினார்.

அரங்க கூட்டத்தின் இறுதியில் நடைபெற்ற, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பேராசிரியர்கள் பதிலளித்த கலந்துரையாடல் பகுதி சிறப்பானதாக அமைந்தது.

 

  • செங்கனல் செய்தியாளர்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன