மார்க்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் சிறந்த அமைப்பாளர்
இன்று, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சித்தாந்தத்தை வடித்துக் கொடுத்த மாமேதை, காரல் மார்க்ஸ் அவர்களின் 206வது பிறந்த தினம். இன்றைக்கு மார்க்ஸைப் பற்றி அறிந்த தொழிலாளர்களுக்குக் கூட அவர் ஒரு தத்துவஞானியாக, படிப்பாளியாக, பொருளாதார அறிஞராக மட்டுமே அறியப்பட்டுள்ளார். மார்க்ஸ், பாட்டாளி வர்க்க விடுதலைக்கான புரட்சிகர விஞ்ஞானத்தினை, வெறுமனே லண்டன் நூலகத்தில் அமர்ந்து கொண்டு உருவாக்கவில்லை. அவரது காலகட்டத்தில் நடந்த பல்வேறு தொழிலாளர் இயக்கங்களில், புரட்சிகர இயக்கங்களில் பங்கெடுத்து, அவர்களை ஒருங்கிணைத்து, வழிகாட்டி இயக்கும், நடைமுறை வேலைக்கு தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.
பாட்டாளி வர்க்க விரோத கண்ணோட்டங்கள் தொழிலாளர் மத்தியில் வேரூன்றுவதற்கு எதிரான போராட்டத்தை பல்வேறு தளங்களில் தன் வாழ்நாள் முழுவதிலும் நடத்தினார். மார்க்சின் தத்துவப் பங்களிப்பு குறித்து அறிந்த பலரும் பாட்டாளிவர்க்க இயக்கத்தின் நடைமுறை வேலைகளில் மார்க்சின் பங்களிப்பு குறித்து மிகக் குறைவாகவே அறிந்துள்ளனர்.
பாட்டாளி வர்க்கத்தின் சிறந்த அமைப்பாளராக மார்க்ஸை நாம் அறிந்து கொள்ளவதற்கு முன்னர், அன்றைய காலக்கட்டத்தில் ஐரோப்பாவில் நிலவிய தொழிற்சங்க இயக்கங்கள்; அது பின்தங்கி இருந்ததற்கான காரணங்கள்; அவை தங்களது வரலாற்று ரீதியான கடமைகளை செய்யத் தவறி, தொழிலாளர்களை எவ்வாறு தவறான பாதையில் வழி நடத்தியது; அதற்கெதிராக மார்க்சின் சமரசமில்லாத போராட்டம் போன்றவற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
1840களின் காலகட்டத்தில் ஐரோப்பாவின் தொழிற்சங்க இயக்கம் கற்பனாவாத சோசலிஸ்டுகளின் பிடியில் இருந்தது. இந்த கற்பனவாத சோசலிசம் ஆங்கிலேய முதலாளிகளுக்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையுள்ள வர்க்க வேறுபாடுகளை தெளிவாகப் பார்த்தது. ஆனால் தொழிலாளி வர்க்கம் இன்னும் குழந்தை பருவத்தில் இருக்கிறது எனவும், அது வரலாற்றில் எவ்வித முக்கிய பாத்திரம் வகிக்க முடியாதெனவும் சுதந்திரமாக அரசியல் இயக்கம் நடத்த முடியாது எனவும் அவர்கள் கருதினர்.
இதன் விளைவாக பிரிட்டிஷ் தொழிற்சங்க இயக்கத் தலைவர்களின் சோசலிச கண்ணோட்டங்கள் குழப்பத்தில் இருந்தன; அக்காலத்திய பிரிட்டிஷ் சோசலிசம் தெளிவற்றதாகவே இருந்தது. இதனால் ஐரோப்பிய தொழிற்சங்க இயக்கங்களின் தலைவர்கள், தொழிலாளர்களை அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க விடாமல் தடுத்தார்கள். அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்த்தார்கள்; முக்கியமாக புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்த்தார்கள்.
ஐரோப்பாவில் நிலவிய இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மார்க்சும், எங்கெல்சும் களத்திற்கு வந்தனர். விஞ்ஞான சோசலிசத்திற்கு அடித்தளமிட்டனர். முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சோசலிசத்தை நிறுவும் புரட்சிக்கு பாட்டாளிவர்க்கம்தான் தலைமைதாங்க முடியும் என்பதை உறுதிபடக் கூறினார்கள்., பாட்டாளிவர்க்கத்தை அணிதிரட்டும் வேலையிலும் இறங்கினார்கள்.
1845ல் பிரஸ்ஸெல்சுக்கு வந்த மார்கஸ் அங்கிருந்த புரட்சிகர அமைப்புகளான டெமாக்ரடிக் லீக், ஜெனரல் ஒர்க்கர்ஸ் சொசைட்டிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டார். இதுமட்டுமில்லாமல் பெடரேசன் ஆப் தி ஜஸ்ட் எனும் அமைப்போடும் மார்க்சும் எங்கெல்சும் தொடர்பு கொண்டிருந்தனர். .
1848 புரட்சிக்கு முந்திய காலக்கட்டத்தில் மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்க இயக்கத்திலுள்ள முன்னணி நபர்களை நடைமுறை வேலைகளில் ஒன்றுபடுத்தி ஒரு பாட்டாளி வர்க்க கட்சியை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார்கள்.
மார்க்ஸ், பாட்டாளி வர்க்கத்திற்கான அரசியல் கட்சி ஒரு சர்வதேச அமைப்பாக இருக்க வேண்டும் என கருதினார். அத்தகைய ஒரு கட்சியை ஏற்படுத்துவதற்கு கம்யூனிஸ்ட் கருத்துக்களை பரப்புவத்தைத் துவக்குவதற்காக எல்லா நாடுகளிலும் முக்கியமாக இங்கிலாந்து பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் முன்னணியாளர்களிடம் நெருக்கமான தொடர்பை மார்க்ஸ் கொண்டிருந்தார்.
1846 பிப்ரவரியில் எங்கெல்சுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கடிதப் போக்குவரத்து கமிட்டியை மார்க்ஸ் அமைத்தார். இந்த கமிட்டியின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும்படி அக்காலத்திய ஜெர்மன், பிரிட்டன், பிரஞ்சு சோசலிஸ்டுகளுக்கு கடிதங்களை மார்க்ஸ் அனுப்பி வந்தார். இதன் விளைவாக 1847ல் கம்யூனிஸ்ட் லீக் எனும் அமைப்பு உருவானது. இது தான் முதன் முதலில் உருவானதொரு சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பாகும்.
பிரஞ்சு, ஜெர்மன், சுவிட்சர்லாந்து, இத்தாலில் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட புரட்சியாளர்களுடனும், அறிஞர்களுடனும் கம்யூனிஸ்ட் லீக் அமைக்கப்பட்டது. லண்டன், பாரிஸ், பிரஸ்ஸெல்ஸ் நகரங்களில் இதற்கு கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1847 டிசம்பரில் கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாடு நடந்தது. இம்மாநாட்டிற்கான திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பு மார்க்ஸ்-எங்கெல்சிடம் வழங்கப்பட்டது. இரண்டு மாதங்களில் அவர்களிருவரும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தயாரித்தார்கள். மனித குல வரலாற்றில் தலைசிறந்த ஆவணமான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1848 பிப்ரவரியில் லண்டனில் வெளியிடப்பட்டது.
இவ்வறிக்கை வெளிவந்த ஓராண்டுக்கு பின்பு பிரான்சில் 1848ல் துவங்கிய புரட்சிகள் விரைவிலேயே ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி மற்றும் இதர நாடுகளுக்கு பரவியது. மார்க்ஸ் இதை கண்டம் தழுவிய புரட்சி என்றார். தனது பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள், லூயி போனபார்ட், பிரான்சின் உள்நாட்டுப் போர் எனும் மிக முக்கியமான நூல்களில் பிரான்சின் புரட்சி அனுபவங்களை அனைத்தையும் வரலாற்று கண்ணோட்டத்துடனும் தொழிலாளி வர்க்க விஞ்ஞான சோசலிச கண்ணோட்டத்துடனும் விளக்கினார்.
மார்க்ஸ் அப்போது ஐரோப்பாவில் நடைப்பெற்ற புரட்சியில் பெற்ற ஆய்வுகளை கொண்டு கம்யூனிஸ்ட் லீக்கில் அறிக்கைகளை தொடர்ந்து எழுதினார். புரட்சியில் தொழிலாளி வர்க்கம் வகிக்கும் பாத்திரத்தை பற்றி பல அறிக்கைகளை எழுதி ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்திற்கு வழிகாட்டினார். புரட்சி ஆரம்பித்தால் தொழிலாளர் வர்க்கம் செய்ய வேண்டியது என்ன? நடக்கும் நிகழ்ச்சிப் போக்கை தொழிலாளர்களுக்கு சாதகமாக மாற்ற அவர்கள் என்ன கோரிக்கைகளை எழுப்ப வேண்டும்? என்ன ரீதியான அமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? அதே சமயத்தில் தொழிலாளர்கள் தங்களுக்குச் சொந்தமான புரட்சிகரமான அரசுகளை நிறுவ வேண்டும் அது தொழிலாளர் கவுன்சிலாக கூட இருக்கலாம்; ஏனென்றால் போட்டி அரசு ஏற்படுவதால் முதலாளித்துவ ஜனநாயக அரசு தொழிலாளர்கள் மீதுள்ள கட்டுப்பாட்டை இழக்கிறது என புரட்சிகாலத்தில் தொழிலாளர் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய அனுகுமுறைகளை மார்க்ஸ் லீக்கின் அறிக்கைகளில் விளக்கினார்.
மேலும் அடக்குமுறை காலங்களில் தொழிலாளர்கள் வேலை செய்வது எப்படி? முடிந்த இடங்களிலெல்லாம் சட்ட ரீதியாக செய்வது; முடியாத இடங்களில் சட்ட விரோதமாக செய்வது என மார்க்ஸ் கம்யூனிஸ்ட் லீக்கின் அறிக்கையில் போதித்தார்.
1848ஆம் ஆண்டின் புரட்சியின் தோல்வி கம்யூனிஸ்ட் லீக்கை பலவீனப்படுத்தியது. அதைப் பாதுகாக்கவும், பலப்படுத்தவும் மார்க்ஸ் சோர்வில்லாமல் உழைத்தார். பல அரசியல், அமைப்பு ரீதியான அறிக்கைகளை லீக்கிற்கு மார்க்ஸ் வகுத்து அளித்தார்.
அதன் பிறகு 1864ல் தொழிலாளி வர்க்கம் ஒன்றினைந்து முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து கிளர்ந்தெழுந்த சமயத்தில் முதலாம் அகிலம் தோன்றியது. அகிலத்திற்கான ஆவணத்தை தயாரித்து முடிக்கையில் அது மார்க்ஸ் தயாரித்ததாகவே இருந்தது.
முதலாம் அகிலத்தில் நிலவிய திரிபுவாத சித்தாந்தப் போக்குகளை எதிர்த்து மார்க்சும், எங்கெல்சும் விடாப்பிடியாக போராடினர். அன்றைய தொழிலாளர் இயக்கத்தில் புரட்சிகர தன்மை இல்லாமல் பரிசுத்தமான தொழிற்சங்கவாதப் போக்கு ஒன்று இருந்து வந்தது; பிரிட்டிஷ் தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் சமரசம் செய்பவர்களாக மாறினர் எங்கெல்சு இந்த பரிசுத்தமான தொழிற்சங்கவாதத்தை 40 ஆண்டுகால குளிர் கால நித்திரை என வர்ணித்தார். இதனை உடைப்பது மார்க்சின் முதல் கடமையாயிற்று.
அடுத்ததாக முதலாம் அகிலத்தில் கோலோச்சிய புருதோனிசத்தை முறியடித்தார் புருதோன் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறையிலும் வர்க்கப்போராட்ட சித்தாந்த்தை நிராகரித்தவர். தொழிற்சங்கங்களையும் வேலைநிறுத்தங்களையும், தொழிலாளர் நலச்சட்டங்களையும் அவர் எதிர்த்தார். 1848 புரட்சிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, கட்சி என்பது சர்வாதிகாரத்திலிருந்து தோன்றுகிறது; புரட்சிகளின் காலம் கடந்து விட்டது என புருதோன் அறிவித்தார்.
ஆனால் மார்க்சோ புரட்சிகள் நடக்கவிருக்கின்றன என கணித்து கூறினார். மார்க்சும் எங்கெல்சும் இரண்டாண்டு காலம், அகிலத்தில் புருதோனிசத்திற்கு எதிராக போராட வேண்டியிருந்தது.
புருதோனைப் போலவே லஸ்ஸாலும் தொழிற்சங்கங்களுக்கும் வேலை நிறுத்தங்களுக்கும் எதிரானவர். அவை தொழிலாளர்களின் ஆற்றலை வீணடிக்கின்றன என்றார். கூலியின் இரும்பு சட்டம் என்று இவர் கிளப்பி விட்ட வாதம் தொழிலாளர்கள் மத்தியில் குழப்பத்தை விளைவித்த போது, மார்க்ஸ் தனது கூலி விலை இலாபம் எனும் நூலில் இவரின் தவறான வாதங்கள் அனைத்தையும் முறியடித்தார்.
புருதோனின் சீடர் என கூறிக் கொண்ட பக்கூனின் என்பவருக்கும் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. வர்க்கங்களுக்குள் சமத்துவம்; தாய் சொத்து ஒழிய வேண்டும்; மூலதனத்தை தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலாளிகளுக்கும் பிரித்து கொடுப்பது போன்ற விசயங்களை தொழிலாளர்களிடம் பக்கூனின் பிரச்சாரம் செய்தார். ஆனால் மார்க்ஸ் வர்க்கங்கள் ஒழிய வேண்டும் என பக்கூனிசத்திற்கு எதிராக தீவிரமாக அகிலத்தில் போராடினார்.
இப்படி ஒருபுறம் பாட்டாளிவர்க்கத்திற்கு விரோதமான கருத்துக்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் போதே மார்க்ஸ், பல்வேறு நாடுகளில் இருந்த பாட்டாளிகளின் இயக்கங்களோடு இணைந்து ஆக்கப்பூர்வமான நடைமுறைவேலைகளில் ஈடுபட்டார். லண்டனில் இருந்த ஜெர்மன் தொழிலாளர் கல்வி கழகத்தில் 1860களில் அவர் கலந்து கொண்டார்; போலந்து தேசிய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவளித்து அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணினார்; அமெரிக்க ஜக்கிய நாடுகளில் நீக்ரோ அடிமை முறையை எதிர்த்து போராடிய வீரர்களுக்கு அவர் ஆதரவு தெரிவித்தார்; ஆங்கிலேயத் தொழிலாளர்கள் நடத்திய கூட்டங்களுக்கு ஆதரவளித்தார்; ஜெர்மன் தொழிலாளர்களின் பொதுக்கூட்டமைப்போடு தொடர்பிலிருந்தார்.
இவ்வாறு பல்வேறு நாட்டு தொழிலாளர் வர்க்க பிரதிநிதிகளுடன் மார்கஸ் தொடர்பு கொண்டு அவர்களது போராட்டங்கள் குறித்து விவாதித்தார், கடிதம் எழுதினார், அவர்களது நடவடிக்கைகளுகு ஆதரவு தெரிவித்தார் அல்லது அவை குறித்து விமர்சனம் செய்தார். இதனைத் தனது இறுதி மூச்சுவரைத் தொடர்ந்து செய்தார்.
இவை மார்க்ஸ் பாட்டாளி வர்க்க விடுதலைக்காக நடைமுறையில் எவ்வாறு தன்னை அர்ப்பணித்தார் என்பதற்கான ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. புரட்சிகரமான சித்தாந்தம் இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது என்ற கொள்கையை பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு அளித்தவர் மார்க்ஸ். உலக தொழிலாளர் இயக்க வரலாற்றில் மார்க்ஸ் ஒரு மகத்தான தத்துவஞானியாகவும் தொழிலாளி வர்க்கத் தலைவனாகவும், சிறந்த அமைப்பாளராகவும் வாழ்ந்து தன் வாழ்க்கையை மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார். பேராசான் மார்சிடமிருந்து அர்ப்பணிப்பையும், பாட்டாளி வர்க்க விரோத கருத்துக்களை எதிர்த்து முறியடித்த அவரின் தத்துவஞானத்தையும், நடைமுறையும் கற்போம்!



