விவசாயிகள் கோரிக்கை பற்றிய மெத்த படித்த அரை வேக்காட்டு முதலாளித்துவ அறிஞர்களின் பொய்கள்

குறைந்த பட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க, இந்திய அரசுக்கு பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை என வாதிடும் இப்பொருளாதார புலிகளில் யாரும் விவசாயிகள், தங்களது விளைப் பொருட்களை குறைந்தப் பட்ச ஆதார விலைக்கு கீழே விற்பதனால் அடையும் நட்டக் கணக்கைப் பற்றி ஒருபோதும் வாய் திறப்பதில்லை.

 

 

வேளாண் விளைபொருட்களுக்கு சட்டப்பூர்வமான குறைந்த பட்ச ஆதாரவிலை; உலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் டெல்லியின் எல்லையில் தீவிரமாக போராடி வருகின்றனர்.

மோடி அரசின் ஊதுகுழல்களான முதலாளித்துவ பத்திரிக்கைகளும், மோடி அரசின் துதிபாடிகளான மெத்த படித்த முதலாளித்துவ அறிஞர்களும் சட்டப்பூர்வ குறைந்தப் பட்ச ஆதார விலை என்ற கோரிக்கையே நாட்டிற்கு பேராபாத்து எனவும் சட்டப்பூர்வ கு.ஆதார விலையை அமுல்படுத்த பொருளாதார ரீதியில் இந்திய அரசுக்கு சாத்தியமில்லை போன்ற கட்டுக்கதைகளை பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் பரப்பி வருகிறார்கள்

தான் விளைவித்த பயிர்களுக்கு  சந்தையில் என்ன விலை கிடைக்குமோ என தெரியாமலேயே ஒவ்வொரு விவசாயியும் நாட்டில் பயிர் செய்கிறார்கள், பயிர்களை விளைவிப்பதற்காக கடனில் மூழ்கி திண்டாடுகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்களது பயிர்களை கு.ஆதார விலைக்கு கீழே விற்று நட்டமடைகின்றனர். பயிர்களை விளைவிப்பதற்காக கடனில் மூழ்கி திண்டாடும் விவசாயிகள் தங்களுக்கு அனைத்து பயிர்களுக்கு நாடு தழுவிய அளவில் கு.ஆதார விலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளைந் வைத்து நேர்மையாக போராடுகிறார்கள்.

ஆனால் இக்காவி பாசிஸ்ட் பக்தர்களோ, அனைத்து பயிர்களையும் (23 வேளாண் பயிர்கள்) சட்டப்பூர்வ குறைந்த பட்ச ஆதார விலையில் அரசு கொள்முதல் செய்தால் அரசுக்கு ரூ10 இலட்சம் கோடி செலவாகும் இதனால் அரசு, திவால் நிலைக்கு செல்ல நேரிடும்; நாட்டின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, மற்றும் பிற தேவைகளுக்கு  நிதி ஒதுக்குவது கணிசமான அளவு குறைந்திடும் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்

பிசினஸ் டுடே செய்தியின் படி 2020 ஆம் ஆண்டில் நாட்டின் அனைத்து விவசாய உற்பத்தி பொருட்களின் (பால், இறைச்சி, கரும்பு, பருத்தி மற்றும் சிறு பயிர்கள் உள்பட) மொத்த மதிப்பு ரூ 40 இலட்சம் கோடி. இதில் சந்தைக்கு வரும் நெல், கோதுமை மற்றும் சோளத்தின் மதிப்பு ரூ 10 இலட்சம் கோடி (பிசினஸ் டுடே). விவசாயிகள் விளைவித்த ஒவ்வொரு தானியத்தையும் ஒருபோதும் அரசு கொள்முதல் செய்யப் போவதில்லை. விவசாயிகள் தங்களது குடும்பத் தேவைகளுக்காகவும், விதைகளுக்காகவும் 30% ஒதுக்குகின்றனர். விவசாயிகள் கோரும் 23 பயிர்களுக்கும் குறைந்த பட்ச ஆதாரவிலைக்காக அரசு கூடுதலாக ரூ 47,764 கோடி ரூபாய் (2017-18 தரவு) ஒதுக்க வேண்டிய வரும் என்கிறார் சம்யுக்த் கிசான் மோர்ச்ச ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரான யோகேந்திர யாதவ். நிதிஆயோக் 2020ன் தகவல் படியே  மொத்த விளைப் பொருட்களில் வெறும் 11% அரசு கொள்முதல் செய்கிறது. ஆனால் உண்மையான மதிப்பீட்டை மறைத்து பொய்யான தகவல்களை தெரிவிக்கிறார்கள் மோடியின் இந்த அடிமை சேவகர்கள்.

குறைந்த பட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க, இந்திய அரசுக்கு பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை என வாதிடும் இப்பொருளாதார புலிகளில் யாரும் விவசாயிகள், தங்களது விளைப் பொருட்களை குறைந்தப் பட்ச ஆதார விலைக்கு கீழே  விற்பதனால் அடையும் நட்டக் கணக்கைப் பற்றி ஒருபோதும் வாய் திறப்பதில்லை.

சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான இந்திய கவுன்சில் (ICRIER) விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை கு.ஆதார விலைக்கும் கீழே விற்பதால் விவசாயிகள் அடையும் நட்டத்தை கணக்கீட்டு கூறியுள்ளது. இதில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் விவசாயிகள் ரூ 14இலட்சம் கோடியும், 2000 ஆம் ஆண்டிலிருந்து 2017 வரை ரூ 45 இலட்சம் கோடியும் நட்டமடைந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.அரசின் விவசாயக் கொள்கையால் விவசாயிகள் நட்டமடைந்து, கடனில் மூழ்கி தற்கொலை செய்யும் அவலநிலையை மறைத்து காவிபாசிஸ்டுகளுக்கு சாமரம் வீசுகிறார்கள் இப் பொருளாதார புலிகள்.

கு.ஆதார விலையை சட்டபூர்வமாக்க விவசாயிகள் நேர்மையாக போராடி வருவதை கொச்சைப் படுத்தி இது பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை எனும் இந்த மெத்த படித்த அரைகுறைகள், மோடி ஆட்சியின் கீழ் கார்ப்பரேட்டுகள் நடத்தும் பகற்கொள்ளையை ஒரு போதும் கண்டு கொள்வதில்லை.

மோடி ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில் (2015 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட மொத்த வருமான வரித் தள்ளுபடி 2.48 இலட்சம் கோடி ரூபாய்; அதே ஆண்டுகளில் வழங்கப்பட்ட சுங்க வரித் தள்ளுபடி 1.80 இலட்சம் கோடி ரூபாய்; உற்பத்தி வரித் தள்ளுபடி 1.50 இலட்சம்  கோடி ரூபாய்.இச்சட்டபூர்வ வரித் தள்ளுபடிகள், சலுகைகள் எல்லாம் ஒருபுறமிருக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்திவரும் பல்வேறு விதமான வரி ஏய்ப்புகளைக் கணக்கில் கொண்டால், அம்மோசடிகளின் மதிப்பு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டும். மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் கார்ப்பரேட்களுக்கான வாரக்கடன் தள்ளுபடியே 12 இலட்சம் கோடியாக இருக்கிறது.

பல்வேறு நாடுகளில் கிளைகளைப் பரப்பிக்கொண்டு செயல்பட்டு வரும் நவீனத் தகவல் தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு 50,000 கோடி டாலர் அளவிற்கு ஏறத்தாழ 35 இலட்சம் கோடி ரூபாய்  உலகம் முழுவதும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகக் குறிப்பிடுகிறார், ஜே.என்.யு. பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் ஜெயதி கோஷ்

மோடியின் நடவடிக்கையை கேட்க வக்கற்ற இப்பொருளாதார புலிகள், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நிதிப்பற்றாக்குறை என நரித்தனமாக கூப்பாடு போடுகிறார்கள்..இந்நரித்தனத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை விவசாயிகளை கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகளை கொடுப்பது தான்

குறைந்த பட்ச ஆதாரவிலையை மறுக்கும் வாதம் மூலம் இம்முதலாளித்துவ அறிஞர்கள் கூறவருவது; போட்டிச் சந்தைக்கு விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு வரும் போது, சந்தையின் போட்டி விதிகளே விவசாயிகளுக்கு இலாபத்தை ஈட்டி தரும். போட்டிச் சந்தையின் மூலம் ஒருமுனையில் விவசாயிகளையும் மறுமுனையில்  பகாசுர  வர்த்தகர்களையும், கார்ப்பரேட்களையும் நிற்க வைக்க விவசாயிகளை ஒட்டச் சுரண்டுவதே இவர்களின் நோக்கம். உலக வர்த்தக கழகத்தின் கட்டளைக்கு அடிபணியும் மோடி அரசின் விவசாய விரொதக் கொள்கைக்கு மணி அடிக்கிறார்கள் இக்காவி பாசிஸ்ட் பக்தர்கள்.

மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அடிவருடி அரசு என்றால் இந்த மெத்த படித்த அரை வேக்காட்டு முதலாளித்துவ பொருளாதாரப் புலிகள், உ.வ.கழகத்திற்கும் காவி பாசிஸ்ட்டுகளுக்கும் அடிவருடிகள் என்பதை அவர்களின்  வர்க்கப் பாசங்களே நிருபிக்கின்றன.

  • தாமிரபரணி

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன