ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு பதவி உயர்வு!
அரசு பயங்கரவாதத்திற்கு சன்மானமா?
மக்கள் அதிகாரம் கண்டனம்.

  ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு பதவி உயர்வு! அரசு பயங்கரவாதத்திற்கு சன்மானமா? மக்கள் அதிகாரம் கண்டனம். மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி 01.01.2024 மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 15 பேரைப் படுகொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான அப்போதைய தென்மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவிற்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு கொடுத்துள்ளது திமுக அரசு. ஸ்டெர்லைட் படுகொலை நடந்த போது அதற்கெதிராகவும், போராட்டத்தில் […]

 

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு பதவி உயர்வு!
அரசு பயங்கரவாதத்திற்கு சன்மானமா?
மக்கள் அதிகாரம் கண்டனம்.


மக்கள் அதிகாரம்
பத்திரிக்கை செய்தி
01.01.2024

மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 15 பேரைப் படுகொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான அப்போதைய தென்மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவிற்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு கொடுத்துள்ளது திமுக அரசு.

ஸ்டெர்லைட் படுகொலை நடந்த போது அதற்கெதிராகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவாகவும் பேசிய மு.க.ஸ்டாலின், அதற்காக வழக்குகளை மட்டுமல்ல துப்பாக்கி குண்டுகளையும் எதிர்கொள்வதற்குத் தயார் என முழங்கினார். அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அன்றை போலீசு டிஜி.பியும்  பதவி விலகும் வரை தனது போராட்டம் ஓயாது என்றார்.

ஆனால் இன்றோ ஆட்சிக்கு வந்த பிறகு படுகொலையின் முக்கிய குற்றவாளியான சைலேஷ்குமாருக்கு, அவர் செய்த சேவையைப் பாராட்டி பதவி உயர்வு கொடுத்து அழகு பார்க்கிறார்.  

ஸ்டெர்லைட் படுகொலை குறித்து விசாரிக்க அன்றைய அதிமுக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு தனது அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு திட்டமிட்ட படுகொலை என்று கூறியதுடன் இதே போலீஸ் அதிகாரி சைலேஷ் குமார் யாதவ் உட்பட 27 அதிகாரிகளை குற்றவாளிகள் என்று அறிவித்தது.

அருணா ஜெகதீசன் அறிக்கை வெளியாகி ஓராண்டான நிலையில், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் உண்மையில் திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஆய்வு மேற்கொண்ட சிபிஐ, போராட வந்த மக்களை குற்றவாளிகளாக்கியது. ஆனால், சிபிஐ அறிக்கையை மறுதலித்த அருணா ஜெகதீசன் அறிக்கை, அரசு அதிகாரிகளை குற்றவாளிகள் என்று அறிவித்தது. அதே நேரத்தில் அந்த அறிக்கை வேதாந்தா நிறுவன முதலாளி அனில் அகர்வால் மீது குற்றம் சொல்லாமல் அவரை இதிலிருந்து தப்பிக்கும் படி செய்தது. இது “எய்தவனை விட்டு அம்பை நோகும் அருணா ஜெகதீசன் அறிக்கை” என்று நாங்கள் அப்போதே கூறினோம். எனினும் இந்த அறிக்கை தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்று பலரும் ஆருடம் கூறினர். மாறாக, அவர்களுக்கு இப்போது பதவி உயர்வு கிடைத்துள்ளது. விசாரணை ஆணையம் என்பதே மக்களை ஏய்ப்பதற்குதான் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகி வருகிறது.

முதலாளித்துவ அரசுகள் பாசிசத்திற்கு பாதை அமைத்துக் கொடுப்பதை குறைத்து மதிப்பிட முடியாது என்று தோழர் டிமிட்ரோவ் கூறினார். அது போல்தான் இன்று திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வளர்ச்சி எனும் பெயரில் வேதாந்தாவின் வேறு பல ஆலைகளை தமிழகத்திற்குக் கொண்டுவர திமுக அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

பாசிசத்திற்கு அடிப்படை நிதிமூலதனம். மிகப்பெரிய கார்ப்பரேட் குற்றவாளி அனில் அகர்வால்தான் அந்த 15 பேரின் மரணத்திற்கு காரணமான முதன்மை குற்றவாளி. ஆனால், அனில் அகர்வாலையோ அல்லது அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிடப்படும் அதிகாரிகளையோ இந்த அரசு தண்டிக்காது என்பது இன்று மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த பதவி உயர்வு அம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்த பதவி உயர்வை திரும்ப பெறுவதோடு அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில் நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடிட தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

நம் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஸ்டெர்லைட் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம், டெல்லி விவசாயிகள் போராட்டம் போல் நாம் போராட வேண்டும். இது தான் நீதியை, நம் கோரிக்கையை, வாழ்வாதாரத்தை வென்றெடுக்கும் என்பதை அந்த தியாகிகள் நமக்கு கற்றுக்கொடுத்து சென்றிருக்கிறார்கள். அந்த தியாகத்தை நாம் அனைவரும் உயர்த்தி பிடிக்க வேண்டும். தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவதுடன், எங்களது அமைப்பு அம்மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

முத்துக்குமார்
மாநில செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
97901 38614

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன