மின்துறை தனியார்மயத்துக்கு எதிரான ஓசூர் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகள் சார்பாக மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்கள் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஓசூரில் அக்டோபர் 8ம் தேதியன்று பொதுக்கூட்டம் மற்றும் புரட்சிகர கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கூட்டத்திற்கு ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பொது மக்களும், ஆதரவாளர்களும், அமைப்புத் தோழர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக விடியல் இசைக் குழுவினரின் தப்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வர்க்கப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் கூட்டம் தொடங்கியது.

பொதுக்கூட்டத்தை தலைமையேற்று நடத்திய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் தோழர் சங்கர் தனது தலைமையுரையில் இரண்டு மாதங்களாக நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் மக்களைச் சந்தித்த அனுபவங்கள் குறித்தும், மின்சாரத்துறை தனியார்மயமாக்கல் எப்படி மக்களைப் பாதிக்கிறது என்பது குறித்தும், அதனை முறியடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.

பொதுக்கூட்டத்தின் முதல் உரையாக “இலவச மின்சாரமும் தமிழகத்தின் அதன் போராட்ட வரலாறும்” என்ற தலைப்பில் தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் கி.வே.பொன்னையன் உரையாற்றினார். விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் மின்சாரம் என்பது இலவச மின்சாரம் அல்ல அது அவர்களது உரிமை என்பதையும், அந்த உரிமையைப் பெறுவதற்காக தமிழக விவசாயிகள் நடத்திய நீண்ட நெடிய போராட்டங்கள் குறித்தும், உயிர்த்தியாகங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார். இத்துனை போராட்டங்களின் மூலமாக கிடைத்த இந்த உரிமையை இன்றைக்கு மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக, தனியார்மயம் என்ற பெயரில் ஒழிக்க நினைப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் பேசினார்.

அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயகப் பொது தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் சி.முருகன் “தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் விசுவாசம் குறித்தும், பொதுத் துறைகளைத் தொடர்ந்து தனியார்மயமாக்கி வருவது குறித்தும், அதில் பணிபுரிந்து வந்த பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் விளக்கிப் பேசினார். ஒன்றிய அரசின் தனியார்மய கொள்கை தற்போது மாநில மின்சார வாரியங்களையும் தனியாருக்கு விற்பனை செய்ய எத்தனிப்பது குறித்தும் விளக்கினார். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தொழிலாளர்கள் புயல், மழை, வெள்ளம் என இயற்கைப் பேரிடர்கள் கடந்த காலங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைத் தாக்கியபோது எப்படி தங்களது உயிரையும் பொருட்படுத்தாது மக்கள் பணியில் ஈடுபட்டு மின்சார விநியோகத்தைச் சீராக்கியது குறித்தும், பொதுத்துறையாக மின்சாரம் இருந்த காரணத்தில்தான் அதனைச் சாதிக்க முடிந்தது என்றும் தற்போது அதனை தனியார்மயமாக்குவதை எதிர்த்து முறியடிக்க தொழிலாளர்களுடன் உழைக்கும் மக்கள் அனைவரும் கரம் கோர்க்க வேண்டும் எனவும் பேசினார்.

சிறப்புப் பேச்சாளர்களின் உரைகளுக்கு இடையிடையே மக்கள் அதிகாரம் கலைக் குழுவினர் புரட்சிகர பாடல்களை பாடினார்கள்.

தோழர் முருகனைத் தொடர்ந்து, “மின்சார சட்ட திருத்தம் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிரானது ஏன்?” என்ற தலைப்பில் கர்நாடக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பாலன் அவர்கள் உரையாற்றினார். மின்சாரத் துறையைத் தனியார்மயமாக்குவதற்காக மோடி அரசால் தொடர்ந்து கொண்டுவரப்படும் சட்டத் திருத்தங்கள் குறித்தும், மின்சாரத் துறை தனியார்மயமானால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பேரிச்சம் பழத்திற்கு பழைய பொருட்களை விற்பது போன்று பல ஆயிரம் கோடி சொத்து மதிப்புள்ள பொதுத் துறைகளைத் தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் மோடி அரசின் தொடர் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் குறித்தும் எளிமையாக புரியும் படி சிறப்பாக விளக்கிப் பேசினார்.

அடுத்ததாக, “மின்வாரிய நட்டத்திற்கு காரணம் மானியமா தனியார்மயமா” என்ற தலைப்பில், தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர் தோழர் சா.காந்தி அவர்கள் உரையாற்றினார். தனது உரையில் மக்களுக்கு குறைந்த விலையில் எதனைக் கொடுத்தாலும் மானியம் என அரசு கூறினாலும் அவை மக்களின் பொதுச் சொத்தான நாட்டின் வளத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது, அவை மானியம் அல்ல என்றும் பெரும் முதலாளிகளின் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதுதான் மானியம் என்று கூறினார். மின்சாரத்தில் அம்பேத்கர் கொண்டுவந்த பணக்காரர்கள், பெரும் முதலாளிகளுக்கு அதிக கட்டணம், எழை உழைக்கும் மக்களுக்கு குறைவான விலையில் மின்சாரம் என்ற கிராஸ் சப்சிடி முறையை ஒழிக்க இன்றைக்கு தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் எத்தனிப்பதை விளக்கினார். தொடர்ந்து பல்வேறு வழிகளில் மிகவும் நூதனமான முறையில் மின்சாரத் துறையில் நடைபெறும் திருட்டு, கார்ப்பரேட் மின் உற்பத்தி நிறுவனங்கள், மின்சார வாரியம், அரசு இணைந்து நடத்தும் இந்தக் கொள்ளைதான் மின்வாரிய நட்டத்திற்குக் காரணம் என்பதைத் தனது உரையில் அம்பலப்படுத்தினார்.

இறுதியாக உரையாற்றிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செயலாளர் தோழர் முத்துக்குமார், “தேவை மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போர்” என்ற தலைப்பில் மின்சாரக் கட்டண உயர்வு என்பது தனிப்பட்ட நிகழ்வு அல்ல அது நம் நாட்டின் மீதும், மக்களின் மீதும் பன்னாட்டுக் கம்பெனிகளும் தரகு முதலாளிகளும், அவர்களுக்கு ஆதரவாக காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசும் இணைந்து தொடுத்துள்ள மறுகாலனியாக்கம் என்ற யுத்தத்தின் ஒரு பகுதி, இந்த யுத்தத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அனைத்து உழைக்கும் மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றால் ஆங்கிலேய காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய திப்புசுல்தான், பகத்சிங்கின் வழியில் மீண்டு ஒரு தேச விடுதலைப் போரை நடத்த வேண்டியிருக்கிறது என அறைகூவல் விடுத்தார்.

பேச்சாளர்களின் உரைகளைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் கலைக் குழுவினரின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பின் பாகலூர்ப் பகுதி தோழர் ஜெயராமனின் நன்றியுரையுடன், பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதம் இசைக்கப்பட்டு பொதுக்கூட்டம் நிறைவுற்றது.
