தமிழக போலீசின் காவி பாசம்
ரயில்வே போலீஸ் படையைச் சேர்ந்த மதவெறி பிடித்த மிருகம் ஒன்று, ஜெய்ப்பூர் ரயிலில் பயணம் செய்த அப்பாவி இஸ்லாமியர்கள் மூவரை, அவர்களது தோற்றத்தை மட்டும் வைத்து அடையாளம் கண்டு, சுட்டுக் கொன்ற கொடூர நிகழ்வு நடந்த போது, இது எங்கோ வடக்கில் நடந்த தனித்த சம்பவம் என்றே பலரும் நினைத்தனர். ஊடகங்களும் அதனை அவ்வாறே பிரச்சாரமும் செய்தன. ஆனால் அரசுப் படைகளில் காவி பாசிச சித்தாந்தத்தின் ஊடுருவல் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருவதை அடுத்தடுத்து நடந்துள்ள இரண்டு சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
வடஇந்திய மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் காவி பாசிச சித்தாந்தத்தின் தாக்கம் குறைவாக உள்ளதாக கருதப்படும் தமிழகத்தில், அந்த கருத்து தவறு எனக் கூறும் அளவிற்கு நேற்று மட்டும் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் “இந்துத்துவ பாசிசம்:வேர்களும் விழுதுகளும்”, “அர்த்தமற்ற இந்து மதம்” உள்ளிட்ட புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் விளம்பர சுவரொட்டியை அகற்ற வேண்டும் எனவும் கூறி விற்பனை அரங்கிற்குள் நுழைந்து போலீசார் மிரட்டியுள்ளனர். காவி பாசிசத்திற்கு ஆதரவாக செயல்படும் தமிழக போலீசின் இந்த நடவடிக்கையை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அம்பலப்படுத்திக் கண்டித்துள்ளார்.

இதே போன்றதொரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் போக்குவரத்து போலீசு இன்ஸ்பெக்டராக உள்ள இராஜேந்திரன் என்பவர் ஓரு வாட்ஸப் குழுவில் கிறிஸ்தவர் ஒருவர் கிறிஸ்தவ பாடல் ஒன்றைப் பகிர்ந்ததையடுத்து, “இது இந்திய நாடு, ராம ஜென்ம பூமியில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டி உள்ளோம். இந்தியாவில் உள்ளவர்கள் தான் பூஜை செய்வார்கள். நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்போம்; கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் முடிந்தால் தடுத்து நிறுத்தி பாருங்கள். இங்கு இருக்க முடியவில்லை என்றால் பாகிஸ்தான், சவுதி போன்ற நாடுகளுக்குச் சென்று விடுங்கள்” என்றும் “இங்கு ராம ராஜ்ஜியம் தான் நடக்கும்” என்றும் பேசி பதிவு செய்து, அதே வாட்ஸப் குழுவில் அனுப்பி மிரட்டியுள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் போலீசார் வெளிப்படையாக காவி பாசிசத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இதில் புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போன்று அரசுப் படைகளில் பாசிச சித்தாந்தம் பரவுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். குஜராத் தொடங்கி சமீபத்திய ஹரியானா கலவரம் வரை சிறுபான்மையினத்தவர் மீதான காவி பாசிஸ்டுகளின் எல்லாத் தாக்குதல்களிலும் உள்ளூர் போலீசார் காவிகளுக்குத் துணையாக நின்றுள்ளனர். காவி பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் திமுக அதனை வெறுமனே வாயளவில் நிறுத்திக் கொள்ளாமல் இது போன்ற சக்திகளை இனங்கண்டு மாநில அரசுப் படைகளிலிருந்து வெளியேற்றும் வேலையைச் செய்ய வேண்டும்.
