தொழிலாளர்களின் ஊனை உருக்கும் சட்ட விரோத நிலக்கரி சுரங்கங்கள் – புகைப்படக் கட்டுரை:

இந்தியாவில் மின்சாரம் ஏறக்குறைய 80 விழுக்காடு நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்களில், நிலக்கரியை  வெட்டி எடுக்கும் தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்க முதலாளிகளுக்காக சுரண்டப்படும் தசையுள்ள சுரங்கங்கள். இத்தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக அசைக்கும் ஒவ்வொரு கை அசைவிலும் தான் இந்தியா ஒளிர்கிறது. நாட்டின் நிலக்கரி சுரங்கங்களை தனியார் முதலாளிகளும், பெரும் நிலக்கரி மாபியாக்களுமே கட்டுப்படுத்துகிறார்கள். இதில் பல சுரங்கங்கள் சட்ட விரோதமாக இயங்குகின்றன. இவ்வாறு இயங்கும் சுரங்கங்களின் பயன்பாடு முடிவடையும் போது  அச்சுரங்கங்களின் முதலாளிகள் அதை கைவிடுகின்றனர். […]

இந்தியாவில் மின்சாரம் ஏறக்குறைய 80 விழுக்காடு நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது.

நிலக்கரி சுரங்கங்களில், நிலக்கரியை  வெட்டி எடுக்கும் தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்க முதலாளிகளுக்காக சுரண்டப்படும் தசையுள்ள சுரங்கங்கள். இத்தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக அசைக்கும் ஒவ்வொரு கை அசைவிலும் தான் இந்தியா ஒளிர்கிறது.

நாட்டின் நிலக்கரி சுரங்கங்களை தனியார் முதலாளிகளும், பெரும் நிலக்கரி மாபியாக்களுமே கட்டுப்படுத்துகிறார்கள். இதில் பல சுரங்கங்கள் சட்ட விரோதமாக இயங்குகின்றன. இவ்வாறு இயங்கும் சுரங்கங்களின் பயன்பாடு முடிவடையும் போது  அச்சுரங்கங்களின் முதலாளிகள் அதை கைவிடுகின்றனர். அத்துடன் அந்த சுரங்கங்களில் வேலை செய்த தொழிலாளர்களையும் கைவிடுகின்றனர்.

இதனால் கைவிடப்பட்ட சுரங்கங்களில் எஞ்சியுள்ள நிலக்கரியை எடுத்து எரித்து அதிலிருந்து கட்டைக்கரி எனப்படும் கோக்கை தயாரித்து விற்று வாழ்க்கை நடத்தும் நிலைக்கு அத்தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர்.

சுரங்க மற்றும் கனிம முதலாளிகள் இயற்கை வளங்களையும் மட்டும் சுரண்டவில்லை. அதில் வேலை செய்யும் தொழிலாளிகளின் உழைப்புச் சக்தியையும் ஒட்டச் சுரண்டுகிறார்கள். நிலக்கரி மட்டுமில்லாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கனிமங்களான செம்பு, தங்கம், அலுமினியம் இன்னும் பல  கனிமங்களில் அக்கனிமச் சுரங்கங்களின் வேலைப்பார்க்கும் தொழிலாளர்களின் இரத்தம் கலந்த உழைப்பும் நமக்கு தெரியாத அவர்களின் சோகமான வாழ்க்கையும் கலந்திருக்கிறது.  

கைவிடப்பட்ட சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கும் ஆபத்தான வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் மரணமடைந்தாலோ அல்லது காயமடைந்து முடமானாலோ அவர்களது குடும்பத்தினர் அந்த வேலையைச் செய்து வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இது போன்றவர்களில் ஒருவர் தான் தேவி (34). இவரின் கதையை சமீபத்தில் கார்டியன் பத்திரிக்கை புகைப்படக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அதை வெளியிடுகிறோம்.

தேவியும் அவரது மகன்களும் தங்களது வீட்டிலிருந்து இரண்டு கீ.மீ தொலைவில் இருக்கும் ஏரியில் தண்ணீர் பிடிக்கும் காட்சி:

தேவி ஜார்க்கண்ட் மாநிலம் தன்வாத் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்ட விரோத நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்து தன் குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரின் கணவர் நிலக்கரி வெட்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் போது சுரங்க மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்து விட்டார். தேவிக்கு விஷால் குமார் (13), நமன் குமார் (13) என்று இரு மகன்கள் உள்ளனர்.

சட்டவிரோதமாக இயங்கி பின்பு கைவிடப்பட்ட சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலியான தன் கணவரின் புகைப்படத்தை காட்டும் தேவி.

தேவி தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்துவிடுகிறார். பின்பு அவர் செயல்பாட்டில் இல்லாத ஒரு சுரங்கத்தை நோக்கி நிலக்கரி எடுப்பதற்காக தினமும்  இரண்டு மணி நேரம் நடந்து செல்ல வேண்டும். அவர் தன் குடும்பத்தை காப்பாற்ற, நாள் முழுவதும் நிலக்கரி எடுப்பதில் செலவிடவேண்டும். சுரங்கத்தை அடைந்த பிறகு தேவி தன்னுடைய கோடாரியினால், நிலக்கரியை வெட்டி எடுக்கிறார். பின்னர் அவரும் அவரது இரு மகன்களும் வெட்டி எடுத்த நிலக்கரியை தாங்கள் கொண்டு சென்ற வாளிகளில் நிரப்பி மாலைக்குள் தங்களுடைய வீட்டிற்கு திரும்புகிறார்கள்.

கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கப்பாதையில் இருந்து நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் தேவி. இந்த சுரங்கப்பாதைகளின் மேற்கூரைகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம்.

சுரங்களில் இருக்கும் நிலத்தடி நெருப்பு ஆபத்தானவை. அங்கு இருக்கும் நச்சு வாயு சுவாசிக்க பெரும் தடையை ஏற்படுத்தும். தேவி சுரங்கத்தினுள் நிலக்கரியை வெட்டி எடுக்க 300 அடி வரை போக வேண்டும்.

தேவியும் அவரது மகன்களும் காலையில் வெட்டி எடுத்த நிலக்கரியில் இருந்து மாலை நேரத்தில் கட்டைக்கரி (கோக்) தயாரித்து விற்கிறார்கள்:

வீடு திரும்பிய பிறகு தேவியும் அவரது மகன்களும் தாங்கள் வெட்டி எடுத்த நிலக்கரியை எரித்து அதிலிருந்து வரும் கட்டைக்கரியை (கோக்) உள்ளூரிலிருக்கும் டீக்கடைகள் மற்றும் உணவகங்களுக்கு விற்கிறார்கள். இதன் மூலம் ஒரு நாளைக்கு 250 ருபாய் வரை தினமும் சம்பாதிக்கிறார்கள்.

காலையில் எடுத்த நிலக்கரியில் இருந்து மாலையில் கோக் தயாரித்து விற்கும் தேவி.
கோக் விற்று சம்பாதித்த பணத்தை எண்ணுகிறார் தேவி:
தேவியின் மூத்த மகன் விஷால் குமார், 13, கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கப்பாதையில் இருந்து ஒரு வாளி நிறைய நிலக்கரியை எடுத்துச் செல்கிறார். சுரங்கப்பாதையின் மேற்கூரை மிகவும் தாழ்வாக இருப்பதால் குனிந்து உள்ளே நுழைந்து வெளியேற வேண்டும்.

நிலக்கரி வெட்டி எடுக்கு வேலையின் இடையே தேவியின் இரு மகன்கள்.

கடின உழைப்பினால் வியர்வை மட்டுமில்லை! சுரங்கத் தொழிலாளர்களின் உடம்பில் இருக்கும் மனித தாதுக்கள் கூட வெளியேறும் போலும்!

ஜார்க்கண்டில் இருக்கும் ஜாரியா நிலக்கரி சுரங்கம் இந்தியப் பொருளாதாரத்திற்கு உதவுகிறது என்று கதையளக்கும் அதே சமயத்தில் நிலக்கரி சுரங்கங்களின் முதலாளிகளும் நிலக்கரி மாபியாக்களும் தான் வாழ்கிறார்கள்

நச்சு வாயுவை சுவாசித்த தேவியின் மூத்தமகன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றான். பூமியின் சுவாசத்தை மட்டுமில்லை! நிலக்கரி தொழிலாளர்களின் சுவாசத்தையும் சேர்ந்து உறிஞ்சும் நிலக்கரிச் சுரங்கமுதலாளிகள். இந்தியா ஒளிர்கிறது!
மழைக்காலங்களில், ஜாரியாவின் காற்று நச்சு வாயுக்களால் அடர்த்தியாகிறது.

சுரங்கங்கள் தன்னகத்தே ஆபத்தானவை. அவைகள் கார்பன் – டை -ஆக்சைடு, சல்பர் -டை-ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு போன்ற விச வாயுக்களை வெளியிடுகின்றன. இந்த விச வாயுக்கள் வளிமண்டலத்தில் பரவுவதால் தோல் நோய்கள், சுவாச நோய்களான காசநோய் மற்றும் பிற சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. திறந்தவெளி சுரங்கங்கள் சுற்றுசூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இச்சுரங்களிலிருந்து வெளியாகும் நச்சுத்தன்மை வாய்ந்த காற்று மாசுக்கள் உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாகின்றன.

இந்தியாவின் 80 விழுக்காடு மின்சாரம் நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. இதனால் கார்பன் வெளியேற்றத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

பலுகடாவில் நிலத்தடியில் பரவும் தீ, உள்ளூர் மக்களை இடம்பெயர கட்டாயப்படுத்துகிறது.
ஜாரியா பகுதியில் செயல்படும் சுரங்கத்தில், ஒரு அதிகாரப்பூர்வமற்ற சுரங்கத் தொழிலாளி பல் துலக்குகிறார்.

ஜார்க்கண்டிலிருக்கும் ஜாரியா சுரங்கங்கள் அங்கீகரிங்கப்படாத சுரங்க கூட்டங்களின் ஒரு பரந்த பகுதியாகும். இங்குள்ள கிராம மக்களுக்கு இச்சுரங்களில் அற்ப கூலிக்கு உழைப்பதை தவிர வேறு வழியில்லை. பல சமயங்களில் தங்கள் குழந்தைகளையும் வேலைக்கு அனுப்பும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்கள் இரண்டு வேளை உணவுக்கு தினமும் போராட வேண்டியதாயிருக்கிறது. இந்நிலைமைகளால், இவர்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. இதன் விளைவாக சிறுவர்கள் வளர்ந்தவுடன் ரவுடிக் கும்பலில் வேலையாட்களாக சேர்வது தவிர்க்க முடியாததாகிறது. சுரங்க மாபியாக்கள் வேறு இக்குழந்தைகளின் வாழ்க்கையை நரகமாக்குகிறார்கள்.

சூரிய மறைவின் போது அமர்ந்திருக்கும் தேவி.

தேவி மட்டுமில்லை, உழைத்து கொடுப்பதற்காக மட்டுமே கனிமச் சுரங்களில் உழைக்கும் பல தொழிலாளர்களின் வாழ்க்கை, சுரங்கத்தின் இருட்டை விட இருளடைந்திருக்கிறது. ஆனால் அவர்களின் உழைப்புச் சக்தியினால் தான் இந்திய வீடுகளில் மின்சாரம் மூலம்  வெளிச்சம் பரவுகிறது. நிலக்கரி சுரங்களில் எட்டி கூடாத பார்க்காத வெட்டி முதலாளிகள், உலக பணக்கார பட்டியலில் முன்னேறுகிறார்கள். ஆனால் அச்சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்வும் மட்டுமில்லை அவர்கள்து தலைமுறைகளின் வாழ்க்கையும் கேள்விகுறியாக உள்ளது.

தேவி போன்ற சுரங்கத் தொழிலாளர்கள் எங்கோ ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழ்பவர்கள்  என்று நம்மால் இனிமேல் விலகி இருக்க முடியமா? முடியாது,  ஏனென்றால் நாமும், தேவியும் அவரை போன்ற சுரங்கத் தொழிலாளர்களும் ஒன்றுதான்! ஒரே வர்க்கம் தான்!

நன்றி:
தி கார்டியன்
https://www.theguardian.com/artanddesign/2022/oct/03/deadly-fossil-fuel-in-india-photo-essay
-தாமிரபரணி

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன