நொய்டா தொழிலாளர்கள் போராட்டம் – கிழிந்து தொங்கும் மோடி – ஆதித்யநாத் கும்பலின் ‘வளர்ச்சி’ பிம்பம்!
தொழிலாளர் சட்டத்தொகுப்பை அமல்படுத்தினால் தொழிலாளர்களின் வாழ்நிலை மேம்படும். தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு, வருங்கால வைப்புத்தொகை, கூடுதல் வேலை நேரத்திற்கு இரண்டு மடங்கு சம்பளம், பாதுகாப்பான பணிச்சூழல், இலவச மருத்துவ பரிசோதனை முறையாகக் கிடைக்கும் என பாஜக செய்த பிரச்சாரங்களை நம்பிய இலட்சக்கணக்கான தொழிலாளர்களில் பிரேம் குமாரும் ஒருவர். தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலுக்கு வந்த இருவாரங்களிலேயே பத்தாண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாமல் இருந்த ஊதியத்தை உயர்த்தக்கோரி நொய்டா தொழிற்பகுதியில் போராடிய [ஏப்ரல் 13 அன்று] பிரேம் குமார் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அடித்து நொறுக்கியதோடு முன்னூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது [326 பேர்] பொய்வழக்குப் போட்டு சிறையில் தள்ளியிருக்கிறது மோடியின் இளைய பங்காளியான ஆதித்யநாத்தின் போலீசு.
தையல் தொழிலாளியான பிரேம் குமார், நொய்டாவில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பல வருடங்களாக ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். தனது மாதச் சம்பளம் 13,000 ஐக் கொண்டு, வீட்டு வாடகை (4000 ரூபாய்), மின்சார கட்டணம் (900 ரூபாய்), உணவுக்கான செலவு (8000 ரூபாய்), குழந்தைகளின் படிப்பு செலவு (1950 ரூபாய்) மற்றும் மருத்துவ செலவுகளை (3000 ரூபாய்) ஈடுகட்ட வேண்டும். மாதச்செலவே கையைக் கடிப்பதால் சேமிப்போ அல்லது அவசரத் தேவைகளை பூர்த்தி செய்வதோ மிகவும் சிரமம்.
இவரைப் போலவே, நொய்டாவின் தொழிற்பகுதியில் [Noida Industrial Area] உள்ள மின்னணு உபகரணங்கள் உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி, ஆடைகள் உற்பத்தி செய்யக்கூடிய நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். இவர்களது மாதச் சம்பளம் ரூ.9,000 லிருந்து 15,000 வரை மட்டுமே. இதைக் கொண்டு எப்படி தொழிலாளர்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது? மேலும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் கூட இந்நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
எனவே குறைந்தபட்ச ஊதியம் 20,000, எட்டு மணி நேர வேலைக்கான உத்தரவாதம், பாதுகாப்பான பணிச்சூழல், வாரம் ஒருநாள் விடுமுறை, ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டத்தை இத்தொழிலாளர்கள் இரு வாரங்களுக்கு முன்பு நொய்டாவில் நடத்தினர். இப்போராட்டத்திலிருந்து உத்வேகம் பெற்று அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டுவேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் [house maid], கிக் பணியாளர்கள் [women gig workers], நகராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்களும் மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராடியுள்ளனர்.

இப்போராட்டத்தின் விளைவாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 21 சதவிகிதம் {13,690 [unskilled], 16,868 [skilled]} அதிகரித்துள்ளது ஆதித்யநாத் அரசாங்கம். ஆனால் தொழிலாளர்களோ குறைந்தபட்சம் 20,000 ரூபாயாக ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இப்போராட்ட அழுத்தத்தின் காரணமாக ஊதிய உயர்வை அறிவித்திருந்தாலும், தங்களுக்கே உரித்தான வழிமுறைகளில் இப்போராட்டத்தை ஒடுக்கும் வேலையை செய்து வருகிறது காவிக் கும்பல்.
தொழிலாளர்களின் இப்போராட்டத்தை காரணம் காட்டி, பத்திரிகையாளர்கள், தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், மற்றும் முன்னணித் தொழிலாளர்கள் என பலரை கடுமையான பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இப்போராட்டத்திற்குள் அர்பன் நக்சல்கள் நுழைந்து தொழிலாளர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள் என்றார் உ.பி. முதல்வர் ஆதித்யநாத். அம்மாநில தொழிற்துறை அமைச்சரோ, இப்போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான் தொடர்பு இருப்பது போலத் தெரிகிறது என்கிறார். தொழிலாளர்களிடையே பல வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதன் வழியே தவறான செய்திகளைப் பகிர்ந்து இப்போராட்டம் தூண்டப்பட்டிருப்பதாக கூறுகிறது ஆதித்யநாத் போலீஸ். இதையே Godi மீடியாக்களும் ஆளும் வர்க்க கைக்கூலிகளும் ஊடகங்களில் வாந்தி எடுக்கின்றனர்.
வெளியாட்களின் தூண்டுதலே இப்போராட்டத்திற்கு காரணம் என்று பொய்ப்பிரச்சாரம் செய்வதன் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீதான ஈவு இரக்கமற்ற சுரண்டலை மறைக்கப் பார்க்கிறது ஆளும் காவிக் கும்பல். ஆனால் தொழிலாளர்களோ, கடுமையான பணிச்சுமை, பத்தாண்டுகளுக்கு மேலாக ஊதிய உயர்வு கொடுக்காமல் இருப்பது, கேஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக வாழ்க்கையை நகர்த்துவதே பெரும்பாடாக இருப்பதாகக் கூறுகின்றனர். குறிப்பாக மோடியின் அமெரிக்க விசுவாசம் மற்றும் ஈரான்-அமெரிக்க போரினாலும் ஒரு கிலோ சமையல் கேஸின் விலை 400 ரூபாய்க்கு விற்பதால் ஏற்கனவே இருக்கும் நிலைமைகள் மேலும் மோசமாகியுள்ளதாக கூறுகின்றனர். மேலும் பக்கத்து மாநிலமான ஹரியானாவின் மனேசரில் நடந்த தொழிலாளர்கள் போராட்டத்தின் விளைவாக 35 சதவிகித ஊதிய உயர்வை அம்மாநில அரசாங்கம் அறிவித்தது நொய்டா தொழிலாளர்களையும் போராட்டக்களத்திற்குத் தள்ளியுள்ளது.
குறைந்தபட்ச ஊதியச் சட்டப்பிரிவு 3(1)(b) இன் படி, அடிப்படை குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள், ஐந்து ஆண்டுகளுக்கு மிகாத இடைவெளிகளில், பணவீக்கத்தைப் பொறுத்து, திருத்தியமைக்கப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில், பல மாநில அரசுகள் 10–15 ஆண்டுகளாக அடிப்படை ஊதியங்களைத் திருத்தியமைக்காமலே உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில், அடிப்படை குறைந்தபட்ச ஊதியம் கடைசியாக 2012 இல் திருத்தியமைக்கப்பட்டது. ஹரியானாவிலோ கடைசியாக அக்டோபர் 2015 இல் அடிப்படை ஊதியம் திருத்தியமைக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளோ 30 லிருந்து 60 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. 2012 இல் நிர்ணயித்த சம்பளத்தைக் கொண்டு 2026 இல் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியுமா? என்பதே தொழிலாளர்கள் எழுப்பும் கேள்வி.
ஆனால் தொழிலாளர்கள், தங்களது வயிற்றைக் கட்டிக் கொண்டு உழைப்பதன் மூலம் [தொழிலாளர்களை ஒட்டிச் சுரண்டுவது] முதலாளியின் லாபம் பன்மடங்கு அதிகரிப்பதைத்தான் தொழில் வளர்ச்சி என்று வியாக்கியானம் செய்கிறது ஆளும் வர்க்கத் தரப்பு. தொழிலாளர்களுக்கான சம்பளத்தைக் குறைப்பதன் மூலம் முதலாளிக்கு அதிக லாபத்தை உத்தரவாதம் செய்து கொடுப்பது; அதை அரசின் சாதனையாகக் காட்டி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது; அதையே வளர்ச்சி, முன்னேற்றம், வல்லரசு என்று பிரச்சாரம் செய்து மக்களை நம்பவைப்பது என்பதையே சூத்திரமாக வைத்திருக்கும் ஆளும் வர்க்கக் கும்பல். உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் என்று மோடி கும்பல் பீற்றிக்கொள்ளும் அதே இந்தியாவில் தான் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் 40 சதவிகிதம் பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். சில தொழிற்சாலைகளில் இது 70 சதவிகிதம் வரை உள்ளது.
குறிப்பாக மோடியின் பன்னிரெண்டாண்டு கால ஆட்சியில், அனைத்து துறைகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் விகிதம் முன்பைவிட பலமடங்கு அதிகரித்திருப்பதையும், புதிய வகையான ஒப்பந்தத் தொழிலாளர் முறைகள் [NEEM, Graduate Internship] புகுத்தப்பட்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். இத்தொழிலாளர்களின் சராசரி மாத சம்பளமோ 15,000 க்கும் குறைவு. மோடி கும்பல், தான் கொண்டு வந்த ஊதியச் சட்டத்தொகுப்பை அமல்படுத்தினால் கூட குறைந்தபட்ச ஊதியமாக 26,000 ஐ நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால் ஆதித்யநாத் அரசாங்கமோ தொழிலாளர்களது போராட்டத்திற்குப் பிறகே கூட 16,000 ஐத்தான் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயித்திருக்கிறது. இதிலிருந்தே உழைக்கும் மக்கள் மீதான காவிக் கும்பலின் கபட நாடகத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
நொய்டா போராட்டத்தின் இரு வாரங்களுக்கு முன்பு தான் மனேசரில் உள்ள ஹோண்டா தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி உயர்வுக்காக போராட்டம் நடத்தினர். அதற்கு சில வாரங்களுக்கு முன்பு பிப்ரவரியில் பிகாரின் பரௌனியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலையில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் எட்டு மணி நேர வேலை ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதே மாதத்தில் பானிபட்டில் எல்&டி கட்டி வரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணிபுரியும் 20,000 க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் எட்டு மணி நேர வேலையை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினர். அதற்கு சில வாரங்களுக்கு முன்பு சூரத்தில் உள்ள ஆன்செலர்-மிட்டல்-நிப்பான் எக்கு தொழிற்சாலையில் வேலை செய்யக்கூடிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்தினர். இதே போன்று கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 17 இடங்களில் ஊதிய உயர்வு மற்றும் 8 மணிநேர வேலைக்கான பெரும் போராட்டங்களை ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டிலோ தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் போராட்டம், சத்துணவுத் தொழிலாளர்கள் போராட்டம், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. இவையனைத்திலுமே ஊதிய உயர்வும், எட்டு மணிநேர வேலையும் தான் அடிப்படையான கோரிக்கையாக உள்ளது. ஆனால் இந்த குறைந்தபட்ச உரிமையை கூட வழங்க முடியாது என்று ஆட்சியாளர்களும் தரகு முதலாளிகளும், வெளிநாட்டு நிறுவனங்களும் ஓரணியாக நிற்கின்றனர். தொழிலாளர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இந்த காட்டேறிகளை எதிர்க்க வேண்டுமென்றால் பல்வேறு பிரிவு தொழிலாளர்களும் ஓரணியில் அணிதிரள்வதும் அதற்கான அரசியல் உணர்வு பெறுவதுமே உடனடித் தேவையாகும்.
- மாணிக்கம்
https://www.groundxero.in/2026/04/19/finally-the-invisibles-have-started-to-become-visible/

