இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அந்நிய நிதிமூலதனக் கும்பல்
Sanford C. Bernstein (சுருக்கமாக “பெர்ன்ஸ்டீன்”) என்ற சர்வதேச முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பங்குச்சந்தை பகுப்பாய்வு நிறுவனம் கடந்த வாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது. அதில் இந்தியப் பொருளாதாரம் அண்மைக் காலமாக அடைந்துள்ள வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித் துறையில் இந்தியா அதிரடியான கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று எச்சரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், மின்சார வாகனத் தொழில்நுட்பம், நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைக்கான முதலீடு, மூன்று வேளாண் சட்டங்கள் ஆகியவற்றில் சீர்திருத்தங்களை வேகப்படுத்துவது அவசியம் என்றும், இல்லாவிட்டால் இதுவரை ஈட்டிய பலன்களை இந்தியா இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
ஏதோ ஒரு நிறுவனம் மோடிக்குக் கடிதம் எழுதியதில் என்ன முக்கியத்துவம் என்று இந்தக் கடிதத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. பன்னாட்டு நிதி மூலதன நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு (Foreign Instituttional Investments) பெர்ன்ஸ்டீன் நிறுவனம் வழங்கும் பரிந்துரைகள் முக்கியமானதாக இருப்பதால் இந்திய அரசு அந்நிறுவனத்தின் ஆலோசனைகளை மிக முக்கியமானதாகப் பரிசீலித்து நிறைவேற்றும். அதே போல பெர்ன்ஸ்டீன் நிறுவனமும் அந்நிய நிதிமூலதன நிறுவனங்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் ஆலோசனைகளையே இந்திய அரசுக்கு வழங்கியிருக்கிறது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு ஏற்ப மேற்குறிப்பிட்ட சீர்திருத்தங்களில் ஒன்றான மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி மட்டும் இங்கு பரிசீலிப்போம்.
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020-இல் நடைபெற்ற ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் இப்போராட்டம் ஆண்டுக்கணக்கில் நீடித்தது. மோடி அரசு வேறு வழியின்றி மூன்று வேளாண் சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இருப்பினும் விவசாயிகளின் இதர கோரிக்கைகளான வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளித்தல்; பயிர் கடன் தள்ளுபடி; இலக்கிம்பூர் கேரி, 2020 முற்றுகை ஆகிய போராட்டங்களில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு நீதி, இழப்பீடு; உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுதல் போன்ற எதற்கும் தீர்வு காணப்படவில்லை.
மேலும், மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதிலிருந்து தற்காலிகமாக பின்வாங்கினாலும், அதனை எப்படியாவது வேறு வகையில் நடைமுறைப்படுத்திட வேண்டும் என அன்றிலிருந்தே துடித்துக் கொண்டிருந்தது மோடி அரசு. எனவேதான் ஒன்றிய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் “வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கான தேசிய கொள்கை கட்டமைப்பு” என்று புதிதாக ஒன்றை நவம்பர், 2024 இறுதியில் களமிறக்கியது. இந்த கொள்கை அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். மூன்று வேளாண் சட்டங்களில் இரண்டை இதன் மூலம் நடைமுறைப்படுத்த முடியும்.
இந்த கொள்கையின் விளைவாக தனியார் மொத்த விற்பனைக் கூடங்களை அமைப்பது, விவசாயிகளிடமிருந்து சந்தையில் அல்லாமல், அவர்களின் வயல்களில் இருந்தே நேரடியாக கொள்முதல் செய்து கொள்வது போன்ற வசதிகளை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க இருக்கிறார்கள்.
மேலும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள களஞ்சியங்களையும், குளிர்பதன கிடங்குகளையும் சந்தைகளாக அறிவிப்பது, அவற்றை தனியார் வசம் ஒப்படைத்துவிடுவது என்றும், மாநில அரசுகளின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களின் கிடங்குகளைப் பயன்படுத்தவுள்ளனர். விவசாயிகள் தமது பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம்தான் தமது விளைபொருட்களை விற்க முடியும் என்ற கட்டுப்பாட்டை இதன் மூலம் தகர்த்துள்ளனர்.
பஞ்சாப், ஹரியாணா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் விவசாய விளைபொருட்களுக்கென குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்கின்றன. தமிழ்நாடு அரசு நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, பருத்தி, தேங்காய் உள்ளிட்ட 21 விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 278 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இந்த விலையில் விற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமன்றி விவசாயிகள் தங்களது விளைபொருட்களைப் பாதுகாப்பாக வைக்க, மாநில அரசுக்குச் சொந்தமான 111 குளிர்பதன கிடங்குகள் மற்றும் 63 பண்டகசாலைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதேபோல் கரும்புக்கு ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்தாலும் தமிழ்நாடு அரசு, கரும்பு விவசாயிகளுக்கு கூடுதலாக ஒரு மெட்ரிக் டன்னிற்கு 215 ரூபாயை சிறப்பு ஊக்கத்தொகையாக கொடுக்கிறது. அதாவது சர்க்கரை ஆலைகள் ஒன்றிய அரசு நிர்ணயித்தபடி டன் ஒன்றிற்கு 2919 ரூபாயை கொடுக்கும். அதற்கு மேல் இந்த சிறப்பு ஊக்கத்தொகையை தமிழக அரசு விவசாயிகளுக்கு கொடுக்கும். இதற்கு ஆண்டுதோறும் 247 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்குகிறது.
தமிழ்நாடு அரசைப் போலவே மற்ற மாநில அரசுகளும் இதுபோல பல வசதிகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன. இவையெல்லாம் விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் அக்கறை கொண்டு கொடுக்கப்பட்டவை அல்ல. மாறாக விவசாயிகள் பல ஆண்டுகளாகப் போராடிப் பெற்றவையே.
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்றாலும் அதனை வளர்த்தெடுப்பதற்கான கொள்கை முடிவுகள் எதையும் இன்றுவரை எடுத்ததில்லை. மாறாக அதனை அழிப்பதற்கான கொள்கை முடிவுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து அரசுகளும் தொடர்ந்து எடுத்து வருகின்றன. எனில் இந்திய ஆட்சியாளர்கள் விவசாயிகளுக்காக வேலை செய்யவில்லை என்பது திண்ணம்.
எனவேதான் பெர்ன்ஸ்டீன் நிறுவனம் ”நாட்டின் 45 சதவீத உழைப்பாளர்கள், விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள போதிலும், ஜிடிபி-க்கு அவர்களின் பங்களிப்பு வெறும் 15 சதவீதமாக மட்டுமே உள்ளது. எனவே, விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டாலும், இத்துறையில் சீர்திருத்தங்கள் இன்றி வளர்ச்சியை எட்ட முடியாது. வெறும் கடன் தள்ளுபடிகளும், மானியங்களும் நிரந்தரத் தீர்வாகாது” என்று கூறியுள்ளது.
அதாவது, நாட்டின் பெரும் பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும் அதனைப் பற்றி கவலைப்படாமல் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் கடன், மானியம் கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இதுவரை ஈட்டிய பலன்களை இந்தியா இழக்காமல் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று கூறுகிறது.
இதனை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், விவசாயிகளின் பெரும் போராட்டங்களின் மத்தியில், விவசாய சட்டங்களைப் பின்வாசல் வழியாக நிறைவேற்றுவதில் பாதிக் கிணறு தாண்டியுள்ள மோடியை, முழுக்கிணறையும் தாண்டும்படி வலியுறுத்திக் கடிதம் எழுதியிருக்கிறது.
பெர்ன்ஸ்டீன் நிறுவனம் இப்படி கடிதம் எழுதுவது முதல் முறையல்ல. ஏற்கனவே 2019-இல் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் சிலவற்றை அமல்படுத்தியும் உள்ளது மோடி அரசு. இதனால் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதாக இந்திய ஆட்சியாளர்கள் கூறிவருகிறார்கள். அப்படியென்றால் யாருடைய இந்தியா வளர்ச்சியடைந்தது? ஏழை, எளிய, நடுத்தர மக்களின் இந்தியாவா? பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்தியத் தரகு முதலாளிகளுக்குமான இந்தியாவா? என்பதை பரிசீலிப்போம்.
அந்தக் கடிதத்தில், பெர்ன்ஸ்டீன் நிறுவனம் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து, பல முக்கியமான சீர்திருத்தங்களை செய்யும்படி பரிந்துரைத்துள்ளதாக கூறியுள்ளது. அதில் வரி சீர்திருத்தம், வங்கி துறை சீர்திருத்தம், தனியார்மயமாக்கல், தொழிலாளர் மற்றும் நிலச் சீர்திருத்தம், உள்கட்டமைப்பு, நுகர்வு மற்றும் முதலீட்டு ஊக்கம் ஆகியவற்றை அமல்படுத்தும்படி பரிந்துரைத்துள்ளது.
2019-ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட சீர்திருத்தங்களை மோடி அரசு அமல்படுத்தியதன் விளைவாகவே இந்தியா பலனடைந்துள்ளதாகவும், தற்போது (2026) கொடுக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களை வேகப்படுத்துவது அவசியம் என்றும், இல்லாவிட்டால் இதுவரை ஈட்டிய பலன்களை இந்தியா இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
குறளி வித்தைக்காரன் ”கையில, பையில, காதுல, கழுத்துல இருப்பதையெல்லாம் கழட்டி வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் போ, இல்லாட்டி இரத்தம் கக்கி சாவ.. இரத்தம் கக்கி சாவ…” என்று சொல்வதற்கும் பெர்ன்ஸ்டீன் நிறுவனம் சொல்வதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?
வரி சீர்திருத்தம் என்ற பெயரில் பெரு நிறுவனங்களுக்கான வரியை (corporate tax) பெரிய அளவில் குறைத்தது, GST-யை அமல்படுத்தியது ஆகியவற்றின் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சூழலை மேம்படுத்தியது. அதே நேரத்தில் இந்தியாவிலுள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்கள் பெரியளவில் இழப்பை சந்தித்தன. இதனால் வேலைவாய்ப்பின்றி மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளானார்கள்.
வங்கி துறை சீர்திருத்தம் என்ற பெயரில் NPA பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கைகள், Insolvency and Bankruptcy Code (IBC) செயல்பாட்டை வலுப்படுத்தல், அரசு வங்கிகள் ஒன்றிணைப்பு (bank mergers) ஆகியவற்றின் காரணமாக மல்லையா போன்ற முதலாளிகள் வாங்கிய கடனை திரும்பக் கொடுக்காமல், நாட்டைவிட்டு தப்பியோட முடிந்தது. இவர்களுக்கு பணம் கொடுத்த வங்கிகளுக்கு பணம் திரும்ப பெறமுடியாத நிலையில் அந்த வங்கிகளை முறையாக மூடுவது, இப்படி பல்வேறு வங்கிகள் மூடவும் முடியாமல், தொடர்ந்து நடத்தவும் முடியாத நிலையில் இருக்கும் பொழுது மொத்தமாக இணைத்து ஒரே வங்கியாக மாற்றுவது. இது புதிய பெயர்களிலோ, பழைய ஏதாவது ஒரு வங்கியின் பெயரிலோ தொடரலாம். யுடிஐ வங்கி ஆக்ஸிஸ் வங்கியாக மாறியது இப்படித்தான். இதனால் வங்கிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது, அதேபோல் ஏடிஎம் எண்ணிக்கை குறைந்து பணம் எடுப்பதற்கு தெருத்தெருவாக அலைவது, மக்கள் வங்கிக்கடன் வாங்குவதில் சிரமம் என சாதாரண மக்கள் கஷ்டப்படும் பொழுது கடனை திரும்ப செலுத்தாத மல்லையாக்கள் இலண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தனியார்மயமாக்கல் என்ற பெயரில் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை (disinvestment) செய்தது, Air India விமானத்தை தனியாருக்கு தாரை வார்த்தது ஆகியவற்றின் காரணமாக பன்னாட்டு நிறுவனங்களும், டாடா போன்ற தரகு முதலாளிகளும் பயனடைத்தார்கள் என்பது வெள்ளிடை மலை.
தொழிலாளர் மற்றும் நிலச் சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு அறைகுறையாக இருந்த சட்டங்களை மாற்றி அதனை நான்கு சட்டத் தொகுப்புகளாக சுருக்கியது. இதன் விளைவாக முதலாளிகள் இஷ்டம்போல் தொழிலாளர்களை சுரண்டுவதற்கும், வேலையை விட்டு தூக்குவது, விபத்தில் இறந்தால் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என முதலாளிகளுக்கு ஆதரவான சட்டமாக மாற்றியுள்ளது. நிலச் சீர்திருத்தத்தின் விளைவாக வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை விமான நிலையம், எட்டுவழிச் சாலை, மெட்ரோ இரயில் போன்ற திட்டங்களுக்காக மக்களிடம் இருந்து பறித்துக்கொள்வது.
உள்கட்டமைப்பு என்ற பெயரில் தேசிய உள்கட்டமைப்பு திட்டங்கள் (roads, railways, ports), National Infrastructure Pipeline போன்ற திட்டங்கள் போன்றவற்றில் அரசு அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. ஏனென்றால் அப்பொழுதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் இந்திய தொழிலாளர்களை கசக்கிப்பிழிந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை எளிதில் கொண்டு செல்ல முடியும்.
ஆகவே பெர்ன்ஸ்டீன் நிறுவனம், இந்தியா வளர்ச்சியடைவதற்கான சீர்திருத்தங்கள் என்று சொல்லப்படுபவை எல்லாம், முழுக்க முழுக்க பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளின் வளர்ச்சிக்கு தானே தவிர இந்திய மக்களின் வளர்ச்சிக்கான சீர்திருத்தங்கள் அல்ல. பெர்ன்ஸ்டீன் போன்ற நிறுவனங்களின் நோக்கமும் அதுவல்ல. பங்கு சந்தையில் சூதாடுவது, அந்நிய முதலீடுகளை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் முதலீடு செய்து அங்குள்ள வளங்களையும், மனித உழைப்பையும் சுரண்டிக் கொழுப்பதற்கு இடைத்தரகர்களாக செயல்படுபவர்களுக்கு, மூன்றாம் உலக நாடுகளின் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதுதான் வளர்ச்சி என்று இந்திய ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும், முதலாளிகளும், அவர்களின் ஊடகங்களும் இடைவிடாது மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்களே அது ஏன்? பெர்ன்ஸ்டீன் போன்ற நிறுவனங்கள் இலாப நோக்கோடு மக்களைப் பற்றி கவலைப்படாமல், தனக்குப் பணியளந்த அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதில் வியப்பொன்றுமில்லை. ஜனநாயகம் என்ற பெயரில் மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளும், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகார வர்க்கத்தினரும் மக்களுக்கு நேர்மையாக இருப்பதில்லை.
பெரு நிறுவனங்களிடமிருந்து பணம் வாங்கி (கட்சி நிதி, தேர்தல் பத்திரங்கள் (2018 – 2024)) கட்சி நடத்துபவர்கள், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஒப்பந்தங்களை கட்சிக்கு நிதி கொடுத்த நிறுவனங்களுக்கு கொடுப்பதும், அந்த ஒப்பந்தப் புள்ளிகளுக்கான பத்திரங்களை ஏற்பாடு செய்யும் அதிகார வர்க்கத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், முதலாளிகளுக்கும் இடையில் இடைத்தரகர்களாக இருந்து அதற்கான வெகுமதியைப் பெற்றுக்கொள்கின்றனர். இப்படித்தான் தங்களுக்குள் முக்கூட்டணி (ஆட்சியாளர்கள் + அதிகார வர்க்கத்தினர் + முதலாளிகள்) அமைத்துக் கொண்டு கொள்ளையடித்து வருகின்றனர். இந்தக் கூட்டணி இருக்கும் வரைத் தேர்தலில் வெற்றி பெற்று எந்தக் கூட்டணி வந்தாலும், ஏன் கூட்டணியின்றி தனியாகவே வெற்றி பெற்று வந்தாலும் ஊழலின் ஊற்றுக் கண்ணான முக்கூட்டணி இருக்கும் வரை இலஞ்ச, இலாவண்யங்களை ஒழித்திட முடியும் என்று கருதுவது கரந்தைப் பாலை காம்பில் ஏற்றுவதாகும்.
ஒன்றிய அரசில் இயக்குனர் பொறுப்பில் இருந்த ஒரு மூத்த இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரி டிசம்பர் 5, 2017 அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு அநாமதேயக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான KPMG குழுமம் இந்தியாவிலுள்ள முக்கிய அரசு அதிகாரிகளின் பிள்ளைகளையும், அவர்களது உறவினர்களையும் பணியில் அமர்த்துவது உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம், அந்த அதிகாரிகளை தங்களின் பிடியில் வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல் ஒன்றிய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளுக்கும், KPMG இந்திய நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் இடையே செல்வாக்குச் செலுத்தும் போக்கு நிலவி வருவதாக அந்தக் கடிதம் குற்றம் சாட்டுகிறது. மேலும் அரசு அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்க முயன்றதாகவும், உள்நாட்டுத் தொழில்துறையின் நலனுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் முக்கியமான அரசு ஒப்பந்தங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கி இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தனியார் துறை பன்னாட்டு நிறுவன ஆலோசகர்களுடன் கூட்டுச் சேர்ந்து நடைபெறும்… தலைவிரித்தாடும் ஊழலை” பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் “சக அரசு அதிகாரிகளால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே” தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அநாமதேயக் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் KPMG நிறுவனம், Ernst & Young, PwC (முன்னர் PricewaterhouseCoopers) மற்றும் Deloitte ஆகியவற்றுடன் இணைந்து, உலகளாவிய அளவில் உள்ள “நான்கு முன்னணி” (Big Four) கணக்கியல் மற்றும் நிதி ஆலோசனை நிறுவனங்களின் கூட்டமைப்பில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவிலும் கணிசமான அளவில் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.
KPMG இந்தியாவின் அரசு ஆலோசனைச் சேவைகள் பிரிவைச் சேர்ந்த ஒரு மூத்த நிர்வாகி, ஒரு பெரிய திட்டத்தை ஒதுக்கித் தருவதற்குப் பிரதிபலனாக, தங்கள் துறையில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒரு இணைச் செயலாளருக்கு “மிகப்பெரிய அளவிலான இலஞ்சம்” வழங்க முன்வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்த இணைச் செயலாளர், இலஞ்சத்தை ஏற்க மறுத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஒன்றிய, மாநில அரசுகளில் உள்ள இந்திய ஆட்சிப் பணி (IAS) மற்றும் இந்தியக் காவல் பணி (IPS) மூத்த அதிகாரிகளுக்கும், KPMG-க்கும் உள்ள செல்வாக்கிற்கு அஞ்சி, அந்த இணைச் செயலாளர் இச்சம்பவத்தை அதிகாரபூர்வமாகப் புகாரளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மூத்த அரசு அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவே என்ற நோக்கில், அந்த அதிகாரிகளின் உறவினர்களுக்கு KPMG நிறுவனத்தில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்புகளைப் பட்டியலிட்டுள்ளார். இத்தகைய வேலைவாய்ப்புகளுக்கு சுமார் 40 கோடி ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுவதாகவும், இது ஏறக்குறைய அதே மதிப்பிலான ஒரு “இலஞ்சத்திற்கு” இணையானது என்றும் தெரிவித்துள்ளார்.
KPMG நிறுவனத்தில் ஒன்பது மூத்த அதிகாரிகளின் நெருங்கிய உறவினர்கள் பணிபுரிவதைப் பட்டியலிட்டுள்ளார். நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் உயர் அதிகாரிகளின் உறவினர்கள் இதில் அடங்குவர்; உதாரணமாக, தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளவரும், முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு முக்கியப் பொறுப்பை வகித்தவருமான, அந்த அமைச்சகத்தின் முன்னாள் செயலாளரின் மகன் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதே அமைச்சகத்தைச் சேர்ந்த ஒரு கூடுதல் செயலாளரின் மருமகனும், ஒரு முன்னாள் இணைச் செயலாளரின் மகனும் கூட இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளனர். மிக முக்கியமாக, இந்த அரசு அதிகாரிகளில் ஒருவர், தற்போது பிரதமர் மோடியின் முதன்மைத் திட்டமான ‘ஸ்மார்ட் சிட்டி’ (Smart Cities) திட்டத்தில் ஒரு மிக முக்கியப் பொறுப்பை வகித்து வருகிறார்.
அதேபோல், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் செயலாளராகப் பணியாற்றிய குஜராத் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் மகளும் அடங்குவர். மேலும், இராஜஸ்தான் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர்; ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் இணைச் செயலாளரும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஒருவர்; ஆந்திரப் பிரதேசப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர்; தெலங்கானாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவர்; மற்றும் இந்திய அரசின் முன்னாள் நிதிச் செயலாளர் ஒருவர் ஆகியோரின் மகன்களும் இந்தக் கடிதத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகளின் உறவினர்கள் KPMG நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டபோது, அந்த அதிகாரிகள் ஒவ்வொருவரும் முக்கியப் பொறுப்புகளில் இருந்ததாகவும்; அதன் பின்னர், சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் அந்த நிறுவனத்திற்குப் பெரிய அளவிலான ஆலோசனைத் திட்டங்கள் வழங்கப்பட்டதாகவும் அந்தக் கடிதம் குற்றம் சாட்டுகிறது. அந்தக் கடிதத்தில் ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அந்த அமைச்சகத்தின் ‘ஸ்வச் பாரத்’ (Swachh Bharat) மற்றும் ‘பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் விரிவாக்கத் திட்டம்’ (HRIDAY) ஆகிய திட்டங்களை KPMG நிறுவனம் தற்போது செயல்படுத்தி வருகிறது.
மேலும் பல முக்கிய அரசுத் திட்டங்களான ‘மேக் இன் இந்தியா’ (Make in India), ‘ஸ்மார்ட் சிட்டிஸ்’ (Smart Cities) இயக்கம், ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ (Startup India) முயற்சி, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான ‘பாரத்மாலா’ திட்டம், துறைமுகங்கள் மற்றும் கடல்சார் மேம்பாட்டிற்கான ‘சாகர்மாலா’ திட்டம், மற்றும் ‘நகர்ப்புறப் புத்துயிர்ப்பு மற்றும் மாற்றத்திற்கான அடல் இயக்கம்’ (AMRUT) ஆகியவற்றையும் KPMG நிறுவனம் கையாண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேபோல், கேபிஎம்ஜி (KPMG) நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் முக்கியமாக இடம்பெற்றுள்ளன. குமார் கேபிஎம்ஜியில் நியமிக்கப்படுவதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தில், உலகளாவிய சந்தைகளுக்கான வர்த்தகத் துறையின் உதவிச் செயலாளராகவும், அமெரிக்க மற்றும் வெளிநாட்டு வர்த்தக சேவையின் தலைமை இயக்குநராகவும் பணியாற்றினார்.
பின்னர் குமார் கேபிஎம்ஜி இந்தியாவின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பதவியில் இருந்த பொழுது, அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் அமெரிக்க நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டுள்ளார். அதாவது பிரதமரின் முதன்மைத் திட்டமான ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தின் கீழ், சிஸ்கோ, ஐபிஎம், டெல், ஹெவ்லெட் பேக்கர்ட், ஹனிவெல், யுனைடெட் டெக்னாலஜிஸ் மற்றும் ஓடிஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு உபகரண ஒப்பந்தங்களைப் பெற்றுத்தந்துள்ளார் என்றும், இதன்மூலம் இந்தியாவிற்கு “இலட்சக்கணக்கான வேலை இழப்புகளை” ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்தக் கடிதம் கூறுகிறது.
அமெரிக்க வர்த்தக மற்றும் மேம்பாட்டு முகமை (USTDA), உலகளவில் நாட்டின் வணிக மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்தப் பணியாற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பிரிவாகும். “ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுப்பதற்காக” அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற, கேபிஎம்ஜி இந்தியாவை யுஎஸ்டிடிஏ பணியமர்த்தியுள்ளது. எனவேதான், அமெரிக்க நிறுவனங்களுக்கு உபகரண ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது இந்திய நிறுவனங்கள் போட்டியிடுவதை சாத்தியமற்றதாக்குகிறது.
நமது அனைத்து அரசாங்கங்களையும் ஆக்கிரமித்துள்ள ‘பிக் ஃபோர்’ ஆலோசனை நிறுவனங்கள் முழுவதும் இந்த சீர்கேடு பரவியுள்ளதாக அந்தக் கடிதம் குற்றம் சாட்டுகிறது. இந்த குற்றச்சாட்டுகளின் மீது ஒரு விரிவான, விரைவான விசாரணை நடத்தினால் ரூ.3,00,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரசாங்கத் திட்டங்கள் அமெரிக்க ஆலோசனை நிறுவனங்களால் கையாளப்படுகின்றன என்பதையும், குறைந்தது 100 உயர் அதிகாரிகளின் பிள்ளைகள் அல்லது உறவினர்கள் இந்த ஆலோசனை நிறுவனங்களில் பணிபுரிகின்றனர் என்பதையும் வெளிக்கொண்டுவர முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தகைய முறைகேடுகள் தொடர்பாகச் சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரே நிறுவனம் KPMG மட்டும் அல்ல. 2018 பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), PwC நிறுவனத்தின் இந்தியக் கிளையை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் தணிக்கை (audit) செய்யக் கூடாது என்று தடை விதித்தது.
கணினிச் சேவை நிறுவனமான சத்யம், தனது வருவாயை சுமார் 1 பில்லியன் டாலர் அளவுக்குப் பெரிதுபடுத்திக் காட்டியது ஊழல் செய்தது. இந்நிறுவனத்திற்குத் தணிக்கை செய்து வந்த PwC ஆலோசனை நிறுவனம் இந்த உண்மையை மறைக்க உதவியது. இதனை “சத்யம் ஊழல்“ என்று பத்திரிகைகள் அன்று பெரிய அளவில் பேசியது. இருந்தும் SEBI இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே தணிக்கை செய்யக் கூடாது என்று தடைவிதித்தது.
நாட்டின் நலன்களுக்கு மேலும் “சேதம்” ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பிரதமர் மோடி “துரித நடவடிக்கை” எடுப்பார் என்பதில் முழு நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அதற்கு காரணமாக “அரசுக்குள்ளிருந்தும் சரி, தனியார் துறையிலிருந்தும் சரி” ‘நான் ஊழலுக்கு இடமளிக்கமாட்டேன்; பிறரையும் ஊழல் செய்ய விடமாட்டேன்’ (Na Khayengey, Na Khaneydeyngey) என்று மோடி கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்தப் போர் முழக்கத்தை தான் முழுமையாக நம்புகிறேன் என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
”உலகம் இன்னுமாடா நம்மள நம்புது” என்ற மோடியின் மைண்ட் வாய்ஸ் வாசகர்களுக்கு கேட்டிருக்கும் என்று நம்புகிறோம். பாவம் கடிதம் எழுதிய அந்த அரசு அதிகாரிக்கு கேட்கவில்லை போலும்.
- மகேஷ்
செய்தி ஆதாரம்:
https://www.hindutamil.in/news/business/research-firm-bernstein-writes-to-pm-modi
https://caravanmagazine.in/vantage/kpmg-unnamed-ias-officer-corruption-letter-modi

