புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிக்கைச் செய்தி
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு விண்வெளி தொழில் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்தும் “விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாடு” அக்டோபர் 7 முதல் 9 வரை நடைபெற உள்ளது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்படும் இந்த மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட இராணுவத் தொழில்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. அமெரிக்கா ஆதரவுடன் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நடத்தி வரும் இஸ்ரேலிய நிறுவனங்களும் இதில் பங்கெடுக்கின்றன.
இராணுவ உற்பத்தியை உயர்த்துவதற்காக இந்தியாவில் உத்திரப் பிரதேசத்திலும், தமிழ்நாட்டிலும் பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தின் (TNDIC) மூலம் சென்னை, ஓசூர், கோவை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் சோதனை நிறுவனங்களைத் திறந்து, ஒன்றிய, மாநில அரசுகள் முதலீட்டை ஈர்த்து வருகிறது வருகின்றன. 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, 2035-க்குள் நாட்டின் இராணுவ உற்பத்தியில் 50% கைப்பற்றிட வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகிறது TNDIC. சென்னையில் நடைபெறும் மாநாடு இந்த நோக்கத்திற்காக விரிக்கப்படும் கம்பளம் தான்.
உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியை உயர்த்தவும், இராணுவ உபகரணங்கள் உற்பத்தியில் அண்டை நாடுகளை சார்ந்திருப்பதை தவிர்க்கவும் இந்த மாநாடு நடத்தப்படுவதாகவும், இதன் மூலம் தமிழ்நாடு தொழில்துறை வளர்ந்து ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் திராவிட மாடல் மாநில அரசும் பாசிச பாஜக ஒன்றிய அரசும் பிரச்சாரம் செய்கின்றன. வளர்ச்சியின் ஏறுமுகமாக இம்மாநாடு விதந்தோதப்படுகிறது. வரும் காலத்தில் இந்த இராணுவத் தொழில்துறை வழித்தடத்தில் ஈர்க்கப்படும் முதலீடுகளுக்கு சொந்தம் கொண்டாட திமுக மற்றும் பாஜக போட்டிபோட்டு கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
உண்மையில் இம்மாநாட்டின் நோக்கம் தொழில்துறை வளர்ச்சியோ, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோ இல்லை!
1990-களில் சோவியத் வீழ்ச்சிக்கு பின் அமெரிக்க மேல்நிலை வல்லரசு தலைமையில் கேள்விக் கேட்பாரற்ற ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கம் உருவானது. இன்று அமெரிக்க மேலாதிக்கதிற்குப் போட்டியாக சீனா, ரஷ்யா தலைமையிலான அணி சேர்க்கை நடந்து வருகிறது. குறிப்பாக சீனா அரசியல், ராணுவ, பொருளாதார ரீதியில் வலுப்பெற்று அமெரிக்காவின் மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாகி உள்ளது. இதன் விளைவாக அமெரிக்க அணி மற்றும் ரஷ்ய-சீன அணிக்கு இடையிலான நேரடியான மற்றும் மறைமுக மோதல்கள் வெடிப்பதற்கான அபாயம் முற்றியுள்ளது. இதன் ஓர் முக்கிய வெளிப்பாடு, NATO-வின் உறுப்பு நாடுகள் மாநாடு கடந்த 25.06.2025 அன்று கூடி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதுகாப்பிற்காக ஒதுக்கி வந்த 2% நிதியை 5% வரை உயர்த்துவது என்று முடிவு செய்துள்ளன. மேலும், வருகின்ற 2035-க்குள் 50%-ஆக உயர்த்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இலக்கு வைத்துள்ளனர்.
இந்த பின்னணியிலேயே இம்மாநாடு நடைபெறுகிறது. மேல்நிலை வல்லரசுகளும் ஏகாதிபத்தியங்களூம் தமக்குள்ளான போட்டியின் விளைவாக உலகை மறுபங்கீடு செய்ய போர்க்கொடி தூக்கி நேரடி மற்றும் மறைமுக மோதல்களில் ஈடுபடுகிறது. இதற்கும் உழைக்கும் வர்கத்தின் உழைப்பையே நாடுகிறது. அப்படி தமிழ்நாடு இளைஞர்களின் உழைப்பைச் சுரண்டி உருவாகி ஏற்றுமதியாகும் இராணுவ ஆயுதங்களினால் உயிரை இழப்பவர்கள், அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவராய் இருப்பினும், உழைக்கும் மக்களே ஆவர்! நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் பாலஸ்தீன இன அழிப்பே அதற்கு சாட்சி. இம்மாநாட்டில் கலந்து கொள்ளப்போகும் இஸ்ரேலிய நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலைகள் அமைக்குமாயின் தமிழக மக்களின் உழைப்பு பாலஸ்தீன குழந்தைகளைக் கொன்று குவிப்பதற்கு நேரடியாகப் பயன்படுத்தப்படும் என்பதே நிதர்சனம். இதுவே தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தில் நிறுவப்படும் எந்த ஒரு தொழிற்சாலைக்கும் பொருந்தும்.
“முதலீடுகளை ஈர்க்கிறோம், வேலைவாய்ப்பைக் கொடுக்கிறோம், நாட்டை வளர்க்கிறோம்” என்று இந்திய அரசு 90-களிலிருந்து அமல்படுத்தி வரும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியாது என்பது நிரூபணமான ஒன்று.
எனவே, உழைக்கும் மக்களாகிய நாம் இத்தகைய கொலைகார கார்ப்பரேட்டுகளை நாட்டில் கால் ஊன்ற விடலாமா?! வேலைவாய்ப்பு என்ற பெயரில் உலக உழைக்கும் மக்களை கொன்று குவிக்கும் போர்களுக்கு தளவாடம் அமைக்க அனுமதிக்கப் போகிறோமா?!
வெளிநாடுகள் மட்டுமின்றி மத்திய இந்தியாவில் கார்ப்பரேட்டுகளின் இயற்கை வள சுரண்டலுக்கு எதிராகவும், தங்களின் வாழ்வுரிமைக் காகவும் போராடும் பழங்குடி மக்களையும் இந்திய இராணுவத்தின் இதே ஆயுதங்கள் கொன்று குவித்து வருகிறது. சொந்த நாட்டு மக்களை ட்ரோன்கள் மூலம் கொள்ளும் இந்திய அரசுக்கு நாட்டின் பாதுகாப்பின் மீது என்ன அக்கறை? “பாதுகாப்பு” யாருக்கானது? உழைக்கும் மக்களுக்கு இல்லை என்பதே நிதர்சனம்!
இம்மாநாட்டை ஒட்டி சி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீன இன அழிப்பை நடத்தும் இஸ்ரேலிய நிறுவனங்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பாலஸ்தீன இன அழிப்பிற்கு எதிராக குரல் கொடுத்துள்ள முதலமைச்சர் அவரின் அரசின் கீழ் இயங்கும் TIDCO நிறுவனத்தின் மூலம் இஸ்ரேலிய நிறுவனங்கள் பங்கேற்பை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதே கண்ணோட்டத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் கோரிக்கைளையும் கண்டங்களும் எழுப்பி வருகின்றன.
பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக இருக்க வேண்டும், இஸ்ரேலிய இராணுவ நிறுவனங்களை எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், மேற்குறிப்பிட்டுள்ள விசயங்களை தொகுத்துப் பார்க்கும்போது, பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்திற்கு ஈர்க்கப்படும் முதலீடுகள் எந்த நாட்டு இராணுவ நிறுவனத்திடமிருந்து வந்தாலும் அவை எதிர்க்கப்படவே வேண்டும் என்பதே உழைக்கும் மக்களின் நிலைப்பாடாக இருக்க முடியும். மாநாடும், அதில் ஈர்க்கப்படும் பிற முதலீடுகளும் பிரச்சனை இல்லை, இஸ்ரேலிய நிறுவனங்களை தவிர்த்துவிட்டு பிற நிறுவனங்கள் வைத்து மாநாட்டை நடத்தலாம் என்பதன் பொருள் என்ன? பிற நாட்டு நிறுவனங்கள் என்ன உழைக்கும் மக்களை ஆயுத பாணியாக்கவா உற்பத்தி செய்கின்றன? அவையும் போர்களுக்குத் தானே உற்பத்தி செய்யப்படுகின்றன!
எனவே, கொலைவெறி நிறுவனங்களின் இந்த மாநாட்டையும் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் அமைத்திடும் திட்டத்தையும் கைவிட வேண்டும்! உழைக்கும் மக்கள் இம்மாநாட்டிற்கும், போர்வெறிக்கும் எதிராக ஒன்று திரண்டு போராட வேண்டும்!
இவண்,
தோழர். முத்துக்குமார்,
மாநிலச் செயலாளர்,
புரட்சிகர மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.