இந்தியாவின் ‘வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்தி, வெறும் பயிர் மட்டுமல்ல. இது 60 இலட்சம் விவசாயிகளின் உயிர்நாடியாகவும், 4.5 கோடி ஜவுளித் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாகவும், இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தையும், ஆடை ஏற்றுமதியில் கைத்தறி ஆடைகளுக்கு உலகளவிலுள்ள மக்களின் ஆசையையும், விருப்பத்தையும் இணைக்கும் நூலாகவும் உள்ளது. இருப்பினும், இன்று, இந்த உயிர்நாடி வேகமாக உடைந்து வருவதற்கு டிரம்பின் அடாவடியை எதிர்த்துப் பேசத் துப்பில்லாமல், அமெரிக்காவிடம் குழைந்து கொண்டிருக்கும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தான் காரணமாகும்.
கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்கா இந்திய பருத்தி ஏற்றுமதிக்கு 50% வரியை விதித்தது, இந்த நடவடிக்கை விவசாயிகள், நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களைப் பேரழிவை நோக்கி நெட்டித் தள்ளியது. இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் ஒரு அதிர்ச்சியூட்டும் முரண்பாடான நடவடிக்கையை மேற்கொண்டது. அதாவது, ஆகஸ்டு 19-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வெளிநாட்டுப் பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை இரத்து செய்தது.
இதன் மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளிலிருந்து மலிவான விலையில் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான வழிகளைத் திறந்துவிட்டது. அமெரிக்கா பருத்திக்கு விதித்த 50% வரி மற்றும் மோடி அரசாங்கம் வெளிநாட்டுப் பருத்திக்கு ஏற்கனவே இருந்த 11% இறக்குமதி வரி இரத்து ஆகிய இரட்டைத் தாக்குதலின் காரணமாக உள்நாட்டுப் பருத்தியின் விலை வீழ்ச்சியடைந்தது. மேலும் பருத்தி இறக்குமதியின் காரணமாக, வரி நீக்கப்பட்ட சில நாட்களுக்குள் பருத்தியின் விலை 4% குறைந்தன. இதனால் இந்திய பருத்தி கழகம் அதன் விலையை ஒரு பேலுக்கு ரூ.1,100 குறைத்தது. ஏற்கனவே குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ( MSP) கீழே விற்பனை செய்து கொண்டிருந்த இந்திய விவசாயிகளுக்கும், அதன் ஏற்றுமதியாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்தது.
தெலுங்கானாவில் மட்டும் சுமார் பத்து இலட்சம் விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர். அறுவடைக்குத் தயாராகும் பருவத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கையால் ஏற்பட்டிருக்கும் இந்த விலைக்குறைப்பிற்கு தெலுங்கானாவிலுள்ள ஒவ்வொரு விவசாயியும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை இழப்பார்கள். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பருத்தி உற்பத்தி ஏற்கனவே 24% குறைந்துள்ளது, அதே நேரத்தில் இறக்குமதி 73% அதிகரித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ரூ.74,648 கோடி மதிப்புள்ள பருத்தி மற்றும் ஆடைகள் இப்போது வரிகளால் ( Taxes) அழிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு காரணமாக, அனைத்துத் துறைகளிலும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியா 25.3 பில்லியன் டாலர்களை (ரூ.2.17 இலட்சம் கோடி) இழக்க நேரிடும், ஜவுளி ஏற்றுமதி மட்டும் அந்தச் சுமையில் கிட்டத்தட்டப் பாதியை சுமக்கிறது.
ஒவ்வொரு நாளும் 31 விவசாயிகள் அல்லது விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு நாட்டில், இந்த விலை வீழ்ச்சி என்பது ஒரு நெருக்கடியை ஒரு பேரழிவாக மாற்றக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விவசாயிகளுக்கு எதிரான இந்த முடிவைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில், “இந்திய விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு பாதகமான கொள்கைக்கும் எதிராக நான் ஒரு சுவர் போல நிற்கிறேன்” என்றும், “இந்திய விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்களின் நலன்களை இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது” என்றும் கூறியது முரண்பாட்டின் உச்சம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என்று கூறிய இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி வரி நீக்கப்பட்டது தான். எனவே விவசாயிகளுக்கு வாய்வீச்சு தேவையில்லை; குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்த சுவாமிநாதன் ஆணையத்தின் C2+50% பரிந்துரையின் அடிப்படையில் ஒரு குவிண்டாலுக்கு 10,075 ரூபாய் கொடுப்பதற்குக் கூட வக்கற்ற மோடி-அமித்ஷா கும்பல், நடுத்தர அளவிலான பருத்திக்கு ரூ.7,710 மட்டுமே வழங்கி வருகிறது.
இதற்கு நேரெதிராக, அமெரிக்க அரசாங்கம் அதன் பருத்தி விவசாயிகளுக்கு மிகப்பெரிய மானியங்களை வழங்கி வருகிறது. உதாரணமாக 2011-இல் அமெரிக்க பருத்தி விவசாயிகள் $24 பில்லியன் மானியத்தைப் பெற்றனர். 2024-ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கம் விவசாயிகளுக்குப் பண்டப் பயிர்களுக்கு $9.3 பில்லியன் மானியத் தொகையை வழங்கியது. அந்த ஆண்டு மொத்த பண்ணை வருவாயில் மானியங்கள் 5.9% ஆகும், இதில் பெரும்பாலான நிதி சோளம், சோயாபீன்ஸ் மற்றும் பருத்திக்கு சென்றது. கூடுதலாக, “1995-2020 ஆம் ஆண்டில் அமெரிக்கா $40.10 பில்லியன் பருத்தி மானியங்களை வழங்கியது” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், சமீபத்திய வரி மசோதாவில் அடுத்த பத்தாண்டுகளில் விவசாயிகளுக்கு $60 பில்லியன் மானியங்களை டிரம்ப் நிர்வாகம் வழங்கும் என்று அறிவித்தது. இதனால் அமெரிக்க விவசாயிகள் தங்கள் பொருட்களை உலக சந்தையில் போட்டியின்றி ஏற்றுமதி செய்வதற்கான ஆதரவைப் பெற்றுள்ளனர்.
எனவே, அடிப்படையில் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு செயற்கையாக மானியம் வழங்கி அவற்றை மலிவாக்கி, பின்னர் வளரும் நாடுகளில் திணித்து உள்ளூர் சந்தைகளை உடைக்கிறது. இதற்குப் பருத்தி ஒரு நல்ல உதாரணம், ஏனெனில் பருத்தியின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றான இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கையின் காரணமாக அமெரிக்க பருத்தியை வாங்குகிறது. டிரம்ப் தங்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் அதே வேளையில், மோடி அரசாங்கம் நமது விவசாயிகளை அமெரிக்க நலன்களுக்காகக் காவு கொடுக்கிறது.
மோடி-அமித்ஷா கும்பல், ஒருபுறம், “இந்தியாவில் தயாரிப்போம்” என்று கூறுவதும். மறுபுறம், இந்திய விவசாயிகளை நசுக்கும் மலிவான இறக்குமதிகளுக்கு வழி வகுத்துக்கொடுப்பதும் இந்தியாவிற்கென்று ஒரு சுயசார்பு பொருளாதாரக் கொள்கை இல்லை என்பதையே காட்டுகிறது. புதிய தாராளவாதக் கொள்கையின் காரணமாக வாழ்வின் விளிம்பில் நிற்கும் இந்திய விவசாயிகளை எளிதில் நெட்டித்தள்ளும் வேலையைத்தான் இந்திய வெளியுறவுக் கொள்கை செய்து வருகிறது. எனவே அமெரிக்க சக்கரத்தில் இன்று விவசாயிகள் என்றால் நாளைத் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் நெட்டித்தள்ளுவதற்கான கொள்கையாகத்தான் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக இதற்கெதிராகப் போராடிவரும் விவசாயிகளை, இது அவர்களுக்கான போராட்டம் என்று சுருக்கிப் பார்க்காமல், அவர்களுக்குத் துணை நிற்பதும், அவர்களுடன் இணைந்து அனைவரும் போராடும் பொழுதுதான் நாளை நம்மையும், நமது நாட்டையும் பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
- மகேஷ்




