திராவிட மாடலின் இரட்டைவேடம்!

ஒருபுறம் சமூகநீதி வேடம் பூண்டு மகாவிஷ்ணு மீது நடவடிக்கை என தடாலடி காட்டுவது மறுபுறத்திலோ விநாயகர் சதுர்த்திக்கு சுற்றறிக்கை அனுப்புவது முருகனை பாட் திட்டத்தில் வைப்பது என பள்ளிகல்வியில் இரட்டை நிலைப்பாட்டையே பின்பற்றுகிறது திராவிட மாடல் அரசாங்கம்.

சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் சனாதனக் கருத்துக்களையும் மூடநம்பிக்கைகளையும் மாணவர்களிடையே பிரச்சாரம் செய்த போலிச் சாமியாரான மகாவிஷ்ணு தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். சர்ச்சைக்குறிய அந்நிகழ்வுக்கு பிறகு திமுக மீது கடுமையான விமர்சனங்கள் கிளம்பவே, பள்ளிகளில் கல்வி சாராத நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டதுடன் சர்ச்சைகுறிய நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடைபெற்றால் தலைமை ஆசிரியரும் முதன்மைக் கல்வி அதிகாரியும் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்திருக்கிறார் பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்.

மகாவிஷ்ணுவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் இப்பிரச்சனையில் தனக்குதானே சூடு வைத்துக் கொண்டதுதான் மிச்சம். ஜனநாயகவாதிகளும் கம்யூனிஸ்டுகளும் கல்வியாளர்களும் திமுக ஆதரவாளர்களும் ஓரணியில் நின்று சமூக வலைதளங்களில் இந்நிகழ்வு குறித்த செய்தி வெளிவந்த ஒரு சில தினங்களுக்குளாக  உரிய நடவடிக்கை எடுத்து திமுக அரசாங்கம் சரியாக நடந்து கொண்டது போன்ற தோற்றத்தை ஊடகங்களின் வாயிலாக கட்டியமைத்துவிட்டனர்.

 

 

“என்னுடைய ஏரியாவுல வந்து நீ பேசிட்டு போயிருக்க, என்னுடைய ஆசிரியரை நீ மிரட்டி இருக்கிற, நான் உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கோபத்துடன் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அம்பில் மகேஷ், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு “சட்டம் தன் கடமையை செய்யும்” என்று பதில் அளித்து முடித்துவிட்டார்.

இந்த போலிச் சாமியார் சைதாப்பேட்டை அரசு மாதிரிப் பள்ளியிலும் அசோக் நகர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பேசுவதற்கான ஏற்பாட்டை ஒரு என்ஜிஓ தான் செய்திருக்கிறது. அந்த என்ஜிஓ பற்றிய விவரம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. பள்ளிகளில் என்ஜிஓக்களுக்கு என்ன வேலை? என்ஜிஓக்களுக்கு அரசு பள்ளிகளில் அனுமதி இல்லை என்று தற்போது பேசுகிறது திமுக அரசாங்கம். ஆனால் இல்லம் தேடிக் கல்வி, வானவில் மன்றம், எண்ணும் எழுத்தும் (இவை தேசியக் கல்விக் கொள்கை 2020ன் பரிந்துரைகள்) போன்ற திட்டங்களின் வாயிலாக தன்னார்வலர்களையும் என்.ஜி.ஓ.க்களையும் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிதத்ததே திராவிடமாடல் அரசாங்கம் தான்

மாவட்ட கல்வி அதிகாரியின் ஒப்புதலோடு தான் பள்ளியில் பேசுவதாக மகாவிஷ்ணு பேசியிருந்தான். அனுமதியளித்த மாவட்ட கல்வி அதிகாரியின் பின்புலம் என்ன? தலைமை ஆசிரியரை மட்டும் இடமாறுதல் செய்துவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டதாக பூசி மெழுகுகி விட்டது திமுக அரசாங்கம்.

மகாவிஷ்ணு மீது போடப்பட்டுள்ள வழக்குகள் கூட மாற்றுத்திறனாளியான ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்தான் வழக்குப் பதியப்பட்டுள்ளதே ஒழிய அரசுப்பள்ளி மாணவர்களிடம் மூடநம்பிக்கை பிரச்சாரம் செய்தது, இந்துமதம் மற்றும் சனாதன கருத்துகளை பிரச்சாரம் செய்தது என்ற கோணத்தில் இப்பிரச்சனையை திமுக அரசாங்கம் அணுகவேயில்லை. ஆசிரியர் சங்கரை மட்டுமே வைத்து கம்பு சுற்றி முடித்துவிட்டது, திமுக. மூடநம்பிக்கையை பரப்புவது, சனாதன கருத்துகளை பரப்பியது பற்றியெல்லம் வாய்திறக்கவில்லை.

அரசு பள்ளிகளில் இது போன்ற பல வண்ண பிற்போக்குத்தனங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. கடந்த வாரம் ஆசிரியர் தினத்தன்று சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்களுடைய கால்களை கழுவுகின்ற பாதபூஜை நிகழ்ச்சியை பள்ளி நிர்வாகம் நடத்தியிருந்தது. மதுரையில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவில் மாரியம்மன் பாட்டுக்கு மாணவர்கள் சாமியாடுகின்ற கூத்து சமூகவலைத்தளங்களில் பரவியது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி “செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை” என பத்து உறுதி மொழிகள் உள்ளடக்கிய சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பி மாணவர்கள் உறுதிமொழியை ஏற்க வேண்டும் என பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழிகாட்டியிருந்தனர். இன்னும் ஒருபடி மேலே சென்று, நடந்து முடிந்த அனைத்துலக முருக மாநாட்டின் தீர்மானத்தின் படி அறநிலையத்துறையின் கீழ் உள்ள பள்ளி-கல்லூரிகளில் முருகனை பற்றியப் பாடத்தினை  சேர்ப்பது மற்றும் மாணவர்களிடையே கந்தசஷ்டி கவசம் பேச்சுப்போட்டிகளை நடத்துவதை அமல்படுத்தப்போவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருக்கிறார்.    

இவையெல்லாம் அரசுப் பள்ளிகளில் நடப்பது. இதனைத் தாண்டி தமிழகத்தில் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் நடப்பவை பொது விவாதத்திற்கே வருவதில்லை. குறிப்பாக பார்ப்பனர்கள் மற்றும் இந்து சாமியார்களால் நடத்தப்படும் பள்ளிகளில், முழுக்க முழுக்க சனாதன கருத்துகளும் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கருத்துகளுமே மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பிற மத்த்தினர் நடத்தும் பள்ளிகளில் கூட அவர்களது மத கருத்துகளையே வெவ்வேறு நிகழ்வுகள் மூலம் முன்நிறுத்துகின்றனர். பள்ளிகளில் மத கருத்துகளைப் பேசக்கூடாது என சட்டம் இருந்தும் அவற்றையெல்லாம் காற்றிலே பறக்கவிட்டுத்தான் பள்ளிகல்வியை நிர்வகிக்கிறது. திராவிடமாடல் அரசு.

ஒருபுறம் முற்போக்கு வேடம் பூண்டு ஒருசில பிரச்சனைகளில் தலையிட்டு நடவடிக்கைகள் எடுப்பது போல தடாலடி காட்டுவதும் மறுபுறத்தில் பள்ளிகல்விக்குள் என்.ஜி.ஓ.களை அனுமதிப்பதும் பள்ளிகளில் அறிவியலுக்கு புறம்பானைவைகளையும் மதப்போதனைகளும் அனுமதிப்பதும் அவை பற்றி பாராமுகமாக இருப்பதும் என்ற இரட்டை நிலைப்பாட்டையே திராவிடமாடல் அரசு பின்பற்றி வருகிறது.

அழகு

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன