கடந்த செப்டம்பர் 2025-இல் ரூபே (RUPE) ஆய்வுக்குழுவினரால் அவர்களது இணையப் பக்கத்தில் மூன்று பாகங்களாக எழுதப்பட்டு Aspects of India’s Economy no 88 இதழில் Two Faces of the Demand Problem என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு செங்கனல் ஜனவரி – பிப்ரவரி – 2026 இதழில் வெளியாகியுள்ளன. அந்தக் கட்டுரைகளை இணையவெளியில் வெளியிடுகிறோம். மோடி ஆட்சி காலத்தில் இந்தியப் பொருளாதாரம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துவிட்டது; ஜப்பானுக்கும் சீனாவுக்கும் போட்டியாக மாறியுள்ளது; இந்திய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது — என்றெல்லாம் கதையளக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பலின் பொய்களை, இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள மறுக்கவியலாத தரவுகளும் வாதங்களும் சுக்கு நூறாக உடைத்தெறிகின்றன.
மேலும், மிக முக்கியமாக இந்தியப் பொருளாதாரம் இன்று மீளமுடியாத ஒரு முட்டுச் சந்திற்குள் சிக்கித் தவிப்பதை வாசகர்கள் இக்கட்டுரைகளின் வழியே அறிந்துகொள்ள முடியும். ஒருபுறம், கார்ப்பரேட்டு நிறுவனங்களிடமும் வங்கிகளிடமும் மலையளவு பணம் குவிந்துள்ளது; மறுபுறம், மக்களின் வாழ்நிலைமை படுபாதாளத்தில் விழுந்துள்ளது; மக்களின் வாங்கும் சக்தி (purchasing power) அதளபாதாளத்தில் கிடக்கிறது; எனவே, தேவைப் பற்றாக்குறை (lack of demand) எனும் நோய் சந்தையைப் பிடித்தாட்டுகிறது; தேவைப் பற்றாக்குறையால் கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை; மாறாக, ஊகபேரச் சூதாட்டங்களில் ஈடுபட்டு மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ளவே முயல்கின்றன; கார்ப்பரேட்டுகளை முதலீடு செய்ய வைக்க அரசு எவ்வளவுதான் சலுகைகள், மானியங்கள், திட்டங்களை அறிவித்தாலும் அவற்றை வாரிச் சுருட்டிக் கொள்கிறார்களே தவிர முதலீடு செய்வதில்லை — இவை அனைத்தையும் இக்கட்டுரைகள் மறுக்கவியலாத வகையில், தரவுகள், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது.
சுருங்கக் கூறினால், முதலாளித்துவப் பொருளாதாரம் இன்று மீளமுடியாத நெருக்கடியில் சிக்கி, வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்பதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் இக்கட்டுரைகள் அம்பலப்படுத்துகின்றன.
கீழே உள்ள சுட்டிகளில் மூன்று கட்டுரைகளின் மொழிபெயர்ப்பும் உள்ளன.
ஆசிரியர் குழு
செங்கனல்.
முட்டுச் சந்தில் முதலாளித்துவம் – பாகம் I மலையளவு குவிந்துள்ள பணம்
முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் II நிலைகுலைந்துவரும் மக்களின் நிதிநிலை
முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் III பொருளாதார அழுத்தத்திற்கு மத்தியில் செல்வத்தை குவித்தல்



