குறிப்பு: இக்கட்டுரை பீகார் தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் செங்கனல் நவம்பர் – டிசம்பர் 2025 இதழுக்காக எழுதப்பட்டதாகும். தவிர்க முடியாத காரணத்தால் இதழ் வெளிவரவில்லை. மீண்டும் ஜனவரி – பிப்ரவரி 2026 இதழில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. புதிய செய்திகள் அதிகமாக இருந்ததால் அதில் வெளியிட முடியவில்லை. எனினும், அரசியல் முக்கியத்துவம் கருதி இதனை இங்கே வெளியிடுகிறோம்.
*****

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக் கட்சியினரின் தலையில் இடியென இறங்கியிருக்கிறது. அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருப்பதாக கூறப்பட்ட இந்தியா கூட்டணி வெறுமனே 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அதிலும் காங்கிரஸ் கட்சியானது 61 இடங்களில் போட்டியிட்டு வெறுமனே 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
ஏற்கெனவே இரண்டு முறை பீகார் மாநிலத்தை ஆட்சி செய்திருந்த நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாகவும், அதனுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவிற்கு அது எதிராகப் போகும் என்றும் கூறப்பட்டது. அதுமட்டுமன்றி பாஜகவின் ஓட்டுத் திருட்டு பற்றியும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்தும் காங்கிரஸ் கட்சியானது மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருப்பதால் இந்தியா கூட்டணிக் கட்சிகள் நிச்சயமாக இந்தத் தேர்தலில் வெற்றி பெரும் என்று கூறினார்கள்.
காங்கிரஸ் நடத்திய வாக்களிக்கும் அதிகாரத்திற்கான பேரணியில் பல இலட்சம் பேர் கலந்து கொண்டதையும், ராகுல் காந்தியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த கூட்டத்தையும் காட்டி பீகாரில் வெற்றி நிச்சயம் என தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. இன்னும் சொல்லப்போனால் சில யூடியூப் பக்கங்கள் பாஜக கூட்டணிக் கட்சிகளால் பிரச்சாரத்திற்கே செல்ல முடியவில்லை, பீகார் மக்கள் அவர்களைத் துரத்தியடிக்கிறார்கள் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்றும் அடுத்தடுத்துக் காணொளிகளை வெளியிட்டுப் புலங்காகிகதமடைந்தன.
காவி கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராகத் துரும்பையும் அசைக்காமல் அதனைத் தேர்தல் அரசியலில் வீழ்த்திவிட்டதாக பகல்கனவு கண்டுகொண்டிருந்த இந்தியா கூட்டணிக் கட்சியினரை பீகார் தேர்தல் முடிவுகள் உலுக்கி எழுப்பியிருக்கின்றன. ஆம், காவி கார்ப்பரேட் பாசிசம் எந்த அளவிற்கு அரசின் பல்வேறு உறுப்புகளில் ஊடுருவியிருக்கிறது என்பதற்கும், தேர்தல் ஆணையம், நீதித்துறை, அதிகாரவர்க்கம் என அனைத்தையும் ஒருங்கே பயன்படுத்தி காவி பாசிஸ்டுகளால் எவ்வாறு ஒரு தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதற்கும், துலக்கமான எடுத்துக்காட்டாக பீகார் தேர்தல் முடிவுகள் உள்ளன.
இந்தத் தேர்தலில் காவி பாசிஸ்டுகள் சாம தான பேத தண்டம் என அனைத்தையும் பயன்படுத்தித்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். முதலில் SIR நடைமுறையின் மூலம் பல இலட்சம் வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்தும், தங்களுக்கு ஆதரவாக புதிதாகப் பல இலட்சம் போலி வாக்காளர்களைச் சேர்த்தும் மிகப்பெரிய மோசடியைச் செய்தார்கள். அடுத்ததாக தேர்தல் நடத்தை விதிகளை மீறி 75 இலட்சம் பெண் வாக்காளர்களின் வங்கிக் கணக்கில் 10,000 ருபாய் பணத்தை, நலத் திட்டம் என்கிற பெயரில் செலுத்தி அவர்களது வாக்குகளைக் கவர்ந்தார்கள். ஹரியாணா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து பல ஆயிரம் போலி வாக்காளர்களைக் கொண்டு வந்து வாக்களிக்கச் செய்தார்கள். அதுமட்டுமன்றி மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலில் செய்தது போன்றே வாக்குப்பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் பல இலட்சம் பேரை வாக்களிக்கச் செய்தனர். விவிபாட்டுடன் ஒப்பிட்டு சரிபார்க்க முடியாது என்று கூறினார்கள். தபால் வாக்குகளில் தில்லுமுல்லு செய்தார்கள். இவை அனைத்தையும் வைத்துத்தான் பாஜக கூட்டணிக் கட்சிகள் பீகார் தேர்தலில் இமாலய வெற்றியை சாதித்தன.
பீகாரில் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருந்த சூழலில், ஜூன் 24-ஆம் தேதியன்று, அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) தேர்தல் ஆணையம் அறிவித்தது. அடுத்த ஒரு மாதத்தில் பீகாரில் உள்ள 8 கோடி வாக்காளர்களும் தங்களது குடியுரிமையை தேர்தல் ஆணையத்திடம் நிரூபித்தால் மட்டுமே அவர்களுக்கு ஓட்டுரிமை என்றும் அது கூறியது. குடியுரிமையைச் சோதிப்பதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officer – BLO) வீடுவீடாகச் சென்றார்கள்.
SIRஐப் பயன்படுத்தி பல இலட்சம் வாக்காளர்களை, அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
ஆகஸ்டு முதல் வாரத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்ட போது 65 இலட்சம் வாக்காளர்களை அது பட்டியலில் இருந்து நீக்கியது. அதன்பிறகு செப்டம்பர் 30 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது 21.54 இலட்சம் பேரைப் புதிதாக சேர்த்ததுடன், வரைவுப் பட்டியலில் இருந்த 3.66 இலட்சம் வாக்காளர்களை நீக்குவதாக அறிவித்தது. 7 கோடியே 89 இலட்சம் வாக்காளர்களைக் கொண்டிருந்த பீகாரில், SIR நடைமுறைக்குப் பிறகு 7 கோடியே 42 இலட்சம் வாக்காளர்களாக, அந்தப் பட்டியல் சுறுங்கிப் போனது. கிட்டத்தட்ட 57 இலட்சம் வாக்காளர்கள் SIR நடைமுறைக்குப் பிறகு தங்களது வாக்குரிமையை இழந்தார்கள்.
இறந்துவிட்டவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிந்தவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், தங்களது குடியுரிமையை நிரூபிக்கத் தவறியவர்கள் ஆகியோரைத்தான் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால் திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ், ஏ.டி.ஆர். உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய கள ஆய்வுகளில் அம்பலமாகியிருக்கிறது.
உதாரணத்திற்கு பீகாரின் கிழக்கு சம்ப்ரான் மாவட்டத்தில் உள்ள டாக்கா தொகுதியில் மட்டும் 80,000 இஸ்லாமியர்களின் வாக்குரிமையை நீக்கும்படி பாஜக நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளை நிர்பந்தித்தது அம்பலமானது.
RJD மற்றும் இடதுசாரி கட்சிகளின் கோட்டைகளாகக் கருதப்படும் தொகுதிகளில் வாக்காளர் நீக்கம் அதிக அளவில் நடந்ததாக பல்வேறு செய்தி ஆதாரங்கள் வெளியாகின.
வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவது ஒருபுறம் என்றால் போலி வாக்காளர்களைச் சேர்ப்பது மறுபுறம் நடந்தது. இல்லாத முகவரியிலும், காலியிடங்களிலும், அரசு அலுவலகங்களிலும், கட்சி அலுவலகங்களிலும் வசிப்பதாக கூறி கொத்துக் கொத்தாக புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள். சில இடங்களில் ஒரே முகவரியில் 50 முதல் 300 வாக்காளர்கள் வசிப்பதாக பதியப்பட்டிருந்தது.
இவற்றைச் சரி செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிந்திருக்கும் வாக்காளர்களை நீக்குவதற்கான மென்பொருளை (De-duplication software), அதிக விலை கொடுத்து வாங்கி வைத்திருந்த போதும், தேர்தல் ஆணையம் பயன்படுத்த மறுத்துவிட்டது.
தேர்தல் ஆணையம் தான் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கிறது, நீதிமன்றத்தை நாடினால் நியாயம் கிடைக்கும் என எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டினார்கள். ஆனால் SIR நடைமுறையை தடுக்கும் படி வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதுமட்டுமன்றி பீகாரில் அமுல்படுத்தியது போன்றே நாடுமுழுவதும் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் இந்த நடைமுறையை விரிவுபடுத்த வேண்டும் எனவும் அது உத்தரவிட்டது.
SIR-இன் மூலம் தேர்தல் தேதி அறிவிக்கபடுவதற்கு முன்னதாகவே பீகாரில் தங்களது வெற்றியைக் காவி பாசிஸ்டுகள் உறுதிசெய்துவிட்டார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் இந்தியா கூட்டணிக் கட்சிகளோ தாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என தீர்க்கமாக கூறிவந்தார்கள்.
அதற்கும் ஆப்பரைவது போல அடுத்தடுத்த நடவடிக்கைகளில் காவி பாசிஸ்டுகள் இறங்கினார்கள். பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தைவிதிகள் அமுலுக்கு வந்த பிறகு, அதாவது அக்டோபர் மாதம் 6ம் தேதிக்குப் பிறகு “முதலமைச்சர் பெண்கள் வேலைவாய்ப்புத் திட்டம்” என்ற பெயரில் சுமார் 75 இலட்சம் பெண் வாக்காளர்களின் வங்கிக் கணக்கிற்கு 10,000 ருபாய் பணத்தை பீகார் மாநில அரசு வரவு வைத்தது. முதலில் இது கடனாக கொடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும் தேர்தல் பரப்புரையின் போது இந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். இதன் மூலம் அரசுப் பணத்தை எடுத்து வாக்காளர்களுக்குக் கொடுக்கும் வேலையைக் காவி பாசிஸ்டுகள் வெளிப்படையாகச் செய்தனர்.
தேர்தல் நடத்தைவிதிகளை மீறி இவ்வாறு பணம் கொடுக்கப்பட்டதைக் கண்டித்து அதனை உடனடியாக நிறுத்திவைக்கும்படி எதிர்க்கட்சிகள் சார்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டப்பட்டது. ஆனால் இதனைத் தேர்தல் ஆணையம் காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை. இவ்வாறு பெண்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தைப் போட்டதால்தான் இந்த முறை அதிக அளவிலான பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதுவும் பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். நிலைமை இவ்வாறு இருக்க, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 71.6 சதவித பெண் வாக்காளர்கள் வாக்களித்ததை வைத்து, தாங்கள் வெற்றி பெறப் போவது நிச்சயம் என இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூறிவந்தார்கள்.
இதையெல்லாம் தாண்டி தேர்தல் சமயத்தில் வழக்கமாக கையாளுகின்ற தகிடுதத்தங்கள் அனைத்தையும் காவி பாசிஸ்டுகள் பீகார் தேர்தலிலும் கையாண்டிருக்கிறார்கள். கொரோனா காலத்தில், தொழிற்ச்சாலைகள் மூடப்பட்டதால் வேலையிழந்த புலம் பெயர் தொழிலாளர்கள், பீகார் மாநிலத்திற்குத் திரும்பச் செல்ல ஒரு ரயிலைக் கூட இயக்க முடியாது எனக் கூறிய ஒன்றிய அரசும், ரயில்வேத் துறையும், பீகார் தேர்தலை ஒட்டி நூறுக்கும் அதிகமான சிறப்பு ரயில்களை இயக்கின. இந்த ரயில்களில் வந்து வாக்களித்துச் செல்வதற்கு புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கு பாஜகவினரே பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள். புலம் பெயர் தொழிலாளர்கள் மட்டுமன்றி ஹரியாணா, இராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து போலி வாக்காளர்களை பீகாருக்குள் கொண்டுவரவும் இந்த இரயில்களை பாஜகவினர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பாஜக செய்த திருட்டுத்தனங்களால் மட்டுமன்றி இந்தியா கூட்டணிக் கட்சியினரிடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சனையினாலும் பாஜக பல இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. சந்தர்ப்பவாத, பிழைப்புவாத நடைமுறையில் மூழ்கிக் கிடக்கும் இந்த ஓட்டுக் கட்சிகள், காவி பாசிசத்தை எதிர்ப்பதற்காக ஒன்று சேர்வதாக கூறுவது கடைந்தெடுத்த பொய் என்பது தேர்தல் சமயத்தில் அவர்கள் நடத்தும் தொகுதிப் பங்கீட்டுச் சண்டையில் அம்பலப்பட்டுபோய்விடுகிறது. இந்த பீகார் தேர்தலில் மட்டும் இந்தியா கூட்டணிக் கட்சியினரே ஒருவரை ஒருவர் எதிர்த்து நின்றதன் மூலம் 11 இடங்களை பாஜக கூட்டணிக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு எதிராக காங்கிரஸ் போட்டியிட்ட 5 இடங்களிலும், காங்கிரசுக்கு எதிராக சி.பி.ஐ. போட்டியிட்ட 4 இடங்களிலும், பாஜக கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற இவர்களே காரணமாக இருந்திருக்கிறார்கள்.
ஓட்டுத் திருட்டு குறித்தும், SIR குறித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஊடகங்களில் பேசினாலும், அதன் தாக்கம் குறித்து மக்கள் மத்தியில் விரிவாகவும், அதனை காவி பாசிஸ்டுகள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என விளக்கியும் கொண்டு சேர்க்கவில்லை. குறிப்பாக SIR என்பது NRCதான் என்பதை காங்கிரஸ் கட்சி பெரிதாக முன்னெடுக்கவே இல்லை. ஆரம்பத்தில் இது குறித்துப் பேசினாலும், மக்கள் மன்றத்தை நாடுவதற்கு பதிலாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துவிட்டால் கடமை முடிந்தது என அவர்கள் கருதுகிறார்கள். இது காவி பாசிஸ்டுகள் மக்கள் மத்தியில் வலுவாக காலூன்றுவதைச் சுலபமாக்குகிறது.
இவையெல்லாம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறியாதது அல்ல. தேர்தல் ஆணையத்தையும், நீதித்துறையையும், அரசு அதிகாரிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தேர்தலில் வெற்றி பெற, எல்லா திருட்டுத்தனங்களையும் செய்யும் காவி பாசிஸ்டுகளை அவர்கள் வழியிலேயே போய் தேர்தல் மூலமாக முறியடிக்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கு நிச்சயமாகத் தெரியும். இருந்தும் அவர்கள் காவி பாசிஸ்டுகளை அம்பலப்படுத்த தேர்தலைப் புறக்கணிக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்தக் கட்சிகள் அனைத்தும் தேர்தல் அரசியலில் பொறுக்கித் தின்று வயிறு வளர்க்கும் கூட்டத்தைக் கொண்டு கட்டியமைக்கப்பட்டவை. ஓட்டரசியலை வைத்துப் பிழைப்பு நடத்துவதுதான் இவர்களது கொள்கை. பாசிச எதிர்ப்பு என இவர்கள் பேசுவது எல்லாம் வெறும் வாய் வார்த்தைக்கு, அடுத்த தேர்தலில் பாஜகவிற்கு எதிராக இன்னும் சற்று அதிக எண்ணிக்கையில் இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக மட்டுமே.
ஆகையால்தான் பீகார் தேர்தலில் பாடம்படித்த மு.க.ஸ்டாலின், காவி பாசிஸ்டுகளை எவ்வாறு வீழ்த்துவது என சிந்திப்பதற்கு பதிலாக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டு வாக்காளர்களைக் கவர்வதற்கு பொங்கல் பரிசுத் தொகையாக 3,000 கொடுக்கலாமா இல்லை 5,000 கொடுக்கலாமா என பரிசீலித்து வருகிறார்.
அறிவு



