பாராளுமன்றத்தைக் கேலிக்கூத்தாக்கும்
காவி பாசிஸ்டுகள்

பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் செத்து அழுகிப் போய் குப்பை மேட்டில் கிடக்கிறது. 2014-க்கு முன்புவரை முதலாளித்துவ இலாப வெறியைப் பேணிப் பாதுகாப்பதற்கு மட்டுமே இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த மோடி-அமித்ஷா பாசிசக் கும்பலின் கையில் இந்திய நாடாளுமன்றம் சிக்கியுள்ளது. இதுநாள் வரையில் நாடளுமன்ற ஜனநாயகம் குறித்து நாட்டு மக்களுக்குக் கற்பித்து வந்த போலி “ஜனநாயக” மாண்பையும் இழந்து நிற்கிறது.

2014-இல் மோடி பிரதமராகப் பதவியேற்பதற்கு சற்று முன்பாக, இந்திய நாடாளுமன்ற வாயில் படிக்கட்டில் விழுந்து வணங்கியதோடு நாடாளுமன்றத்தை ’ஜனநாயகத்தின் ஆலயம்’ என வர்ணித்தார். இது மோடிக்கு இந்திய நாடாளுமன்றத்தின் மீதுள்ள ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக உள்ளது எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. தற்பொழுது மோடி பிரதரமாக பொறுப்பேற்று பதினொரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் நாடாளுமன்றம் நடைபெறும் விதத்தைப் பார்க்கும் போது, மோடியின் ’ஜனநாயகத்தின் ஆலயம்’ எனும் வர்ணணை ஒரு நாடகம் என்பதைப் புரிந்துகொள்ள “கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை” என்ற பழமொழியே போதுமானது.

இந்தியாவிலுள்ள பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் தான் உலகிலேயே மிகச் சிறந்த அரசியலமைப்பு; நாடாளுமன்றம்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் போன்ற ஜனநாயகப் பிரம்மைகள் எல்லாம் மோடியின் ஆட்சியில் தவிடு பொடியாகி வருகிறது.

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களோ, தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் அமர்ந்திருப்பதையே வெற்றியாக கருதுகின்றனர். எனவே தான் இதுகாறும் இந்திய “நாடாளுமன்ற ஜனநாயகம்” என்று பீற்றிக் கொண்டதெல்லாம் அவர்கள் கண் முன்னே தகர்ந்து, நொறுங்கி வருவதைப் பற்றி கண்களை மூடிக்கொண்டும், வாயைப் பொத்தி மௌனமாகவும் அமர்ந்திருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் பிரதமர், குறைவாக கூட்டப்படும் கூட்டத்தொடர், விவாதமின்றி நிறைவேற்றப்படும் மசோதாக்கள், நிலைக்குழுவிற்கான அதிகாரமின்மை, எதிர்க்கட்சிகளின் செயலின்மை போன்ற காரணங்களினால் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகம் செத்து அழுகிப் போய் குப்பை மேட்டில் கிடக்கிறது. 2014-க்கு முன்புவரை முதலாளித்துவ இலாப வெறியைப் பேணிப் பாதுகாப்பதற்கு மட்டுமே இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த மோடி-அமித்ஷா பாசிசக் கும்பலின் கையில் இந்திய நாடாளுமன்றம் சிக்கியுள்ளது. இதுநாள் வரையில் நாடளுமன்ற ஜனநாயகம் குறித்து நாட்டு மக்களுக்குக் கற்பித்து வந்த போலி “ஜனநாயக” மாண்பையும் இழந்து நிற்கிறது.

நாடாளுமன்றத்தை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் மோடி

இதுவரை மோடியைப் போல வேறு எந்த பிரதமரும் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தைப் புறக்கணித்ததில்லை. தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைப்பெற்று வருகிறது. மோடியோ ஜோர்டான், ஓமன், எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மோடி பிரதமராக பதவியேற்றபின் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஏறத்தாள 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் போது மேற்கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியிருக்கிறது.

அதேபோல் மோடி நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளதைக் கணக்கிட்டாலும் கூட மற்ற பிரதமர்களுடன் ஒப்பிடும் பொழுது மிகக் குறைவாகவே இருக்கிறது. மோடி தன்னுடைய முதல் பதவிக்காலத்தில் (2014 முதல் 2019 வரை) நாடாளுமன்றத்தில் 22 முறை மட்டுமே பேசியிருக்கிறார். இந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 3.6 முறை மட்டுமே பேசியிருக்கிறார். சுமார் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பிரதமராகப் பதவி வகித்த தேவகவுடா பேசியதை விட மோடி குறைவாகவே பேசியிருக்கிறார். மோடியால் “மெளன மோகன்” என்று அழைக்கப்பட்ட மன்மோகன் சிங் தன்னுடைய பத்தாண்டு பதவிக்காலத்தில் சுமார் 77 முறை பேசியிருக்கிறார்.

மன் கி பாத் (Mann Ki Baat) நிகழ்ச்சி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளிலும் வானொலி மூலம் ஒளிபரப்பப்படுகிறது, இது பிரதமரின் குரலை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் ஒரு மாதாந்திர வானொலி நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியை பா.ஜ.க-வினர் பீற்றிக் கொள்கின்றனர். மக்கள் எந்த கேள்வியும் கேட்க முடியாத, விவாதிக்க முடியாத ஒரு வழிப்பதையான இந்நிகழ்ச்சியை மோடி பக்தர்கள் வேண்டுமானால் பீற்றிக் கொள்ளலாம், மோதி மீடியாக்களில் மற்றொன்றைப் பற்றி பேசுவதற்கு பொருளொன்றும் இல்லை.

தொடர்ச்சியாக குறைக்கப்படும் நாடாளுமன்றக் கூட்டங்களின் எண்ணிக்கை

1950-களில் கூடிய இந்திய நாடாளுமன்றத்தின் முதல் மக்களவை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 135 கூட்டங்களை நடத்தியிருக்கிறது. இதோடு ஒப்பிடும் போது மோடியின் ஆட்சியில் இந்திய நாடாளுமன்றம் அதன் வரலாற்றிலேயே மிகக் குறைவாக செயல்பட்டு வருகிறது. இந்தாண்டு நாடாளுமன்றத்தில் 62 கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டிருக்கின்றன. முந்தைய காங்கிரசு ஆட்சியில் (2009-2014) 15-வது மக்களவையில் ஆண்டுக்கு சராசரியாக 71 நாட்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. மோடி ஆட்சிக்கு வந்த பின்பு நடைப்பெற்ற 16-வது மற்றும் 17-வது மக்களவையில் (2014-2024) ஆண்டுக்கு சராசரியாக முறையே 66 மற்றும் 55 நாட்கள் மட்டுமே மக்களவை கூடியிருக்கிறது. மோடி அரசால் நடத்தப்படும் கூட்டத் தொடர் நாட்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது நடைப்பெற்று வரும் குளிர்காலக் கூட்டத்தொடரும் 19 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது.

இந்தியாவில் நடைப்பெற்று வரும் பல கட்சி நாடாளுமன்றம் மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற தோற்றமெல்லாம் மோடியின் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களின் எண்ணிக்கைக் குறைப்பும், குறைவாக கூடுவதும் “நாடாளுமன்ற ஜனநாயகம்” அம்பலப்பட்டு நிற்பதையே காட்டுகிறது. மோடியின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மக்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் கூட போதிய நேரம் வழங்கப்படுவதில்லை. இதனால் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கான மசோதாக்கள் மிக குறைந்த விவாதத்துடனும், சில சமயங்களில் அமளிகளுக்கு மத்தியிலும் நிறைவேற்றப்படுகின்றன.

மோடியின் ஆட்சியில் கூட்டப்பட்ட (2019-2024) 17-வது மக்களவையில் மொத்தம் 179 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதில் 58% மசோதாக்கள் அறிமுகப்படுத்தபட்ட இரண்டு வாரங்களுக்குள் அவசர அவசரமாக நிறைவேற்றபட்டிருக்கின்றன. மேலும் 35% மசோதாக்கள் மீதான விவாதம் ஒரு மணிநேரத்திற்கும் குறைவாகவே நடத்தப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற கேள்வி நேரத்தை பொறுத்தவரையில் 16-வது மற்றும் 17-வது மக்களவையில் திட்டமிட்டப்பட்ட நேரத்திற்கும் குறைவாக முறையே 67%  மற்றும் 60% நடத்தப்பட்டிருக்கிறது. இதுவே மாநிலங்களவையில் முறையே 52% மற்றும் 41% நடத்தப்பட்டிருக்கிறது. இதிலிருந்து மோடி அரசு ”நாடாளுமன்ற ஜனநாயகத்தை” கிஞ்சித்தும் மதிப்பதில்லை என்பதையும், நடைபெறும் நேரத்தில் கூட விவாதமில்லாமல் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிகரிக்கும் அவசரச் சட்டங்கள்

முந்தைய மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 6-ஆக இருந்த அவசர சட்டங்களின் எண்ணிக்கை மோடியின் ஆட்சியில் ஆண்றொன்டிற்கு 11-ஆக உயர்ந்திருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இல்லாத போது பிறப்பிக்கப்படும் அவசரச் சட்டங்கள், அது கூடிய ஆறு வாரங்களில் மசோதாவாக தாக்கல் செய்யப்படவேண்டும். அதன்பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் விவாதம் நடத்தி, இந்த மசோதாக்களை, சட்டங்களாக மாற்றவோ, திருத்தவோ அல்லது நிராகரிக்கவோ செய்யலாம். ஆனால் மோடியின் ஆட்சியில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவுகளைப் போலவே அவசரச் சட்டங்களையும்  அறிவித்து நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகிறது.

தில்லியில் மாபெரும் விவசாயிகள் போராட்டம் நடபெறக் காரணமாக இருந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஆரம்பத்தில் அவசரச் சட்டமாகவே கொண்டு வரப்பட்டது. இவை மட்டுமின்றி மோடி தான் பதவியேற்ற ஏழு ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் சுமார் 76 அவசரச் சட்டங்களை பிறப்பித்திருக்கிறது.

நாடாளுமன்றம், மாநிலங்களின் உரிமை ஆகியவற்றையெல்லாம் மோடி ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதற்கு இந்த அவசரச் சட்டங்கள் இன்னுமொரு எடுத்துக்காட்டு. அதிகாரத் திமிரும் முதலாளித்துவ இலாப வெறியும் கொண்ட ஒரு பாசிஸ்டின் கையில் நாடு சிக்கிக்கொண்டிருப்பதை இந்த அவசரச் சட்டங்களெல்லாம் எவ்வாறு அமலாக்கப்படுகிறது என்பதிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் அவலநிலை

நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் நாடாளுமன்றத்தின் சிறந்த வடிவங்களாக கருதப்படுகின்றன. பொதுவாக, இந்த நிலைக் குழுக்களில் பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பெறுகின்றனர். மசோதாவில் ஆரம்பத்தில் இல்லாத ஒரு பிரிவை அரசாங்கம் சேர்த்தால் கூட, அதை மீண்டும் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை.

மோடியின் ஆட்சியில் நாடாளுமன்ற விவாதங்கள் குறைவாக நடைபெறுவது மட்டுமின்றி நாடாளுமன்றத்தின் ஜனநாயக வடிவம் எனக் கருதப்படும் நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. முந்தைய காங்கிரசு ஆட்சியின் 15-வது மக்களவையில் மொத்த மசோதாவில் 71% நிலைக்குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் மோடி பதவியேற்ற பிறகு நடைப்பெற்ற 16-வது மற்றும் 17-வது மக்களவையில் வெறுமனே 27% மற்றும் 16% மசோதாக்களே நிலைக்குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனால் துறை சார்ந்த நிலைக்குழு உறுப்பினர்கள் மசோதாவை பரிசிலிக்காமலே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையில் கடைசி நேரத்தில் கொடுக்கப்பட்டு அவசர அவசரமாக மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்யும் மசோதாவும், ஜம்மு & காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் கூட நிலைக்குழுக்களுக்கு அனுப்பப்படாமலே மோடி அரசு அமல்படுத்தியது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் குறித்து மக்களவை விவாதிக்கும் நேரமும் வெகுவாக குறைந்து வருகிறது. 2019 முதல் 2023-ஆம் ஆண்டு வரையில், சராசரியாக, பட்ஜெட்டில் சுமார் 80 சதவிகிதம் விவாதம் இன்றியே வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 2023-இல் முழு பட்ஜெட்டும் எந்த விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டது.

பல முக்கிய சட்ட மசோதாக்கள், நிதி மசோதாவின் வகையின் கீழ் வராதபோதிலும், அதன் மூலமே நிறைவேற்றப்படுகின்றன. நிதி மசோதாக்கள் என்பது நாடாளுமன்றத்தில்  வரிவிதிப்பு அல்லது அரசாங்கச் செலவீனம் தொடர்பாக கொண்டு வரப்படும் மசோதா ஆகும். ஆனால், இந்த வரையறைக்குச் சிறிதும் தொடர்பில்லாத பல மசோதாக்கள் மோடி அரசாங்கத்தின் கீழ் நிதி மசோதாக்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், பாஜக சிறுபான்மையாக உள்ள மாநிலங்களவையால் நிதி மசோதாக்களைத் திருத்த முடியாது. ஆதார் மசோதா இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மக்களவை சபாநாயகர் அதை ஒரு நிதி மசோதா என்று சான்றளித்தார், மேலும் இதன் மீது மாநிலங்களவையால் முன்மொழியப்பட்ட அனைத்துத் திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.

முடங்கிப் போகும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

மோடி அரசின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதோடு அவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படாமல் அவர்களின் ஒலி வாங்கிகள் (Mike) அணைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தேறுகின்றன.

2023-ஆம் ஆண்டில் நடைப்பெற்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு எதிராக போராடியதற்காக இரண்டு அவைகளிலும் சேர்த்து, இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே அதிகபட்சமாக 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

செப்டம்பர் 2015-இல் அப்போதைய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நாடாளுமன்றத்தில் பதாகைகளைக் காட்டியதற்காக 25 காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தார். ஜூலை 2017-இல் கும்பல் படுகொலை சம்பவங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பிக்கள் ஒத்திவைப்புத் தீர்மானம் கோரிய போது அதை மோடி அரசு நிராகரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 6 காங்கிரஸ் எம்.பி.க்கள் ஐந்து நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். மார்ச் 2020-இல், தில்லியில் நடந்த கலவரத்தை கண்டித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா இராஜினாமா செய்யவேண்டும் என போராடிய  மக்களவையை சார்ந்த 7 காங்கிரஸ் எம்.பி.க்கள், பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 2020-ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராகப் போராடிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல எதிர்க்கட்சிகள் கூட்டத் தொடர் முழுவதும் புறக்கணிக்க முடிவு செய்தனர். இதன் பிறகே பா.ஜ.க உறுப்பினர்களால் தொழிலாளர் சீர்திருத்த மசோதா உட்பட 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களை முடக்கி நாடாளுமன்றத்தில் மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றுவதை மோடி அரசு ஒரு யுக்தியாகவே செய்து வருகிறது.

மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கு சென்ற எதிர்க்கட்சிகளோ, மக்கள் விரோத மசோதக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதை தடுக்க முடியாமல் அக்கூடாரத்திற்கு வெளியே வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். “நாடாளுமன்ற ஜனநாயகம்” ஏற்கனவே பன்றித் தொழுவமாகி விட்டது. அதன் மீது பன்னீர் தெளித்து மணம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள். இந்திய நாடாளுமன்ற  ஜனநாயகமானது மிக உயரியது என்று கூறுவதை நாட்டு மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.  மேலும் நாடாளுமன்ற ஜனநாயகம் ஆளும் கட்சிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் பீற்றிக்கொள்ளும்படி இல்லை என்பதையே மேற்குறிப்பிட்டுள்ள கேலிக்கூத்துகள் நிருபித்து வருகின்றன. இதனை இந்திய மக்களும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

  • தாமிரபரணி

 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. நாடாளுமன்றம் பாசிச மன்றமாக மாறினாலும் கூட, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற சுகத்திலிருந்து போராட்ட களத்திற்கு வரவே மாட்டார்கள்.