முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில், கார்த்திகை தீபம் ஏற்றுவது ஒவ்வொரு வருடமும் நடந்தேறும் ஒன்று. இந்த நடவடிக்கையையொட்டி இந்து மதவெறி அமைப்பின் இராம.இரவிக்குமாரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து சனாதானவாதியான ஜி.ஆர் சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியது குறித்து செய்திகள் ஒரு புறமிருக்க, மறுபுறம் தீபம் ஏற்றும் வழக்கமான இடத்தை மாற்றிக் கோருவதற்கான உண்மையான உள்நோக்கத்தை ஊடுருவிப் பார்க்க வேண்டும். இல்லையேல், பாசிச ஆர்.எஸ்.எஸ்; பாஜக நச்சுக் கும்பல் நாடெங்கும் விதைத்த நஞ்சை தமிழ்நாட்டிலும் விதைப்பதற்கான ஆயுதம்தான் திருப்பரங்குன்ற தீபம் என்பதை உணர முடியாது. இவற்றை நீதிமன்றங்கள் மூலமே அரங்கேற்றி வருகின்றன என்பதையும் புரிந்து கொள்ள முடியாது.
கடந்த 100 ஆண்டுகளாக வழக்கமாகத் தீபம் ஏற்றி வரும் இடத்தை மாற்றி, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்கா என்கிற இஸ்லாமியர் வழிபாட்டுத் தலம் அருகில், ஏறக்குறைய 50 அடி தூரத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டுமெனக் கோருவது இஸ்லாமியர்களை வம்புக்கு இழுப்பதற்குத்தான் என்பது சொல்லாமலே விளங்கும். மேலும், இந்து – இஸ்லாமியர் கலவரத்திற்கு வழிவகுக்கும் என்பது முதிர்ச்சியடையாத துளிர்களுக்குக் கூட தெரியும். மெத்தப் படித்த மேதாவி சட்டத்தைக் கரைத்து குடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்குப் புரியாத ஒன்றா?
புரிந்துதான் காவிகளின் கைப்பாவையாக களத்தில் இறங்கி ஆய்வு என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, அப்பகுதி மக்களின் விருப்பத்தைக்கூட அறியாமல், வழக்கமான இடத்திலும் சங்கீகள் கோரிய தர்கா அருகிலும் தீபத்தை ஏற்றிக் கொள்ளலாமென எதார்த்தத்திற்குப் புறம்பாக, சட்டத்தை சங்கிகளுக்கு சாதமாக வளைத்துத் தீர்ப்பையும் வழங்கியுள்ளார் என்பது சந்தேகத்திற்கு இடமில்லை.
போலீசின் பாதுகாப்புடன் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், சங்கிகளுக்கு ஆதரவாக ‘நீதிமான்’ ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி அளித்த இடத்தில் தீபத்தை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது. இதை நீதிமன்ற அவமதிப்பாகச் சித்தரித்து, கோவில் நிர்வாகம் மீதும், போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இராம.இரவிக்குமார் தலைமையிலான சங்கிகள் வழக்கைத் தொடர்ந்தனர். இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதியான ஜி.ஆர்.சுவாமிநாதன் (கலவரத்திற்கான சூழலை அறிந்திருந்தும்) சங்கிகள் கோரிய இடத்தில் இராம.இரவிக்குமார் தலைமையில் 10 சங்கிகள் தீபத்தை ஏற்றலாமென ஏத்திவிட்டதோடு, அவர்களுக்குப் பாதுகாப்பாக அடியாள் படையான சி.ஆர்.பி.எப்.யும் முறைகேடாக உடன் அனுப்பி வைத்து தன்னுடைய கடமையை செவ்வனே செய்து முடித்தார்.
இனி என்ன, காவி காலிகளுக்குச் சொல்லவா வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பைக் காட்டி, நீதிமன்ற அனுமதித்த 10 பேருக்குப் பதிலாக, நூற்றுக்கும் மேற்பட்டவர்களைத் திரட்டிச் சென்று தர்கா அருகில் தீபத்தை ஏற்ற முயன்ற போது போலீசார் 144 தடை உத்தரவைக் காட்டி தடுத்தனர். இதன் விளைவு, போலீசாருக்கும், சங்கிகளுக்கும் மோதல் ஏற்பட்டதே நாடே அறியும். இது போன்ற சூழல் பாஜக ஆளும் அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலமாக இருந்திருந்தால் இந்நேரம் தர்கா இடித்துத் தள்ளப்பட்டிருக்கும். இஸ்லாமியர்களுடன் மோதலை உருவாக்கி, திருப்பரங்குன்றத்தைக் கலவர பூமியாக்கி இருப்பார்கள். இது இன்று இல்லையேல் நாளை நிச்சயம் நடந்தேறும். இதன் முன்னோட்டமாகத்தான், மக்களின் மத நம்பிக்கையில் மதவெறி நஞ்சை சிறுகச், சிறுக ஊட்டி சிந்தனை முழுவதையும் நஞ்சாகுவதற்கான நகர்த்தலே திருப்பரங்குன்ற நிகழ்வு. இதுபோன்ற, நிகழ்வுகளை சிறுகச், சிறுக அரங்கேற்றிதான் உத்திரபிரதேசத்தை காவிகளின் கொலைக்களமாக மாற்றியுள்ளனர்.
இவை தமிழ்நாட்டில் நடக்காமல் இருக்க வேண்டுமானால், மரத்திற்கு மரம் தாவும் குரங்குகளைப் போல, நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் தாவுவது தீர்வாகாது. மாறாக, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தங்கள் தொண்டர்களை வீடு வீடாக இறக்கிவிட்டு, இராம.இரவிக்குமார் தலைமையிலான சங்கிகள் நடத்திய அத்துமீறல்களை, அட்டூழியங்களை, அவர்களின் மதவெறி நோக்கத்தை அம்பலப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். திருப்பரங்குன்றம் முழுவதையும் வீதியில் இறக்கி விட்டிருக்க வேண்டும். அதை விடுத்து மீண்டும், மீண்டும் நீதிமன்றங்களின் காலில் விழுவதால் தீர்வு கிடைக்காது.
ஏனெனில், நீதியின் கடைசி புகலிடமான ஜனநாயகத் தூண்களில் ஒன்றான நீதிமன்றங்கள் அனைத்துமே இன்று பாசிச மயமாக்கப்பட்டு வருவதை நடைமுறை தீர்ப்புகள் நிரூபித்து வருகின்றன. சனாதன சித்தாந்தவாதியான ஜி.ஆர்.சுவாமிநாதன் போன்ற நீதிபதிகள் மட்டுமல்ல, ஜனநாயகவாதிகளாகச் சித்தரிக்கப்படும் நீதிபதிகளைக்கூட ஊழல் படுத்தி பிழைப்புவாதிகளாக உருமாற்றுவதும், பணிய மறுப்பவர்களை மிரட்டிப் பணிய வைப்பதும், இதே பாணியில் வழக்குரைஞர்களையும் உருமாற்றி ஒட்டுமொத்த நீதித்துறையையும் பாசிசமயமாக்கி வருவதை உணராமல், மீண்டும், மீண்டும் நீதித்துறையை நாடுவது என்பது மக்களுக்கான சவக்குழியை நாமே தோண்டிக் கொள்வதற்கு ஒப்பானது.
ஜனநாயகத்தின் மற்றொரு தூணான நாடாளுமன்றத்திலும் கூட திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான நிகழ்வைப் பேசுவதற்கு அனுமதி மறுத்ததோடு, திமுக எம்.பி.கள் அமளியில் ஈடுபட்டதாக விசமப் பிரச்சாரம் வேறு.
இனியும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை நம்பியிராமல், காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் உட்படப் பெருவாரியான மக்களை அணி திரட்டி ஒரு வீதிப் போரை நடத்துவதே ஒரு தீர்வாக அமையும்.
- மோகன்




