இந்திய அளவில் விமான சேவையில் ஆதிக்கம் செலுத்தி வந்த இண்டிகோ நிறுவனம், விமானிகள் பற்றாக்குறையை செயற்கையான நெருக்கடிக்கு உள்ளாக்கி 1000-க்கும் மேற்பட்ட விமானங்களின் இயக்கத்தை நிறுத்தி விட்டது. இதனால், விமானப் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதற்கு காரணம், விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அறிவித்த விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகளை (FDTL) இண்டிகோ அமல்படுத்த முன் வராததன் விளைவே. இந்த விதிகளை அமல்படுத்தாமல் அடம்பிடித்து வந்த இண்டிக்கோ-வின் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல், போகிற போக்கில் அதிருப்தியை மட்டும் தெரிவித்து விட்டு விமானிகளின் சோர்வைப் போக்கும் பணி சுமைக்குறைப்பு விதியை மட்டும் உடனடியாக இரத்து செய்து விதிவிலக்கான புதிய விதிக்கும் ஆப்பு வைத்து விட்டது.
ஆனால், விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்த விதியை (FDTL) நடைமுறைப்படுத்த 2 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தும் இறுதியாக இவ்வருடம் நவம்பர் 2-ஆம் தேதி எனக் காலக்கெடுவை அறிவித்தும் இண்டிகோ இணங்கவில்லை. இந்த வகையில், இயக்குநரக விதியை மீறிய, விமான பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இண்டிகோ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்கள் ‘எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை இலாபம்’ என்கிற வகையில் விமானக் கட்டணங்களை பல மடங்காக அதிகப்படுத்தி பயணிகளிடமிருந்து கொள்ளையடித்தன. இவர்கள் மீதும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுதான் பாசிச மோடி தலைமையிலான விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் வர்க்கப் பாசம்.
தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்பை சட்டமாக இயற்றிய இந்த காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பலே, அத்திபூத்தார் போல் அறிவித்த ஒரு அற்ப பணிச் சலுகையைக் கூட கார்ப்பரேட் இன்டிகோ நிர்வாகம் அமல்படுத்த தயாராக இல்லை. இதன் விளைவே, இந்த நெருக்கடி. அதாவது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சிஃப்ட் ரோஸ்டர் என்ற வகையில், ஒரு விமானி நாளொன்றுக்கு 18 மணி நேரம் பறக்க வேண்டும். வாரத்தில் 48 மணி நேரம் உழைக்க வேண்டும். இவைதான் பழைய விதிமுறையில் மிக முக்கியமானது. இதற்கு மாற்றாக, விமான போக்குவரத்து இயக்குநரகம் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் பறக்க வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் விடுப்புடன் 36 மணி நேரம்தான் உழைக்க வேண்டும் என்கிற புதிய விதிமுறையை உருவாக்கியது.
இந்தப் புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்தினால், இண்டிகோ நிறுவனம் விமானிகளின் எண்ணிக்கையை அதிகரித்தே ஆக வேண்டும். இந்நிறுவனம் ஏறக்குறைய 2200 விமானங்களை இயக்கி வருகிறது. ஒவ்வொரு விமானத்திற்கும் இரு விமானிகள் இருக்க வேண்டும். ஒருவர் கேப்டன் மற்றொருவர் முதல் அதிகாரியான உதவியாளர். புதிய விதிமுறையின்படி பார்த்தால், நிறுத்தப்பட்ட 1000 விமானங்களுக்குக் கூட 2000 விமானிகளை பணிக்கு அமர்த்த வேண்டும். மேலும், பழைய விதிமுறையின்படி 18 மணி நேரம் உழைக்கும் (பறக்கும்) ஒரு விமானி, புதிய விதிமுறையின்படி 8 மணி நேரம்தான் உழைப்பார். இதை 9 மணி நேரம் என்று வைத்துக் கொண்டால் கூட, இதுவரை 2200 விமானங்களை 4400 விமானிகளால் இயக்கி வந்த இண்டிக்கோ நிறுவனம் மேலும் 4400 விமானிகளை புதிதாக நியமிக்க வேண்டும்.
விமானங்களை இயக்கும் ஒரு ஆரம்ப நிலை விமானிக்கு ரூபாய் 1 இலட்சம் முதல் 3 இலட்சம் வரையும், அனுபவமுள்ளவர்களுக்கு 8 இலட்சம் முதல் 10 இலட்சம் வரையும் சம்பளம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு விமானிக்கு ரூபாய் 1 இலட்சம் என்றே வைத்துக் கொண்டால் கூட கூடுதலாக நியமிக்கப்படும் 4400 விமானிகளுக்கு ரூபாய் 44 கோடி ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டும். அனுபவம் வாய்ந்த விமானிகளின் எண்ணிக்கைக்கேற்ப வழங்கப்படும் சம்பளம் இன்னும் பல கோடிகளில் எகிறும்.
மேலும், வாரம் 48 மணி நேரத்தை 36 மணி நேரமாக குறைத்ததால், 12 மணி நேர உழைப்பின் பலன் இண்டிகோவிற்கு இழப்பு ஏற்படும். ஒரு மாதத்திற்கு பெரும்பான்மையாக 4 வாரம் என்கிற வகையில் 48 மணி நேரத்திற்கான உழைப்பு சுரண்டலின் மதிப்பு அதாவது, உபரியின் மதிப்பு (இலாபத்தின் மதிப்பு) குறையும். அதாவது நேரக் குறைப்பின்படி ஒவ்வொரு நபருக்கும் மாதம் 11000 ரூபாய் வரை இண்டிகோவுக்கு வரவேண்டிய வருவாய் குறையும். இதனடிப்படையில், 4400 பேருக்கு கணக்கிட்டால் 484 இலட்சம் வருகிறது. அதாவது 4.84 இலட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
இவ்வளவு பெருந்தொகையை ஒவ்வொரு மாதமும் இழக்க இன்டிகோ என்ன கேனையா? அதனால்தான், விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைத்து விமான பயணிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய விதிமுறைக்கு ஆப்படிக்க ஒரு நெருக்கடியை திட்டமிட்டே உருவாக்கியது. நெருக்கடி என்கிற ஆயுதத்தை பயன்படுத்தி விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் கையை முறுக்கி, அவர்கள் போட்ட புதிய விதியை அவர்கள் மூலமே நீக்கியும் விட்டது. இதன் மூலம், தன்னுடைய உழைப்புச் சுரண்டலுக்கு இருந்த தடையை தகர்த்து, விமானிகளின் அற்ப சலுகைகளையும் விழுங்கி செரித்துக்கொண்டது. இதுதான் கார்ப்பரேட்டுகளின் களவாணித்தனம், இதற்கான கைத்தடிகளே காவிகள்.
இந்த கள்ளக் கூட்டணிக்குதான் ஜனநாயகத் தூண்களில் ஒன்றான ஊடக – பத்திரிக்கை துறைகளும், கார்ப்பரேட்டுகளுக்கு கொத்தடிமைகளாக இருந்து செயல்படும் காவிகள் அரசு விமானிகளின் பணிச்சுமைக் குறைப்பு விதியை இரத்து செய்ததைக் கண்டிக்கத் துப்பில்லை. மாறாக, விமான போக்குவரத்துதுறை அமைச்சர் இராம் மோகன் நாயுடு என்கிற சங்கி, இண்டிகோ நிறுவனத்தின் சுரண்டலுக்கும், உபரிக்கும் (இலாபத்திற்கும்) உத்திரவாதத்தை நிரந்தரப்படுத்திக் கொடுத்த நடவடிக்கைக்கு பட்டுக்கம்பளம் விரிக்கின்றன.
உற்பத்தி உழைப்பாளர்களின், சேவைப் பணியாளர்களின் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் பறித்து நவீன கொத்தடிமையாக்கும் மறுகாலனியாக்கத் தீவிரத்திற்கேற்ப ஜனநாயகத் தூண்களையும் பாசிசமயமாக்கி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்காமல் விடிவு இல்லை.
- மோகன்




