சென்னை மாநகரத்தின் இரண்டு மண்டலங்களில் துப்புறவுப் பணியைத் தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்தும், தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை, நடிகர் விஜயின் தவெக கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுணா, சமீபத்தில் நேரில் சந்தித்துப் பேசி அவர்களது போராட்டத்திற்குத் தமது ஆதரவைத் தெரிவித்தார். அதன்பிறகு தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்த போது, துப்புறவுப் பணியை தனியாருக்குக் கொடுக்கும் திமுக அரசை விமர்சித்துப் பேசினார். அதன் உட்கிடையாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் கூறினார்.
எடப்படி பழனிச்சாமியும், துப்புறவுப் பணியாளர்களுக்கு ஆதரவாகவும், திமுக அரசிற்கு எதிராகவும் பேசி வருகிறார். இதே எடப்பாடி பழனிச்சானி தான் முதலமைச்சராக இருந்த பொழுது பணிநிரந்தரம் கோரிய செவிலியர் போராட்டம் உட்பட எந்தவொரு கோரிக்கையையும் தீர்க்கவில்லை. ஆனால் இன்று அவர் திமுக அரசின் தனியார்மயத்தை விமர்சித்து பேசி வருகிறது.
இதேபோன்றுதான் திமுகவும் எதிர்கட்சியாக இருந்த பொழுது, செவிலியர் போராட்டத்தை ஆதரித்தது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவரையும் நிரந்தர வேலையில் அமர்த்துவோம் எனப் பேசியது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, பெயருக்கு சொற்பமானவர்களுக்கு மட்டும் நிரந்தர வேலை கொடுத்து விட்டு மற்றவர்களைத் தெருவில் நிறுத்தியது.
எதிர்கட்சியாக இருக்கும் பொழுது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம், அதைச் செய்வோம் என்று மக்களை நம்பவைத்து தேர்தலில் வெற்றி பெறுவது என்பது ஆட்சியாளர்களுக்கு வழமையான ஒன்றாக இருக்கிறது. அதேபோல் ஆட்சியதிகாரத்திற்கு வந்தபிறகு கண்துடைப்புக்காக சிலவற்றை செய்வதும், பின்னர் அத்துடன் விட்டுவிடுவதும் நடைபெறுகிறது. ஒருவேளை எதிர்ப்பு வந்தால், எதிர்ப்பும் கூட அந்த தொழிலாளர்கள் விடாப்பிடியாக போராட்டம் செய்தால், அந்தப் போராட்டத்தை மழுங்கடிக்கும் விதமாக படிப்படியாக வேலையில் சேர்போம் என்ற வாக்குறுதியை கொடுப்பதும் ஆட்சியாளர்களுக்கு வழமையான ஒன்றாக இருக்கிறது.
இவ்வாறு வழமையாக நடைபெறுவதற்கு காரணம் என்ன என்ற உண்மை தெரியும் பொழுதுதான் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும், இன்னும் வீரியமாக போராட்டத்தை எடுத்துச்செல்லவும் முடியும். அவ்வாறின்றி திமுக நினைத்தால் செய்துவிடலாம், அதிமுக நினைத்தால் செய்துவிடலாம், இவர்கள் இருவரும் தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள் எனவே தவெக விஜய் புதிதாக வந்திருக்கிறார் அவருக்கு வாக்களித்தால் நிச்சயம் இதனை செய்துகொடுப்பார் என்று நம்புவது மண் குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு ஒப்பானதாகும்.
இவர்கள் யாராலும் நிரந்தரப் பணி வழங்கமுடியாது. ஏனென்றால் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையை ஒன்றிய, மாநில அரசுகள் அமல்படுத்தியாக வேண்டும். அமல்படுத்தினால் மட்டுமே வெளிநாட்டில் இருந்து அவர்களால் கடன் வாங்க முடியும். அப்படி வாங்கித்தான் மெட்ரோ இரயில் திட்டம் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அப்படி கடன் கொடுக்கும் வெளிநாட்டு நிதிமூலதனக் கும்பலுக்கு, ஒப்பந்தம் என்ற பெயரில் எவையெல்லாம் இலாபம் கொழிக்கும் தொழிலோ, அவையெல்லாவற்றையும் தாரைவார்க்க வேண்டும். புரியும்படி கூறினால் வட்டிக்கடைக்காரன் பணத்தை கொடுத்துவிட்டு நம் ஊரில் என்னென்ன அநியாயங்களை எல்லாம் செய்வானோ அதற்கு கொஞ்சமும் குறையால், இன்னும் சொல்லப்போனால் சற்று அதிகமாகவே நம்மிடம் இருந்து பிடுங்கி கொள்வான். இந்த நிபந்தனைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டுதான் ஒன்றிய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த உண்மையை மறைத்து அனைவருக்கும் நிரந்தர வேலை கொடுப்பதாக வாக்குறுதி கொடுப்பது, எதிர்கட்சியாக இருக்கும்பொழுது போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது, புதிய கட்சியான தவெக தாங்கள் வந்தால் இதனை செய்துகொடுப்போம் எனக்கூறுவது இவையனைத்தும் மக்களின் வாயை அடைப்பதற்கு தானே தவிர இவர்களால் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது என்பதுதான் நிதர்சனம். மேலும் கடன் கொடுத்தவனுக்கு விசுவாசமாக நடந்துகொள்வதற்காக மக்களின் நியாயமான போராட்டங்களை கூட போலீசைக் கொண்டு அடித்து ஒடுக்கும்.
இந்த உண்மையை மக்களாகிய நாம் உணரும்பொழுதுதான், மறுகாலனியாக்கக் கொள்கையை எதிர்த்துத் போராட முடியும். மாறாக திமுக, அதிமுக, தவெக, நாதக நிரந்தர வேலைவாய்ப்பை கொடுப்பார்கள் என நம்பிக்கொண்டு இவர்களுக்கு மாறிமாறி வாக்களிப்பதினால் இறுதியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும், எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
ஒன்றியத்தில் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கூறினார். ஆனால் நடந்தது என்ன? விவசாயத்தில் தனியாரை அனுமதிப்பதற்கான மசோதவை நிறைவேற்றுவதற்கு எத்தனித்தார்கள். அதனை எதிர்த்து மிக தீர்க்கமாக விவசாயிகள் போராடினார்கள். விளைவு அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் போனது.
இது ஒரு உண்மை மட்டுமல்ல, கசப்பான அனுபவமும் கூட. வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் எனக் கூறிய அரசு, ஆண்டுக்கணக்கில் போராடிய விவசாயிகளை கண்டுகொள்ளவே இல்லை. அவர்களை தில்லிக்கு வரவிடாமல் பாதியிலேயே தடுத்து நிறுத்தியது. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என ஒருபுறம் கூறிக்கொண்டே, மறுபுறம் அவர்களின் எலும்புகளை உடைப்பது எவ்வளவு பெரிய அநீதி என்பதை சொல்லித்தெரியவேண்டியது இல்லை.
1992-இல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபொழுது, பிரதமர் பி.வி நரசிம்ம ராவ் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் கொள்கையை நடைமுறைப்படுத்தினார். இது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மணிக்கு 30 தடவை காங்கிரஸ் கட்சியினால்தான் இந்தியா இன்னும் வளர்ச்சியடையவில்லை என பாஜக கூறிவந்தாலும், காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வந்த தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் கொள்கைதான் காரணம் என்று ஒருபொழுதும் கூறியதில்லை. ஒன்றியத்தில் மட்டுமல்ல, மாநிலத்தை ஆளும் எந்த கட்சியும் இதுவரை இந்தக் கொள்கை தவறானது, மக்களுக்குத் தீங்கிழைப்பது என்று ஒருபொழுதும் கூறியதில்லை.
எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களுக்கு தீங்கிழைக்கக்கூடிய தனியார்மயத்தை ஆதரித்துதான் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த உண்மை மக்களாகிய நமக்கு தெரிகிறதோ இல்லையோ! ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்த உண்மையை மக்களாகிய நாமும் தெரிந்துகொள்ளும் பொழுதுதான், ஆட்சி அதிகாரத்தை சுவைப்பதற்காக எத்தனை வேடமிட்டு வந்தாலும் அதனை எதிர்த்து உறுதியாகப் போராடமுடியும். எனவே தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் கொள்கைகளை ஆதரிக்கும் அனைத்து ஓட்டுக்கட்சிகளையும் புறக்கணிப்போம் நாடு மீண்டும் காலனியாக்கப்படுவதற்கு எதிராக கலத்தில் இறங்கிப் போராடுவோம். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளையும் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு போராடுவதைத் தவிர எந்த குறுக்கு வழியும் இல்லை.
- மகேஷ்





தனியார்மய கொள்கையை எந்த ஓட்டுக்கட்சியும் எதிர்க்காது. சாதி, மதம் மொழி என பிரித்து தனியார்மயத்தை ஆதரிப்பார்கள்.