குடியுரிமையைப் பறிக்கவே SIR!
தமிழகமே, ஒத்துழைக்காதே!

தமிழகம் தழுவிய பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் & யூ.பி.களில் எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision – SIR) அமலாக்கப்பட்டுள்ளது. எங்கே விண்ணப்பம் பெறுவது; எப்படிப் பூர்த்தி செய்வது; என்னென்ன ஆவணங்களை இணைப்பது; அவற்றை எங்கே பெறுவது – என மக்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்களுமே குழம்பிப் போய் ஆத்திரத்திலும் வெறுப்பிலும் உள்ளனர். பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட பிறகு எப்படி நாடே குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டதோ, அப்படித்தான் இன்றும் குழப்பமும் அச்சமும் மக்களைச் சூழ்ந்துள்ளது.

“கறுப்புப் பணத்தை ஒழிக்கவே பணமதிப்பழிப்பு” என்றது, மோடி அரசு. அதேபோல, “போலியான வாக்காளரை நீக்கி நேர்மையான பட்டியலை உருவாக்கவே” எஸ்.ஐ.ஆர் என்கிறது, தேர்தல் ஆணையம். மோடி கும்பலின் உண்மையான நோக்கம் கறுப்புப் பணத்தை ஒழிப்பதல்ல, மக்களின் சேமிப்பைத் திருடி கார்ப்பரேட்டுகளுக்குக் கடனாக வழங்குவதே என்று பின்னர் நிரூபணமானது! அதேபோல, எஸ்.ஐ.ஆர்.க்குப் பின்னும் ஒரு படுபயங்கரமான சதித்திட்டம் ஒளிந்துள்ளது!

இப்போது அமலாவது எஸ்.ஐ.ஆரே அல்ல

ஆம்! இதுவரை நாட்டில் 10 முறைக்கு மேல் எஸ்.ஐ.ஆர். நடத்தப்பட்டுள்ளது. அவற்றைத் தற்போதைய எஸ்.ஐ.ஆர் உடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இவ்வுண்மை தெளிவாகும்.

2003-இல் நடந்த எஸ்.ஐ.ஆர்.இன் வழிகாட்டு நெறிமுறை பாரா 32 “ஒருவரின் குடியுரிமையைச் சோதிப்பது தேர்தல் அதிகாரியின் வேலை அல்ல” என்று தெளிவாகக் கூறுகிறது; வாக்காளர் பட்டியலை வைத்து அதிகாரிகள் வீடுவீடாக பரிசோதித்தனர்; அவ்வளவுதான்! தற்போதைய எஸ்.ஐ.ஆரோ வாக்காளர் மட்டுமல்ல, அவரின் பெற்றோரின் குடியுரிமையையும் நிரூபிக்க வேண்டுமென்கிறது. வாக்காளர் அட்டை போன்றவை செல்லாது பிறப்புச் சான்றிதழ் வேண்டுமென்கிறது. முந்தைய எஸ்.ஐ.ஆர்.க்கு காலவரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை; மொத்த நடைமுறையும் முடிவடைய 6 மாதங்களுக்கு மேல் ஆனது. அதுவும் தேர்தல் நடைபெற இருந்த மாநிலங்களில் அமலாக்கப்படவில்லை. அதற்கு நேரெதிராக, இந்த எஸ்.ஐ.ஆரோ 3 மாதங்களில் மொத்த நடைமுறையையும் முடிக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களைக் குறிவைத்து அவசரகதியில் நடத்தப்படுகிறது. முந்தைய எஸ்.ஐ.ஆர்.இல் வாக்காளரைச் சேர்க்கும் பொறுப்பு தேர்தல் அதிகாரியுடையது! இந்த எஸ்.ஐ.ஆர்.இலோ வாக்குரிமையையும் குடியுரிமையையும் நிரூபிக்கும் பொறுப்பு மக்களுடையது!

மொத்தத்தில், 2003 எஸ்.ஐ.ஆர்.இன் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு நேரெதிராக இந்த எஸ்.ஐ.ஆர். நடத்தப்படுகிறது. எனவே, இது எஸ்.ஐ.ஆர். அல்லவே அல்ல! எனில், வேறென்ன?

எஸ்.ஐ.ஆர். முகமூடியில் என்.ஆர்.சி!

இசுலாமியர்கள் மட்டுமல்ல, தனியார்மயக் கொள்ளைக்கு எதிராகவும் காவி பாசிசத்திற்கு எதிராகவும் பேசும், போராடும் எவரும் இந்த நாட்டின் குடிமக்களே அல்ல, “தேசவிரோதிகள்”; அவர்களின் குடியுரிமையைப் பறித்து அகதிமுகாமில் அடைக்க வேண்டும், பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும், நாடு கடத்த வேண்டும் என்று ஹிட்லரின் வழியில் காவி பாசிசக் கும்பல் நெடுங்காலமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நோக்கத்தை நிறைவேற்ற, நாடெங்கும் வீடுவீடாகச் சென்று ‘தேசிய குடிமக்கள் பதிவேட்டை’ (NRC) எடுக்க வேண்டுமென்றும் மக்களுக்கு ‘தேசிய அடையாள அட்டை’ வழங்க வேண்டுமென்றும் 2003-இல் வாஜ்பாயி தலைமையிலான பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம்’ (CAA) பிரிவு14-A கூறியது. காவி கும்பலின் கனவான இத்திட்டத்தை, 2019-இல் அசுரபலத்தோடு ஆட்சியமைத்த பின்னர் நடைமுறைப்படுத்த முயன்றது, மோடி அரசு. எனினும், எதிர்ப்புகள், போராட்டங்களால் தற்காலிகமாக நிறுத்திவைத்தது. இப்போது அதையேதான் எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில், குறுக்குவழியில் நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஜூன் 24, 2025 அன்று ஆணையம் நாடு தழுவிய எஸ்.ஐ.ஆர்.க்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில் யார்யார் என்னென்ன ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று கூறியது; இவ்வறிப்பானது முற்றிலும் சி.ஏ.ஏ. சட்டப்பிரிவு 14A-வையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒருவரின் குடியுரிமையைச் சரிபார்க்க தேர்தல் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை; ஆனால், தனது அறிவிப்பாணையில் வாக்குரிமை வழங்க ஒருவரது “குடியுரிமை சரிபார்க்கப்படும்” என்று சட்ட விரோதமாகக் கூறியுள்ளதும் இதே நோக்கத்திற்குதான். மேலும், நாடு முழுதும் அமலாகும் எஸ்.ஐ.ஆர். அசாமில் அமலாகவில்லை! ஏன்? ஏற்கனவே அங்கு என்.ஆர்.சி. அமலாகி 20 இலட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கே எஸ்.ஐ.ஆர் தேவைப்படவில்லை! ஆக, எப்படிப் பார்த்தாலும் தேர்தல் ஆணையம் மேற்கொள்வது வாக்காளர் சரிபார்ப்பல்ல! குடியுரிமை சரிபார்ப்பே! எஸ்.ஐ.ஆர். அல்ல! என்.ஆர்.சி.யே!

என்.ஆர்.சி. அமலானால்..

எஸ்.ஐ.ஆரோ என்.ஆர்.சியோ எது நடந்தால் நமக்கென்ன என்று கேட்கலாம்.

இசுலாமியர்கள் மட்டுமல்ல, உழைக்கும் மக்களாகிய நாம் நாளை நமது அடிப்படைத் தேவைகள், கோரிக்கைகளுக்காகப் போராடினாலோ, பேசினாலோ, மோடி கும்பலை எதிர்த்து மூச்சுவிட்டால் கூட நமது குடியுரிமை பறிக்கப்படும்! அதுதான் என்.ஆர்.சி.யின். நோக்கம்!  

பீகாரில் தொகுதி, வாக்குச்சாவடி வாரியாக இசுலாமியர்கள், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களைக் குறிவைத்தே 50 இலட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இவர்களில் எத்தனை பேர் “அந்நியக் குடியேறிகள்” என்று கேள்வியெழுப்பினால், அதற்கான பதிலையும் தர மறுக்கிறது. இவ்வாறு நாடெங்கும் அமலாகும் எஸ்.ஐ.ஆர்.இன் மூலம் பெயரை நீக்கியவர்களின் பட்டியலை உள்துறை அமைச்சகத்துக்கு ஆணையம் வழங்கும். பின்னர், மோடி அரசு நினைக்கும் யாரையும் குடியுரிமைப் பறிப்புச் செய்யும்; நாடு கடத்தும்; தடுப்பு முகாமில் அடைக்கும்! இதற்காகவே மோடி அரசு நாடெங்கும் தடுப்பு முகாம்களைக் கட்டி வருகிறது!

இவை மிகையானவை, இப்படியெல்லாம் நடக்காது என்று நினைக்கிறீர்களா? சில மாதங்களுக்கு முன், பெண்கள், குழந்தைகள், முதியோர், புற்று நோய் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட 40 ரோகிங்கிய அகதிகளை விசாரணையென அழைத்துச் சென்று, ஆழ்கடலில் மிதக்கவிட்டு வந்துள்ளது, மோடி அரசு. அகதிகள் மட்டுமல்ல, மே.வங்க மாநிலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி உட்பட சொந்த நாட்டு அப்பாவி இசுலாமியர்கள் 6 பேரை, விசாரணையென அழைத்துச் சென்று வங்கதேச எல்லையில் விட்டுள்ளது. இரக்கத்திற்கும் பாசிசத்திற்கும் எள்முனையளவும் தொடர்பில்லை! இன்று அகதிகளுக்கும் இசுலாமியர்களுக்கும் என்ன கதியோ, அதேகதிதான் நாளை மோடி அரசை எதிர்த்துப் பேசும், போராடும் இந்துக்களுக்கும்!

எஸ்.ஐ.ஆர். படிவங்களைக் கிழித்தெறிவோம்

இச்சதித் திட்டத்திற்குத்தான் மக்களும் அரசு அலுவலர்களும் நாடெங்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர். பணிச்சுமை தாளாமல் அரசு அலுவலர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்திய மக்களின் மீது இத்தகையதொரு கூர்வாள் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், எதிர்க் கட்சிகளோ இது எஸ்.ஐ.ஆர். அல்ல என்.ஆர்.சி என்பதை முதன்மைப்படுத்தி எதிர்க்காமல், இதன் நிர்வாகக் குளறுபடிகள், ஓட்டுத் திருட்டையே பிரதானமாகப் பேசுகின்றனர்!

இந்திய நாட்டை வியர்வையாலும் இரத்தத்தாலும் உருவாக்கியது நாம்; இந்நாட்டின் ஒவ்வொரு கட்டுமானங்களிலும் நமது மூதாதையரின் உதிரமும் உழைப்பும் கலந்திருக்கிறது; கடந்த காலத்தில் பிரிட்டிஷூக்கும் இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அடிமைச் சேவகம் செய்து வரும் காவி பாசிச கும்பலுக்கு, நம் குடியுரிமையைச் சோதிக்க என்ன அருகதை உள்ளது! நம்மிடம் ஆவணங்களைக் கேட்க இவர்கள் யார்?!

மோடி கும்பலும் தேர்தல் ஆணையமும் கேட்கும் ஆவணங்களைத் தர மாட்டோம் என முழங்குவோம்! எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை முற்றாகப் புறக்கணிப்போம்! எஸ்.ஐ.ஆர். படிவங்களைக் கிழித்தெறிவோம்!

*********

  • SIR முகமூடியில் வரும் NRC-யைப் புறக்கணிப்போம்!
  • காவி பாசிசக் கும்பலின் கைப்பாவையான
    தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடப் போராடுவோம்!
  • வழக்கமான SIR-க்கு மட்டுமே ஒத்துழைப்பு
    என முழங்குவோம்!

புரட்சிகர மக்கள் அதிகாரம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன