இந்திய தொழிலாளர்களில் பெரும் பகுதி (45 கோடி) அமைப்பு சாரா தொழிலாளர்களே. இவர்களுக்கென்று தொழில் பாதுகாப்போ, நியாயமான ஊதியமோ அல்லது தொழிலாளர் உரிமைகளோ எதுவும் கிடையாது. மோடி அமைச்சரவையின் கையாளாகதத்தனத்தினால் கொரானா காலத்தில் கோடிக்கணக்கான அமைப்புசாராத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சொல்லனா துயரத்திற்கு ஆளாகினர்.
புலம்பெயர் தொழிலாளர்கள், ரயில் டிக்கெட்டுக்கு பணமில்லாமல் பல நூறு கிலோமீட்டர் நடந்தே சொந்த கிராமங்களுக்கு சென்றனர். நூற்றுக்கணக்கானோர் பயணத்தின் வழியிலேயே விபத்தில் இறந்து போயினர். உணவு கிடைக்காமல் குழந்தைகளும் பெரியவர்களும் மாண்டனர். தேவையை விட மூன்று மடங்கு அதிகமாக உணவு தானியங்கள் கையிறுப்பு இருந்தும் மோடி-அமித்ஷா கும்பலோ ஏழை எளிய குடும்பத்திற்கு தேவையான உணவு-தானியங்களை வழங்க முன்வரவில்லை. தொழில்கள் முடக்கப்பட்டதால் குடும்பங்கள் தங்களது சேமிப்பையும் தங்கத்தையும் கொண்டு அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டியதானது. பணத்தேவைக்கு, வங்கிகள் மற்றும் உள்ளூர் கந்துவட்டிகாரனின் வலையில் மக்கள் மாட்டிக்கொள்ள வேண்டியதாகியது. முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இலட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் இறந்தும் போயினர்.
இலவச உணவு தானியங்களோடு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்போது பலராலும் முன்வைக்கப்பட்டது. எழுபது சதவிகித மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திருந்த போதும் மோடி-அமித்ஷா கும்பலுக்கு மக்களின் துன்பத்தினைப் போக்கவேண்டும் என்று சிந்திக்கவில்லை. மாறாக முதலாளிகளின் நட்டத்தைக் குறைக்க பல இலட்சம் கோடி (10.3 லட்சம் கோடி) மதிப்பிலானத் திட்டங்களை நிதி அமைச்சர் அறிவித்தார்.
மோடியின் நிர்வாகத் திறமையின் காரணமாக கொரானா பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டெழுந்து விட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் இன்றுவரை எழுதிவருகின்றன. மோடியோ, தனது ஆட்சியின் கீழ் இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக (4 டிரிலியன் டாலர்) உயர்ந்துள்ளதாக போகும் இடமெல்லாம் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் எதார்த்தத்தில் உழைக்கும் மக்களின் வாழ்நிலையில் இன்றுவரை பெரிய மாற்றம் வரவில்லை. அதற்கு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களே சாட்சி.
2019 லிருந்து 2023 வரை, ஐந்து வருடங்களில், தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை அளவு 32,563 லிருந்து 47,170 ஆக, ஏறத்தாழ 45 சதவிகிதம், உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரானாவிற்கு பிறகு தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலையின் விகிதம் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறுகிறது. கொரானாவிற்கு பிறகு விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையை விட தினக்கூலித் தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்தும் வருவதாகவும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம்.
இந்தியா பொருளாதாரம் சிறப்பாக உள்ளதென்றால், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏழ்மையினால் ஏன் தற்கொலை செய்து கொள்ளவேண்டும்?
ஒருபுறம் கொரானாவிற்கு பிறகான மோடியின் பொருளாதாரத் திட்டங்கள் அப்பட்டமாக முதலாளிகளுக்காகவே இருந்து வருகிறது. இதனால் பல லட்சம் கோடிகளை இலாபமாக முதலாளிகள் குவித்துள்ளனர்.
மறுபுறத்தில் மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கூட மக்களிடம் காசு இல்லை என்று மோடியின் பொருளாதார ஆலோசகரே ஒப்புக்கொள்கிறார். வேலையின்மை அதிகரிப்பு, உண்மை ஊதியம் தேங்கமடைந்திருப்பது, கடன் நெருக்கடி ஆகியவையே மக்களின் வாங்கும் சக்தி குறைந்ததிற்கு பிரதானக் காரணம் என்கிறார் பொருளாதார ஆய்வாளர் பிரனாப் சென். கூடவே, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சமூகநலத் திட்டங்களுக்கான [நுறு நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியளவைக் குறைத்தது நிதி கூட சமீபகாலங்களில் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்துள்ளது. இவையே தொழிலாளர்களை தற்கொலையை நோக்கி தள்ளியுள்ளன.
அத்தியாவசியப் பொருள்களின் விற்பனை குறைந்த அதே காலகட்டத்தில்தான் அப்பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் இலாபம் பலமடங்கு உயர்ந்துள்ளதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன. மோடி, மக்களின் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு வாரிகொடுக்காமல் இது எப்படி சாத்தியமாக முடியும்.
அந்திய முதலீடு அதிகமாக வருகிறது, பங்குச்சந்தை குறியீட்டு எண் உயர்கிறது, புதிய பில்லியனர்கள் அதிகரிக்கின்றனர், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதிகரிக்கிறது போன்ற விவரங்களை காட்டி பொற்கால ஆட்சி நடப்பதாக மக்களை நம்பச்சொல்கிறார் மோடியும் முதலாளித்துவ அறிவுஜீவிகளும். உண்மையில் இக்குறியீடுகள் முதலாளிகளின் வளர்ச்சியையே குறிக்கின்றன. முதலாளி வர்க்கத்தின் இந்த வளர்ச்சியின் காரணமாக விவசாயிகளும் தினக்கூலித் தொழிலாளர்களும் தற்கொலையை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.
- செல்வம்