அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டங்களில் ஒன்றான ‘கிரேட் நிக்கோபார் தீவில்’ (Great Nicobar Island) சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ’கிரேட் நிகோபார் தீவுகளின் முழுமையான வளர்ச்சி’ எனும் பெருந்திட்டத்தை செயல்படுத்த மோடி அரசு தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.
இத்திட்டத்தை நான்கு இணைத் திட்டங்களாக மோடி அரசு செயல்படுத்தப்போகிறது. முதலாவதாக கிரேட் நிக்கோபாரின் கலாதியா விரிகுடாவில் சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் அமையவிருக்கிறது. இம்முனையம் ஆண்டுதோறும் சுமார் 1.42 கோடி கொள்கலன்களை (20 அடி கொள்கலன்கள்) கையாளும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக சர்வதேச சரக்கு மற்றும் பயணிகள் விமான நிலையம், மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் குடியேற்ற சுமார் 16,610 ஹெக்டரில் ஒரு புதிய நகரம் மற்றும் 450 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின் நிலையம் என நான்கு இணை திட்டங்களை அமைக்கப்போவதாக மோடி அரசு கூறிவருகிறது.
இந்தியாவின் நிக்கோபார் தீவு, கடல் வணிகம் நடக்கும் பாதையில் புவியியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஏனென்றால், மியான்மர், சிங்கப்பூர் தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு மிக குறுகிய தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவிலிருந்து சுமார் 1200 கி.மீ தொலைவில் உள்ள நிக்கோபார் தீவின் கலாதியா விரிகுடா, மலாக்கா நீரிணையிலிருந்து (ஜலசந்தி) வெறும் 40 கி.மீ தொலைவில் தான் இருக்கிறது.
இந்த மலாக்கா நீரிணையின் வழியாகத் தான் உலகின் மூன்றில் ஒரு பங்கு கடல் வணிகப் போக்குவரத்து நடைப்பெற்று வருகிறது. மேற்கு பசிபிக் பெருங்கடலுக்கும், இந்தியப் பெருங்கடலுக்கும் இடையில் ஒரு முக்கிய இணைப்பாகவும் உள்ளது. இந்நீரிணை இந்தியப் பெருங்கடலில் இருந்து சிங்கப்பூர் ஜலசந்தி வழியாக தென்சீனக் கடல் வரை நீண்டுள்ளது. இந்நீரிணையில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10 கப்பல்கள் சரக்குகளை சுமந்து கொண்டு உள்ளும், புறமும் செல்கின்றன. ஆண்டுக்கு 3.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலுள்ள சரக்குகள் இதன் வழியாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது. இம்மதிப்பு உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காகும்.
மேற்குலக நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கு மலாக்கா நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக, மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் எண்ணெய் (83%) இந்நீரிணை வழியாகக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
மலாக்கா நீரிணையை மட்டும் சார்ந்திருப்பது தனக்கு எதிர்காலத்தில் ஆபத்தை உருவாக்கலாம் என சீனா கருதுவதால், தரை வழியேயும் எண்ணெயை கொண்டு செல்லும் திட்டத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவின் எரிசக்தி பயன்பாடு ஆண்டு தோறும் அதிகரித்த வண்ணம் இருப்பதால் தரை வழிப்பாதை வழியாக கொண்டு செல்லப்படும் எண்ணெயின் அளவு மிகவும் குறைவானதாகும். இதனால் சீனா தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய மலாக்கா நீரிணையைத் தான் அதிகளவு சார்ந்திருக்கிறது.
சீனா மட்டுமில்லாமல் குவாட் கூட்டணியின் உறுப்பினரான ஜப்பானும் மலாக்கா நீரிணையின் வழியாகவே தனக்கு தேவையான ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகள் மற்றும் எண்ணெய் தேவைகளை கையாண்டு வருகிறது.
மலாக்கா நீரிணை மிக குறுகியதாகவும் ஆழம் குறைவாகவும் இருப்பதால் இதன் வழியாக பெரிய கப்பல் மூலம் சரக்குகளை கொண்டு செல்ல முடியாது. இதனால் மலாக்காவிற்குள் பெரிய கப்பல்கள் நுழைய முடியாது. மேற்குலக மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பெரிய கப்பல்களில் சென்று வரும் சரக்குகள் கொழும்பு அல்லது சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு சிறிய கப்பல்களுக்கு மாற்றப்பட்டு அதன் பிறகே மலாக்கா நீரிணை வாயிலாக கொண்டு செல்ல முடியும் என்ற நிலையுள்ளது. இந்தியாவும் இதன் காரணமாக சிங்கப்பூர் மற்றும் கொழும்பு துறைமுகங்களை பயன்படுத்தி வருகிறது. கடல்சார் வணிகத்தில் கேந்திர முக்கியத்துவமான இடத்தில் அமைந்திருக்கும் நிக்கோபார் தீவின் கலாதியா விரிகுடாவில் துறைமுகம் அமைந்தால் அதில் சரக்கு கப்பல்களின் பரிமாற்றம், எரிபொருள் நிரப்புதல், பழுது பார்த்தல், கப்பல் உடைக்கும் தளம் போன்ற வசதிகளுக்கான திட்டம் என இந்திய அரசு பசப்பி வருகிறது.
உண்மையில் சீனாவின் எண்ணெய் வர்த்தகம் பெருமளவு மலாக்கா நீரிணை வழியாக நடந்து கொண்டிருக்கிறது என்பதால் அதன் மேலாதிக்கத்தில் இந்தக் கடல்வழி சிக்கிவிடக்கூடாது என்பதில் அமெரிக்காவும் ஜப்பானும் குறியாக இருக்கின்றன. அமெரிக்க மேலாதிக்க நலனுக்கு பாதகமாக எந்த நாடும் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக உலகம் முழுவதும் உள்ள கடல் வணிகப் பாதைகளை கட்டுப்படுத்துவது என்பதை அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது போர்த்தந்திர நடவடிக்கைகளில் ஒன்றாக செயல்படுத்தி வருகிறது. இதற்காக இந்தோ – பசிபிக் கடற்பகுதியில் சீனாவை சுற்றிவளைத்து ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு குவாட் கூட்டணி நாடுகள் மூலம் காய் நகர்த்தி வருகிறது.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இராணுவமயமாக்கும் நோக்கில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட திட்டம் நான்கு முனை பாதுகாப்புப் பேச்சுவார்த்தை (Quadrilateral Security Dialogue). இது சுருக்கமாக, ‘‘குவாட்’’ (Quad) என்றழைக்கப்படுகிறது
குவாட் கூட்டணி நாடுகள், இந்தோ பசிபிக் கடலில் 2022-ஆம் ஆண்டு முதல் கடல் சார் விழிப்புணர்வுக்கான கூட்டாண்மையை ஆரம்பித்து அதன் (IPMDA) மூலம் செயற்கைக்கோள் தரவுகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றை தமக்குள் பகிர்ந்து கொள்கின்றன. 2025-ஆம் ஆண்டு முதல் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் கடல் சார் பயிற்சியை தொடங்க இருக்கின்றன. இதன்படி கடல் சார் பாதுகாப்புக் கருவிகள் பரிமாற்றம், கடலில் சட்டவிரோத நுழைவை தடுப்பது போன்றவற்றை செய்ய முடியும்.
மேலும் Quad-at-Sea Ship Observer Mission in 2025-இன் படி இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடலோர காவல் படைகள் கூட்டிணைந்து இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் செயல்பட முடுவெடுத்துள்ளன.
குவாட் முதலீட்டு அமைப்பு (Quad investors network) என்பதன் மூலம் குவாட் நாடுகளின் கார்ப்பரேட் முதலாளிகளின் மூலதனம் அந்நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப்படுகின்றன.
கடந்த ஜூன் மாதம் கப்பல் மற்றும் துறைமுக அமைச்சர் சர்பானந்தா சோனாவல் முன்னிலையில் இந்தியாவும், ஜப்பானும் கடல் சார் உறவுகளை மேம்படுத்துதல் என்ற பெயரில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை ஸ்மார்ட் தீவாக மாற்றுதல். ஜப்பானின் துறைமுகங்களில் முதலீடு, இந்திய துறைமுகத்தை டிஜிட்டல் மயமாக்குதல் என பல ஒப்பந்தங்கள் போடப்பட்டது. ஜப்பானை சார்ந்த கப்பல் கட்டுதல் மற்றும் பழுது பார்க்கும் NYK, MOL, K லைன் போன்ற பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தொழில் துவங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் ஜப்பானின் கார்ப்பரேட் முதலாளிகள், கிரேட் நிக்கோபார் திட்டத்தின் ஒரு பகுதியாக நிக்கோபார் தீவுகளில் எரிசக்தி மற்றும் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்காக பல மில்லியன் டாலரை முதலீடு செய்து வருகிறார்கள்.
கடந்த 2020-ஆம் ஆண்டில் குவாட் கூட்டணி நாடுகளிடையே ”அடிப்படையான பரிமாற்றமும் ஒத்துழைப்பும்’’ (Basic Exchange and Cooperation Agreement for Geo−spatial Cooperation − BECA) எனும் ஒப்பந்தம் இந்தியா−அமெரிக்காவிற்கு இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை சீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு எதிரான இந்தியாவின் பாதுகாப்புக் கவசமாக வருணித்த அமெரிக்கத் தரப்பு, இந்த ஒப்பந்தம் குறித்து விடுத்த பத்திரிகை செய்திகள் அனைத்திலும் சீன எதிர்ப்பையே மையப்படுத்தியிருந்தது இதன் மூலம் அமெரிக்கப் போர்விமானங்களும் போர்க் கப்பல்களும் விரைந்து சென்று தாக்குவதற்கு ஏற்ற வகையிலான ஏவுதளமாகவும் இந்தியாவை மாற்ற முடியும்.
அமெரிக்காவின் கூட்டாளியாக உள்ள ஜப்பானும் ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டத்தில் முன்னணிப் பாத்திரமாற்றுகின்றன. சந்தைக்காகவும் மூலதன விரிவாக்கத்திற்காகவும் நடக்கும் இந்த நாய்ச்சண்டையில் இப்போது இந்தியாவையும் அமெரிக்கா இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொண்டு கிரேட் நிக்கோபார் திட்டத்தை உருவாக்கியிருக்கிறது.
இந்திய ஆளும் வர்க்கமும் ஆளும் வர்க்கக் கட்சிகளும் பாகிஸ்தானையும், சீனாவையுமே ‘‘தேசிய எதிரிகளாக’’ கட்டமைத்துள்ளன. இதனால் ’கிரேட் நிக்கோபார் திட்டம்’ புவியியல் ரீதியாக இந்தியாவின் ஒரு இராஜதந்திர ரீதியான திட்டம் எனவும் இதன் மூலம் மோடி ஆட்சியின் கீழ் இந்தியா இராணுவ, பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடையும் எனவும் பாஜக துதிபாடிகள் கூறி வருகிறார்கள்.
ஆனால் இத்திட்டம் அமைந்தால் பெரிதும் பயனடையப் போவது அமெரிக்காவும், ஜப்பானும் மட்டும் தான். சீனாவைக் சுற்றி வளைக்கும் நோக்கில் குவாட் கூட்டணிகளின் இராணுவத் தளங்களை இந்தியாவில் அமைத்துக் கொள்வதற்காகவே கிரேட் நிக்கோபார் திட்டம் அமைக்கப்படுகிறது.
அழிக்கப்படும் நிக்கோபாரின் பழங்குடி மக்கள்:
இயற்கையிலிருந்து பிரிக்கப்படாமலும் அதன் ஒரு பகுதியாகவும் பூமியில் எஞ்சியிருக்கும் ஒரு சில பகுதிகளில் நிக்கோபார் தீவும் ஒன்று. 1990-ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் நிக்கோபார் தீவில் ஆராய்ச்சி செய்யப்போகும் அறிவியலாளர்கள் அங்குள்ள கிராமத் தலைவர்களின் அனுமதியில்லாமல் எந்த ஆராய்ச்சியையும் செய்ய முடியாது. ஏனென்றால் நிக்கோபார் தீவின் பகுதிகள் அங்கு வசிக்கும் மக்களின் உரிமையாக இருந்தது என்கிறார் அத்தீவுகளில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வரும் மனிஷ் சண்டி எனும் சுற்றுப்புற அறிவியலாளர்.
நிக்கோபார் தீவில் ஷோம்பன் மற்றும் நிக்கோபார் என இரண்டு பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். மிகவும் பாதிக்கப்படக்கூடிய (Particularly Vulnerable Tribal Group – PVTG) பூர்வகுடி குழுக்களில் ஒன்றான ஷோம்பன் பழங்குடி மக்கள் 300-க்கும் குறைவாகவே உள்ளனர். 20 முதல் 50 பேர் கொண்ட குழுக்களாக இருக்கும் இவர்கள் மீன்கள், உப்பு முதலைகள், சில காட்டு விலங்குகளை வேட்டையாடும் தொழிலை செய்து வருகிறார்கள். ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு நிக்கோபார் தீவுக்கு புலம் பெயர்ந்து இத்தனை ஆண்டுகாலம் அந்தப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.
கிரேட் நிக்கோபரிஸ் இன மக்களோ, கடலோர தீவுவாசிகள், அவர்கள் பன்றிகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார்கள், தேங்காய், பாக்கு கொட்டைகள் மற்றும் சில கிழங்கு பயிர்களையும் பயிரிடுகிறார்கள். அவர்கள் கடல் உணவுகளை நம்பி வாழ்கிறார்கள். இவர்கள் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு புலம் பெயர்ந்திருக்கிறார்கள். நிக்கோபாரிகள் நிபுணத்துவம் வாய்ந்த கைவினைஞர்கள். இயற்கை பொருட்களிலிருந்து படகு மற்றும் குடிசை கட்டுவதில் மிகவும் தேர்ந்த ஆற்றல் உடையவர்கள். சில ஆயிரம் எண்ணிக்கையில் வசிக்கும் இவர்கள் பல்வேறு குழுக்களாக மொழியியல், கலாச்சார அடிப்படையிலும் வேறுபடுகின்றனர். நிக்கோபார் மொழி பல்வேறு குழுக்களிடையே வேறுபடுகிறது என்கிறார் மணிஷ். அக்காடுகளில் உள்ள தாவரங்களின் பயன்பாடுகள், குணங்கள் பற்றிய புரிதலை தம் இளைய தலைமுறைக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடத்தி வந்திருக்கின்றனர்.
இப்பழங்குடியினர் தாம் உயிராக நேசிக்கும் காடுகள் மீது பல நம்பிக்கைகளை வைத்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நம்பிக்கையின் படி திரா எனும் கருங்கல் காட்டில் உயிருடன் உள்ளது. அதன் அருகே மரங்களை வெட்டுபவர் இறந்து போவார்கள்; சாட் மேட் எனும் மரத்தை வெட்டினால் அம்மை நோய் ஏற்படும் என இயற்கையை பேனுகிறார்கள். விலங்குகளை பொறுத்தவரையில் கடற்பசுவை வேட்டையாடினால் சூறாவளிகள் வரும்; டால்பின்கள் மிகவும் புத்திசாலிகள்; அவைகள் மனிதருக்கு சமமானவை; கடலில் யாராவது தொலைந்து போனால் டால்பின்கள் அவர்களை கரைக்கு கொண்டு வரும்; அதை கொல்வது பாவம். முதுகு தோல் ஆமைகளை சாப்பிட்டால் முதுமை வராது; அதனால் அதை முதியவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்பது போன்ற பல நம்பிக்கைகள் கொண்டு இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த 2004-ஆம் ஆண்டில் நிக்கோபாரில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலின் போது ஆயிரக்கணக்கான நிக்கோபாரிகள் இறந்து போயினர். உயிர் பிழைத்தவர்கள் அவர்களின் பூர்விக நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கேம்பெல் விரிகுடாவின் அருகே உள்ள ராஜூவ் நகர் மற்றும் நியூ சிங்கேனில் இந்திய அரசால் குடியமர்த்தப் பட்டிருக்கின்றனர். இதனால் இயற்கையோடு ஒன்றி வாழும் உணர்திறன் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். 20 ஆண்டுகளாக தங்களது பூர்விக பகுதிகளில் குடியேற அனுமதி அளிக்க வேண்டும் என இந்திய அரசுக்கு பல முறை வேண்டுகோள் விடுத்தும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டே வந்திருகிறது. இயற்கையோடு இயைந்த தமது பண்ட பரிமாற்ற முறையிலிருந்து வேறுபட்டு தற்போது பணப்பொருளாதாரத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். வருமானம் ஈட்டுவதற்காக உடல் உழைப்பாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர் பழங்குடியினர் என ஏளனம் செய்யப்படுகிறார்கள். தமது சொந்த நிலத்திலேயே அகதிகளாக இந்திய அரசால் இருத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
அழிக்கப்படும் நிக்கோபாரின் பல்லுயிர் சூழல்:
நிக்கோபார் தீவு பல்லுயிர் சூழலுக்கும் ஒரு தளமாக திகழ்கிறது. இவற்றை அழித்துத்தான் “கிரேட் நிக்கோபார் திட்டத்தை” உருவாக்கப்போகிறது.
வங்களா விரிகுடாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் நிக்கோபார் தீவு, தோல் முதுகு ஆமைகளுக்கான முட்டையிடும் தளங்களில் ஒன்றாகும். இந்த ஆமைகள் ஆஸ்திரேலியாவிலிருந்து பத்தாயிரம் கி.மீ தூரத்தை நீந்தி வந்து நிக்கோபாரின் கரைக்கு முட்டையிட வருகிறது. டைனோசரின் காலத்திலிருந்து உயிர் வாழ்ந்து வரும் அழியாத உயிரினமான இந்த கடல் ஆமைகளின் முயற்சி, வலிமை மற்றும் உள்ளுணர்வு போன்றவை இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வு. மனிதகுலம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒரு உயிரினம் இந்த கடல் ஆமைகள்.
நிக்கோபார் தீவில் இருக்கும் பல்வேறு வகையான ஊர்வன, பறவைகள் மற்றும் வன, கடல் விலங்குகள் இந்தியாவிலிருந்து வேறுபட்டவை. அங்கு ஒவ்வொரு தீவிலும் தனித்துவமான உயிரிகள் வசித்து வருகின்றன கண்டங்களிலிருந்தும் பிற தீவுக் கூட்டங்களிலிருந்தும் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக தீவுகள் துண்டிக்கப்பட்டிருப்பதால், பரிமாணத்தின் படி ஒவ்வொரு உயிர்களும் மரபு ரீதியாக சிறப்பு பண்புகளை கொண்டிருக்கின்றன என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள் நிக்கோபாரில் அடர்ந்த மழைக்காடுகளை கொண்டிருந்தாலும் அங்கு விஷப் பாம்புகளே கிடையாது மேலும் நிக்கோபார் தீவின் கடற்பகுதி முழுவதும் பல்வேறு வகையான டால்பின்களும், திமிங்கிலங்களும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய பவளப்பாறைகளும் நிறைந்துள்ளன.
இத்திட்டத்திற்காக 80 இலட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வெட்டப்படுகின்றன என மோடி அரசு கூறுகிறது. வெட்டப்படும் மரங்களின் நிலப்பகுதியை இந்திய அரசு இதுவரை வெளியிடாததால் மரங்களின் எண்ணிக்கையை பற்றி தெளிவாக தற்போது கூற முடியாது. ஆனால் நிக்கோபாரின் காடுகளில் மரங்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்களை தான் மோடி அரசு காவு கொடுக்கப் போகிறது. இதனை ஈடு செய்வதற்கு ஹரியானாவில் காடுகளை உருவாக்கப் போவதாக மோடி அரசு கூறி வருகிறது.
ஆனால் இப்பகுதியில் இருக்கும் இலட்சக்கணக்கான மரங்களை வெட்டினால் கலாதியா விரிகுடாவில் பாயும் கலாதியா நதி அதிகளவு வண்டல் மண்ணை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிக்கு கொண்டு வந்து சேர்க்கும். இதனால் கடலோரத்தில் இருக்கும் பவளப் பாறைகள் உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரிகள் எளிதில் அழிந்துவிடும் ஆபத்துள்ளது. தீவின் முதிர்ந்த வெப்ப மண்டலக் காடுகளை அழித்தால் ஏற்படப்போகும் மண் அரிப்பு, கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் போன்றவற்றை மோடி அரசு பொருட்படுத்தவில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஒரு ஹெக்டேர் அடர்ந்த காடுகளை அழித்தாலே 650 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேறும். 130 சதுர கி.மீ பரப்பளவில் காடுகளை அழிக்கும் போது பல மில்லியன் டன் அளவு CO2 வெளியேறும். இவை பல பில்லியன் லிட்டர் அளவில் டீசலை எரிப்பதற்கு சமம். ஆனால் இச்சுற்றுச்சூழல் சீர்கேடுகள் எல்லாம் புறந்தள்ளப்படுகிறது.
பல்லுயிர் சூழல் நிறைந்த இப்பகுதியில் நில அதிர்வுகளும் அதிகமாக நடைபெறுகின்றன. நில அதிர்வுகளின் அறிவியல் சான்றுகளின்படி, நிக்கோபாரில் கொள்கலன் முனையம் அமைய இருக்கும் பகுதிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 44 நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. எனவே நிக்கோபார் தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் உறுதியற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, தற்போது செயல்படுத்தவிருக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மற்றொரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இதில் அமைய இருக்கும் உள்கட்டமைப்பு முழுவதிற்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதன் விளைவாக எண்ணெய் மற்றும் இரசாயனக் கசிவு நமது பூமியின் நிகரற்ற பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆனால் மோடி அரசோ விஞ்ஞானிகளின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பதாக இல்லை.
இதுமட்டுமில்லாமல் இத்திட்டத்திற்காக இயற்கை வளங்களை கையகப்படுத்துவதில் மோடி அரசும் அதன் பல்வேறு உறுப்புகளும் சட்ட விரோதமாக அனுமதியளித்திருக்கின்றன. அங்கு வசிக்கும் பழங்குடி மக்களிடம் அனுமதி பெற்றதாக போலியான தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மோடி அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய பசுமை தீர்ப்பாயம் போன்ற அமைப்புகள் போட்டி போட்டுக் கொண்டு கொள்கை முடிவெடுத்து இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளன. நாடாளுமன்றம், அமைச்சரவைகளுக்கு தெரியாமலேயே ஏகாதிபத்திய நலன்களுக்கான ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிப்பதற்காக கிரேட் நிக்கோபார் எனும் ஒரு இயற்கை தீவும் அதில் வாழும் உயிர்களும் காவு கொடுக்கப்படுகிறது. நமது நாட்டின் இயற்கை வளங்கள் வாரி வாரி வழங்கப்படுகிறது.
சுமார் ரூ.72000 கோடியில் அமையவிருக்கும் கிரேட் நிக்கோபார் எனும் பெருந்திட்டத்தை ஆளும் வர்க்கம், ஒரு போதும் நாட்டு மக்களின் நலன்களுக்காகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்போவதில்லை. மாறாக, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஏகாதிபத்திய நலன்களுக்காகவே இத்திட்டம் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அங்கு வசித்துவரும் பழங்குடி மக்களை துரத்தியடிப்பது இனப்படுகொலை செய்வதற்கு ஒப்பானதாகும். நிக்கோபார் தீவின் பல்லுயிர் பெருக்கம், பல இலட்சக்கணக்கான மரங்கள், அரிய வகை வன மற்றும் கடல் உயிரிகள் அழிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக இந்த இயற்கை தீவு அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக காவு கொடுக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் நிக்கோபார் தீவிலுருள்ள பல்லுயிர் சூழலுக்கு பேராபத்து என்பதாக மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக, இத்திட்டத்தின் உண்மையான நோக்கம் என்பது அமெரிக்க மேலாதிக்க நலனுக்கானது என்று புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவின் தெற்காசிய பிராத்தியத்தின் அடியாளான மோடி இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு முறைகேடுகளை செய்து வருகிறார். மோடி அரசின் இந்த இழிசெயலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, இத்திட்டத்திற்கெதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை கட்டியமைத்து ஏகாதிபத்தியங்களையும், அதன் திட்டங்களுக்கு துணை நிற்கும் இந்திய அடிமைகளையும் துரத்தியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
- தாமிரபரணி









