அமெரிக்க ரஷ்ய ஏகாதிபத்தியங்களின் ஆடுபுலி ஆட்டத்தில் பகடைக்காயான இந்தியா

அமெரிக்க, ரஷ்ய ஏகாதிபத்தியங்களின் நிழல் யுத்தத்தின் பலியாடாக இந்தியத் தொழிலாளர்களை மோடி அரசு சிக்கவைத்திருக்கிறது. பாம்பிற்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டும் வெளியுறவுக் கொள்கையின் காரணமாகத் தற்போது இருபுறமும் உதைபடும் பந்தாக இந்தியா மாறியிருக்கிறது.

உலகிற்கே விஸ்வகுருவாக மோடி திகழ்கிறார். மோடிதான் உக்ரைன் போரை நிறுத்தப் போகிறார், ஜி  20 போன்ற சர்வதேச மாநாடுகளில் மோடியின் ஆளுமையை பன்னாட்டுத் தலைவர்களும் புகழ்ந்து தள்ளுகிறார்கள், மோடியின் தலைமையில் இந்தியா உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறப்போகிறது என்பதை அமெரிக்காவே ஏற்றுக் கொண்டுவிட்டது, என நரேந்திர மோடியின் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் கட்டி அவரது பக்தர்களால் பரப்பிவிடப்பட்ட பல்வேறு பிரச்சாரங்கள் எல்லாம் இன்று பிசுபிசுத்துப் போய்விட்டன.

அமெரிக்க தடையை மீறி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் மோடி, பல முனைகளில் மோதிக்கொண்டிருக்கும் அமெரிக்கா, ரஷ்யா வல்லரசுகளுடனான உறவில் சமநிலையைப் பேணுகின்ற, “தனித்துவ சுயாட்சி” (Strategic Autonomy) -யை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கை என     மோடி ஆதரவு ஊடகங்களால் போற்றிப் புகழப்பட்ட மோடியரசின் வெளியுறவுக் கொள்கை இன்று கிழிந்து தொங்குகிறது.

மோடியின் நண்பரான அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தபடி சென்ற ஆகஸ்ட்   27ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் பொருட்கள் மீதான வரிவிதிப்பு   50 சதவீதமாக  அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்க ஏற்றுமதியை நம்பியிருக்கும் பல்வேறு தொழில்களும் மிகப்பெரிய அளவிற்கு நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றன.

அதிலும் குறிப்பாக ஜவுளித் தொழில் பெரும் நெருக்கடியைச் சந்திக்கவிருக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய துணி இறக்குமதியாளர்களான வால்மார்ட், டார்கெட், அமேசான் போன்ற நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள இறக்குமதி ஒப்பந்தங்களை நிறுத்திவைத்துள்ளன. இதன் காரணமாக திருப்பூர், நொய்டா போன்ற ஜவுளித் தொழிலைப் பிரதானமாக கொண்டுள்ள நகரங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் எழுந்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவைவிட வரிவிதிப்பு குறைவாக உள்ள வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு செல்லக் கூடும் என்பதால் தமிழ்நாட்டில் மட்டும் பின்னலாடை உற்பத்தியை நம்பியுள்ள   30 லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழக்க நேரிடும் எனவும்   15,000 கோடி ரூபாய்  அளவிற்கு இழப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

ஜவுளித் தொழில் மட்டுமன்றி இன்னும் பல ஏற்றுமதி சார்ந்த தொழில்களும் இந்த வரிவிதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட இறால் கண்டெய்னர்கள் நடுவழியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாததே இத்தனை நட்டங்களுக்கும் வேலை இழப்புகளுக்கும் காரணம் என அமெரிக்க தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

ரஷ்யாவின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியைப் பெருவாரியாக நம்பியிருக்கிறது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு   (20%) எண்ணெய் ஏற்றுமதியிலிருந்து கிடைக்கிறது. அதுமட்டுமன்றி ரஷ்ய பட்ஜெட்டில்   30% வருமானம் எண்ணெய் ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் இருந்தே கிடைக்கிறது. இதன் காரணமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியைத் தடுப்பதன் மூலம் அந்நாட்டிற்குப்  பொருளாதார ரீதியில் மிகப்பெரிய அடியைக் கொடுக்க முடியும் என அமெரிக்கா நினைக்கிறது. இதன் காரணமாகத்தான் ரஷ்ய அதிபர் புதினுடன் வாரம் ஒருமுறை சந்தித்து பேச்சுவார்த்தை  நடத்தி விருந்து கொடுத்து உபசரிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய எண்ணெய்யை  வாங்காதே என இந்தியாவைக் கண்டிக்கிறார். 

அதேசமயம் ரஷ்யாவிடமிருந்து இந்தியா மட்டும் கச்சா எண்ணெய்யை  இறக்குமதி செய்யவில்லை. இந்தியாவைவிடச்  சீனா மிக அதிகமாக ரஷ்ய எண்ணெய்யை  இறக்குமதி செய்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் துருக்கி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை  இறக்குமதி செய்வதைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நாடுகளையெல்லாம் அமெரிக்கா வரிவிதிப்பின் மூலம் தாக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதால் துருக்கியின் மீது வரிவிதிப்பதற்கு அமெரிக்கா தயங்குகிறது. சீனாவின் மீது வரிவிதித்தால் பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் இதன் மூலம் அமெரிக்காவிற்கே பொருளாதார சிக்கல் உருவாகும் என்பதால் சீனாவைச் சீண்டவும் அமெரிக்கா தயங்குகிறது.

துருக்கியையும் சீனாவையும் சீண்டத்  தயங்கும் அமெரிக்கா – ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல – ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை உடனடியாக நிறுத்து என இந்தியாவைப் பிடித்து அடித்துத் துவைக்கிறது. இதற்கு மோடி அரசின் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அமெரிக்க அடிமையாக, அடியாளாக, அதன் பிராந்திய ரௌடியாக செயல்படத் தயாராக இருக்கும் இந்தியாவை தற்போது வரிவிதிப்பின் மூலம் கடுமையாக தண்டித்தாலும், பின்னர் சில சலுகைகளைக் கொடுத்து அழைத்துக் கொண்டால் சிறு முனகல் கூட இல்லாமல் மீண்டும் அமெரிக்காவின் பக்கம் இந்திய ஆளும்வர்க்கம் சேர்ந்து கொள்ளும் என்பதை அமெரிக்கா நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது. 

2022ஆம் ஆண்டு ரஷ்ய உக்ரைன் போர் தொடங்கியபோது ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அறிவித்த அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விற்பனையின் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன் காரணமாக மற்ற எண்ணெய் உற்பத்தியாளர்களை விட மிகக் குறைவான விலைக்குக்  கச்சா எண்ணெய்யை  விற்க வேண்டிய நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டது.

இதனைப் பயன்படுத்திக் கொண்டு, ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய்யை  இறக்குமதி செய்து அதனை ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் பலமடங்கு இலாபத்தைச்  சம்பாதிக்க முடியும் என அம்பானி உள்ளிட்ட இந்தியத் தரகு முதலாளிகள் நினைத்தனர். விளைவு, 2022ஆம் ஆண்டுமுதல் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது ஆண்டுக்காண்டு பலமடங்காக அதிகரித்துக் கொண்டே வந்தது. 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் வெறுமனே 2% இருந்த ரஷ்ய எண்ணெய், தற்போது   20225ம் ஆண்டின் மத்தியில் 40%ஆக அதிகரித்துள்ளது.

அன்றைக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததை இந்திய வெளியுறவுக் கொள்கையின் சாதனையாக மோடி அரசு பீற்றிக் கொண்டது. அமெரிக்க ஐரோப்பிய வல்லரசுகளின் தடையை மீறி ரஷ்ய எண்ணெய்யை  வாங்கியதற்காக நரேந்திர மோடியை ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின.

ஆனால் இன்று அமெரிக்காவின் அனுமதியைப் பெற்றுத்தான் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கினோம், அன்றைக்கு அனுமதியளித்துவிட்டு இன்று அதற்காகத்  தண்டிக்கிறீர்கள் என அமெரிக்காவிடம் புலம்புகிறார் இந்தியாவின் வெளியறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் . அதேசமயம் இந்த இறக்குமதியின் மூலம் பலனடைந்தது யார் எனப் பார்த்தால் அது மோடியின் நண்பரான அம்பானிதான்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், ரஷ்யாவின் நயரா  நிறுவனமும் தான் இந்தக் காலகட்டங்களில் மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய்யை  இறக்குமதி செய்திருக்கின்றன. உலகச் சந்தையில் மற்ற எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் பேரல் ஒன்றிற்கு 90 டாலர் விலையில் விற்பனை  செய்த போது, 30 டாலர் குறைவாக, பேரல் ஒன்றிற்கு 60 டாலருக்கு அம்பானிக்கு ரஷ்யா கொடுத்தது.

ரஷ்யாவின் மலிவான எண்ணெய்யைத்  தனது சுத்திகரிப்பு நிலையங்களில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருளாக மாற்றி, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் அம்பானியின் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம் இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய லாபத்தைச் சம்பாதித்துள்ளன. ஒரு கணிப்பின் படி    2022-25 காலகட்டத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள்   15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இலாபம் ஈட்டியதாகக்  கூறப்படுகிறது. அதாவது இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும்   1.3 லட்சம் கோடி ரூபாய்  அளவிற்கு இந்நிறுவனங்கள் இலாபம் ஈட்டியிருக்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதியில் ரிலையன்ஸ் நிறுவனமும், நயரா  நிறுவனமும் மட்டுமே   81% அளவிற்கு ஏற்றுமதி செய்திருக்கின்றன.

தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய்யின்  விலை கட்டுப்பாட்டில் இருந்தாலும் ரஷ்ய எண்ணெய்யைப்  பேரல் ஒன்றிற்கு   5 அல்லது   6 டாலர் குறைவாக வாங்க முடியும் என்பதால் மலிவான கச்சா எண்ணெய்யை  விடுவதற்கு இந்திய இறக்குமதியாளர்களுக்கு மனமில்லை. இந்தியாவின் மீது   50% வரியை டிரம்ப் அறிவித்த பிறகும் கூட, ஆகஸ்டு மாதத்தை விடக்  கூடுதலான அளவில் செப்டம்பர் மாதத்தில் ரஷ்ய எண்ணெய்யை  இந்தியா வாங்கவிருக்கிறது.

அதே சமயம் ரஷ்ய எண்ணெய்யை  வாங்குவதைக் குறைக்க வேண்டும் என்ற குரல்கள் எழாமலும் இல்லை. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் முடிவை இந்திய அரசு மறுபரிசீலனை  செய்ய வேண்டும் என ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார். ஆனால் இந்திய அரசு குறைப்பது போல இல்லை.

இரண்டு ஏகாதிபத்தியங்களின் கிடுக்குப் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்திய அரசின் முன்பு ஒரு சில வாய்ப்புகளே உள்ளன. உலக வர்த்தக கழகத்தில் முறையீடு செய்து வரிவிதிப்பில் சலுகை காட்டும்படி அமெரிக்காவிடம் கெஞ்சலாம். அல்லது டிரம்பிடம் நேரடியாகப்  பேச்சுவார்த்தை நடத்தலாம்.

இந்தியா மீதான  வரிவிதிப்பிற்கு ரஷ்ய எண்ணெய்தான் பிரதான காரணம் என அமெரிக்கா கூறினாலும் பேச்சுவார்த்தைக்குப்  போகும் போது நிச்சயமாக வேறு நிபந்தனைகளையும் அமெரிக்கா விதிக்கும். அதிலும் குறிப்பாக இந்திய விவசாயத்தை அமெரிக்காவின் சுரண்டலுக்குத் திறந்துவிடுவதையும், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பக் கொண்டுவருவதையும், விவசாயப் பொருட்கள், பால் பொருட்கள் இறக்குமதியை அனுமதிப்பதையும் ஏற்றுக் கொள்ளும்படி அமெரிக்க நிர்ப்பந்திக்கும் .

50% வரிவிதிப்பை அமெரிக்கா தொடரும் பட்சத்தில் அந்நாடு விதிக்கும் எத்தகைய நிபந்தனையையும் ஏற்றுக் கொள்ள இந்திய ஆட்சியாளர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். எலான் மஸ்கிற்காக மின்சார வாகனக் கொள்கையைத் திருத்தியது போல, மெட்டா, கூகுள் நிறுவனங்களுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய்  அளவிலான கூகுள் டேக்ஸ் எனப்படும் ஆன்லைன் விளம்பர வருவாயின் மீதான வரிவிதிப்பை ரத்து செய்தது போல, அமெரிக்காவின் கண்ணசைவிற்கு ஏற்றார்போல  சீர்திருத்தங்களைச் செய்திட இந்திய ஆட்சியாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாறாக அமெரிக்காவைத் தவிர்த்துவிட்டு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்போவதாக கூறுவதெல்லாம் ஊரை ஏமாற்றும் நாடகம்தான். அமெரிக்காவிற்கு இந்தியா ஆண்டுக்கு   7.7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்தாலும், இந்திய ஆட்சியாளர்கள் நினைத்தால் அதனை ஒரு சில ஆண்டுகளில் வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈடுகட்டிவிட முடியும் ஆனால் நிச்சயமாகச் செய்யமாட்டார்கள். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிக் கொண்டே அமெரிக்காவுடன் வர்த்தகத்தைத் தொடர வேண்டும் என்பதுதான் இந்திய ஆட்சியாளர்களின் விருப்பமாக உள்ளது. அதற்காக டிரம்பின் உள்ளம் கனியக் காத்திருக்கப் போகிறார்கள்.

ஆனால் அதுவரை இந்த ஏற்றுமதியை நம்பியிருக்கும் சிறு தொழில்களால் தாக்குப் பிடிக்க முடியாது. ஏற்கெனவே திருப்பூரின் பின்னலாடை நிறுவனங்களை மூடுவது தொடங்கிவிட்டது. நொய்டாவிலிருந்தும், தூத்துக்குடியிலிருந்தும் அனுப்பட்ட பொருட்கள் திரும்பி வர ஆரம்பித்துவிட்டன. அமெரிக்க, ரஷ்ய ஏகாதிபத்தியங்களின் நிழல் யுத்தத்தின் பலியாடாக இந்தியத் தொழிலாளர்களை மோடி அரசு சிக்கவைத்திருக்கிறது. பாம்பிற்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டும் வெளியுறவுக் கொள்கையின் காரணமாகத் தற்போது இருபுறமும் உதைபடும் பந்தாக இந்தியா மாறியிருக்கிறது.

இந்த வெளியுறவுக் கொள்கையின் மூலம் ஏகாதிபத்தியங்களுடனான உறவில் சமநிலையை பேணுவதாக இந்தியா கூறி வந்தது.  ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது, அதேசமயம் அமெரிக்காவிற்கு மென்பொருள் விற்பது, அமெரிக்காவிற்கு எதிராக பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேருவது, அதேசமயம் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் குவாட் கூட்டணியில் இருப்பது. இரு ஏகாதிபத்தியங்களுக்கும் இந்தியாவைப் பயன்படுத்துவது இலாபகரமாக இருந்த வரை இதில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.

ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா முடிவு செய்த மறுகணமே மோடி அரசு கூறிவந்த “தனித்துவ சுயாட்சி” மாயமாய் மறைந்துவிட்டது. ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தையும், இதுகாறும் பெருமிதமாக மார்தட்டிக் கொண்டிருந்த வளர்ச்சியையும், ஒரே ஒரு வரிவிதிப்பு அறிவிப்பின் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்மூலமாக்கிவிட்டார். இதுதான் மோடி அரசு கட்டியெழுப்பியிருக்கும் பொருளாதார வளர்ச்சியின் இலட்சணம்.

ஒரு நாடு இறையாண்மையுடன், உண்மையான சுயாட்சியுடன் இயங்க வேண்டுமென்றால், ஏகாதிபத்தியங்களின் தயவில் வாழாமல், தற்சார்புடன் இயங்கத் தயாராக வேண்டும். எண்ணெய் வளங்களை மட்டும் நம்பியில்லாமல் இதர புதுப்பிக்கத்தக்க எரிசக்தியையும் அதற்கான தொழில்நுட்பத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும். யாருடைய நலன்களுக்காகவும் தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காமல், வர்த்தக ஒப்பந்தகளைச் செய்துகொள்ள வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபவெறியிலிருந்து நாட்டின் விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும். இதனைச் செய்யாமல் ஏகாதிபத்திய பொருளாதாரச் சங்கிலியில் நாட்டினைப் பிணைத்தால் அவர்கள் ஆடும் சூதாட்டத்தில் பகடைக் காய்களாக மாறுவதைத் தவிர வேறு வழியில்லை.

  • அறிவு

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன