தூய்மைப் பணியாளர்களை தனியாருக்கு நவீன கொத்தடிமைகளாக்கும் சென்னை மாநகராட்சி.

சென்னை மாநகராட்சியில் இயங்கி வந்த 15 மண்டலங்களில், 11 மண்டலங்கள், அதிமுக ஆட்சியில் ஏற்கனவே தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது. அன்றைய எதிர்க்கட்சியான திமுக இதைக் கடுமையாக எதிர்த்தது. திமுக ஆட்சிக்கு வந்தால், தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்குவோம் என வாக்குறுதி அளித்தது. இன்றோ, அந்த வாக்குறுதிக்கு வாய்க்கரிசிப் போட்டு, அதிமுக விட்டு வைத்த மீதமுள்ள 4 மண்டலங்களில் உள்ள மண்டலங்களான, அதாவது 5, 6 மண்டலங்களான ராயபுரம், திரு.விக. நகர் ஆகிய பகுதிகளின் தூய்மைப் பணியாளர்களை தனியாருக்கு நவீன கொத்தடிமைகளாக்கி விட்டது.

இதை எதிர்த்துப் போராடும் தூய்மைப் பணியாளர்களிடம், தனியாரிடம் தாரைவார்ப்பதை நிறுத்த முடியாதென நார வாயாக மாறி திமிராகப் பேசுகிறது. அன்றைய அதிமுகவின் தனியார்மயத்தை, பணி நிரந்தரம் செய்யாத அட்டுழியத்தை எதிர்த்து, ஆர்ப்பரித்த திமுக தான் இன்று அதே அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளது.

அதிமுக தனியாரிடம் தாரைவார்க்காமல் விட்டுச் சென்ற 4 மண்டலங்களை இதுவரை பராமரித்து வந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ரூபாய் 23,000/- வரை தொகுப்பு ஊதியமாக வழங்கி வந்தது. தற்காலப் பணியாளர்களாக இருந்தாலும் நீண்ட காலமாக பணிக்குப் பாதிப்பு இல்லாமல் நீடித்து வந்தனர்.

இனி இவர்களைத் தனியாரிடம் தாரைவார்ப்பதன் மூலம் இதுவரை மாநகராட்சி வழங்கி வந்த குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்களான யூனிஃபார்ம், ரெயின் கோட், கிளவுஸ், செருப்பு, மாஸ்க் உட்பட இதர அற்ப சலுகைகளையும் இழக்க நேரிடும். மாதச் சம்பளம் ரூபாய் 16,000 ஆகக் குறைக்கப்படும். நீண்ட காலமாக அதாவது, ஏறக்குறைய 20 ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் 3809 பேர்களில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருபவர்களை நீக்கிவிட்டு, மீதமுள்ள தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள 2034 பேரை மட்டுமே வேலைக்கு ‘நவீன கொத்தடிமைகளாக’ எடுத்துக் கொள்ள முடியுமென ஒப்பந்த நிறுவனமான “சென்னை என்விரோ சொல்யூசன்ஸ் லிமிடெட்” தடாலடியாக அறிவித்துள்ளது.

இவற்றையெல்லாம் ஊற்றி மூடவே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியில் இறக்கும் போது இழப்பீடு நிதி அதிகரிப்பு, பிள்ளைகள் உயர்கல்விக்கு உதவித்தொகை, குடியிருப்பு, சுயதொழில் தொடங்க மானியத்தில் கடனுதவி, கழிவுகளால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை என ஆறு அம்சத் திட்டங்களை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

பிச்சை உணவுக்காகக் கையேந்த வைக்கும், கடனளிக்கும், கூடுதல் உழைப்பைச் சுமத்தும் இத்திட்டங்கள் அனைத்தும் தூய்மைப் பணியாளர்களை ஜனநாயக உரிமைகளற்ற நவீன கொத்தடிமைகளாக்குவதைத் தவிர வேறென்ன? மேலும், இவை அனைத்தும் பணி நிரந்தரம், உழைப்புக்கேற்ற ஊதியம், 8 மணி நேர வேலை, பணியின் போது உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் இதர அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை நயவஞ்சகமாகப் பறிப்பதற்கு ஒப்பானது.

இதுவரை, தனியார்மயத்தை அரங்கேற்றி நிரந்தர வேலைக்கு ஆப்பு வைத்த அதிமுகவை, எதிர்க்கட்சியாக இருந்தபோது, இதை எதிர்த்து வாய்ச்சவடால் அடித்தது திமுக. ஆனால், ஆளும் கட்சியாக மாறிய பின்பு அதே ஆப்பை மேலும் இறுக்கி உறுதிப்படுத்தியுள்ளது. இதுதான் மாறி, மாறி ஆட்சிக்கு வரும் ஓட்டுப் பொறுக்கிகளின் வழக்கமான மக்களை ஏய்க்கும் பாணி. இந்தப் பாணியில் பயணித்து வரும், நேற்று மழையில் முளைத்த இன்றைய காளான்களான த.வெ.க விஜயும், நாம் தமிழர் கட்சி சீமானும், அதிமுக, திமுகவின் ஊழல் ஆட்சியை ஒழித்து உன்னதமான, உண்மையான மக்களாட்சியை நிறுவப் போவதாக தம்பட்டம் அடித்து வருகின்றன. இதைத்தான் தேர்தல் வாக்குறுதிபடி தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாத முதலமைச்சர் ஸ்டாலினை கிழித்துத் தொங்க விட்டன. அதே வேளையில் இதற்கெல்லாம் கொள்ளிக்கட்டையாக விளங்கும் தனியார்மயத்தைக் கிழித்து தொங்க விடவில்லை. ஆனால், தனியார்மயத்திற்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் ஊழலை ஒழிக்கப் போவதாக சவடால் அடிக்கின்றனர்.

சினிமா போதைக்கு அடிமையான மக்களின் பணத்திலும், புகழிலும் மிதந்து வரும் இவர்கள் எவருக்கும் மக்களுக்குச் சேவை செய்வது நோக்கமல்ல. மாறாக, சினிமா போதைக்கு அடிமையான மக்களைத் தேர்தல் களத்தில் பகடைக்காய்களாக உருட்டிவிட்டு அரசியல் அதிகாரத்தைச் சுவைப்பதே. இதற்குச் சிறந்த சான்று எம்ஜிஆரும், விஜயகாந்தும் என்பது சொல்லாமலே விளங்கும்.

தூய்மைப் பணியாளர்கள் உழைப்போர் உரிமை சங்கம், செங்கொடி சங்கம் இன்னும் பிற சங்கங்கள் எனப் பிரிந்து நின்று போராடுவது மூலம் குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட வெல்ல முடியாது. இந்த நடைமுறைதான் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் திரும்பப் பெற முடியாமல் போக்குவரத்துத் தொழிலாளர்கள், அரசு தொழிலாளர்கள் இன்று வரை அரசால் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு ஒரே துறையில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களும், பணியாளர்களும், ஊழியர்களும் ஆளுக்கொரு சங்கமென பிரிந்து நிற்காமல், ஒரே வர்க்கம் என்கிற வகையில், ஒரே வார்ப்பாக வடிவமைத்துக் கொள்ளாமல் எதையும் வெல்ல முடியாது.

இவை நம்மிடம் இல்லையென்பதால் தான் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்கத்தைத் தீவிரமாக, உக்கிரமாகத் திணித்து வருகின்றன ஒன்றிய, மாநில அரசுகள். இதன் விளைவுதான் தூய்மைப் பணியாளர்களை தனியாரிடம் நவீன கொத்தடிமைகளாக தாரை வார்ப்பதை நிறுத்த முடியாது என திமிர்த்தனமாக பேச வைக்கிறது.

மறுகாலனியாக்கத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் பாசிச மோடி அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூடச் சமீபத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த முடியாது என திமிர்த் தனமாக அறிவிக்கச் செய்துள்ளது. இவையெல்லாம் மறுகாலனியாக்கத்தை உக்கிரமாக, தீவிரமாக அமுல்படுத்துவதில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதே வேளையில் இந்த மட்டைகளை மட்டையாக்க, மரணிக்கக் குறைந்தபட்சம் உழைக்கும் சக்திகள் அனைவரும் ஒரே குடையின்கீழ் அணிதிரட்டி ஒரு மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பதே இன்றைய அடிப்படைத் தேவையாக உள்ளது.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன