மேற்கு வங்காள புலம்பெயர் தொழிலாளர்களை ஒடுக்கும் காவி பாசிஸ்டுகள்!

உயிரா? வேலையா? என தேர்ந்தெடுக்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான எங்களை வங்கதேசத்தவர், ‘ரோகிங்கியா’, ‘ஊடுருவல்காரர்கள்’ மற்றும் ‘சட்டவிரோதமாக குடியேறியவர்கள்’ என்றெல்லாம் அழைக்கின்றனர் என்கிறார்கள் அப்புலம் பெயர் தொழிலாளர்கள்.

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள தர்திபூர் கிராமத்தை சார்ந்த நசிமுதீன் என்பவர் புலம் பெயர்ந்து மும்பையின் நாலசோபரா பகுதியில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார். அங்கு  ரூ.1300 தினக்கூலியை சம்பளமாக பெற்ற அவர்  ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஒரு சில மாதங்களுக்கு முன்பு உள்ளூர் போலீசாரால் போலீசு நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு போலீசார் அவரை தேசிய கீதத்தை பாடச் சொல்கிறார்கள். அவரின் கன்னத்தில் போலீசார் அறைகிறார்கள்.  அவரின் அலைபேசியில் வங்கதேச அலைபேசி எண்கள் இருக்கிறதா என போலீசார் சோதனை செய்கிறார்கள். அவரின் குடியுரிமைக்கான ஆவணங்கள் மறுக்கப்படுகின்றன. போலீஸ் நிலையத்தில் தான் செல்வதற்கு முன்பே 13 வங்காள மொழி பேசும் புலம் பெயர் தொழிலாளர்கள் இருந்தனர் என்கிறார் நசிமுதீன்.

மறுநாள் காலை நசிமுதீன் மற்றும் சில பேரும் மருத்துவ பரிசோதனை முடிந்த பின்பு புனேவிலிருந்து மேற்கு வங்கத்திற்கு விமானத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர். வங்காளத்தின் வடக்குப் பகுதியில் விமானம் தரையிறக்கப்படுகிறது, அதிகாலையில் அவர்களின் கையில் ஒரு உணவு பொட்டலம், தண்ணீர் பாட்டில், 300 ரூபாய் வங்கதேச பணம் போன்றவை கொடுக்கப்பட்டு, அவர்களை வங்கதேச எல்லைக்குள் பலாத்காரமாக இந்திய துணை இராணுவப்படையினர் தள்ளுகின்றனர். நீங்கள் வங்கதேசத்துகாரர்கள், மீண்டும் திரும்ப வந்தால், சுடப்படுவீர்கள் என அவர்கள் மிரட்டப்படுகின்றனர்.

ஒரு சில நாட்களுக்கு பின்பு நசிமுதீனும் அவருடன் சென்ற இரு தொழிலாளர்களும் தாங்கள் வங்கதேசத்திற்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட சம்பவத்தை விளக்கி, மம்தா பானர்ஜியிடம் உதவி கேட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட பிறகு மீண்டும் தங்களது மாநிலத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

நசிமுதீன் மட்டுமல்ல,  மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்திலிருந்து நாடு முழுவதும் கட்டுமான தொழிலாளர்களாகவும், வீட்டு பணியாளர்களாகவும், தெரு வியாபாரிகளாகவும், தள்ளுவண்டிக் கடைக்காரர்களாகவும் புலம்பெயர்ந்திருப்பவர்களும் ஏன் எங்கள் ஊரை சேர்ந்த வங்க மொழி பேசும் இஸ்லாமிய புலம்பெயர் தொழிலாளர்கள் பல மாநிலங்களில் குறி வைக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியைக் கேட்கிறார்கள்?

உயிரா? வேலையா?  என தேர்ந்தெடுக்கும் நிலையில் நாங்கள் அவதிப்படுகிறோம். மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான எங்களை வங்கதேசத்தவர், “ரோகிங்கியா’, ‘ஊடுருவல்காரார்கள்’ மற்றும் ‘சட்டவிரோதமாக குடியேறியவர்கள்’ என்றெல்லாம் அழைக்கின்றனர் என்கிறார்கள் அப்புலம் பெயர் தொழிலாளர்கள்.

புலம் பெயர்ந்து வாழும் வங்காள தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும்  தங்களுக்கு என்ன நேருமோ என்ற அச்சமும் பதட்டமும் இறுகக் கவ்வி இருக்கிறது. தான் இந்திய குடிமகன் என்பதற்கு ஆதாரமாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளை வைத்திருந்தாலும் அப்புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நிம்மதியில்லை. ஏனென்றால் இந்த ஆவணங்களின் அடையாளம் போலீசாரால் மறுக்கப்படுகிறது. இவை அனைத்தும் 100 ரூபாய்க்கு கிடைக்கிறது என போலீசாரால் நிராகரிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக  பா.ஜ.க ஆளும் மாநிலங்களான ஒடிசா, சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, டெல்லி, இராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் போன்றவற்றில் மேற்கு வங்கத்திலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.   வங்காள மொழி பேசும் தொழிலாளர்களில் அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மதத்தை சார்ந்த தொழிலாளர்கள், இம்மாநிலங்களின் உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு முறையான விசாரணை ஏதும் இல்லாமல், அவர்களிடம் உள்ள இந்திய குடியுரிமை ஆவணங்கள் மறுக்கப்பட்டு வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படுகின்றனர்.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் மீதான நடவடிக்கை என்ற பெயரில் மோடி அரசு, மேற்கு வங்கத்திலிருந்து புலம் பெயர்ந்திருக்கும் தொழிலாளர்களை அதிலும் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்களை குறிவைத்து தாக்குகிறது.

மேற்கு வங்காளத்தின் மக்கள் தொகையில் 27% முஸ்லீம்கள் என்பதால், இந்து வெறியைத் தூண்டுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மேற்கு வங்க முஸ்லீம்களில் பலர் சட்டவிரோதக் குடியேறிகள் என்றும் அவர்களை வங்கதேசத்திற்கு அனுப்பவேண்டுமென்றும் பா.ஜ.க ஒவ்வொரு முறையையும் பிரச்சாரம் செய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம்  மேற்கு வங்கத்திற்கு வந்த அமித்ஷா,  மம்தா பானர்ஜி ”நாட்டின் எல்லைகளை வங்க தேசத்தினருக்காக திறந்துவிட்டுள்ளார். அவர் ஊடுருவலை அனுமதிக்கிறார். மம்தாவால் ஊடுருவலை தடுத்து நிறுத்த முடியாது. தாமரை அரசால் மட்டுமே அதைச் செய்ய முடியும். வேலி அமைக்க நாங்கள் நிலம் கேட்டும் அவர் நிலம் வழங்கவில்லை. இதனால் ஊடுருவல் தொடர்கிறது” என இஸ்லாமிய எதிர்ப்பு வெறியை பரப்பினார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு மேற்கு வங்கத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. குஜராத்தில் வங்காளத் தொழிலாளர்களின் காலனிகளை புல்டோசர்கள் மூலம் அம்மாநில அரசு இடித்து தள்ளியது. ஏப்ரல் 26-ஆம் தேதியன்று 219 பெண்கள், 214 குழந்தைகள் உள்ளிட்டு சுமார் 890 பேர் போலீசு நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். தில்லியில் வங்காள தொழிலாளர்களின் குடியிருப்பான ஜெய்ஹிந்த் காலனி புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. ஹரியானாவில் வங்காள தொழிலாளர்கள் போலீசாரால் சித்திரவதை செய்யப்படும் வீடியோக்கள் பரவி வருகின்றன. ஒடிசாவில் நூற்றுக்கணக்கான வங்காள மொழி பேசும் தொழிலாளர்கள் போலீசு நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

இப்படி இவர்களின் குடியுரிமை ஆவணங்கள் நிராகரிக்கப்பட்டு, சட்டவிரோத குடியேறிகள் என  பலாத்காரமாக வங்கதேச எல்லைக்குள் தள்ளப்படுகின்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.  

ஒடிசாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 447 வங்காள மொழி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கொத்தனார்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் தெரு வியாபாரிகள். இதில் 403 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிறப்பு, பள்ளிப் படிப்பு ஆவணங்களின் அடிப்படையில் தன்னை இந்நாட்டின் குடிமகன் என்று நிரூபிக்கும் பொறுப்பு ஒடிசாவில் வேலை செய்து வந்த  இப்புலம் பெயர் தொழிலாளர்கள் மீது சுமத்தியது உள்ளூர் ஒடிசா போலீசு. பரம ஏழைகளாகவும் படிப்பறிவு அற்றவர்களாகவும் இருக்கும் கிராமப்புற மக்களுக்கு, அவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களாக  இருந்தாலும் வேறு எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மேற்படி ஆவணங்களை ஆய்வுக்குச் சமர்ப்பிப்பதென்பது மிகமிகக் கடினமான ஒன்று.

இதுமட்டுமில்லாமல் தங்களது அலைபேசிகளில் வங்கதேசத்து அலைபேசி எண்களை பதிவு செய்து வைத்திருக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள் தடுப்புக் காவலில் தற்போதும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில்  கொத்தனார்களாக வேலைப் பார்த்து வந்த மேற்கு வங்கத்தை சார்ந்த ஒன்பது புலம்பெயர் தொழிலாளர்கள் குடியுரிமைக்கான ஆவணங்களை வைத்திருந்த போதிலும் அது நிராகரிக்கப்பட்டு, அவர்களிடமிருந்த அலைபேசிகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு பேருந்தில் மேற்கு வங்கத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு கூட சத்தீஸ்கர் போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் நாட்டின் வளர்ச்சி அடையாத மாவட்டங்களில் ஒன்று.  முர்ஷிதாபாத் முழுவதுமே கிராமங்கள் தான்.  ஏறக்குறைய  80% மக்கள், 2,166 கிராமங்களில் வசிக்கின்றனர். அம்மாவட்டத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு வளர்ச்சிக்கு கீழே தான் இருக்கிறது. மக்கள்தொகையின் மூன்றில் இரண்டு பங்கு இஸ்லாமியர்கள். பிழைப்புக்கு வழியில்லாமல்  வாடும் அம்மாநில மக்கள் கட்டாய புலம்பெயர்வுக்கு அதிகம் ஆளாகுகிறார்கள். இம்மாவட்டத்திலிருந்து 60 சதவீதத்திற்கும்  அதிகமான குடும்பங்களில் வீட்டிற்கு ஒருவர் புலம்பெயர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகின்றனர்.

தங்களது மகனையும், பேரனையும் வங்கதேசத்தவர் என அவர்கள் அழைக்கும் போதும், சிறையில் அடைக்கும் போதும் நாங்கள் எப்படி நிம்மதியாக இருப்பது? எப்படி நாங்கள் நிம்மதியாக உறங்குவது? என்கிறார் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சார்ந்த மதினா என்பவர்.

அந்நியர்களுக்கான தீர்ப்பாய நடைமுறைகள் தோற்றுவிக்கும் கொடிய துயரம் எனும் சூறாவளிக்குள்  மேற்கு வங்காள புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். சனாதனம், இந்துதேசம் என்ற இரண்டு சொற்களைப் பயன்படுத்தி காவி பாசிஸ்டுகள் இந்தியாவை அழித்து வருவது தெரியவரும்.

  • தாமிரபரணி

புகைப்படங்கள்: நன்றி (Pari இணையதளம்)

 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. நாளை தமிழ்நாட்டு மக்களையும் தமிழர்களே அல்ல ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதை நோக்கியே ஆர்எஸ்எஸ்-ன் பிஜேபி செயல்படுகிறது.