காரியக் கோமாளி டிரம்பின் வரிவிதிப்பும்,
பாசிச மோடியின் மௌனமும்!

அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதற்கு, இறக்குமதி வரிவிதிப்பே காரணமென, பதிலடி வரிவிதிப்பைத் தடாலடியாக அறிவித்து. இந்தியா, சீனா உள்ளிட்ட இதர உலக நாடுகளை மிரட்டி பணிய வைக்க முயன்று வருகிறார், காரியக் கோமாளி டிரம்ப். இந்த பதிலடி வரிவிதிப்பை இறுதி முடிவாக எதையும் அறிவிக்காமல் அவ்வப்போது, ஏற்றி, இறக்குவது, காலக்கெடு கொடுப்பது, பிறகு பின்வாங்குவது என்கிற நடைமுறையைப் பின்பற்றி வருகிறார். மேலும், தங்களை ஆதரிக்கும் நாடுகளுக்கு குறைந்த வரியையும், எதிர்க்கும் நாடுகளுக்கு அதிக வரியையும் விதிக்கிறார். இத்துடன், இந்தியாவானது, அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரியை விதித்து, ‘உலக மேலாதிக்க மேல்நிலை வல்லரசான அமெரிக்காவை, பின்தங்கிய நாடான இந்தியா’ சுரண்டுவதாகவும் குற்றம் சுமத்துகிறார்.

இதற்கு, எவ்வித விளக்கத்தையும் பதிவு செய்யாமல், மௌனம் சாதித்து வருவதோடு, தொடரும் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் சரி செய்து விட்டோமென கயிறு திரித்து வந்தது பாசிச மோடி அரசு. இச்சூழலில், ஆகஸ்ட் முதல் தேதி முதல் இந்தியப் பொருள்களுக்கு 25%வரியும், அபராதமும் விதிக்கப்படும் என டிரம்ப தடாலடியாக அறிவித்தார். அதையும் பின்பு ஆகஸ்டு 7 என மறு அறிவிப்பு மூலம் மாற்றிக்கொண்டார். மீண்டும் 50% ஆக உயர்த்தி தேதியையும் ஆகஸ்ட் 27 என மாற்றிக் கொண்டார். இப்படி மாறி, மாறி தேதிகளை அறிவித்து இந்தியாவை ஒரு நிர்பந்தத்திற்குள் தள்ள தொடர்ந்து அச்சுறுத்துவது. இதன் மூலம், அமெரிக்காவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்கள் உட்பட வேளாண் சார்ந்த அனைத்துப் பொருட்களையும் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து விடுவது என்கிற மேலாதிக்க வெறியோடு அலைகிறார்.

இவற்றை நிறைவேற்ற, மேலும் அழுத்தம் தரும் விதமாக, “இரஷ்யாவிடமிருந்து மிகப்பெரியளவில் ஆயுதங்களையும், சீனாவுடன் இணைந்து மிக அதிகளவில் கச்சா எண்ணையையும் இந்தியா கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்று மிரட்டுவதோடு, இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடையப் போவதாகவும்” அச்சுறுத்திகிறார். மேலும், “இரஷ்யாவின் போர் ஆயுதங்களால் உக்கரைனில் கொல்லப்படும் நபர்கள் குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை.”, “இரஷ்யாவிடமிருந்து அதிகப்படியான கச்சா எண்ணையைக் கொள்முதல் செய்து, அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனைச் செய்வதாகவும்” இந்தியாவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி பணிய வைக்க முயல்கின்றார். இதன் மூலம், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து, பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்து, மத்திய கிழக்குப் பகுதியை தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர அலையும் உலக மேலாதிக்கப் போர் வெறியான, சாவு வியாபாரியான காரியக் கோமாளி டிரம்ப் தனது மேலாதிக்க வெறியை மறைக்க முனைகிறார்.

இதற்கு இந்திய வெளியுறவுத் துறையானது, “இந்தியாவைக் குறி வைப்பதை ஏற்க முடியாது” என்கிற மொன்னையான பதிலோடு நிறுத்திக் கொண்டது. காரணம், அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்கத் துணியாத மண்டியிடும் அடிமைப்புத்தியே. ஆனால், சீனாவோ, “இரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது தங்கள் நாட்டின் நலம் சார்ந்தது. இறையாண்மை தொடர்பானது. இதில் எவரும் தலையிட முடியாது. “இரஷ்யா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும் முடியாது” என்பதை அதிரடியாக அறிவித்தும் விட்டது.

தற்போதைய அறிவிப்பான, 25% வரியையும், அபராதத்தையும் அமெரிக்க அடிமையான மோடி அரசு ஏற்கும் பட்சத்தில் வேளாண் உற்பத்தி பொருட்கள் உட்பட, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இது குறித்து மோடி அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. அதன் அக்கறை எல்லாம் கவுச்சிப்பால் பொருட்களைப் பற்றிதான், அதாவது, கால்நடைகளின் இரத்தம், கொழுப்புப் போன்றவைகளில் இருந்து தயாரிக்கப்படும் புரோட்டீன்கள் அமெரிக்கப் பசுகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது. இவற்றைச் சாப்பிடும் பசுக்களில் இருந்து கிடைக்கும் பாலை கவுச்சிப்பால் என்பர். அதாவது, அசைவப்பால் உற்பத்திப் பொருட்கள் இறக்குமதிச் செய்யப்படுவதைப் பற்றித்தான் அச்சமும், அதிக கவலையும் கொள்கிறது. பீதியும் அடைகிறது பாசிச ஆர்எஸ்எஸ், பிஜேபி, மோடி தலைமையிலான மோடி அரசு. இவைதான், இந்த ஒப்பந்தம் காலதாமதம் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக உள்ளது. இவற்றை ஆர்எஸ்எஸ்ஸின் ஒரு அங்கமான பாரதிய கிஷான் சங்கத் தீர்மானமும் உறுதி செய்கிறது.

உலக மேலாதிக்க வர்க்கப் போரால், பதிலடி வரிவிதிப்பால் விவசாயம் சார்ந்த உற்பத்திப் பொருட்களும், சிறு, குறு, நடுத்தரத் தொழில் சார்ந்த உற்பத்திப் பொருள்களும் பாதிக்கப்படும். இதனால், இலட்சக்கணக்கான விவசாயிகளின், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நிலை குலைந்துப்போகும், சூறையாடப்படும், மரணக் குழியில் மக்கள் தள்ளப்படுவார்கள் என்கிற அக்கறையால், ஆவேசப்பட்டு சங்கிகளின், மோடி அரசின் நாடி நரம்பெல்லாம் துடிக்கவில்லை. டிரம்பின் அச்சுறுத்தலால், மிரட்டலால், நாட்டின் நலன் பாதிக்கப்படுகிறது. இறையாண்மை கேள்விக்குக்குள்ளாக்கப்படுகிறதே என்பதற்காக நாடி நரம்பெல்லாம் துடிக்கவில்லை. அவர்களின் நாடி நரம்பெல்லாம் அசைவப்பாலான –  கவிச்சிப்பால் பொருட்களுக்காகத் தான் துடிக்கிறது.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன