இந்திய தேர்தல் ஆணையம், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) அறிவித்த போது, அதன் நோக்கம் பட்டியலில் உள்ள இறந்து போனவர்கள், இருமுறை பதிவு செய்தவர்கள், வெளிமாநிலங்களுக்குக் குடியேறிவிட்டவர்களை நீக்கி வாக்காளர் பட்டியலைச் சுத்தம் செய்வது தான் எனக் கூறியது. மேலும் இதன் மூலமாக நியாயமான தேர்தலை உறுதிசெய்யவிருப்பதாகவும் அது கூறியது. ஆனால், பீகாரின் ஒட்டுமொத்த சமூகத்தையும் மதரீதியில் பிளவுபடுத்தி மக்களை மோதவிடக்கூடிய ஆபத்து, மணிப்பூரைப் போல பீகாரையும் மாற்றக்கூடியதொரு ஆபத்து இந்த நடவடிக்கையின் பின்னணியில் ஒளிந்து கொண்டிருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களின் விளைவாக தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்யலாம் அல்லது போராட்டத்தின் தீவிரத்தைக் கண்டு அஞ்சித் தேர்தல் ஆணையமே கூடப் பின்வாங்கலாம். ஆனால் சரிசெய்யமுடியாத தவறுகள் ஏற்கெனவே இழைக்கப்பட்டுவிட்டன. சமூகத்தை மதரீதியில் பிளவுபடுத்தும் வேலையைத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கி வைத்துவிட்டது. இஸ்லாமியர்கள் மீதான சந்தேகப் பார்வை ஒவ்வொரு பீகாரியின் மனதிற்குள்ளும் விதைக்கப்பட்டுவிட்டது. இஸ்லாமியர்களது குடியுரிமை குறித்த கேள்விகள் தற்போது பீகாரில் சகஜமாக்கப்பட்டுவிட்டன.
இந்த ஆண்டின் பின்பாதியில் நடக்கவிருக்கின்ற பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்காக எஸ்.ஐ.ஆர். திட்டத்தை, தேர்தல் ஆணையம் கடந்த ஜூன் 24-ஆம் தேதியன்று அம்மாநிலத்தில் தொடங்கியது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இது வழமையான வாக்காளர் பட்டியல் திருத்தம் போல காட்டப்பட்டாலும், அதன் உள்ளார்ந்த நோக்கம் வேறுவிதமானதாக இருக்கிறது.
மாநிலம் முழுவதும் உள்ள 8 கோடி வாக்காளர்களின் தரவுகளைச் சரிபார்க்கவும், அவர்களது ஆவணங்களைச் சோதனை செய்யவும் 80,000 பூத் நிலை அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு நாள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு உடனடியாக களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அதிகாரியும் வீடு வீடாகச் சென்று இந்த வேலையைச் செய்யவிருக்கின்றனர். இந்த அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்காக தேர்தல் ஆணையம் வழங்கிய கையேட்டில், “சட்டவிரோதமாக குடியேறியவர்களைக்” கண்டறிந்து, அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் இதுதான் அதிகாரிகளின் பிரதான பணி என அப்பட்டமாகக் கூறப்பட்டிருந்தது.
இத்துடன் வாக்காளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என 13 ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது, அதில் ஆதார் அட்டையும், ரேசன் அட்டையும் இல்லை. அதாவது ஆதார் அட்டையையும், ரேசன் அட்டையையும் வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கான அடையாள அட்டையாக ஏற்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. அதுமட்டுமன்றி 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள், அதாவது 1987-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் அவர்கள் கட்டாயமாக தங்களது பெற்றோரில் ஒருவரது பிறப்புச் சான்றிதழைக் காட்ட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இது அப்பட்டமாக என்.ஆர்.சி. என்றழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உள்ளதொரு நிபந்தனையாகும். அசாமில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுகிறோம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட என்.ஆ.சி.யின் காரணமாக அந்த மாநிலமே பிளவுபட்டு வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கிற சூழலில் அதையே வேறு பெயரில் பீகாரில் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தப் பார்க்கிறது.
“பீகார் மாநிலம் முழுவதும், குறிப்பாக எல்லையோர மாவட்டங்களில் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியுள்ள இஸ்லாமியர்கள், சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பதுடன், அவர்கள் தேர்தலில் இந்து விரோத சக்திகளுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்கின்றனர். அவர்களைக் கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ். பாஜக உள்ளிட்ட காவி பாசிச அமைப்புகள் பல வருடங்களாக உருவாக்கி வைத்திருக்கும் கதையாடலை உண்மை எனத் தேர்தல் ஆணையமே பிரச்சாரம் செய்கிறது.
80,000 அரசு அதிகாரிகளுக்கு இந்தக் கண்ணோட்டத்தில் பயிற்சி கொடுத்து, வீடு வீடாக அனுப்பி வைத்திருக்கிறது. தேர்தல் குறித்த சட்டங்களின் படி ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது வேறு ஒரு இடத்தில் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தாலோதான் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியும். ஆனால் தேர்தல் ஆணையமோ, சட்டவிரோத குடியேறிகளை நீக்கலாம் என்று சட்டத்தில் இல்லாத ஒரு சரத்தை இந்துத்துவ பாசிச சக்திகளின் வசதிக்காக நுழைத்திருக்கிறது.
இந்த அறிவிப்பு வெளியானவுடனேயே காங்கிரஸ், இராஷ்டிரிய ஜனதா தளம், சிபிஐ எம்.எல் லிபரேசன், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை எதிர்க்க ஆரம்பித்தனர்.
“தேர்தல் ஆணையம் பாஜகவின் ஓட்டுத் திருட்டுப் பிரிவாக செயல்படுகிறது” என ராகுல்காந்தி இதனை விமர்சித்தார்.
“இந்த முறையின் மூலம் 8 கோடி வாக்காளர்கள் உள்ள பீகாரில், சுமார் 1.2 கோடி பேர், அதிலும் குறிப்பாக ஏழைகள், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளது” என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் எச்சரித்தார்.
யோகேந்திர யாதவ் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்களும், பியூசிஎல், ஏடிஆர் உள்ளிட்ட அமைப்புகள், இது தேசிய குடிமக்கள் பதிவேட்டை ( NRC) கொல்லைப்புறமாகக் கொண்டு வரும் சதி எனக் கண்டித்ததுடன், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.
உச்ச நீதிமன்றம், இந்த வழக்குகளை விசாரித்து தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயலைக் கண்டித்து அதற்கு இடைக்காலத் தடை வழங்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இதற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை அங்கீகரித்திருப்பதுடன், ஆதார் அட்டையையும், ரேசன் அட்டையையும் ஏற்கப்படும் ஆவணங்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளும்படி தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறது.
பாசிச சக்திகளுடன் தேர்தல் ஆணையம் கைகோர்த்துச் செயல்படுவது இது முதல்முறையல்ல. 2019 மற்றும் 2024 பாராளுமன்றத் தேர்தல்களின் போது மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள் இஸ்லாமிய விரோத கருத்துக்களைப் பிரச்சாரம் செய்ததுடன், வெளிப்படையாக தங்களது மேடைப் பேச்சுகளிலேயே மதவெறுப்பைத் தூண்டிப் பேசினார்கள் ஆனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. 2021 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலை 8 கட்டமாக நடத்தியது, 2023 குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதியை தள்ளிப்போட்டது என பாஜகவிற்கு ஆதரவாகப் பல சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி, 2023-ஆம் ஆண்டு முதல், தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கச் சட்ட திருத்தம் கொண்டு வந்து தாங்கள் விரும்புபவர் மட்டுமே தலைமைத் தேர்தல் அதிகாரியாக வரமுடியும் என்ற நிலையைக் காவி பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கின்றனர்.
தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு ஆதார் அட்டையையும், ரேசன் அட்டையையும் வாக்காளர் புதுப்பிப்புக்கான ஆவணமாக ஏற்றுக் கொள்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் “சட்டவிரோத குடியேறிகள்” குறித்து தான் வெளியிட்ட கையேட்டில் கூறியிருப்பதைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது. ஆனால் இந்த அறிவிப்புகள் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் உருவாக்கப் போவதில்லை. பூத் அதிகாரிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சியின் படி தாங்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு இஸ்லாமியரையும் சட்டவிரோத குடியேறி என்று சந்தேகிப்பதுடன் அவரது பிறப்புச் சான்றிதழைக் கொடுக்காவிட்டால் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவதாக மிரட்டுகின்றனர்.
தேர்தல் அதிகாரிகள் மட்டுமல்ல, தற்போது பீகாரின் ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்களது அண்டை வீட்டாரின் சந்தேகப் பார்வையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்
– “நீங்கள் உண்மையில் இங்கிருந்தவரா?”
– “உங்கள் தாத்தா-பாட்டி வங்காளதேசத்திலிருந்து குடியேறினார்களா?”
– “உங்கள் தந்தை அல்லது தாத்தாவின் பிறப்பு சான்றிதழை ஏன் காட்ட முடியவில்லை?”
என்பது போன்ற கேள்விக் கணைகள் சமூகத்திலிருந்து தினந்தோறும் அவர்கள் மீது வீசப்படும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு எனத் தொடங்கியது, குடியுரிமை விவாதமாகவும், நாளடைவில் ஒரு சமூக முரண்பாடாகவும் மாற்றப்படும். பீகார் முஸ்லீம்கள் என்றாலே அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என முத்திரை குத்தப்படுவதுடன், அவர்களது விசுவாசம் இனி ஒவ்வொரு இடத்திலும் கேள்விக்குட்படுத்தப்படும். இதுதான் மணிப்பூரில் நடந்தது. பல ஆண்டுகளாக இன ரீதியில் பிரிந்து கிடந்த மெய்தி மற்றும் குக்கி இனக்குழுக்களுக்கு மத்தியில் காவி பாசிச சக்திகள் இந்து கிறிஸ்தவர் என மதப்பிரிவிணையை விதைத்ததன் விளைவு இன்று ஆண்டுக்கணக்கில் அம்மாநிலம் கலவரத்தால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இந்த விசயத்தில் எதிர்க்கட்சியின் பின்வாங்கலையும் சுட்டிக்காட்டுவது முக்கியமாக இருக்கிறது. ஆரம்பத்தில் அவர்கள் எஸ்.ஐ.ஆரை கடுமையாக எதிர்த்தாலும், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்புக்குப் பிறகு அவர்களின் நிலைப்பாடு மென்மையானதாக மாறியிருக்கிறது. எஸ்.ஐ.ஆரை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று கோருவதற்குப் பதிலாக, அவர்கள் “நியாயமான மற்றும் உள்ளடக்கிய மேம்பாடு” என்று கூற ஆரம்பித்துள்ளனர். தேர்தல் ஆணையம் ஆதார் அட்டையை ஏற்றுக் கொண்டிருப்பதையே தங்களது வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர்.
இங்கே உண்மையான நெருக்கடி என்பது வாக்காளர் பட்டியல்கள் அல்லது தேர்தல்கள் பற்றியது மட்டுமல்ல – நாம் என்ன வகையான சமூகமாக இருக்க விரும்புகிறோம் என்பது பற்றியது. மதரீதியில் நாட்டு மக்களைப் பிரிப்பதென்பது காவி பாசிச சக்திகளுக்கு வேண்டுமானால் நன்மை செய்யக்கூடியதாக இருக்கலாம் ஆனால் கோடிக் கணக்கான உழைக்கும் மக்களுக்கு இதன் மூலம் எந்த நன்மையும் இல்லை.
இந்தப் போராட்டம் வாக்களிக்கும் உரிமையைப் பற்றியது மட்டுமல்ல, சமூகத்தின் பார்வையில் சமமாக வாழும் உரிமையைப் பற்றியது. அப்படிப்பட்ட உரிமையை நம்மில் சிலரிடமிருந்து பிடுங்கி எறிந்துவிடக் காவி பாசிஸ்டுகள் முயற்சிக்கின்றனர். அதனை எப்போதும் அனுமதிக்க முடியாது. அனுமதிக்கவும் கூடாது.
- அறிவு
வடமாநில மக்களுடைய சிந்தனையும், வளர்ச்சியும் இந்திய சமூகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதற்கான காரணமாக உள்ளது. சாதி மத ரீதியான கலவரங்களை தூண்டுவது. சிந்திக்க முடியாத அளவிற்கு மத போதையில் சிக்குண்டு கிடக்கின்றனர். இதனை உடைப்பதற்கு முற்போக்கு பாத்திரங்கள் அங்கு வளர்க்கப்பட வேண்டும்.