விஜய் மல்லையா ஒரு திருடன்!

“எந்தத்  திருடன், தான் ஒரு திருடன் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறான்” என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனைப் பலபேர் கேட்டிருக்கக்கூடும். ஆனால் அப்படிப்பட்டவர்களைத் தன் வாழ்நாளில் பார்த்திருப்பவர்கள் மிகச்சிலரே. தற்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் அப்படியொரு திருடனைப் பார்ப்பதற்கான வாய்ப்பைப் பெற்றவர்களாக இருக்கிறோம்.

கிங் ஃபிஷர் நிறுவன உரிமையாளர் விஜய்  மல்லையா என்றாலே நம் மனதில் தோன்றும் விஷயம் அவர் இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோடிக்கு கடன் வாங்கிவிட்டுத் திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டார் என்பது தான்.

இந்நிலையில் விஜய் மல்லையா ஒன்பது ஆண்டுகள் கழித்து ராஜ் ஷமானி என்ற யூடியூபரின் சேனலில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பாட்காஸ்ட் ஒன்றில் பேசியிருந்தார். அதன் சிறுபடம் (Thumbnail) “நான் திருடன் இல்லை” என்று கொட்டை எழுத்தில் இருந்தது. இதில் தன்மீதுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு அவர் இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார். 

நாமும் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் “விஜய் மல்லையா ஒரு திருடன்” என்று தலைப்பு வைத்திருக்கிறோம். இதனை நேர் செய்வதற்கு அவர் அளித்த பதிலில் உள்ள சில பொய்களை மட்டும் வாசகர்களுக்காக இங்கே தருகிறோம். 

பொய்-1

மார்ச் 2, 2016 அன்று விஜய் மல்லையா நாட்டை விட்டு ஓடிவிட்டார் என்பது வரலாறு. ஆனால் நேர்காணலில் இதனை மறுத்து விட்டார். அதாவது தான் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும், அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் தகவல் தெரிவித்த பிறகு தான் ஜெனிவா சென்றதாகவும் கூறியுள்ளார்.

மறைந்த அருண் ஜெட்லியிடம் தகவல் தெரிவித்ததற்கான எந்த ஆதாரத்தையும் மல்லையா காட்டவில்லை. ஒருவேளை உண்மையாகவே இருந்தாலும்கூட, மறைந்த ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி ஆதாயம் அடைய நினைப்பது தொழிலதிபர் மல்லையாவுக்கு அருவருப்பாகத் தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்க உண்மையில் என்ன நடந்தது.

விஜய் மல்லையா சுமார் 9000 கோடி ரூபாய் கடனை அரசு வங்கிகள், நிதி நிறுவனங்கள் உட்பட 14 நிறுவனங்களில் வாங்கியுள்ளார். இதில் 1600 கோடி எஸ்பிஐ வங்கியுடையது. மேலும் இதுவே அதிக மதிப்புடைய கடனாகும். இந்நிலையில் 28-02-2016 அன்று எஸ்பிஐ வங்கியினுடைய சில மூத்த அதிகாரிகள் விஜய் மல்லையாவுக்கு கடன் வழங்கியது குறித்து பேசுவதற்காக உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் துஸ்யந்த் தவேவை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின் போது, விஜய் மல்லையா நாட்டை விட்டுச் செல்வதற்கான வாய்ப்புள்ளது என்று தான் நம்புவதாக துஷ்யந்த் தவே எஸ்பிஐ வங்கி அதிகாரிகளிடம் உறுதியற்ற சொற்களில் கூறியுள்ளார். மேலும் அவ்வாறு செல்வதைத் தடுக்க, உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த நாள், பிப்ரவரி 29, 2016 அன்று காலையில் எஸ்பிஐ அதிகாரிகள் துஷ்யந்த் தவேவை சந்தித்த பிறகு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருந்தனர். ஆனால் எஸ்பிஐ அதிகாரிகள் தவேவை சந்திக்க செல்லவில்லை. 5 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 5, 2016 அன்று எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. ஆனால் விஜய் மல்லையா மார்ச் 2, 2016 அன்று நாட்டை விட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

பொய்-2

மல்லையா தனது ஊழியர்களைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். “நான் எனது ஊழியர்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறேன் என்பதை யார் வேண்டுமானாலும் சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும் எனது ஊழியர்களுக்கு நான் அளித்த கவனிப்பைப் பற்றி நான் பெருமைப்பட்டுக்கொள்வேன்”

விஜய் மல்லையா மீதான முதல் குற்றச்சாட்டு, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை என்பதுதான். மேலும் ஊழியர்களுக்கு 2012-ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து சம்பளம் வழங்குவதை நிறுத்திக்கொண்டது. பத்திரிக்கை செய்திகளின் படி 8 மாதங்கள் சம்பளம் பெறாமல் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 20, 2012 முதல் தங்களுடைய அனைத்து விமானங்களையும் நிறுத்தி விட்டன. மேலும், டிசம்பர் 31, 2012 அன்று, விமான நிறுவன உரிமத்தை     DGCA முறையாக இரத்து செய்துவிட்டது.

8 மாதங்கள் சம்பளம் வழங்காமல் ஊழியர்களை வேலை வாங்கியதற்காகத் தொழிலதிபர் மல்லையா பெருமைப்பட்டிருக்க வேண்டும். மாறாக ஊழியர்களின் மீது அக்கறை கொண்டுள்ளதாகக் கூறுவது நகைப்புக்குரியது. மேலும் தொழிலதிபர் கூறியபடி, ஊழியர்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார் என்பதை இப்போது சரிபார்ப்போம்.

விஜய் மல்லையா ஊழியர்களின் சம்பளத்தை வழங்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாகக் கூறியுள்ளார். மேலும் அவர், “கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பணம் டெபாசிட்டில் இருந்தது. எனவே விமான ஊழியர்களின் சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதற்காக நான் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் வங்கிகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்த நிலையில் நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது” என்று கூறியுள்ளார். இது உண்மையா?

மல்லையா முன்வைக்கும் இந்த வாதத்தில் தெளிவுபடுத்தப்படாத இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, கர்நாடக உயர்நீதிமன்றம் உண்மையில் 2013-ஆம் ஆண்டில் நிதியைப் பறிமுதல் செய்தது. ஆனால் 2012-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து ஊழியர்களுக்குச் சம்பளம் கிடைக்கவில்லை. எனவே சம்பளம் செலுத்த முடியாததற்கு உயர் நீதிமன்றம் தான் காரணம் என்று கூறுவது தொழிலதிபருக்கு பொய்யாகத் தெரியவில்லை.

இரண்டாவதாக, 2013-ஆம் ஆண்டு, மல்லையா உயர் நீதிமன்றத்தில் ஊழியர்களின் சம்பளத்தை வழங்க விரும்புவதாக மனு தாக்கல் செய்தபோது, அந்த மனுவில் ஒரு மாத சம்பளம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. நிலுவையில் உள்ள முழு சம்பளத்தையும் அல்ல, ரூ.13,00,00,000 மட்டும் விடுவிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியது. ஆனால், உயர்நீதிமன்றம் மனுவை நிராகரித்தது உண்மைதான். ஒருவேளை அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் மட்டுமே கிடைத்திருக்கும். உண்மையில், அவர்களுக்கு 8 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை.

மேலும், நிறுவனத்தின் சுமார் 3000 ஊழியர்களுக்கு ரூ. 3,00,00,00,000 சம்பளம் வழங்கப்படவில்லை. இது இன்றுவரை செலுத்தப்படவில்லை. ஊழியர்களில் பலரின் சம்பளம் ரூ. 25,00,000 – 30,00,000 வரை நிலுவையில் உள்ளது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தவிர்த்த பிற வெற்றிகரமான நிறுவனங்களும் உள்ளன என்பதை ”தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாகக் கூறும்” தொழிலதிபருக்கு நினைவூட்டப்பட்டது. ஏனென்றால் அந்த நிறுவனங்களின் நிதியில் இருந்து தங்களுக்கு சம்பளம் கொடுத்திருக்கலாம் என்று விமான ஊழியர்கள் கேட்டார்கள்.

முரண்-1

மக்களைக் கோபப்படுத்தியது இதுதான். தொழிலதிபரின் தனிப்பட்ட வாழ்க்கையில், வெற்றிகரமான நிறுவனங்களின் நிதியை அவரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் அனுபவித்தீர்கள். அதேபோல் தோல்வியடைந்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களையும் அனுபவித்தீர்கள்” என்ற கேள்விக்கு கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்.

விஜய் மல்லையா, கிங்ஃபிஷர் மட்டுமே தனது வாழ்க்கையில் முன்னுரிமை அல்ல என்று பதிலளித்தார். “எனது வாழ்க்கையில் ஒரே சொத்து மற்றும் பொறுப்பு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், எனக்கு வேறு எதுவும் இல்லை, நான் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும், இல்லையா? துரதிர்ஷ்டவசமாக, ஒரு நிறுவனம் தோல்வியடைந்தால், முழு குழுவும் தோல்வியடைய வேண்டும் என்பது உங்கள் கருத்தா?

“உங்கள் கருத்து என்னவென்றால், நான் செயற்கையாக ஏதாவது ஒரு வகையில் எண்ணைக் குறைத்திருக்க வேண்டும், மற்ற எல்லா வணிகங்களின் பங்குதாரர்களையும் மறந்துவிட வேண்டும்? யுனைடெட் ஸ்பிரிட்ஸ், யுனைடெட் ப்ரூவரீஸ், எம்சிஎஃப்…?”

ஒருபுறம், ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை, மறுபுறம், விஜய் மல்லையா ஆடம்பரமான விருந்துகளை ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். டிசம்பர் 2015-இல் தனது 60-வது பிறந்தநாளில், மல்லையா கோவாவில் ஒரு பிரமாண்டமான விருந்தை நடத்தினார். அது இரண்டு நாட்கள் நீடித்தது. சுமார் இருநூறு விருந்தினர்கள் கலந்து கொண்டு தாஜ் ஹோட்டலில் தங்கினர். ஸ்பானிஷ் பாப் நட்சத்திரங்கள் என்ரிக் இக்லெசியாஸ் மற்றும் சோனு நிகம் போன்ற பிரபலங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டனர்.

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, இந்த விருந்துக்கு சுமார் ரூ.13,00,00,000 செலவிடப்பட்டது. எனவே, வெளிப்படையாக, ஒரு விருந்துக்கு ரூ.13,00,00,000 செலவிடக்கூடிய ஒரு கோடீசுவரர், தனது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு ரூ. 3,00,00,00,000 ஏன் செலுத்த முடியாது. உண்மையில், இந்தச் செயல்களுக்காக தொழிலதிபர் சிறிதும் கவலைப்படவில்லை என்பதை கீழ்க்காணும் அவரின் பதிலில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.

“அதற்கு நானே பணம் செலுத்தினேன். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பணம் செலுத்தும் நிலையில் இல்லை. சரி, ஒருவேளை அது ஒரு தவறாக இருக்கலாம். நான் அநேகமாக இலண்டனுக்கு வந்திருக்க வேண்டும். நான் இங்கு விருந்து வைத்திருந்தால், யாருக்கும் தெரிந்திருக்காது.”

அடிப்படையில், அவர் ஒரு தொழில் அதிபர் என்பது அவரது வாதம். அவருக்குப் பல வெற்றிகரமான நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒரு நிறுவனம் தோல்வியடைந்தால் என்ன செய்வது? அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்குச் சம்பளம் கிடைக்கவில்லை என்றால், அதற்குக் காரணம் அவர்கள் வேலைசெய்த நிறுவனம் தோல்வியடைந்துவிட்டது என்பதால் தான். ஆனால் அவர் இன்னும் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவே இருக்கிறார். அவர் தொடர்ந்து விருந்து வைக்கலாம். அவர் விரும்பும் அளவுக்குச் செலவு செய்யலாம். ஏனென்றால் மற்ற நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலைமை குறித்து அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவிக்கையில், “நீங்கள் வங்கிகளுக்கு நிறைய பணம் செலுத்த வேண்டியிருந்தாலும், உங்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களை நீங்கள் கொண்டாடினால், பொதுமக்களின் பணத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை என்று தோன்றுகிறது” என்று கூறினார்.

முரண்-2

சம்பளம் கொடுப்பதை மறந்துவிடுங்கள், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்ட வரி, வருமான வரித் துறைக்கு கூட டெபாசிட் செய்யப்படவில்லை. அதேசமயம், சட்டத்தின்படி, 7 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்பட வேண்டும். இதன் காரணமாக, ஊழியர்கள் பணத்தை செலுத்துவதற்கான குறுஞ்செய்தியைப் பெறத் தொடங்கினர்.

தொழிலதிபர் மல்லையா, தனது ஊழியர்களைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறுவதற்கு இதைவிடப் பெரிய சாட்சி எதுவும் தேவையில்லை. இல்லையா..?

பொய்-3

முதலில், நான் இங்கே ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன், ‘நீங்கள் கடன் வாங்கியுள்ளீர்கள்என்று தொடர்ந்து சொல்கிறீர்கள், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் என்ற இயங்கும் நிறுவனம்தான் கடன் வாங்கியது, நான் ஒரு உத்தரவாதம் அளிப்பவன் எனவே இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.”

நுட்பமாகப் பார்த்தால், அவர் சொல்வது சரிதான், ஆனால் அது அரை உண்மை. தொழிலதிபர் மல்லையா தனக்காகக் கடனை வாங்கவில்லை என்றும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் வாங்கிய கடனுக்கு, தான் தனிப்பட்ட உத்தரவாதம் அளித்ததாகவும் கூறுகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் கடன் வாங்கியவர் கடனை திரும்ப செலுத்தத் தவறினால், உத்தரவாதம் அளித்தவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

இதனை இந்திய நீதிமன்றங்கள் மட்டுமல்ல, இங்கிலாந்து நீதிமன்றங்களும் கூட கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவது மல்லையாவின் சட்டப்பூர்வ பொறுப்பு என்று கூறியுள்ளன.

பொய்-4

தன்னை நியாயப்படுத்திக் கொள்ளும் பாட்காஸ்டில், மல்லையா இது எல்லாம் கடனைத் திருப்பிச் செலுத்தாதது பற்றியது என்றும், அவர் மீது வேறு எந்தக் குற்றவியல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் கூறினார்.

மல்லையாவுக்கு எதிரான அமலாக்கத் துறையின் வழக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணமோசடி ஒரு கிரிமினல் குற்றமாகும்.

ED-இன் படி, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கடன் தொகையிலிருந்து ரூ.35,47,00,00,000 பணமோசடியின் மூலம் பிற நோக்கங்களுக்காக மாற்றியுள்ளது. 2008 மற்றும் மார்ச் 2012-க்கு இடையில், விமான குத்தகைகளை அதிகமாகக் காட்டியதன் மூலம் ரூ.34,32,00,00,000 மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர,     SBI மற்றும்     PNB ஆகியவற்றிலிருந்து கடன் வாங்கிய ரூ. 45,42,00,000 ஒரு கார்ப்பரேட் ஜெட் விமானத்தின் குத்தகையை செலுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வழக்கமாக மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினரால் பயன்படுத்தப்படும் ஜெட் விமானமாகும். இந்தக் கேள்விக்கு உண்மையாகவே பதிலளித்திருந்தார்.

“அது விமான நிறுவனத்தின் சொந்த சொத்து, நான் அதைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறினர். எனது தனிப்பட்ட பயணங்களுக்கு அதைத் தவறாகப் பயன்படுத்தினேன்.” என்பது உண்மைதான். ஆனால் “பம்பாய் விமான நிலையத்தில் திரு. அம்பானியின் விமானங்களில் தொடங்கி, வரிசையாக நிற்கும் தனியார் ஜெட் விமானங்களைப் பார்த்து, அந்த ஜெட் விமானத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டால், உங்களுக்குப் பதில் கிடைக்கும் என்று பதிலளித்துள்ளார்”.

தனியார் ஜெட் விமானங்களை தவறாகப் பயன்படுத்துவதை அவர் முற்றிலுமாக மறுக்கவில்லை. அம்பானி கூட இதைச் செய்கிறார் என்று மறைமுகமாகக் கூறி தலைப்பைத் திசை திருப்பி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்.

மேலும், எரிபொருள் கட்டணம், விமான நிலைய கட்டணம், ஹோட்டல் கட்டணம் மற்றும் பிற இயக்கச் செலவுகளுக்கு பணம் செலுத்துவது என்ற போர்வையில், மல்லையா ரூ.50,90,00,000 இங்கிலாந்தில் உள்ள ஃபார்முலா 1 அணியான ஃபோர்ஸ் இந்தியாவுக்குத் திருப்பிவிட்டார்.

இப்படி முடிவே இல்லாமல், பணமோசடி குற்றச்சாட்டுகளின் பட்டியல் மிக நீளமானதாக உள்ளது.

2008-ஆம் ஆண்டில், எஸ்பிஐயிடமிருந்து பெறப்பட்ட கடனில், ரூ.15,90,00,000 ஐபிஎல் அணியான இராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்குப் பல கணக்குகளைப் பயன்படுத்தி திருப்பி விடப்பட்டுள்ளது. ஏனெனில் எஸ்பிஐ பரிமாற்றத்தை அனுமதிக்க மறுத்துவிட்டது.

பாட்காஸ்டில், நடுவரின் ஜெர்சிகளில் கிங்ஃபிஷர் விளம்பரங்களுக்கான கட்டணத்தை செலுத்த இந்த பணம் ஆர்சிபிக்கு வழங்கப்பட்டது என்று மல்லையா கூறினார். ஆனால் இவை விளம்பரக் கட்டணங்கள் என்றால், எஸ்பிஐ ஏன் பரிமாற்றத்தை அனுமதிக்க மறுத்தது?

மல்லையா மீதான மற்றொரு குற்றச்சாட்டு என்னவென்றால், விண்ணப்பிப்பதற்கு முன்பே அவர்கள் ஐடிபிஐ அதிகாரிகளை தங்கள் கடனை நிறைவேற்றும்படி சமாதானப்படுத்தியிருந்தனர். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் நிகர மதிப்பு எதிர்மறையாகவும், கடன் மதிப்பீட்டை குறைத்துக் காட்டப்பட்டு இருந்தபோதிலும், வங்கி அதிகாரிகள் பிணையும் இல்லாமல் கடனை அங்கீகரித்தனர். ஐடிபிஐயிடமிருந்து கடன் வாங்கும்போது விமான நிறுவனம் மிகைப்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதற்குக் காரணம் அவர்களின் ஆலோசனை நிறுவனமான கிராண்ட் தோர்ன்டனின் அறிக்கையைச் சமர்ப்பித்ததுதான். ஏனெனில் அதில் விமான நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பீடு ரூ. 34,06,00,00,000 எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த மதிப்பீடு எதிர்கால வருவாய் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டது எனவே இதனை ஐடிபிஐ வங்கியிடம் காட்டவில்லை. அதேபோல், கார்ப்பரேட் உத்தரவாதத்தை வழங்கும்போது கூட இதேபோன்ற ஒரு மோசடியைச் செய்தனர்.

நவம்பர் 2008-இல், மல்லையாவின் யுனைடெட் ப்ரூவரீஸ் ஹோல்டிங் நிறுவனம் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் நிறுவன உத்தரவாதமாக மாறியது, அதன் மதிப்பு ரூ.60,36,00,00,000 என்று கூறியது. அதேசமயம், மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.5,05,00,00,000 மட்டுமே இருந்தது.

மேலும், மல்லையா வெளிநாட்டில் சொத்துக்களை மறைத்து வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ED குற்றப்பத்திரிகையின்படி, 2010-ஆம் ஆண்டு, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கடன்கள் மறுசீரமைக்கப்பட்டபோது, விஜய் மல்லையா இந்தக் கடன்களுக்கு தனிப்பட்ட உத்தரவாதங்களை வழங்கினார், ஆனால் அவரது சொத்துக்களின் மதிப்பை குறைத்துக் காட்டினார். ED-யின் கணக்குப்படி, அவரது சொத்து மதிப்பு ரூ.31,63,00,00,000. ஆனால் வங்கிகளுக்கு, அவர் தனது சொத்து மதிப்பு ரூ.13,95,00,00,000 மட்டுமே என்று சமர்ப்பித்துள்ளார். ED-யின் வாதப்படி, மல்லையாவுக்கு பல சொத்துக்கள் உள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவர் வேண்டுமென்றே வங்கிகளுக்கு வெளியிடவில்லை.

இது தவிர, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றொரு மோசடியைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2012 மற்றும் 2015-க்கும் இடையில், பயணிகளிடமிருந்து அவர்கள் வசூலித்த சேவை வரி ரூ. 1,00,00,00,000 அதிகமாக இருந்தது, ஆனால் அது வரித் துறையில் டெபாசிட் செய்யப்படவில்லை.

இவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், ஆச்சரியப்படும் விதமாக, பாட்காஸ்டின் போது, விஜய் மல்லையா தன் மீது எந்தக் குற்றவியல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்று கூறினார். ஒரு கட்டத்தில், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர் என்பது பணம் செலுத்தத் தெரிந்த ஆனால் பணம் செலுத்தாத ஒரு நபர்; அது ஒரு குற்றமா?” (Willful default is a person who can pay but doesn’t pay; that’s a crime?) என்று வினவினார்.

பணம் இருந்தும் கடனைத் திருப்பிச் செலுத்த மறுக்கும் ஒருவர் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் என்று அழைக்கப்படுகிறார். இது வங்கியைக் கொள்ளையடிக்கவில்லை என்றால், அது என்ன? வங்கியின் பெட்டகத்தை உடைத்து உள்ளே நுழைவது மட்டுமே கொள்ளையாகக் கருதப்படுமா? (A person is called a willful defaulter who refuses to repay loans despite having the money to do so. If this is not robbing the bank, what is it? Is only breaking and entering into a bank’s vault considered robbery?)

மல்லையாவின் கூற்றுப்படி, வங்கியின் பெட்டகத்தை உடைத்து உள்ளே நுழைவது மட்டுமே கொள்ளையாகக் கருதப்படவேண்டும் என்பதுதான். அப்பொழுதுதான் மல்லையாக்கள் தப்பித்துக்கொள்ள முடியும்.

பொய்-5

பாட்காஸ்டில், மல்லையாவின் அடுத்த முக்கிய கூற்று, மல்லையா வங்கிகளுக்கு ரூ.62,03,00,00,000 கடன் செலுத்த வேண்டியிருந்தது என்பதாகும். ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது போல் ரூ.90,00,00,00,000 அல்ல. மேலும், 2.5 மடங்கு அதாவது ரூ.1,40,00,00,00,000 ஏற்கனவே வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். இதற்காக, மல்லையா 2017-ஆம் ஆண்டு பெங்களூரு கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் உத்தரவை வழங்கினார். அதில் ரூ.62,03,00,00,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தை ராஜ் ஷமானி தானே சரிபார்க்கிறார். மேலும் அவர் தனது யூடியூப் காணொளியின் விளக்கத்தில் இந்த ஆவணத்திற்கான இணைப்பை வழங்கியுள்ளார். எனவே, நீங்கள் சென்று இந்த ஆவணத்தைச் சரிபார்த்துக்கொள்ளலாம். அதில் 2017 என்று குறிப்பிடப்பட்டுள்ளது உண்மைதான், ஆனால் வேறு என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

“பிரதிவாதிகள் எண். 1 முதல் 4 வரை கூட்டாக ரூ.62,03,00,00,000 தொகையை ஆண்டுக்கு 11.5% கூடுதல் வட்டியுடன் செலுத்த வேண்டும், இதனை விண்ணப்ப தேதியிலிருந்து, அதாவது ஜூன் 25, 2013 முதல் முழுப் பணத்தையும் கட்டி முடிக்கும் வரை.

இதன் பொருள் இந்தத் தொகை ரூ.62,03,00,00,000 நிற்கவில்லை. 2013 முதல் ஒவ்வொரு ஆண்டும், ரூ.62,03,00,00,000-க்கு 11.5% வட்டி வசூலிக்கப்படும் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் ஊடகங்கள் ரூ.90,00,00,00,000 மற்றும் ரூ.1,40,00,00,00,000 புள்ளிவிவரங்களைப் பற்றிப் பேசுவதற்கு இதுவே காரணமாக இருக்க வேண்டும். எனவே மொத்தக் கடன் ரூ.62,03,00,00,000 என்ற மல்லையாவின் கூற்று தவறானது.

பொய்-6

2012 மற்றும் 2015-க்கும் இடையில், வங்கிகளுடன் நான்கு முறை தீர்வு காண முன்வந்ததாகவும், ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை என்றும் மல்லையா பாட்காஸ்டில் கூறினார்.

இதை நம்புவது உண்மையில் கடினம், மேலும் ஒரு குழு 2012 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளின் அனைத்துத் தொடர்புடைய செய்திக் கட்டுரைகளையும் ஆராய்ந்தது, ஆனால் இந்தக் காலகட்டத்தில் விஜய் மல்லையா எந்தவொரு தீர்வுத் திட்டங்களையும் வழங்கியதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் காணவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த பாட்காஸ்டின் போது, விஜய் மல்லையாவிடம் இந்தக் காலகட்டத்தில் அவர் அளித்த தீர்வுகளுக்கான ஆதாரம் கேட்கப்பட்டபோது, அதற்கான ஆதாரங்கள் உச்ச நீதிமன்ற பதிவுகளில் உள்ளன என்று கூறினார்.

மேலும் நீங்கள் அவர்களுக்குத் தீர்வு வழங்க முன்வந்தபோதும் அவர்கள் அதை ஏற்கவில்லை என்பதற்கு உங்களிடம் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்று மீண்டும் வினவிய போது, இந்திய உச்ச நீதிமன்றத்தின் பதிவுகளை விடச் சிறந்த ஆதாரம் என்ன வேண்டும் என்றும், இது பொது ஆவணங்களாக நீதிமன்றத்தில் உள்ளது என்றும் கூறினார்.

பொய்-7

நேர்காணலின் மற்றொரு கட்டத்தில், மல்லையா 2016-ஆம் ஆண்டில் நான்கு தீர்வுகளை வழங்கியதாகக் கூறினார். அது சரிதான், ஆனால் 2016-இல் அவரது முதல் சலுகை ரூ.40,00,00,00,000 மட்டுமே. அவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி, ஊடகங்கள் அவரைத் தப்பியோடியவராக அறிவித்தபோதுதான் இந்தச் சலுகையை வழங்கினார்.    

மூத்த பத்திரிகையாளரும் ‘தி விஜய் மல்லையா ஸ்டோரி’ என்ற புத்தகத்தின் ஆசிரியருமான கே.கிரிபிரகாஷ் எழுதிய இந்த கட்டுரையைப் படிக்குமாறு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். தனது கட்டுரையில், விஜய் மல்லையாவின் பல கூற்றுகளின் உண்மைத் தன்மையை அவர் சரிபார்த்துள்ளார்.

இங்கு எழும் மற்றொரு கேள்வி என்னவென்றால், 2016-ஆம் ஆண்டுக்குள் மல்லையா தனிப்பட்ட முறையில் திவாலாகவில்லை என்றால், அவர் ஏன் ஒரு தீர்வை வழங்க முன்வந்தார்? ஏன் அவர் முழுப் பணத்தையும் திருப்பிச் செலுத்தவில்லை? நாட்டை விட்டு ஓடிப்போன பிறகுதான், எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கடனைத் திருப்பிச் செலுத்த முன்வந்தார்.

மேலும் மே 2020-இல், கோவிட் தொற்றுநோய் காலத்தில், எந்த நிபந்தனையும் இல்லாமல் கடனைத் திருப்பிச் செலுத்தத் தயாராக இருப்பதாக X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பொய்-8

2016-இல் என்னுடைய சொத்துக்களை முடக்கினீர்கள். ஒருபுறம் அந்த நபரின் சொத்துக்களை முடக்கிவிட்டு, மறுபுறம் அவரைத் திருடன் என்று அழைக்க முடியாது. வாங்கிய கடனைவிட இரண்டரை முறை கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் திருடன் என்று அழைக்கப்படுவது நானாகத்தான் இருக்க முடியும்.

இது என்ன மாதிரியான தர்க்கம்? யாராவது உங்களைக் கொள்ளையடித்துவிட்டு, இறுதியில் காவல்துறையினர் கொள்ளையடித்த பொருட்களை மீட்டெடுத்தால், அந்த நபர் திருடனாக இருப்பதை நிறுத்திவிடுவார் என்று அர்த்தமா? பலர் இதை சமூக ஊடகங்களில் கேலி செய்துள்ளனர். ஏனெனில் இந்த பாட்காஸ்டின் சிறுபடம் (Thumbnail) “நான் ஒரு சோர் இல்லை” என்று இருந்தது. இதனை மனதில் வைத்துக்கொண்டு, வோல்டர்மார்ட்டுடனான பாட்காஸ்டின் சிறுபடம் (Thumbnail) “நான் ஹாரி பாட்டரைக் கொல்ல விரும்பவில்லை” என்று கேலி செய்யப்பட்டிருக்கும்.

அதேபோல் மல்லையா பணத்தைத் விருப்பத்துடன் திருப்பிச் செலுத்தவில்லை. மாறாக பணம் அவரிடமிருந்து வலுக்கட்டாயமாக மீட்கப்பட்டுள்ளது. வங்கிகள் மல்லையாவின் பணத்தை மீட்டெடுத்திருந்தால் அல்லது சொத்துக்களை முடக்கியிருந்தால், இது அவர் செய்துள்ள மோசடி அல்லது குற்றத்தின் தன்மையைக் குறைப்பது ஆகாது. மேலும், ஒவ்வொரு பொருளாதார குற்றவாளியும் தங்கள் சொத்துக்களைப் பறிமுதல் செய்த பிறகு தங்கள் குற்றங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுவது வேடிக்கையானது, வினோதமானது, நகைப்பிற்குரியது.

பொய்-9

இந்த பாட்காஸ்டில், மல்லையா மற்றொரு சுவாரஸ்யமான கூற்றை முன்வைத்தார். 2008-ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு, அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்கச் சென்றதாக அவர் கூறினார். கிங்ஃபிஷர் நிறுவனத்தின் ஊழியர்களைக் குறைக்க விரும்புவதாகவும், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். ஆனால், அந்த நேரத்தில் மக்களுடன் இணைப்பும், அவர்களுக்கான வேலையும் மிகவும் முக்கியமானவை என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். மேலும், ஆட்குறைப்பிலிருந்து அவரைத் தடுத்ததாகவும், இதற்காக வங்கிகள் மல்லையாவுக்கு உதவும் என்று கூறினார்.

முதலாவதாக, இது உண்மையில் நடந்ததா இல்லையா என்பது தெரியாது. ஏனென்றால் மறைந்த பிரணாப் முகர்ஜி தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்த உலகில் இல்லை. ஆனால் இரண்டாவது விஷயம் என்னவென்றால், ஒரு தொழிலதிபர் தனது தனியார் நிறுவனத்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கலாம், ஆனால் அரசாங்கத்தால் அதைக் கட்டுப்படுத்த முடியாது. எந்தத் தொழிலதிபரையும் கட்டாயப்படுத்த முடியாது. மேலும் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் தொழிலதிபர்களிடம்தான் இருக்கும். எனவே விஜய் மல்லையா உண்மையிலேயே தனது ஊழியர்களைக் குறைக்க விரும்பினால், அதனை அவரால் செய்திருக்க முடியும். மாறாகத் தோல்விகளுக்கான பழியை அரசாங்கத்தின் மீது சுமத்துவதற்கு என்ன வகையான தர்க்கம்?

வெற்றிபெறும்போது, அவர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறார்கள். அவர்களின் முயற்சிகள் எவ்வாறு வணிகத்தை வளர்த்தன என்று மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள். ஆனால் வணிகம் தோல்வியடையும் போது, அவர்கள் மற்றவர்களைக் குறை கூறுகிறார்கள். அரசாங்கம் இதைச் சொன்னது. அரசாங்கம் தலையிட்டது. எனவே அரசாங்கங்கள் தோல்விகளுக்குப் பிறகு தங்கள் நிறுவனங்களை வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து மீட்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முடிவு

நீங்கள் யாரை ஒரு போஸ்டர் பாய் ஆக்குகிறீர்கள்? முக்கியமற்ற ஒருவரை. அப்படியா?” என்று மல்லையா கேள்வி எழுப்பினார்.

மல்லையா ஏன் ஒரே போஸ்டர் பாயாக இருந்தார்? என்பதற்கான பதில் அவரின் செயல்பாடுகளில் உள்ளது.

அதாவது, விமான ஊழியர்களுக்கு மாதக்கணக்கில் சம்பளம் வழங்கப்படாத நிலையில், அவர் தனது 60-வது பிறந்தநாளுக்கு மில்லியன் கணக்கில் செலவு செய்து கொண்டாடினார். பில்லியன் கணக்கான ரூபாய் கடனில் இருந்தபோது, அதை திருப்பிச் செலுத்துவதற்குப் பதிலாக, அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டார். ஒரு விமான ஊழியரின் மனைவி நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் திருமண தகராறு என்று கூறி மறுத்துள்ளார். இப்படிப்பட்ட ஒருவர் நிதி குற்றங்களுக்கும் தார்மீக திவால்நிலைக்கும் ஆளானதில் ஆச்சரியமில்லை.

இந்த பாட்காஸ்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின்படி, மல்லையா இன்னும் வங்கிகளுக்கு ரூ.70,00,00,00,000 கடன்பட்டுள்ளார். விஜய் மல்லையாவின் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் பதிலளிக்க வேண்டும். மேலும் பொதுமக்களின் கடின உழைப்பில் சேர்த்த பணத்தை வங்கியில் இருந்து திருடிக் கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற ஒரு திருடனின் பதில்கள் மக்கள் மன்றத்தின் முன் இறுதி செய்யப்பட வேண்டும்.

  • மகேஷ்

தகவல் ஆதாரம்:

  1. https://www.youtube.com/watch?v=MdeQMVBuGgY&t=9s
  2. https://www.youtube.com/watch?v=v3Uc85H6e5Y
  3. https://tamil.goodreturns.in/news/did-vijay-mallya-pay-all-his-debts-explanation-062635.html
  4. https://www.bbc.com/tamil/india-47123056
  5. https://www.bbc.com/tamil/india-46508614
  6. https://www.bbc.com/tamil/business-57592444
  7. https://www.vikatan.com/government-and-politics/corruption/55438-
  8. https://www.vikatan.com/business/companies/vijay-mallya-deepika-padukone-katrina-kaif-kingfisher-calendar
  9. https://www.puthiyathalaimurai.com/features/what-happened-in-the-vijay-mallya-case
  10. https://www.puthiyathalaimurai.com/features/what-is-the-plan-for-the-eight-million-crore-collections-
  11. https://www.tamilwire.in/news/tamilnadu/vijay-mallya-has-filed-a-petition-in-the-karnataka-high
  12. https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/vijay-mallya-debt-rs-the-court-allowed-banks-including-sbi-to-sell-assets-worth-rs-5-646-54-crore-121062400075_1.html
  13. https://tamil.abplive.com/news/vijay-mallya-latest-podcast-creates-debates-on-kingfisher-controversy-225429
  14. https://www.dinamani.com/india/2025/Jun/17/another-air-india-flight-suffers-technical-snag-passengers-deplaned-in-kolkata
  15. https://tamil.timesnownews.com/sports/did-state-bank-of-india-reply-on-vijay-mallya-ipl-2025-victory-post-fact-check-article-151803231
  16. https://minnambalam.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4-2

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன