பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இரத்து செய்ததுடன், “ஆபரேசன் சிந்தூர்” என்ற பெயரில் இராணுவத் தாக்குதலையும் இந்தியா தொடுத்தது. மே 7ம் தேதி தொடங்கிய இந்த தாக்குதல் மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்ததுடன், பாகிஸ்தானின் முக்கிய விமானதளங்களையும் குறிவைத்துத் தாக்கியதாகவும் இந்திய தரப்பில் கூறப்பட்டது, இந்தியா ஏற்படுத்திய சேதங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், பாகிஸ்தான் உலக நாடுகளிடம் கெஞ்சியதால்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
இந்திய ஊடகங்களும் இதுவரை இதையேதான் செய்தியாக மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்போ, மோடி அரசும், அதன் ஏவல் ஊடகங்களும் கட்டியமைக்க முயற்சிக்கும் இந்த பிம்பத்தை அடித்து நொறுக்கி வருகிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை “நான் தான் நிறுத்தினேன்” எனக் கூறியடிரம்ப், வர்த்தகத்தை அதற்குப் பயன்படுத்தியதாகக் கூறியிருக்கிறார். இரு நாடுகளிடமும் “நீங்கள் போரை நிறுத்துகிறீர்களா அல்லது உங்களுடனான வர்த்தகத்தை நான் நிறுத்தட்டும்மா?” எனக் கேட்டதால் தான், இரு நாடுகளும் அதற்குப் பணிந்ததாக அவர் கூறியிருக்கிறார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் போர் வெறியைப் பரப்பி “பாகிஸ்தானுடன் போருக்குப் போவது தவிற்கவியலாதது”, “போர் என்று வந்தால் இந்த முறை பாகிஸ்தானை ஒரு வழி செய்துவிட வேண்டும்”, எனப் பிரச்சாரம் செய்து வந்த காவிக் கும்பல் டொனால்டு டிரம்பின் உத்தரவையடுத்து போரைத் தூக்கிப் பரணில் போட்டுவிட்டனர். டிரம்பின் முன்னாள் காவிக் கும்பல் (இந்தியா) மண்டியிடக் காரணம் என்ன? என்று அமெரிக்காவிடம் கேட்டால் வர்த்தக ஒப்பந்தம் எனப் பதிலளிக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கம் முதற்கொண்டே இந்திய அமெரிக்க “இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்” (Bilateral trade agreement) குறித்த பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நடந்து வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகின் மற்ற பல நாடுகளுடனும் அமெரிக்கா இதுபோன்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இந்தியாவிற்கு இது மிக முக்கியமான ஒப்பந்தம் என இந்திய ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படுகிறது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக, உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா வளர்வதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்யும் என அவர்கள் கூறி வருகிறார்கள். இந்த ஒப்பந்தத்தை வைத்துத்தான் பாகிஸ்தானுடன் சமாதானமாகப் போகும்படி இந்தியாவை அமெரிக்கா பணியவைத்திருக்கிறது.
அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என இந்திய ஆளும்வர்க்கம் கூறி வருகிறது. ஆனால் எந்தவொரு ஏகாதிபத்திய நாட்டுடனும், அதிலும் குறிப்பாக அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படும் அனைத்து ஒப்பந்தங்களும், மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டதாக இருக்கும், அந்த ஒப்பந்தத்தின் மூலமாக எந்தவொரு மூன்றாம் உலக நாட்டிற்கும் எந்தப் பலனும் கிடைக்காது என்பதே வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கும் உண்மை. இந்நிலையில் இந்திய ஆளும்வர்க்கம் கூறுவதைப் போல இந்த வர்த்தக ஒப்பந்தம் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
இதைப் பற்றி புரிந்துகொள்ள, மோடி கும்பல் தாம் பதவியேற்றது முதல் “உலகத்திற்கே வழிகாட்டும் இந்தியா”வை உருவாக்கப் போவதாக கட்டியமைத்துவந்த பிம்பத்தையும், அதற்கு நேர் எதிராக, இந்தியா அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வரும் கடந்த ஐந்து மாதங்களில் அவர்களது செயல்பாடுகள் என்னவாக இருக்கிறது என்பதையும் நாம் தொகுத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அமெரிக்க எஜமானரின் சொடுக்குக்கு பயந்தோடும் இந்திய ஆட்சியாளர்களின் யோக்கியதையை நாம் புரிந்துகொள்ள முடியும். வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னால் ஒழிந்திருக்கும் அரசியலையும் புரிந்து கொள்ள முடியும்.
மோடி தலைமையிலான பாஜக அரசு ஒன்றியத்தில் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு இந்தியாவை உலக அளவில் தலைசிறந்த நாடாக மாற்றிக் காட்டுவோம் என்ற முழக்கம் பெரிதாக முன்வைக்கப்பட்டது. மேக் இன் இந்தியா, ஆத்மநிர்பார் எனப் பல பெயர்களில் உள்நாட்டில் தொழிற்துறை உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.
சர்வதேச உறவுகளில் அமெரிக்காவின் பின்னால் அணிசேர்வதற்கு பதிலாக பிரிக்ஸ் அமைப்பின் மூலம் அமெரிக்கா இல்லாத பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் அணிசேர்வதாகக் கூறப்பட்டது. பிரிக்ஸ் அமைப்பின் மூலம் அமெரிக்க டாலருக்கு மாற்றாக மற்ற நாட்டு நாணயங்களில் வர்த்தகம் செய்யப்போவதாகவும் இந்திய ஆட்சியாளர்கள் கூறினார்கள்.
உக்ரைன் போரைத் தொடர்ந்து அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்த போதும் இந்தியா இரஷ்ய எண்ணெய்யை பெரிய அளவில் இறக்குமதி செய்தது. “இந்திய ரூபாய் கூடிய விரைவில் சர்வதேச நாணயமாக மாறுவது தவிற்கவியலாமல் நடைபெறும்” என இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி கூறியது.
இது இந்தியாவிற்கான நேரம், இந்தியாவின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என இந்திய ஆட்சியாளர்கள் மட்டுமன்றி அதானி, அம்பானி, மகிந்திரா உள்ளிட்ட பெரும் முதலாளிகளும் புகழ்ந்து தள்ளினார்கள். கூடிய விரைவில் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் வளரும் என்றும். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அதாவது இன்னும் 75 ஆண்டுகளுக்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்துவிடும் எனவும் பலரும் கூறினார்கள்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கூட, “இந்தியா அடுத்த 1000 ஆண்டுகளுக்கு பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு ஒரு தளத்தை ஊருவாக்கி வருகிறோம்” என பெருமைபடக் கூறினார்.
ஆனால் இந்த பிம்பம் எல்லாம் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் சுக்கு நூறாக உடைபட்டுப் போனது. கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்ட இந்தியர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என முத்திரை குத்தப்பட்டு நாடுகடத்தப்பட்ட போதும் கூட இந்திய ஆட்சியாளர்கள் வாய்பேசாமல் மௌனமாக இருந்தனர்.
கொலம்பியாவும், மெக்சிகோவும் தங்கள் நாட்டவர் மீதான இது போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கையைக் கண்டித்த போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இது வழக்கமான நடைமுறை” எனக் கூறினார். அமெரிக்காவிற்குச் சென்ற பிரதமர் மோடியோ “சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அந்நாடுகளில் இருப்பதற்கு எந்த உரிமையும் இல்லை” எனக் கூறினார்.
அடுத்ததாக அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த நாட்டு நாணயங்களிலாவது வர்த்தகம் செய்தால் அவர்கள் மீது பொருளாதார தடைகளையும், அதிகப்படியான வரிகளையும் விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்தார். அறிவித்ததோடு நில்லாமல் “150 சதவித வரிவிதிப்பு என அறிவித்தவுடன் அவர்கள் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்” என தன்னிடம் வந்து கெஞ்சுவார்கள் என பிரிக்ஸ் நாடுகள் குறித்து டிரம்ப் கிண்டல் செய்தார்.
டிரம்பின் இந்த அறிவிப்பையும் கிண்டலையும் இந்தியா கண்டிக்கவில்லை, மாறாக, “அமெரிக்க டாலருக்கு மாற்றாக மற்ற நாணயங்களில் வர்த்தகம் செய்ய இந்தியா விரும்பவில்லை”, என்றும் இந்த விசயத்தில் மற்ற பிரிக்ஸ் நாடுகளுடன் இந்தியா முரண்படுவதாகவும், அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை இந்தியா விரும்புவதாகவும் ஜெய்சங்கர் அறிவித்தார்.
டிரம்ப் இத்துடன் நிற்கவில்லை, இந்தியாவை “வரிகளின் அரசன்” என நேரடியாக குற்றம்சாட்டிய அவர், அமெரிக்க பொருட்களுக்கான வரியை இந்தியா உடனடியாக குறைக்க வேண்டும் என மிரட்டல் விடுத்தார். மீறினால் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரி விதிக்கும் எனக் கூறினார். இதனையும் இந்திய ஆட்சியாளர்கள் எதிர்க்கவில்லை. டிரம்பை குளிர்விக்கும் நடவடிக்கைகளை எடுப்பதிலேயே இந்திய ஆட்சியாளர்கள் குறியாக இருந்தனர்.
முதலில், இந்தியாவிற்கு அணு உலைகளை விற்பனை செய்வதில் ஆர்வமாயிருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில், அணு உலைகளில் விபத்து ஏற்படும் போது அந்த அணு உலைகளை விற்பனை செய்தவர்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க தேவையில்லை என சட்ட விதிகளை திருத்தம் செய்யப்போவதாக இந்திய அரசு 2025-26ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்தது.
பின்னர் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள், செயற்கைக் கோள் உபகரணங்கள், விஸ்கி உள்ளிட்ட பொருட்களுக்கான வரியினை இந்தியா சத்தமே இல்லாமல் குறைத்தது.
அடுத்ததாக ஏப்ரல் மாதத்தில், கூகுள் வரி என்றழைக்கப்படும் ஆன்லைன் விளம்பரங்களுக்கான வரியை 6 சதவிகிதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைப்பதாக இந்தியா அறிவித்தது. இதன் மூலம் இந்திய நிறுவனங்களிடமிருந்து ஆன்லைன் விளம்பரக் கட்டணமாக ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ருபாய் அளவிற்கு வசூல் செய்யும் அமெரிக்காவின் கூகுள், மற்றும் மெட்டா (பேஸ்புக்) ஆகிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பரிசை இந்தியா வழங்கியது. கூகிள் மற்றும் பேஸ்புக் ஆகியவை டிரம்பின் முக்கிய ஆதரவாளர்கள் என்பதால், டிரம்பின் ஆதரவாளர்களுக்கு பரிசுகள் வழங்குவதன் மூலம் டிரம்பின் இதயத்தை வெல்லலாம் என இந்திய ஆட்சியாளர்கள் கருதியிருக்கிறார்கள்.
ஆனால் டிரம்ப் அத்தகைய சமாதான முயற்சிகள் அனைத்தையும் உறுதியாகப் புறக்கணித்துவிட்டார். மோடியை உடன் வைத்துக் கொண்டே, இந்தியா அமெரிக்க பொருட்கள் மீது அநியாய வரிவிதிப்பதாகக் கூறினார். அதுமட்டுமன்றி இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 100 பில்லியன் டாலர்கள் என்று ஒரு தவறான தகவலை அடித்துவிட்டதுடன், இந்தியா அமெரிக்காவின் பொருட்களுக்கு சராசரியாக 52 சதவிகித வரி விதிப்பதாக எந்த ஆதாரமும் இன்றிக் குற்றஞ்சாட்டினார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவர் அருகே வாயே பேசாமல் மௌன குருவாக அமர்ந்திருந்தார் “விஸ்வகுரு” மோடி.
அதற்குப் பிறகு இந்திய அமெரிக்க வர்த்தகம் 2030ம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலராக உயரும் (தற்போது அது 120 பில்லியன் டாலராக இருக்கிறது) என்றும், அதற்கான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருப்பதாகவும் இந்திய தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. கூடவே இந்தியா அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது, அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்கப்போவதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் என இந்திய – அமெரிக்க கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவிடமிருந்து பெரிய அணுஉலைகளை இந்தியா வாங்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. “இந்தமுறை நாங்கள் தேவையானதைச் செய்ய முன்னெப்போதையும் விட அதிக ஆர்வத்துடன், தயாராக இருக்கிறோம்” என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்தார்.
இதையெல்லாம், பார்த்தபிறகு ஏப்ரல் 8ம் தேதி நடந்த, குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தின் இரவு விருந்தின் போது, “இப்போது அவர்கள் எனது பிட்டத்தை முத்தமிடுகிறார்கள்; ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள பரிதவிக்கிறார்கள்”, “தயவு செய்யுங்கள் ஐயா, தயவு கூர்ந்து ஒரு உடன்படிக்கைக்கு வாருங்கள் ஐயா, நாங்கள் எதை செய்வதற்கும் தயாராக இருக்கிறோம் என என்னிடம் கெஞ்சுகிறார்கள்” என்று டிரம்ப் திமிறாகப் பேசினார்.
இவ்வாறு தன்னுடன் உடன்படிக்கை செய்ய விரும்பும் நாடுகளை, டிரம்ப் அவமானப்படுத்தி கேலி செய்திருப்பதைப் பற்றி கேட்ட போது அதற்கு பதிலளிக்காத ஜெய்சங்கர், இருதரப்புப் பேச்சுவார்த்தையில் இந்தியா மும்முரமாக ஈடுபட்டிருப்பதாக மீண்டும் மீண்டும் உறுதிபடுத்துவதிலேயே குறியாக இருந்தார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை விலங்கிட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய போதும், “இந்தியா அமெரிக்காவைச் சுரண்டுகிறது” என டிரம்ப் பகீரங்கமாக பொய் பேசிய போதும், அதற்கு எதிராக இந்திய ஆட்சியாளர்கள் எதையுமே செய்யவில்லை. அதேசமயம் தங்களுக்கு எதிராக இது போன்ற நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்த போது கனடா, மெக்சிகோ, கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். இந்த நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றன ஆனால் அது, அவர்கள் டிரம்பின் அடாவடிகளை எதிர்த்துப் பேசுவதைத் தடைசெய்யவில்லை.
பொருளாதாரத்திலும், அரசியல் அணிச்சேர்க்கையிலும் அமெரிக்காவுடன் நெருங்கிச் செல்லக் கிடைத்த வாய்ப்பாக இந்திய ஆளும்வர்க்கம் இதனைப் பார்க்கிறது. மற்ற நாடுகளுக்கு எதிராக டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் இந்தியா இலாபமடைய முடியும் என அவர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக அமெரிக்க – சீன வர்த்தகப் போரின் விளைவாக இந்தியாவிற்கு அமெரிக்க பொருட்களை உற்பத்தி செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறார்கள்.
“2030க்குள் ஒட்டுமொத்த ஐபோன் உற்பத்தியையும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிற்குள் கொண்டுவந்துவிடும்” என்று ஆருடம் சொல்லும் கட்டுரைகள் இந்திய பொருளாதார ஏடுகளில் நிறைந்திருக்கின்றன. இதே நம்பிக்கையில்தான் இந்திய பங்குச் சந்தைக் குறியீடு பலமடங்காக அதிகரித்திருக்கிறது.
அமெரிக்காவிற்குச் சென்ற மோடி, டிரம்பிற்குப் பிறகு எலான் மஸ்கைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியாவில் எலான் மஸ்கின் நிறுவனங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் எல்லாம் காணாமல் போயின. எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் இந்திய தொலைதொடர்புத் துறையில் கால்பதிப்பதைக் கடுமையாக எதிர்த்து வந்த அம்பானியின் ஜியோவும், மிட்டலின் ஏர்டெல் நிறுவனமும் அவருடன் கைகோர்க்க ஆர்வமாக இருப்பதாகக் கூறி பல்டியடித்தனர். எலான் மஸ்கின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தொழில்தொடங்க ஏற்ற வகையில் புதிய மின்சார வாகன உற்பத்திக் கொள்கையை இந்திய அரசு அறிவித்தது. இதையெல்லாம் செய்வதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவிற்கு இழுத்துவரப் போவதாக ஆளும்வர்க்கம் நம்புகிறது.
இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக சமநிலையை உருவாக்குவதைத் தான் இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மையமான விசயமாக அமெரிக்கா கருதுகிறது. அதாவது இந்தியா அமெரிக்காவிடமிருந்து ஆண்டிற்கு சுமார் 42 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்கிறது. ஆனால் அதே சமயம் 120 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம் அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்வதை விட அதிகமாக இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இதனைச் சமன் செய்ய வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம்.
ஆனால் எலான் மஸ்கின் டெஸ்லாவையும், ஆப்பிள் நிறுவனத்தையும் இன்னும் இது போன்ற அமெரிக்க நிறுவனங்களையும் இந்தியாவில் தொழில் தொடங்க அனுமதித்தால் அவர்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வார்கள். இதன் மூலம் வர்த்தக சமமின்மை மேலும் அதிகரிக்கும், அமெரிக்காவிடமிருந்து இன்னமும் அதிகமாக இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.
அமெரிக்காவிடமிருந்து இந்தியா என்னென்ன பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என அமெரிக்கா ஒரு பட்டியலே வைத்திருக்கிறது. அதில் வேளாண் விளை பொருட்களே முதலிடத்தில் இருக்கின்றன. “இந்தியா வேளாண் துறையை மூடியே வைத்திருக்க முடியாது, சிறந்த இருதரப்பு உறவுகளுக்காக இந்தத் துறையை இந்தியா திறக்க வேண்டும்” என்று அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹாவர்டு லூட்னிக் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார். இந்திய ஆட்சியாளர்களும் அதற்கு எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அமெரிக்க அரசின் அதிகபட்ச மானியங்களுடன் சந்தைக்கு வரும் அமெரிக்க வேளாண் விளை பொருட்களுடன் இந்திய விவசாயிகளால் போட்டியிட நிச்சயமாக முடியாது. சோளத்தை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னணி நாடாக இருந்த மெக்சிகோ, அமெரிக்க சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதித்த பிறகு அந்நாட்டு விவசாயிகள் நட்டமடைந்து சோளம் பயிரிடுவதையே நிறுத்தி, தற்போது தன் நாட்டு உணவுத் தேவைக்காக அமெரிக்காவின் தயவை நம்பியிருக்கும் நிலைக்கு மெக்சிகோ தள்ளப்பட்டுள்ளது, அமெரிக்காவின் வேளாண் விளை பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதால் ஏற்படும் பயங்கரத்தின் சாட்சியாக நம் கண் முன்னே இருக்கிறது.
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் என்பது வெறுமனே வேளாண் விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கானதாக மட்டும் இருக்காது, அது மோடி அரசு முன்னர் கொண்டுவந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களைவிட மிக கொடூரமாக இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் தாக்கக் கூடிய சட்டதிருத்தங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதில் இந்திய ஆட்சியாளர்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இருக்காது, அந்த சட்ட திருத்தங்களையெல்லாம் எவ்வாறு நிறைவேற்றுவது, எப்படி இந்திய மக்களை ஏமாற்றுவது என்பதுதான் அவர்களது கவலையாக இருக்கும். கார்ப்பரேட் சேவையில் சிறந்து விளங்கும் மோடி அரசு இதனை புறக்கடை வழியாக, மறைமுகமாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
இந்திய விவசாயத்தைத் திறந்துவிடுவதுடன் மட்டுமில்லாமல் அமெரிக்காவிடமிருந்து மின்னணு சாதன உதிரிபாகங்களையும், வாகன உற்பத்தி உதிரிபாகங்களையும், சூரிய மின்சார உற்பத்திக்கான உபகரணங்களையும் இறக்குமதி செய்யப் போவதாக தெரிகிறது. இவ்வாறு இறக்குமதி செய்வது என்பது இந்தியாவில் உள்ள சிறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிடும். ஏற்கெனவே ஜிஎஸ்டி, மின்கட்டண உயர்வு என மோடி அரசின் தாக்குதலில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் சிறு குறு உற்பத்தியாளர்கள், அமெரிக்க பொருட்களுடன் நிச்சயமாக போட்டியிட முடியாமல் தெருவிற்கு வரும் நிலை ஏற்பட்டுவிடும்.
இந்திய விவசாயத்தையும், சிறு தொழில்களையும் அழித்து இறக்குமதியை அதிகரித்தால் கூட அமெரிக்காவுடனான வர்த்தக சமமின்மையை சீர் செய்ய முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. அதற்கு மற்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு அமெரிக்காவிடமிருந்து இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டும்.
இரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக அமெரிக்க எண்ணெய்யையும், விலை உயர்ந்த திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவையும் இறக்குமதி செய்ய வேண்டும். மலிவான சீன, ஜப்பான் மின்னணு சாதனங்களுக்குப் பதிலாக விலையுயர்ந்த அமெரிக்க சாதனங்களை இறக்குமதி செய்ய வேண்டும். இரஷ்யாவிடமிருந்தும், இஸ்ரேலிடமிருந்தும் ஆயுதங்கள் வாங்குவதற்குப் பதிலாக அமெரிக்க ஆயுதங்களை வாங்கிக் குவிக்க வேண்டும்.
இவையெல்லாம் அந்நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் வர்த்தக உறவுகளை மட்டுமல்ல, அரசியல் உறவுகளிலும் மாற்றத்தைக் கொண்டுவரும். உலகின் பல நாடுகளுடனான உறவை துண்டித்துக் கொண்டு அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும். அமெரிக்கா இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடும் பொம்மையாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடியாளாக, இந்தியா மாற்றப்படும்.
மொத்தமாக பார்க்கும் போது இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்பது வெறுமனே வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தம் மட்டுமல்ல. அது அரசியல் ரீதியில் அமெரிக்காவின் பின்னால் இந்தியாவை அணிசேர்க்கின்ற ஒப்பந்தமும் கூட. இந்திய விவசாயத்தையும், சிறு தொழிலையும் அழித்து, இந்திய இறையாண்மையை அமெரிக்காவின் காலடியில் சமர்பிக்கும் அடிமை சாசனம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அடிமை சாசனம்தான் இந்தியாவை பொருளாதார ரீதியில் உலகின் முன்னணி நாடாக மாற்றப்போகிறது என வாய் கூசாமல் பொய்ப்பிரச்சாரம் செய்கிறது இந்த காவி கார்ப்பரேட் பாசிச கும்பல்.
- அறிவு
56 இன்ச் அமெரிக்க அடிமை. பொய்யே புகலாக மாற்றும் மோடி கும்பல்.