சிங்கார சென்னையை தனியாருக்கு தாரைவார்க்கும் திராவிட மாடல்!

கடந்த 27-02-2025 அன்று மாதாந்திர கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் சென்னையில் உள்ள 5 கடற்கரைகளின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முடிவின்படி சென்னையில் உள்ள மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரைகளின் தூய்மைப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட மெரினா கடற்கரையில் 1 வருட காலத்திற்கு தூய்மைப் பணி மேற்கொள்ள தோராயமாக ரூ.7,09,46,942 ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே போல பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர், புது கடற்கரை ஆகிய நான்கு கடற்கரைகள் ஒட்டுமொத்தமாக 95 ஏக்கர் பரப்பளவு கொண்டவை ஆகும். இந்த 4 கடற்கரைகளிலும் ஒரு ஆண்டுக்கு தூய்மைப் பணி மேற்கொள்ள தோராயமாக ரூ.4,54,99,139 செலவு ஆகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரையை பகுதிகளாக (Sector) பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு கண்காணிப்பாளர், அவருக்கு கீழே 10 தூய்மைப் பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் மணலை சலித்து சுத்தம் செய்யும் வாகனம் அதற்கு ஒரு ஆப்ரேட்டரை நியமிக்கவும் முடிவு எடுக்கப்படுகிறது. கடற்கரையில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு வகையான வண்ண சீருடைகள் வழங்கப்பட உள்ளன. தூய்மை பணியானது காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு சுழற்சிகள் கொண்டதாக பணி நடைபெறும். ஒரு சுழற்சிக்கு ஒரு துப்புரவு ஆய்வாளர் வீதம் இரண்டு ஆய்வாளர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணிக்காக 100 குப்பைத் தொட்டிகளை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து கடற்கரைகளையும் தூய்மைப் படுத்தும் பணிக்கான மதிப்பீடு (quotation) சுமார் ரூ.11 கோடி தயாரிக்கப்பட்டு மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெற்று வரும் தூய்மைப்பணியை எதற்கு தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழ கூடும். அதற்கான பதில் நமது நாடு பின்பற்ற கூடிய, இல்லை இல்லை நமது நாட்டின் மீது திணிக்கப்பட்டுள்ள தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்க கொள்கைகள் தான். இக்கொள்கையை நடைமுறைப்படுத்தி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாழ்வளித்து வந்த, அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களையும், அதன் அளவு கடந்த சொத்துக்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு, அடிமாட்டு விலைக்கு மோடி – ஷா அரசு தாரை வார்த்துள்ளது. மோடி அரசின் காவி கார்ப்பரேட் பாசிசத்திற்கு மண்டியிட்டு இதனை அப்படியே நமது திராவிட மாடல் அரசும், மக்களுக்கு எதிரான, உழைக்கும் மக்களை ஓட்டசுரண்ட கூடிய நவதாராளவாத கொள்கையை பின்பற்றுகிறது.

சென்னை கடற்கரைகளை தனியாரிடம் ஒப்படைப்பது பராமரிப்பை மேம்படுத்தும் எனும் எண்ணம் தோன்றுவது சரி தான் ஆனால் இதில் பல பாதிப்புகள் இருக்கின்றன. முன்பு மாநகராட்சியின் கீழ் கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் இருந்த பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. தனியார் நிறுவனங்கள் குறைந்த செலவில் அதிக உற்பத்தியை நோக்கி செயல்படுவதால், முந்தைய பணியாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கபடும். அடிமாட்டு விலைக்கு தான் இவர்கள் வேளைக்கு அமர்த்தப்படுவார்கள். கடற்கரைகள் போன்ற பொது இடங்கள், மக்கள் அதிமாக தங்களது ஓய்வு நேரத்தை செலவிடும் இடங்கள் அரசாங்கத்து கட்டுப்பட்டு இருக்க வேண்டுமே தவிர தனியாரிடம் அல்ல. தனியார் நிறுவங்களின் முதன்மையான குறிக்கோள் லாபம் மட்டுமே, கடற்கரை போன்ற பொழுதுபோக்கு இடங்களில் தனியார் ஆதிக்கம் இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பொதுநலன் முக்கியமே இல்லை. வாகன நிறுத்த கட்டணத்தை அதிகரிக்கவும், ஏன் இத்தாலி போன்ற நாடுகளில் இருப்பது போன்று நுழைவு கட்டணம் கொண்டு வரவும் வாய்ப்பு அதிகம். இந்த வருடத்தின் தொடக்கத்தில் தான் ஆந்திராவிலுள்ள பெரும்பாலான கடற்கரைகளுக்கு அங்குள்ள அரசு நுழைவு கட்டணம் விதித்தது. இதுபோன்ற நிலைமை சென்னையிலும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இது ஒருபுறம் இருக்க கடற்கரையை நம்பி அங்கு கடை வைத்துள்ளவர்களின் நிலைமை இன்னும் மோசமாக மாற கூடும், அவையும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும், அதிக வாடகை செலுத்த வேண்டிவரும். மெரீனா கடற்கரை எடுத்து கொண்டால் அங்கு மீனவர்களின் வசிப்பிடங்கள் உள்ளன, மீன்பிடி படகுகள் உள்ளன. இவ்வற்றையெல்லாம் தூய்மைப்பணிக்கு தடையாக இருக்கின்றது என சொல்லி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்துவதற்கு வாய்ப்புகள் ஏராளம். கடந்த வருடங்களில் இந்த முயற்சியை “கடற்கரை அழகை இவர்கள் கெடுக்கிறார்கள் என உழைக்கும் வர்க்கத்தை இழிவாக பார்க்கும் ஆளும்வர்க்க திமிரோடு” இந்த திராவிட மாடல் அரசே எடுத்துள்ளது என்பது நாம் அறிந்ததே. (nochikuppam-protest april2023)

இது மட்டுமில்லாமல் மெரினா கடற்கரைக்கு சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையிடம் (FEE-ngo) இருந்து ப்ளூ பிளாக் சான்றிதழ் (blue flag certification) வாங்கும் திட்டத்தை கடந்த வருடமே உதயநிதி தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக தான் கடற்கரைகளை தனியாரிடம் அரசு தற்போது ஒப்படைத்துள்ளது. இந்த NGO நிறுவனம் விதித்துள்ள 33 அளவுகோல்களுக்கு இணங்கினால், மெரினா கடற்கரைக்கு அந்த சான்றிதழ் கிடைக்கும்.

இதனால் கடற்கரை நம்பியுள்ள உழைக்கும் மக்களின் வாழவாதாரம் பெரும் கேள்விக்குளாகிறது. கடந்த மாதம் தான் மாநகராட்சி பூங்காக்களையும், விளையாட்டு திடல்களையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்து, கடும் எதிர்ப்பிற்கு பிறகு அரசு பின்வாங்கியது. அது போலவே கடற்கரைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவையும் திரும்ப பெற வேண்டும்.

கடற்கரை பூங்காக்கள் போன்ற பொது இடங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான முயற்சியும், மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வேலை நிரந்தரம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கைக்கு செவிசாய்க்கமால் அவர்களை படும்குழியில் தள்ளுவதும் மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் மீதான திராவிடமாடலின் அரசின் யோக்கியதைக்கு சான்றாக இருக்கிறது.

  • கார்த்திக்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன