அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், பதவியேற்ற முதல் வாரத்திலேயே அதிரடியாக பல்வேறு ஆணைகளைப் பிறப்பித்து வருகிறார். “அமெரிக்காவிற்கு முன்னுரிமை (America First)” என்றும், “மீண்டும் அமெரிக்காவை தலைசிறந்த நாடாக மாற்றுவோம் (Make America Great Again)” என்றும், கூறிக்கொண்டு அவர் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் எல்லாவற்றையும் மேலோட்டமாகப் பார்க்கும் அமெரிக்க ஊடகங்கள் மட்டுமல்ல, சர்வதேச ஊடகங்களும் கூட அதனை, அவரது ஆதரவாளர்களைச் சாந்தப்படுத்த அவர் எடுக்கும் முயற்சி என்றும், சில சமயம் பயித்தியக்காரத்தனம், கோமாளித்தனம் என்றும் எழுதுகின்றன.
ஆனால் டிரம்பின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்க்கும் போது அவற்றுள் வெள்ளை நிறவெறி அரசியல் ஆழமாகப் புதைந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக ஆப்பிரிக்க, ஆசிய, லத்தின் அமெரிக்க நாட்டு மக்கள் குறித்த பார்வையில் டிரம்பின் வெள்ளை நிறவெறிக் கொள்கைகள் சில சமயம் வெளிப்படையாகவே எட்டிப் பார்க்கின்றன.
அதிபராகப் பதவியேற்றவுடன் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக ஆணைகளை (Executive orders) எடுத்துக் கொள்வோம், கடந்த முறை அதிபர் தேர்தலில் அவர் தோல்வியுற்ற போது அமெரிக்காவின் தலைமை செயலகமான கேப்பிடல் கட்டிடத்தை முற்றுகையிட்டு போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் இருந்து அவர்களை விடுவிக்கும் ஆணையில் தான் அதிபரான பிறகு டிரம்ப் தனது முதல் கையெழுத்தையே போட்டார். அதில் வெள்ளை நிறவெறி அமைப்புகளான “பிரவுட் பாய்ஸ்” (Proud Boys), “ஓத் கீப்பர்ஸ்” (Oath Keepers) ஆகிய இரண்டின் செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மீது தேசதுரோக குற்றச்சாட்டுகள் இருந்த போதும் அவர்களுக்கு டிரம்ப் பொதுமன்னிப்பு வழங்கினார். இவர்கள் டிரம்பின் முந்தைய தோல்வியின் போது அமெரிக்கா முழுவதும் பல்வேறு மாகாணங்களில் கறுப்பின தேர்தல் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள். அந்த வழக்குகளில் இருந்தும் அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்ததாக அமெரிக்காவின் ஒன்றிய அரசு நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டு முறையை அவர் ரத்து செய்துள்ளார். அமெரிக்க அரசின் முக்கிய நிறுவனங்கள் அனைத்திலும் வெள்ளையினத்தைச் சேர்ந்த அதிகாரிகளே நிரம்பியிருந்த போது, பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கோரிக்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் நடந்த போராட்டங்களை அடுத்து, இதற்கு முந்தைய அரசுகள் கறுப்பினத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருந்தது. இதனைத் தற்போது “தகுதி” (Merit) என்ற பெயரில் தூக்கியடித்திருக்கிறார் டிரம்ப்.
இடஒதுக்கீட்டை நீக்கியதன் மூலம் இனி கறுப்பினத்தவர் எவரும் அரசு நிறுவனங்களில் முக்கிய பதவிகளுக்கு வரமுடியாது என்ற நிலையை ஏற்படுத்தியது மட்டுமன்றி, பிப்ரவரி 6ம் தேதிக்குள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியேற நினைப்பவர்கள் ஓடிவிடுங்கள் அதற்குப் பிறகு மிகப்பெரிய வேலைநீக்கம் இருக்கும் என தற்போது எச்சரித்திருக்கிறார். இது ஏற்கெனவே இருக்கும் கறுப்பின அதிகாரிகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்றே பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் அமெரிக்க அரசில் அரை நூற்றாண்டுகளுக்கும் முன்னர் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஜிம் குரோ (Jim Crow) சட்டங்களை டிரம்ப் மீண்டும் உயிர்பிக்கிறார் என கறுப்பின உரிமை இயக்கங்கள் குரலெழுப்புகின்றன.
பிற்போக்கு வெள்ளைநிறவெறி அமைப்புகளின் மற்றொரு கோரிக்கையான மாற்றுப் பாலினத்தவர்களை அங்கீகரிக்க மறுப்பதையும் டிரம்ப் நடைமுறைப்படுத்தியிருக்கிறார். இனி அமெரிக்காவில் ஆண் – பெண் என இரண்டு பாலினங்கள் தான் அங்கீகரிக்கப்படும் என அவர் நிர்வாக ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன் மூலம் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான சமூக அங்கீகாரத்தையே அவர் ரத்து செய்துள்ளார். பிற்போக்கின் பிறப்பிடமாக உள்ள யோகி ஆதித்தயநாத்தின் உத்திரப்பிரதேச அரசு கூட மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகளை அங்கீகரித்து அவர்களுக்கான நலத்துறையை உருவாக்கியுள்ள இந்தக் காலத்தில், சிறார்களின் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்டுவந்த அரசு உதவித் தொகையை நிறுத்தியிருக்கிறார் டொனால்டு டிரம்ப்.
டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பது. ஆண்டுதோறும் பல லட்சம் பேர் லத்தின் அமெரிக்காவிலிருந்தும், ஆசியாவிலிருந்தும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிவருகிறார்கள் எனக் கூறிவந்த டிரம்ப் அவர்களை அமெரிக்காவின் வளத்தை திண்ணும் ஒட்டுண்ணிகள் என்று குற்றஞ்சாட்டினார். தற்போது அதிபரானதும் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்கள், குறிப்பாக வெள்ளையினத்தவரல்லாத குடியேறிகள் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துள்ளார்.
அமெரிக்கா என்பதே குடியேறிகளின் தேசம்தான். இன்றைக்கு தங்களை அமெரிக்கர்கள் என மார்தட்டிக் கொள்ளும் வெள்ளையினத்தவர்கள் அனைவரும் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவிலிருந்து குடியேறியவர்கள் என்பதை மறந்துவிட்டு, இது எங்கள் நாடு என உரிமை கோரி வருகின்றனர். கடந்த கால அமெரிக்கா என்பது ஆப்பிரிக்கர்களின் அடிமை உழைப்பின் மூலம் உருவானது என்றால் நிகழ்கால அமெரிக்கா ஆசிய நாடுகளிலிருந்து குடியேறியவர்களின் உழைப்பின் பயனால் இயங்குகின்றது என்று கூறுவது மிகையாகாது. ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களை எதிரிகளாகச் சித்தரித்து அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார் டிரம்ப்.
மெக்சிக்கோவிலிருந்துதான் சட்டவிரோதக் குடியேற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றன எனக் கூறி அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அவசர நிலையைப் பிரகடணப்படுத்தியிருப்பதுடன் பத்தாயிரத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்களை அங்கே குவித்துள்ளார் டிரம்ப்.

இந்தியா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக தங்களது நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார். அத்துடன் நில்லாமல் கொலம்பியாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைகளிலும் கால்களிலும் விலங்கிட்டு விமானத்தின் மூலம் அந்நாட்டிற்கு திரும்ப அனுப்பியிருக்கிறார். இந்த விமானப் பயணத்தின் போது அவர்களுக்கு குடிக்க நீரும், உணவும் கொடுக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார் டிரம்ப். நாகரீக உலகில் சட்டவிரோதக் குடியேறிகள் மீது இப்படியொரு மனிதாபிமானமற்ற நடவடிக்கையை இதுவரை எந்தவொரு நாட்டு அதிபரும் வெளிப்படையாக அறிவித்ததில்லை. அந்த அளவிற்கு வெள்ளையின நிறவெறி டிரம்பிற்குள் ஊறியிருக்கிறது.
உலக மேலாதிக்க போர் வெறியனான ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியின் போது இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களை சித்தரவதை செய்ய கட்டப்பட்ட “கௌதனாமோ பே” (Guantanamo Bay) சிறைக்கூடத்தில் 30,000 சட்டவிரோதக் குடியேறிகளை அடைக்க புதிய சிறைச்சாலைகளைக் கட்டப்போவதாகவும் தற்போது அறிவித்துள்ளார் டிரம்ப்.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது மனிதாபிமானமற்ற வகையில் தாக்குதல் தொடுத்துவரும் டிரம்ப், சட்டப்பூர்வமாக குடியேறியவர்களையும் விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவின் பல்வேறு பிரிவுகளில் விசா பெற்று சட்டப்பூர்வமாக குடியேறியவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள், தங்களது பெற்றோர் அமெரிக்கர்களாக இல்லாத போதும், அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படும். இந்த சட்டத்தை டிரம்ப் மாற்றியுள்ளார். இனி அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரில் ஒருவர் நிச்சயமாக அமெரிக்கராக இருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கபடும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது வெள்ளையினத்தவர் மட்டுமே அமெரிக்கர்கள் என்ற நிறவெறியின் வெளிப்பாடு அன்றி வேறில்லை.
சர்வதேச உறவுகளில் கூட சீனா, இந்தியா, பிரேசில், மெக்சிக்கோ, கொலம்பியா என ஆசிய, லத்தின் அமெரிக்க நாடுகளிடம் அடாவடிப் போக்கை கையாள்கிறார் டிரம்ப். இந்த நாடுகள் மீது 20 சதவீத வரி விதிப்பேன் என மிரட்டும் டிரம்ப், ஐரோப்பிய நாடுகளிடம் வேறுவிதமான அனுகுமுறையைக் கையாள்கிறார்.
வெள்ளைநிறவெறி பாசிஸ்டான டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே இது போன்ற நடவடிக்கைகளில் நிச்சயம் ஈடுபடுவார் என்பது நாம் அறிந்ததே. நம் நாட்டு காவி பாசிஸ்டுகளைப் போல் நாடு முழுவதும் பரந்த மக்கள் அடித்தளம் டிரம்பிற்கு இல்லை என்பதாலும், அமெரிக்காவின் அரசுக் கட்டமைப்பில் மாநில அரசுகளுக்கு உள்ள பல்வேறு உரிமைகள் காரணமாகவும் டிரம்பின் நிர்வாக ஆணைகள் பல மாநிலங்களில் செல்லாக்காசாக மாறியுள்ளன. அதேசமயம் சட்டவிரோதக் குடியேற்றங்கள் விசயத்தில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் டிரம்பிடம் சரண்டைந்துள்ளன என்பதுதான் உண்மை. அதற்கு டிரம்பின் பின்னால் அணிவகுத்து நிற்கும் சர்வதேச நிதிமூலதன கும்பல்களின் ஆதரவு முக்கிய காரணமாக இருக்கிறது.

அமெரிக்க டாலரில்தான் வர்த்தகம் செய்ய வேண்டும், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது, அலாஸ்காவிலும், ஆர்டிக் பகுதிகளிலும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எண்ணைக் கினறுகள் தோண்டும் பணிகளை மீண்டும் தொடங்குவது, சீனாவிற்கு எதிரான வர்த்தக போரைத் துரிதப்படுத்துவது என அமெரிக்காவைச் சேர்ந்த நிதிமூலதனக் கும்பலுக்குச் சாதகமான உத்தரவுகளைப் பிறப்பித்து அவர்களை மகிழ்வித்துள்ளார் டிரம்ப்.
இது போதாதென்று அமெரிக்க மக்களையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக தனிநபர் வருமானவரியை நீக்க போகிறேண், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கப் போகிறேன் என பேசி வருகிறார்.
டிரம்பின் அமெரிக்காவை முன்னிலைப்படுத்தும் திட்டத்திற்கும், இந்தியா மீது 20 சதவீத வரி விதிப்பேன் என்ற மிரட்டலுக்கும் எதிராக தனது 56 இஞ்ச் மார்பை விரித்துக் கொண்டு மோடி அரசு எதிர்த்து நிற்கவில்லை. டாலரில் வர்த்தகம் செய்வதைத் தொடர்வோம் என உறுதியளித்திருப்பதுடன், 18,000 இந்திய குடியேறிகளைத் திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் கூறி டிரம்பின் முன்னாள் மண்டியிட்டிருக்கிறது மோடி அரசு. கூடிய விரைவில் சர்வதேச அரசியலில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபரைச் சந்திக்க நேரம் கேட்டுக் காத்திருக்கிறார் பிரதமர் மோடி.
உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி முற்றிவரும் சூழலில் வெள்ளையின நிறவெறி பாசிஸ்டான டிரம்பின் வருகை என்பது சர்வதேச நிதிமூலதன கும்பலுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது. இந்த தேவையுட்ன் ஒத்துப் போகும் இந்தியாவின் காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகள் அமெரிக்க பாசிஸ்டுடன் கைகோர்க்க, அவர்களது அடியாளாக வேலை செய்ய, ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
- அறிவு