பதவியேற்ற உடனேயே அமெரிக்க முதலாளிகளிடம் கல்லா கட்டிய பலே கில்லாடி டொனால்ட் டிரம்ப்

ஜனவரி 20ம் தேதி, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார். அவரது பதவியேற்பு விழாவிற்கு அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள், பிக் டெக் முதலாளிகள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என அனைவரும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி வழங்கியிருக்கிறார்கள்.

டிரம்பின் பதவியேற்பு விழா கமிட்டிக்கு 250 மில்லியன் டாலர் அளவிற்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ருபாய் மதிப்பில் இது இரண்டாயிரம் கோடிகளுக்கும் அதிகம். பதவியேற்பு விழாவிற்கு முன்பும் பின்னரும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு தலைக்கு இத்தனை ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என விலை நிர்ணயம் செய்து வசூலித்திருக்கிறார் டிரம்ப். டிரம்புடன் ஒரு சில மணித்துளிகள் நேரில் பேசுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (8.6 கோடி ருபாய்) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும் போது தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு தனிநபர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் நிதி அளிப்பது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படி நிதி அளிப்பதற்கு எனக் கட்டுப்பாடுகள் உள்ளன. அதேசமயம் ஒருவர் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரது பதவியேற்பு விழாவிற்கு நிதியளிப்பதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.

இதற்கு முன்னர் இருந்த அதிபர்கள் தாங்களாகவே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டனர். பராக் ஒபாமா ஒரு நபர் அதிகபட்சமாக 50,000 அமெரிக்க டாலர் நிதி கொடுக்க முடியும் என கட்டுப்படுத்தினார். டிரம்பின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் கூட 2,50,000 அமெரிக்க டாலர் என கட்டுப்பாடு விதித்தார். ஆனால் டிரம்ப் முதல் முறையாக பதவியேற்ற போதே இந்த கட்டுப்பாடுகளை நீக்கி யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம் எனக் கூறி 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தார்.

ஆனால் இம்முறை தலைக்கு இவ்வளவு தர வேண்டும் என டிக்கெட்டின் விலையை நிர்ணயம் செய்து தேர்தலுக்காக வசூல் செய்ததை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான நிதியை வசூலித்திருக்கிறார்.

அமெரிக்க முதலாளிகளும் டிரம்ப் நிர்ணயித்த இத்தொகைக்கும் அதிகமாக வாரி வழங்கியிருக்கின்றனர். அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ், ஓப்பன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன், மெட்டா நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க், என அனைவரும் தலைக்கு ஒரு மில்லியன் டாலர் நிதியளித்துள்ளனர். ஊபர் நிறுவன தலைமை அதிகாரி டாரா கொசோரவ்ஷ்கி இரண்டு மில்லியன் டாலர் நிதியளித்திருக்கிறார். இவர்கள் தவிர போர்டு ஆட்டோமொபைல், ஏடி & டி, கூகிள், ஜெனரல் மோட்டார்ஸ், மைக்ரோசாப்ட், டொயோட்டா என அனைத்து பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் தலா ஒரு மில்லியன் டாலர்கள் நிதியாகக் கொடுத்திருக்கின்றன. இந்தியாவிலிருந்து முகேஷ் அம்பானியும் அவரது மனைவியும் டிரம்பின் இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அமெரிக்க முதலாளிகளிடம் காசு வாங்கிக் கல்லாக் கட்டிய டிரம்பிற்கு, அம்பானி காசு கொடுக்கவில்லை என்றும் அவர் டிரம்பின் மகள் இவான்காவின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் சிறப்பு விருந்தினர்களாக்க கக் கலந்து கொண்டிருக்கிறார்கள் என வடஇந்திய ஊடகங்கள் கதையளக்கின்றன.

முதலாளிகளிடம் வசூலாகும் பணத்தைப் பதவியேற்பு விழாவிற்கும் அதனை ஒட்டி நடக்கும் பல்வேறு விருந்துகள், கேளிக்கைக் கொண்டாட்டங்களுக்கும் செலவழித்துவிட வேண்டும் அதனை வேறு விசயங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது அமெரிக்க விதி. ஆகையால் கடந்த முறை இவ்வாறு வசூலான தொகை முழுவதையும் டிரம்பிற்கு சொந்தமான பல்வேறு ஓட்டல்கள், கட்டிடங்களுக்கு கட்டணம் என்ற பெயரில் ஒன்றுக்குப் பத்தாகக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். மேலும் வசூல் செய்யப்பட்ட பணம் முழுவதும் டிரம்பைச் சென்றடையும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன் டி.சி.யின் அட்டர்னி ஜெனரல் ஒருவர் இதனை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில், அவருக்கு 2022ம் ஆண்டு பணம் கொடுத்து டிரம்ப் ‘செட்டில்’ செய்துள்ளார். எனவே இந்த முறையும் வசூலிக்கப்பட்ட தொகை டிரம்பை சென்றடைய வழிசெய்யப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இது தெரிந்துதான் முதலாளிகள் வரிந்து கட்டிக் கொண்டு வாரிக் கொடுக்கிறார்கள்.

நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல.

என்று கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறினார். அதனை உண்மை என டிரம்ப் நிரூபித்திருக்கிறார். இதன் மூலம் டிரம்ப் அமெரிக்க முதலாளிகளுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். நான் உங்களுக்காக வேலை செய்கிறேன், எனவே எனக்குப் பணம் கொடுங்கள் என்பதுதான் அது.

  • மகேஷ்

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன