உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக வின் ஆட்சி என்பது இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு போலீஸ் ராஜ்ஜியம் என்றால் அது பொய்யல்ல. பார்ப்பனியத்தை முன்னிறுத்தவும், முஸ்லீம்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளின் தொடர்சியாகவும் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சமீபத்திய புல்டோசர் அணுகுமுறை என்பது உச்சிகுடுமிமன்ற நீதிபதிகளையே கோபம் கொள்ளவைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
யோகியினுடைய இந்துத்துவா நடவடிக்கைகளையும் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் அம்பலப்படுத்துபவர்களை பொய் வழக்குகள் போட்டு, அவர்கள் பத்திரிக்கையாளர்களோ கல்வியாளர்களோ சமூக செயல்பாட்டாளர்களோ மாணவர்களோ அல்லது வழக்கறிஞர்களோ, கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்து துன்புறுத்துவதென்பது யோகி காவல்துறையின் அன்றாடப்பணி. இதற்கு பத்திரிக்கையாளர் ஜூபைர் மீதான வழக்கே ஒரு நல்ல உதாரணம்.
அதன் தொடர்ச்சியில் தற்போது பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை(BHU) சேர்ந்த 13 மாணவர்களை பிணையில் வெளி வர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறது ஆதித்யநாத் அரசாங்கம். மாணவர்கள் செய்த குற்றம் என்ன? அம்பேத்கர் மனுஸ்மிருதியை எரித்த நாளான டிசம்பர் 25 அன்று பகத்சிங்க் மாணவர்கள் மோர்ச்சா என்ற அமைப்பைச் சேர்த்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் கூட்டம் நடத்தியுள்ளனர்.
கூட்டத்தை தடுக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அங்கு வந்த ஒழுங்கு கமிட்டி பேராசிரியர்கள் மற்றும் செக்யூரிட்டிகள் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று மாணவர்களை மிரட்டியுள்ளனர். ஆனால் மாணவர்கள் கூட்டத்தை தொடரவே, செக்யூரிட்டிகள் மாணவர்களை தாக்கியுள்ளனர். மாணவர்களுடைய உடைகளை கிழித்தும் முக கண்ணாடிகளை உடைத்தும் அவர்களை இழுத்து வந்து அறையில் அடைத்துள்ளனர்.
இன்று அம்பேத்கரின் மனுஷ்மிருதி எரிப்பு நாளை நினைவு கூற கூடியிருந்த மாணவர்கள் மீது தனியார் செக்யூரிட்டி அடியாட்களை வைத்துத் தாக்கும் பல்கலைக்கழக நிர்வாகம், இதே பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் பனாரஸ் ஐஐடி கல்லூரியில் பயின்ற மாணவிகள் மீது தொடர்ந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை தாக்குதல் தொடுத்து வந்த பாஜகவின் ஐடி விங் செயலாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்களின் தொடர் போராட்டங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தற்போது பிணையில் வெளிவந்து சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.
அன்று இரவே பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பகத்சிங் மாணவர்கள் மோர்சா அமைப்பை சேர்ந்த 13 மாணவர்கள் உ.பி. காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது BNSன் பல பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிந்துள்ளது. குறிப்பாக பிணையில் வெளியில் வர முடியாத அளவிலான பிரிவுகளையும் இவர்கள் சேர்த்துள்ளனர். மேலும் மாணவர்களுக்கு நக்சலைட் அமைப்புடன் தொடர்புள்ளதா என்று விசாரிப்பதற்காக பயங்கரவாத தடுப்பு பிரிவைச் சேர்ந்த போலீஸ் மாணவர்களை விசாரணை செய்ததாக சில பத்திரிக்கைகள் கூறுகின்றன. இந்த கைதை கண்டித்து பல மாணவர் அமைப்புகளும் கட்சிகளும் ஆதித்யாநாத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இந்து மதக் கொடுமைகளுக்கும் சாதிய பாகுபாடுகளுக்கும் அடிப்படையான மனுஷ்மிருதியை அம்பேத்கர் டிசம்பர் 25 அன்று எரித்தார். மனுஸ்ருமிதி எரிப்பு நாள் என்பது பரவலாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு நிகழ்வாகும். பார்ப்பனியத்தை தூக்கிப் பிடிக்கும் கடைந்தெடுத்த பாசிஸ்ட் ஆன யோகி ஆதித்யாநாத்துக்கோ அல்லது BHU பேராசிரியர்களுக்கோ மனுஸ்மிருதியை எரிப்பதை அல்லது அதை ஒட்டி நடக்கும் நிகழ்வுகளை தடை செய்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால் அவ்வாறு எதிர்க்கும் மாணவர்களை நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தி கடுமையான பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையிலடைப்பதென்பது மோடி-அமித் ஷா – ஆதித்தியநாத் கும்பலின் புதிய உத்தியாகும்.
பகத்சிங் மாணவர் மோர்சா அமைப்பு மார்க்சியத்தையும் அம்பேத்கார் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இயங்கி வரக்கூடிய மாணவர் அமைப்பாகும். இது, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளை மக்கள் மத்தியிலும் மாணவர்கள் இளைஞர்களிடையேயும் அம்பலப்படுத்தி வருகின்றது. மேலும் இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக செயல்பட்டு வரக்கூடிய ஒரு அமைப்பு.
இந்த காவி பாசிச கும்பல், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தனக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது ஏபிவிபி குண்டர் படையை ஏவி தாக்குதல் தொடுத்தது என்றால் வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தில் தனியார் செக்யூரிட்டி அடியாட்களையும், போலீசையும் இறக்கி மாணவர்களைத் தாக்குகிறது. இவ்வமைப்பைச் சேர்ந்த மாணவர்களை ஆதித்யநாத் போலீசும் மோடியின் தேசிய புலனாய்வு முகமையும் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகிறது.
- கோபால்