திராவிட மாடல் அரசும் – பாசிச எதிர்ப்பும்

சரித்திரம் படைக்கிறார் மு.க.ஸ்டாலின்; பாஜக அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டுகிறார் உதயநிதி ஸ்டாலின்; இதைக் கண்டு வாயடைத்துப் போய் நிற்கிறது பாஜகவும் மோடி அரசும் எனத் துதிபாடுகின்றனர் திமுகவின் பாதந்தாங்கிகள். ஆனால் பாஜகவின் காவி கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து நடத்தும் பொதுக்கூட்டத்திற்குக் கூட அனுமதி தராமல் இழுத்தடிப்பது தான் திராவிட மாடல் அரசின் யோக்கிதை.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு 75 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளைக் கூடப் போராடிப் பெற  வேண்டிய அவலம் இந்திய மக்களுக்கு உள்ளது. அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குக்கூட மக்கள் தன்னெழுச்சியாகச் சாலை மறியலில் ஈடுபடுவதை நாடு முழுவதும் பரவலாகக் காணமுடிகிறது. ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளிடம் மனு கொடுக்கும் வழிமுறையின் மூலம் கெஞ்சிக் கெஞ்சி ஓய்ந்து போய், எந்த பலனும் கிடைக்காமல் சாலை மறியல் போன்ற வன்முறையற்ற அமைதியான போராட்டங்களை நடத்துவன் மூலம் தங்களின் தேவைகள் ஓரளவேனும் நிறைவேற்றப்படுவதை அவர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டுள்ளனர். ஆனால் ஆளும் கட்சியும், அதிகார வர்க்கமும், நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட இந்த போராட்ட வடிவங்களை கூட அனுமதிப்பதில்லை.

அடிப்படை வசதிகளைக் கூட செய்து தருவதற்கு வக்கற்ற மாநில அரசுகள், போலீசைக் கொண்டு மக்களின் போராட்டங்களை ஒடுக்கி வருவது நாம் அறிந்ததே. அதேபோல் பாஜக ஆட்சியில் இருக்கும்  பல மாநிலங்களில் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டங்கள் போலீசைக் கொண்டு மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டு வருகிறது. தில்லியில் சி.ஏ.ஏ போராட்டம், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், விவசாயிகளின் போராட்டம், லடாக்கை சேர்ந்த சோனம் சுவாங்க் போராட்டம், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதற்கு எதிரான போராட்டம் என ஒன்றிய பாஜக அரசு ஒடுக்கிய போராட்டங்களைப் பற்றி நாம் பல உதாரணங்களைக் கூற முடியும்.

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் மு.க.ஸ்டாலினின் ”திராவிட மாடல்” அரசோ பாசிசத்தை எதிர்க்கிறோம் என வாய்ச்சவடால் அடித்துக் கொண்டு, பாஜக ஆளும் மாநிலங்களைப் போலவே மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும், சமுகநீதிக்கு ஆதரவாகவும், கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராகவும், பாசிசத்திற்கு எதிராகவும் போராடும் மக்களை அடித்து ஒடுக்குவதன் மூலம் மக்களின் போராட்ட உணர்வை முனை மழுங்கச் செய்கிறது.

அங்கன் வாடி ஊழியர்கள் கடந்த நவம்பர் 20-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அங்கன் வாடி ஊழியர்களை அரசின் இ.எஸ்.ஐ மருத்துவக்  காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் போன்ற 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ அங்கன் வாடி ஊழியர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் போராட்டத்திற்கு செல்லத் தயாராக இருந்த திருப்பூர் பகுதி ஊழியர்களின் வீட்டிற்குச் சென்ற போலீசு அவ்வூழியர்களை மிரட்டியுள்ளது. மேலும் சி.ஐ.டி.யூ ஒன்றிய செயலரின் செல்போனைப் பறித்ததுடன் அவரின் தாயாரையும் மிரட்டியுள்ளது. இச்செய்தியை தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைக் கைது செய்வது என்ற வழக்கமான நடைமுறையை மீறித்  தற்போது போராட்டத்திற்குச் செல்ல விடாமல் மக்களை மிரட்டி வருகிறது ”திராவிட மாடல்” அரசு.

குழந்தைகள், பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை, பாகுபாடு மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பிரச்சார இயக்கத்தை சிபிஐ (எம்) நாடு முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் ”இரவும் எமக்கானதே” எனும் முழக்கத்தோடு நவம்பர் 16-ம் தேதியன்று இரவு 10 மணிக்கு சென்னையில் பெரியார் சிலையிலிருந்து உழைப்பாளர் சிலை வரை பாலின சமத்துவ நடை நிகழ்வு இரண்டாவது ஆண்டாக நடத்த திட்டமிடப்பட்டதற்கான அனுமதியை திராவிட மாடல் அரசு தனது போலீசு மூலம் மறுத்துள்ளது. இதுமட்டுமில்லாமல் சி.ஐ.டி.யூ தலைவர் செளந்தரராஜன் உள்ளிட்ட 300 பேர் மீதும்,  மத்திய சென்னை மாவட்டச் செயலர் செல்வா உள்ளிட்ட 40 பேர் மீதும் இரண்டு வழக்குகளாகப் பதிவு செய்துள்ளது ”திராவிட மாடல்” அரசு. ஒருவேளை பாலின ஒடுக்குமுறைக்கு எதிராக ‘இரவும் எமக்கானதே!’ பாலின சமத்துவ நடை! என்ற நிகழ்வைக் கூட நடத்த விடாமல் தடுத்து வழக்குப் பதிவு செய்வது தான் ”திராவிட மாடல்” அரசோ! இத்தனைக்கும் மேலாக திமுக கூட்டணியில் தோழர்கள் அங்கம் வகித்து வருகிறார்கள்.

தில்லியில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கிய மோடி அரசுக்கும், பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான பிரச்சார இயக்கத்தை ஒடுக்கும் மு.க.ஸ்டாலின் அரசுக்கும் என்ன வேறுபாடு என்பதை சி.பி.ஐ(எம்) கட்சிதான் விளக்க வேண்டும்.

மக்கள் தங்களது தேவைகளைக் கோரிப் பெறுவதற்கும், வாழ்வுரிமைகளைப் பறிக்கும் அரசின் கொள்கைகளை எதிர்ப்பதற்கும் நடைமுறையில் இருக்கும் சட்டப்பூர்வ வழிமுறைகளைக்கூட காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகள் அனுமதிப்பதில்லை. நாடு முழுவதும் காவி பாசிசத்திற்கு எதிராகவும், கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராகவும் போராடும் மக்களையும், அரசியல் கட்சிகளையும் அடக்கி ஒடுக்கி சிறையில் தள்ளுவோம் எனப் பீதியூட்டுகின்றனர் பாஜகவின் காவி பாசிஸ்டுகள்.

தில்லியை நோக்கி விவசாயிகள் நடத்திய பேரணி, தலைநகரை நெருங்கவிடாமல் செய்வதற்கு பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தி தடைகளை ஏற்படுத்தி  விவசாயிகளை அச்சமூட்டியது மோடி அரசு. தமிழகத்தில் சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் வைக்கும் உரிமைக்காக போராடிய போது போராட்டம் நடத்துவதற்காகப் போடப்பட்ட பந்தலை பிய்த்து எறிந்தது ”திராவிட மாடல்” அரசு.

பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால்  தங்களது வாழ்வுரிமை பாதிக்கப்படும் எனப்  பல மாதங்களாக அவ்வூர் மக்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு செவி சாய்க்காமல் இழுத்தடித்து வருகிறது மு.க.ஸ்டாலின் அரசு. அதேபோல் மதுரை சின்ன உடைப்பு கிராம மக்கள் அப்பகுதியில் அமையவிருக்கும் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய போது ஆயிரக்கணக்கான போலிசை குவித்துப் பீதியூட்டியது.

இப்படித் தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியா முழுவதும் தனியார்மயம்-தாராளமயம்- உலகமயத்தை எதிர்த்துப் போராட்டம் வெடித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துவதற்கான ஜனநாயக உரிமைகளைக்கூட மறுத்தும் முடக்கியும் வருகிறது மாநில அரசுகள்.

புரட்சிகர மக்கள் அதிகாரமும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் இணைந்து டிசம்பர் 1-ம் தேதியன்று (இன்று) ஏறித்தாக்கிவரும் காவி கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு!” என்ற தலைப்பில், காவி-கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து தர்மபுரியில் நடத்தும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்குப் போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்றத்திற்குச் சென்றே அனுமதி வாங்கியுள்ளது. அதுவும் பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது.

புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக இயக்கங்கள் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கோ, ஊர்வலத்திற்தகோ அனுமதி கேட்டவுடன் தமிழக போலீசு கொடுப்பதில்லை. மேலும் போலீசின் தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் மாதக் கணக்கில் நீதிமன்றம் இழுத்தடிக்கிறது. இதுபோன்ற ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் நீதிமன்றத்திற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் பொதுக்கூட்டம் நெருங்கும் நாள் வரையில் கூட்டம் நடத்துவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல்தான் பிரச்சாரம் செய்ய வேண்டியிருக்கிறது.

மேலும் புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் நடத்தும் போராட்டங்களில் ஊர்வலம் அமைதியாக நடத்தப்படவேண்டும், என்னென்ன முழக்கங்கள் போடப்படவேண்டும், ஊர்வலம் எங்கு தொடங்கி எங்கு முடிய வேண்டும் எனப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றங்கள் விதித்து ஊர்வலத்தின் நோக்கத்தையே சிதைத்து வருகின்றன.

இப்படி போலீசு, நீதிமன்றக் கூட்டணியால் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை விளக்கி மக்களுக்கு புரிய வைப்பதற்கான ஜனநாயக உரிமைகள் கூட மறுக்கப்படுவது பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமல்ல, பாசிசத்தை எதிர்க்கப் புறப்பட்ட மு.க.ஸ்டாலினின் ”திராவிட மாடல்” ஆட்சியிலும் நடந்தேறுகிறது.

சரித்திரம் படைக்கிறார் மு.க.ஸ்டாலின்; பாஜக அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டுகிறார் உதயநிதி ஸ்டாலின்; இதைக் கண்டு வாயடைத்துப் போய் நிற்கிறது பாஜகவும் மோடி அரசும் எனத் துதிபாடுகின்றனர் திமுகவின் பாதந்தாங்கிகள். ஆனால் பாஜகவின் காவி கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து நடத்தும் பொதுக்கூட்டத்திற்குக் கூட அனுமதி தராமல் இழுத்தடிப்பது தான் திராவிட மாடல் அரசின் யோக்கிதை.

பாசிசத்தின் வளர்ச்சி, நாட்டின் ஒற்றுமைக்கு பேராபத்து; அதை வளரவிடக்கூடாது என சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தார் மு.க.ஸ்டாலின். ஆனால் இன்று தமிழகம் முழுவதும் இந்து மத வெறி ஆர்.எஸ்.எஸ்-சை   சுதந்திரமாக உலவ விட்டுள்ளார். ஒருபுறம் பாசிச எதிர்ப்பு எனப் பேசிக்கொண்டே மறுபுறம் காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு ஆதரவான வேலையில் இறங்குகிறார் மு.க.ஸ்டாலின்.

தன் பாலின சமத்துவ மேடைக்குக் கூட அனுமதி தராமல் வழக்கு போடும் மு.க.ஸ்டாலின் அரசை நம்பி, பாசிச சக்திகளை முறியடிக்கப் போவதாக மாய்மாலம் செய்து வருகிறது சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ(எம்).  மேலும் திமுக-வுடன் தேர்தல் கூட்டணி ஏற்படுத்தி  பாஜக ஆட்சிக்கு வராமல் தடுத்து, பாசிசத்தை வீழ்த்தி விடலாம் என மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் வேலையையும் செவ்வனே செய்து வருகின்றனர்.

இந்துத்துவப் பரிவாரங்களை எதிர்ப்பதாக நாடகமாடும் மு.க.ஸ்டாலினையும், ”திராவிட மாடல்” அரசையும் தனிமைப்படுத்தாமல் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த முடியாது. மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒடுக்கி வருவதில் இருந்தே இதனைப்  புரிந்துகொள்ள முடியும்.

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் எதிர்ப்பும், பாசிச எதிர்ப்பும் வேறு வேறல்ல. இரண்டும் இணைந்துதான் மக்களை ஒடுக்கி வருகிறது. தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றுவதற்கு ஒருபுறம் காவி எதிர்ப்பு வீர வசனம் பேசிக்கொண்டே மறுபுறம் மக்கள் விரோதப் புதிய பொருளாதாரக் கொள்கையை மூர்க்கமாக அமல்படுத்திவரும் பாசிஸ்டுகளோடு சமரசம் செய்துகொள்ளும்  தி.மு.க போன்ற மண்குதிரைகளை நம்பி ஒரு பயனுமில்லை.

அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும்  திரண்டுள்ள  பாசிசக் குண்டர் படைகளின் உண்மையான பலம் நாடாளுமன்றத்திற்கு வெளியில்தான் உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டு வருகிறது. எனவே நாடாளுமன்ற அரசியலுக்கு  அப்பால் புரட்சிகர,  ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து தீரமிக்கப் போராட்டங்களைத் தெருவில் இறங்கி நடத்துவதன் மூலமே பாசிச குண்டர் படைகளையும், பாசிசத்தையும் வீழ்த்த முடியும்!

  • தாமிரபரணி

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. எவ்வளவு நடைமுறை அனுபவங்கள் இருந்தாலும், சிபிஐயும் சிபிஎம் மும் பாசிசத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு, பாசிச எதிர்ப்பு என்னவென்றே தெரியாத திமுகவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு பிழைப்புவாதிகளாக மாறி உள்ளனர் என்பது தான் இன்றைக்கு அபாயகரமான நிலையாக உள்ளது. அங்கு இருக்கும் உழைக்கும் மக்களை தொழிலாளர்களை, விவசாயிகளை சரியான பாதையில் தேர்தலுக்கு வெளியே திரட்டுவது நம் கடமை என உணர்ந்து செயல்படுவோம்.