பெண்களை நதியாக, இயற்கையாக, தெய்வமாக வழிபடுகிறோம் என என்னதான் காவிகள் கதையளந்தாலும் அவை அனைத்துமே மேடையில் அவர்கள் போடும் நாடகம் மட்டுமே என்பதை அவர்களது செயல்பாடுகள் காட்டிக் கொடுத்துவிடும். காவி பாசிஸ்டுகளின் கருத்தியல் அடிப்படையான சனாதன தர்மம் என்பது சிறுபான்மையினருக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மட்டுமல்ல பெண்களுக்கும் எதிரானதுதான். இந்து மதத்தின் புனித நூலாக காவிகள் முன்னிறுத்தும் பகவத் கீதை பெண்களும், சூத்திரர்களும், வைசியர்களும் இழிபிறவிகள் என வகைப்படுத்துகிறது.
பெண்களுக்கு எதிரான காவிகளின் மனநிலை இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் வெளிவந்துள்ளன ஆனால் அப்போதெல்லாம் அவர்களது தனிப்பட்ட கருத்தாக மட்டுமே வந்திருந்தன ஆனால் இன்றைக்கு அது அவர்கள் ஆட்சியின் கீழ் இயங்கும் அரசுத் துறைகளில் ஆழமாக ஊடுருவி, பகீரங்கமாகவே பெண்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கிறது. அதுவும் பாலியல் ரீதியில் தாக்கப்படும் பெண்கள் அதற்கெதிராக போராடும் போது, குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதும், பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக்கப்படுவதும், நீதிக்காக அலைக்கழிக்கப்படுவதும் தொடர்கதையாகிறது.
மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவது ஓராண்டாக தொடர்ந்து வந்தது. பல்கலைக்கழகத்திற்கு வெளியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதைத் தடுப்பதற்கு பல்கலைகழக நிர்வாகமும், போலீசும் எதுவும் செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அக்டோபர் மாதத்தில் மாணவர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்திய போதும் கூட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்களேயொழிய குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை.
நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்து மூன்று மாணவிகள் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதன் பின்னர் மாணவர்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் போராட்டம் தீவிமடைந்ததை தொடர்ந்து தற்போது பாஜகவின் ஐடி பிரிவைச் சேர்ந்த மூன்று காலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளிகளில் குணால் பாண்டே என்பவன் பாஜகவின் வாராணசி ஐடி பிரிவு ஒருங்க்கிணைப்பாளராகவும், சக்சம் பட்டேல் என்பவன் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்கள்.
நவம்பர் ஒன்றாம் தேதி நடந்த தாக்குதல் குறித்து அன்றே மாணவி தரப்பில் போலீசில் புகாரளித்து, குற்றவாளிகள் அனைவரும் சிசிடிவி காட்சிகள் மூலமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் யார் எனத் தெரிந்தும் உபி போலீசார் கைது செய்யவில்லை. ஏனென்றால் குற்றவாளிகளின் முகநூல் பக்கங்கள் மோடி, அமித்ஷா, ஆதித்யநாத் என பாஜகவின் முக்கிய தலைவர்களுடன் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களால் நிரம்பியுள்ளது.
நவம்பர் 5ம் தேதியே போலிசாரல் அடையாளம் காணப்பட்டுவிட்ட முக்கிய குற்றவாளியான பாண்டே நவம்பர் 17ம் தேதி உபி முதல்வர் ஆதித்யநாத்தின் பரிவாரத்தில் அவருடன் இணைந்து பயணித்துள்ளான். இவ்வாறு பாஜகவின் அதிகார மையத்துடன் நெருக்கமாக இருப்பதால் பாலியல் குற்றவாளி எனத் தெரிந்தும் அவனைப் போலீசார் சுதந்திரமாக சுற்றித்திரிய அனுமதித்துள்ளனர்.
இவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் இதற்கு முன்பும் பலமுறை வந்து மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அப்போதெல்லாம் இவர்களைப் போலீசார் கைது செய்து தண்டிக்கவில்லை. அரசியல் பலமும், போலீசின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதால் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் இவர்கள் அடுத்த கட்டமாக மாணவிகளை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இப்போதும் கூட பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் போராட்டம் நடத்தி நெருக்கடியை உருவாக்கியிராவிட்டால் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் இந்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்றால் அது சந்தேகம்தான். ஏனெனில் இது போன்ற பாலியல் குற்றவாளிகளைக் காவிகள் என்றைக்கும் பாதுகாத்தே வந்துள்ளனர். நம் கண்முன்னே நடந்த மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் அதற்கு உதாரணமாக இருக்கிறது.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், காவிகள் பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியதுடன், ஒன்றிய விளையாட்டு அமைச்சகமும், இந்திய மல்யுத்த சம்மேளனமும், பாலியல் குற்றாவாளியைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை வெளியே கொண்டுவந்துள்ளது. மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்திய, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிர்ஜ் பூசன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் நீண்ட நெடிய போராட்டம் நடத்தினார்கள்.
பிர்ஜ் பூசனை அந்தப் பதவியில் இருந்து இறங்கச் செய்ய, அவன் மீது வழக்கைப் பதிவு செய்ய என ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மல்யுத்த வீரர்கள் நாட்கணக்கில் தெருவில் அமர்ந்து போராட வேண்டியிருந்தது. குற்றவாளி பிர்ஜ் பூசன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசின் தடியடிக்கும், தாக்குதலுக்கும் ஆளானார்கள்.
ஒவ்வொரு முறையும் காவி பாசிஸ்டுகளும், அரசும், பிர்ஜ் பூசனைப் பாதுகாக்கும் வேலையைச் செய்தனர். பெண்களுக்கு எதிரான அவர்களது நிலைப்பாடு அம்பலப்பட்ட பின்னரும் கூட இன்று வரை பிர்ஜ் பூசனுக்கு ஆதரவாகத்தான் அவர்கள் நிற்கிறார்கள். தாங்கள் பாலியில் ரீதியில் துன்புறுத்தப்பட்ட இடமாக மல்யுத்த வீராங்கனைகளது புகாரில் கூறப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை அலுவலகம் இன்றுவரை பிர்ஜ் பூசன் சிங்கின் வீட்டில்தான் செயல்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு மல்யுத்த சம்மேளனத்தில் பிர்ஜ் பூசனின் ஆதிக்கம் தொடர்கிறது. இந்தச் செய்தி அம்பலமாகி சர்ச்சைக்குள்ளான பிறகு வேண்டா வெறுப்பாக தலைமை அலுவலகம் விரைவில் இடமாற்றம் செய்யப்படு என அறிவித்திருக்கிறார்கள்.
பாஜக ஆதரவாளர்களால் நிரம்பியுள்ள மாநில மல்யுத்த சங்கங்களின் பிரதிநிதிகள் கூடித் தேர்ந்தெடுக்கும் இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கான தேர்தலில், பிர்ஜ் பூசன் ஆதரவாளர்தான் வெற்றி பெறுவார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தும் அரசு இந்தத் தேர்தலை நடத்த அனுமதித்தது. 15 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 13 இடங்களை பிர்ஜ் பூசன் அணி கைப்பற்றியதில் இருந்தே எந்த அளவிற்கு பாஜகவின் செல்வாக்கு மாநில சங்கங்களில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தனது அணியின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இந்த வெற்றி தன்னுடைய வெற்றி என வெளிப்படையாகவே பிர்ஜ் பூசன் பேட்டியளிக்க தொடங்கியதும், அதனைத் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் அரசால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விருதுகளைத் திரும்ப அளிக்கத் தொடங்கியதும் உருவாக்கிய நெருக்கடியைச் சமாளிக்க ஒரு சொத்தைக் காரணத்தைக் கூறி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை, விளையாட்டு அமைச்சகம், தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை, இதற்கு முன்பு அரசு கொடுத்த வெற்று வாக்குறுதிகள் போன்று கண்துடைப்பு மட்டுமே என்பதால் நம்பிக்கையிழந்து மல்யுத்த விளையாட்டிலிருந்தே ஓய்வு பெறுவதாக வீராங்கனைகள் அறிவித்து வருகின்றனர்.
இவ்வாறு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடி போராடி இனிப் பயன் இல்லை என பெண்கள் நம்பிக்கை இழந்து நிற்பது இது முதல் முறை அல்ல, கடைசி முறையும் அல்ல. சமூகத்தில் மிகவும் ‘உயர்ந்த அந்தஸ்த்தில்’ இருக்கும் பெண் நீதிபதி ஒருவரே கடந்த மாதம் மனம் நொந்து இனி தான் வாழ விரும்பவில்லை என்றும் தன்னைச் சாக அனுமதிக்கும் படியும் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு கடந்த மாதம் கடிதம் எழுதியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் பண்டா மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதியான அவர், அம்மாவட்ட நீதிபதியினால் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிராக அவர் ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து போராடியிருக்கிறார். கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என எல்லா இடங்களிலும் அவரது குரல் எடுபடவில்லை. எந்தவொரு பாலியல் புகாரிலும் குற்றஞ்சாட்டப்பட்டவர் உயர் பொறுப்பில் இருக்கும் பட்சத்தில் அவரைப் பணி மாற்றம் செய்துவிட்டுத்தான் அந்தப் புகாரை விசாரிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் ஆனால் ஒரு மாவட்ட நீதிபதிக்கு எதிராக சக பெண் நீதிபதி எழுப்பிய பாலியல் புகாரை விசாரிக்கும் போது தனது வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் தானே காற்றில் பறக்கவிட்டது.
இதனை சுட்டிக் காட்டி பெண் நீதிபதி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெறும் எட்டு நொடிகளில் தள்ளுபடி செய்தது. தனது ஒன்றரை ஆண்டுகால போராட்டத்தினை வெறுமனே எட்டு நொடியில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்தப் பெண் நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்தது போல தனது வாழ்க்கையையும் தள்ளுபடி செய்து தன்னைச் சாக அனுமதிக்கும் படி கோரியிருக்கிறார்.
தன்னுடைய அனுபவத்திலிருந்து இந்திய உழைக்கும் மகளிருக்கு பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி கூறியிருக்கும் அறிவுரை இதுதான், “இந்த அமைப்புக்கு எதிராக போராட முடியும் என நினைக்கும் பெண்களிடம் நான் கூற விரும்புவதெல்லாம், என்னால் முடியவில்லை, ஒரு நீதிபதியாக, மற்றவர்களுக்கு நீதிவழங்கும் பொறுப்பில் இருக்கும் என்னால் எனக்கு நீதிகிடைக்க போராட முடியவில்லை. நீங்கள் ஒரு பொம்மையாக உயிரற்ற பொருளாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்”.
காவி பாசிஸ்டுகள் படைக்க விரும்பும் இந்துராஷ்டிரத்தில் பெண்களின் நிலை எப்படியிருக்கும் என்பதை இந்தப் பெண் நீதிபதி ஒற்றை வரியில் சொல்லிச் சென்றுவிட்டார். அடுத்தடுத்த நடந்துள்ள இந்த சம்பவங்கள் மூலம் காவிகள் அதனை மெய்பித்து வருகின்றனர்.
ஆணாதிக்க சமூகத்தின் பிற்போக்குக் கலாச்சாரத்தினால் காலம் காலமாக அடிமைப்படுத்தப்பட்டு, அடுப்படியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டு தற்போது நமது நாட்டில் பெண்கள் படிப்படியாக பல துறைகளில் நுழையத் தொடங்கியுள்ளனர். நாட்டின் மிக முக்கியமான பல்கலைக் கழகமான பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் அதுவும் ஐஐடியில் படிக்கும் மாணவிகள், ஒலிம்பிக் போன்ற உலக விளையாட்டு அரங்குகளில் நமது நாட்டின் பிரதிநிதியாக விளையாடி பல்வேறு பதக்கங்களை வென்ற புகழ் பெற்ற மல்யுத்த வீராங்கனைகள், ஆண்கள் மட்டுமே கோலோச்சி வரும் நீதித் துறையில் முக்கிய பொறுப்பில் உள்ள உ.பி. பெண் நீதிபதி இவர்கள் அனைவரும் நமது நாட்டில் பெண்களின் முன்னேற்றத்தின் அடையாளமாக இருக்க வேண்டியவர்கள்.
ஆனால் என்னதான் பெரிய பல்கலைக்கழகத்தில் மெத்தப் படித்திருந்தாலும், சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்றிருந்தாலும், எவ்வளவு முக்கியமான பதவியில் இருந்தாலும், சனாதன தர்மத்தின் படி நடக்கும் ஆட்சியில் பெண் என்பவள் சூத்திரர்களும் வைசியர்களும் போலக் கீழான இழிபிறவி மட்டுமே. தனக்கெதிரான இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கும் கூட அவளேதான் காரணம், அதற்கெதிராக போராடுவது என்பதும் மிகப் பெரிய குற்றம். அப்படியும் மீறிப் போராடினால், அது நிச்சயம் காவி பாசிஸ்டுகளாலும், அவர்களது அரசாலும் ஒடுக்கப்படும்.
- அறிவு
நிர்மலா மாமி போன்றவர்களுக்கு இது பொருந்தாது.