தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலில் நுழையக்கூடாது, அவர் ஜனாதிபதியே ஆனாலும் நுழைந்தால் தீட்டுக் கழிப்போம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது பார்ப்பனர்களுக்கே அதற்கான தகுதியும் உரிமையும் உண்டு, இடஒதுக்கீடு கூடாது அப்படிக் கொடுத்தால் பார்ப்பனர் உள்ளிட்ட ‘உயர்’ சாதியினருக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என எந்நேரமும் சனாதன சாதிய ஒடுக்குமுறையைத் தூக்கிப் பிடிக்கும் காவிப் பாசிச கும்பல், தேர்தல் வந்துவிட்டால் மட்டும் அனைவரும் சமம், எல்லோரும் இந்துக்கள் எனக் கூப்பாடு போட ஆரம்பித்துவிடுவர்.
அதே போலத்தான் பொது சிவில் சட்டம் விசயத்திலும். “இந்தியா என்பது மதசார்பற்ற நாடு கிடையாது. இந்தியா இந்து நாடு” என்று முழங்கும் காவி பாசிஸ்டுகள் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கேட்கும் போது மட்டும், இந்தியா மதசார்பற்ற நாடு எனவே அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் தேவை என இரட்டை நாக்கில் பேச ஆரம்பித்துவிடுவர்.
தற்போது குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்து வருவதாலும், கூடிய விரைவில் அஸ்ஸாம், கர்நாடகாவில் தேர்தல் வரவிருப்பது அடுத்தாக நாடாளுமன்றத் தேர்தலும் வரவிருப்பதால், அனைத்து மதத்தினருக்கு பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்று பேச ஆரம்பித்துள்ளனர். இவர்களைப் பொறுத்தவரை பொது சிவில் சட்டம் என்பது அயோத்தி பிரச்சனையைப் போல மக்களை மதரீதியில் பிளவு படுத்திட மற்றுமொரு ஆயுதம்.
இமாச்சல பிரதேசம், உத்ராகண்ட், மகாராஷ்ட்ரா ஆகிய பாஜக ஆளும் மாநில அரசுகள் பொதுசிவில் சட்டத்தினை கொண்டு வருவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகளின் தலைமையில் குழுக்களும் இம்மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
பாஜக தனது குஜராத் தேர்தல் அறிக்கையில், மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுசிவில் சட்டத்தினை கொண்டு வருதாக உறுதி அளித்துள்ளது. இதற்கிடையே பொது சிவில் சட்டம் குறித்து கலந்தாலோசிப்பதற்காக 22வது தேசிய சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூட்டியுள்ளார். பாபர் மசூதி பிரச்சனை, ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய பிரச்சனைகளில் நீதிமன்றங்களில் சாதகமான தீர்ப்பை பெற்ற பாஜக தற்போது தனது அடுத்த இலக்கான பொது சிவில் சட்டப்பிரச்சனையை முன்தள்ளுகிறது. இதனை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் கருவியாக பாஜக பயன்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
சமீபத்தில் இந்தியா டுடே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, முத்தலாக் சட்டம் என்ற வரிசையில் பொதுசிவில் சட்டமும் கொண்டுவரப்படும் என்று பேசினார். மேலும் “பாஜக மட்டுமல்ல, அரசியலமைப்பு சபையும் பாராளுமன்றம் மற்றும் மாநிலங்களுக்கு இந்தச் சட்டம் சரியான நேரத்தில் நாட்டிற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தியது. எந்தவொரு மதச்சார்பற்ற நாட்டிற்கும், மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக் கூடாது. ஒரு தேசமும் மாநிலங்களும் மதச்சார்பற்றதாக இருந்தால், மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் எப்படி இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா உண்மையாலுமே மதசார்பற்ற நாடென்று சொன்னால் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை(திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை, சொத்துரிமை, குழந்தை தத்தெடுப்பது போன்றவை) கொண்டு வருவதுதானே சரியானது என்பது தான் அமித்ஷாவின் வாதம். இதைத்தான் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் நீண்டகாலமாகப் பிரச்சாரமும் செய்து வருகிறது. இதனை பாஜகவினரின் வார்தைகளில் சொல்வதென்றால், ‘முஸ்லீம் மட்டும் நாலு பொண்டாட்டி கட்டிகிறான் இதனால் முஸ்லீம் மக்கள் தொகை பெருகுகிறது’ எனவே பொது சிவில் சட்டம் தேவை. இதன் மூலம் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களை தூண்டி விடுகிற வேலையைத்தான் காவி கும்பல் செய்துவருகிறது.
சில நாட்களுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சௌகான், “ம.பியில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்கான குழு அமைக்கப்போவதாகும் ஒருவனுக்கு ஒரு கல்யாணம் என்பதே சரி” என்றும் பேசியுள்ளார். முதலமைச்சரின் லட்சணமே இதுவென்றால் பிரியாணி அண்டா திருடுகின்ற பாஜகவின் அடிமட்டத் தொண்டனைப் பற்றி என்ன சொல்ல?
பாஜக ஆளுகின்ற உத்தராகண்ட் அரசு அமைத்த பொது சிவில் சட்ட கமிட்டி தனது அறிக்கையில் ‘அனைத்து சமூகத்தினரும் ஒரே எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று பரிந்துரைத்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் நிகழ்ச்சியொன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “ஒரு விரிவான மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கை இருக்க வேண்டும், அது அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும், அது செயல்படுத்தப்பட்டவுடன், யாருக்கும் எந்த சலுகையும் வழங்கக்கூடாது”, என்றும் “மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு நாடுகளின் பிளவுக்கு வழிவகுத்தது, அதற்கு முக்கிய காரணம் மதமாற்றம்” என்றும் பேசியுள்ளார். மோகன் பகவத் முஸ்லீம் சமூகத்தைத்தான் குறிப்பிட்டு பேசுகிறார். அவர் பேசியது முற்றிலும் உண்மைக்கு மாறானது.
அமித்ஷா கூறியபடி, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னதாக, முதலில் இந்து மதத்திலுள்ள அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான சிவில் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு பாஜக ஒத்துக்கொள்ளுமா என்று அமித்ஷா பதில் சொல்லட்டும். ஏற்கனவே இந்தியாவிலுள்ள பல பிரிவு மக்களையும் இந்து என்ற வட்டத்தை விட்டு விலகாமல் இருக்க பல சமரசங்களை இந்து சட்டத்ததில் செய்துள்ளனர். எடுத்துக்காட்டாக, புதிய கலாச்சாரம் ஏட்டில் இது குறித்த கட்டுரை ஒன்றில் கூறியுள்ளதை அப்படியே தருகிறோம்
தந்தை வழி வாரிசுரிமை மற்றும் கூட்டுக் குடும்பம் என்ற கோட்பாட்டையே இந்து சட்டம் பின்பற்றுகிறது. எனினும் கேரளத்தில் சில சமூகத்தினர் மத்தியில் நிலவும் ‘மருமக்கள் தாயம்’ மற்றும் ‘அரிய சந்தானம்’ எனும் தாய்வழிக் குடும்ப முறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இந்துச் சட்டத்தால் தடை செய்யப்பட்ட மண உறவுகளில் (அதாவது சிறிய தந்தையின் மகனை அல்லது மகளை மணம் செய்யக்கூடாது என்பன போன்றவை) பழங்குடியினர் மற்றும் சில சமூகத்தினர் திருமணம் செய்வது நீண்டகால மரபாக இருப்பதால் அதுவும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
கோவா மாநில இந்துக்களில் சில பிரிவினரிடையே நிலவும் இருதார மணமும் சட்டத்தால அங்கீகரிக்கட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் அவர்களுக்குச செல்லாது. அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.
கேரளத்து மாப்ளா முசுலீம்களும், சித்தூர் மாவட்ட கிறித்தவர்களில் சிலரும் (வன்னியர்கள்) வாரிசுரிமை குறித்த பிரச்சினையில் மட்டும் அவர்களது மரபுப்படி இன்றும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ்தான் வருகின்றனர்.
தனது பண்பாட்டுக்கு எள்ளளவும் தொடர்பற்ற குலமரபுகளையும், பண்பாடுகளையும் இந்துச் சட்டத் தொகுப்பிற்குள் பார்ப்பனியம் ஏன் அனுமதித்தது என்ற கேள்வி இங்கே எழலாம். மரபுகள் மற்றும் பண்பாடுகள் விசயத்தில் பார்ப்பனியம் தனக்குள்ளேயே வட்டார ரீதியாகப் பிளவுபட்டிருந்தது . மேலும், பார்ப்பனியப் பண்பாட்டின் எல்லைக்கு வெளியே இருந்த பலதரப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினரின் உட்குழுப் பண்பாட்டில் ‘வரம்பு’ மீறி தலையிடுவதன் மூலம் ‘இந்து ஒற்றுமை’ என்ற தனது அரசியல் நோக்கத்திற்குக் கேடு விளைவித்துக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை.
இவ்வளவு ஏன், இந்துக் கோவிகளில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராகும் சட்டத்தினை இன்றுவரை பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் எதிர்த்து வருகிறது. சட்டபிரிவு 24 மற்றும் 25ல் சொல்லப்பட்டுள்ள மத உரிமைகளை காட்டி ஆகம விதிப்படி பிராமணர்களைத் தவிர பிற சாதியினர் அர்ச்சககராவதற்கு உரிமை இல்லை என வாதாடி வருகிறது காவி கும்பல். இதனை நீதிமன்றங்களும் ஏற்றுக்கொள்கின்றன.
மொத்தத்தில் பொது சிவில் சட்டம் கோரும் காவி கும்பலுக்கு இந்துக்களின் நலன் முக்கியமில்லை அவர்களுக்குத் தேவையெல்லாம் தங்களது இந்துராஷ்டிரக் கனவை நனவாக்க மத ரீதியில் சமூகம் பிளவுபட வேண்டும் அவ்வளவே.
- அழகு