முதலாளிகள் நடத்தும் பருவநிலை மாநாடு – ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை!

தன்னுடைய லாபவெறியினால் இயற்கையை அழிக்கும் முதலாளித்துவத்தால் அதன் சித்தாந்ததால் உலகில் மனித குலத்தையும், இயற்கையையும், பல் உயிரினச் சூழலையும் ஒரு போதும் காப்பாற்ற முடியாது. முப்பது ஆண்டுகள் என்ன? முந்நூறு வருடங்கள் பருவநிலை மாநாடு நடத்தினாலும், லாபவெறிக்காக இயற்க்கையை அழிக்கும் முதலாளித்து கார்பரேட் நிறுவனங்களால் இயற்கை பேரழிவிலிருந்து இவ்வுலகைக் காப்பாற்ற முடியாது. இயற்கையும், மனித குலமும் பிழைத்திருக்க வேண்டுமாயின் முதலாளித்துவம் ஒழிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் உலகின் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தங்கள் நோக்கம் எனக் கூறிக்கொண்டு, சர்வதேச பருவநிலை மாநாடு என்ற பெயரில்  கூடி நிதிமூலதனத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகளை வெளியிடுவார்கள். அந்த வகையில் இந்த வருடத்தில் அவர்கள் எகிப்தின் ஷார்ம் அல்-ஷேக் நகரில் நடைப்பெற்றுவரும் ஐ.நாவின் 27வது  சர்வதேச பருவநிலை மாநாட்டிற்காக கூடியிருக்கிறார்கள். சுற்றுச்சூழல் மாசுப்பாட்டிற்கு காரணமாக உள்ள கோகோ கோலா நிறுவனம் இம்மாநாட்டிற்கு ஸ்பான்சராக உள்ளது.

விநாடிக்கு 4000 பிளாஸ்டிக் பாட்டில்களை உற்பத்தி செய்தும் நிலத்தடி நீரை உறிஞ்சியும் சுற்றுச்சூழலை நாசம் செய்யும் கோகோ கோலா நிறுவனம் பருவநிலை மாநாட்டிற்கு ஸ்பான்சராக இருப்பதை கண்டித்து பல நாடுகளில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.

பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக உள்ள கோகோ கோலா போன்ற லாபவெறி கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்கின்ற இத்தகைய போராட்டங்களை வரவேற்கப்பட வேண்டிவைதான். ஆனால், ஒவ்வொரு பருவநிலை மாநாட்டின் போதும் இதை எதிர்த்து போராடுபவர்கள் முன்வைக்கும் மாற்றுத் தீர்வுகள் குறிப்பாக சூழலியம், இயற்கைமரபுக்குத் திரும்புதல் போன்ற எவையும் புவிவெப்பமாதலுக்கு பிரதானக் காரணியாக உள்ள முதலாளித்துவ லாபவெறியைப் அம்பலப்படுத்தியோ அல்லது முதலாளித்துக் கட்டமைப்புக்குள் தீர்வு இல்லை என்பது பற்றியோ பேசுவதில்லை.

 

 

தன்னால் விற்கப்படக் கூடியதாக இல்லாதவரையில் எந்த ஒரு பொருளின் பயன் மதிப்பையும் முதலாளித்துவம் பொருட்படுத்துவதில்லை. பயன்பாட்டுக்கு பிறகு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற பயன்மதிப்பற்ற பாட்டில்களினால் இப்பூமிக்கு ஆபத்து என்பதை பற்றி கோகோ கோலா போன்ற பகாசுர நிறுவனங்கள் கவலைப்படபோவதும் இல்லை.

கேரளாவின் பிளாச்சிமடாவில் ஆயிரம் ஆண்டுகளாய் சேமிக்கப்பட்ட நிலத்தடி நீர் வளத்தை இரண்டே ஆண்டுகளில் கோக்கோ கோலா நிறுவனம் உறிஞ்சித் தீர்த்தது. பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வாழ்ந்த கேரள விவசாயிகளினால் எந்த பாதிப்புக்கும் உள்ளாத நிலத்தடி நீரை இரண்டே ஆண்டுகளில் ஒட்ட உறிஞ்சியதோடு மட்டுமில்லாமல் தன்னுடைய ஆலை கழிவுகளை நீரில் கலக்கச் செய்து இப்பகுதியை நஞ்சாக்கியது கோகோ கோலா நிறுவனம். மேலும் ஒரு நாளைக்கு 5 இலட்சம் லிட்டர் அளவில்  தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து கொள்ளை லாபம் ஈட்டிவருகிறது இந்நிறுவனம்.

கோகோ கோலா நிறுவனம் மட்டுமில்ல, மைக்ரோசாப்ட் என்ற கார்ப்பரேட் நிறுவனமும் இந்த COP27  மாநாட்டிற்கு ஸ்பான்சராக உள்ளது.

பில்கேட்சின் மைக்ரோசாப்ட் நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்நிறுவனங்களுக்கு தொழிற்நுட்ப ஆலோசராக உள்ளது. புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களுக்கு எண்ணெய் வளத்தை கண்டுபிடிக்க மற்றும் அதை பிரித்தெடுக்க செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை இந்நிறுவனம்  வழங்குகிறது. அதாவது பல லட்சம் ஆண்டுகளாய் பூமியில் சேமிக்கப்பட்டிருக்கும் நிலக்கரியையும் எண்ணெய் வளத்தையும் சில பத்தாண்டுகளிலேயே சுரண்டி எடுத்து லாபமீட்டத் துடிக்கும் பகாசுர எண்ணெய் நிறுவனங்களுக்கு  தன் தொழிற்நுட்பம் மூலம் உதவுகிற வேலைச் செய்து வருகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

எகிப்து அரசு, தான் நடத்தும் பருவநிலை மாநாட்டிற்கான மக்கள் தொடர்புத் துறையை நிர்வகிக்க ஹில்+நோல்டன் என்ற நிறுவனத்தைத் தேர்ந்தெடுந்துள்ளது. இந்நிறுவனம் எக்ஸான்மொபில், செவ்ரான், ஷெல் மற்றும் சவுதி அரம்கோ போன்ற பகாசுர எண்ணெய் நிறுவனங்களை அலுவலக ரீதியாக நிரிவகிக்கும் நிறுவனமாகும்.

நிலக்கரியையும் எண்ணெய் வளத்தையும் சில பத்தாண்டுகளிலேயே சுரண்டி எடுத்து விட்டு ’சூரிய ஒளியிலிருந்தே மின்சாரம்’, ’புதுப்பிக்கப்படக் கூடிய எரிபொருள்’, ’காற்றிலிருந்து மின்சாரம்’, ’கடல் நீரிலிருந்து குடிநீர்’ என்று முதலாளித்துவம் தன் மூலதனத்தை பெருக்கும் வழியை  தேடுகிறது. இதற்காக சர்வதேச பருவநிலை மாநாடு எனும் நாடகம் மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது.

பிளாச்சிமடாவின் நிலத்தடி நீரையும், பொதிகை மலையின் ஊற்றிலிருந்து சிறுகச்சிறுக சேரும் தாமிரபரணியையும் வளைகுடாவின் எண்ணெய்க் கிணறுகளையும் வற்றச் செய்தவர்கள் பருவநிலை மாநாடு என்ற பெயரில் இயற்கை வளத்தை பாதுகாப்பதற்கு எகிப்தில் கூடி அழுவதுதான் சகிக்க முடியாததாக உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக நடைப்பெற்ற  பருவநிலை மாநாடுகளை, உலகை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் என்று உலக நாடுகள் பீற்றித்திரிகின்றன. அவ்வாறு பத்திரிக்கைகளும் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால்  இம்மாநாட்டின் நோக்கமோ கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களை இயற்கையின் பாதுகாவலன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கும், முதலாளித்துவத்தின் லாபவெறியின் காரணமாக ஏற்படுகின்ற இயற்க்கை சீரழிவுகளினால் மக்களிடம் ஏற்படும் கொந்தளிப்பைத் தணிக்கும் ஒரு முககவசமாக பயன்படுத்திக் கொள்வது என்றுதான் உள்ளது. கூடவே முதலாளித்து பொருளாதார நெருக்கடிகளுக்கு தக்கவாறு, ஒவ்வொரு வருடமும் நடக்கும் சர்வதேச பருவநிலை மாநாடில், புவிவெப்பமாதலை தடுப்பதற்கான தீர்வுகள் என்று  புதிய வேடங்களை கொண்டு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன முதலாளித்துவ நாடுகள். இப்பிரச்சனைக்கு காரணமான நிதிமூலதன நிறுவனங்கள்-கார்பரேட் தொழிற்நிறுவனங்களே இப்பிரச்சனைக்கான தீர்வுகளை சொல்லுவதுதான் நகச்சுவையாக உள்ளது. 

இம்மாநாடு ஆரம்பத்த  சில வருடங்களிலேயே  புதைபடிவ எரிபொருளிலிருந்து வரும் உமிழ்வின்  அளவை குறைக்க  முதலாளித்துவ நிறுவனங்களை COP கட்டாயப்படுத்தப்படாது என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் பிறகு, கடந்த 2015 ஆம் ஆண்டு பாரிஸில்  நடந்த மாநாட்டில்  வளரும் நாடுகள் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதனால் வரும் நிதி இழப்பை ஈடுசெய்ய ஆண்டுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் வளர்ந்த நாடுகள் வழங்கும் என ஒப்பந்தம் போடப்பட்டது. இன்னும் இத்தொகை வளரும் நாடுகளுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. தற்போது பெற்ரோலிய எரிபொருளுக்கு பதிலாக பசுமை எரிபொருள் என்று கார்ப்பரேட் நிறுவனங்களின் மொழியில் புதியதாக சரடு விடுகின்றனர்.  

முப்பது ஆண்டு காலமாக நடைப்பெற்று வரும்  பருவநிலை மாநாடு சாதித்தது தான் என்ன?

புவிவெப்பமாதலைத் தடுக்க இதற்கு முன்பு நடைப்பெற்ற பருவநிலை மாநாடுகளின் முடிவுகளை பெயரளவுக்கு கூட அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முதலாம் உலக நாடுகள் அமல்படுத்தவில்லை. இந்நாடுகள் புதை படிவ எரிபொருட்களிலும் நிலக்கரித் திட்டங்களிலும் தொடந்து மூதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறது. அதையொட்டிய உலக நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளும் திட்டமிடப்படுகின்றன.  ஏகாதிபத்திய நாடுகளின் கார்பரேட் நிறுவனங்களை இம்மாநாடுகள் துரும்பு அளவிற்குக்கூட கட்டுப்படுத்துவதில்லை.

 

முதலாளித்துவம் இயற்கையோடு சமநிலையில் இருக்க முடியாத ஒரு  அமைப்பு. முதலாளித்துவம் அது தன் இலாபத்தின் நிரந்தரத் தேடலுக்காக இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கும், தன்னுடைய சரக்குகளை விற்பதற்கும்  புதிய சந்தைகளை அவசியமாக்குகிறது. முதலாளித்துவம்  தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வேகமாக ஒட வேண்டும். பருவநிலை அரசியல் நிபுணரான ஜான் பெல்லாமி பாஸ்டர் இந்தப் போக்கை உற்பத்தியின் டிரெட்மில் என்றழைத்தார்.

தன்னுடைய லாபவெறியினால் இயற்கையை அழிக்கும் முதலாளித்துவத்தால் அதன் சித்தாந்ததால் உலகில் மனித குலத்தையும், இயற்கையையும், பல் உயிரினச் சூழலையும் ஒரு போதும் காப்பாற்ற முடியாது. முப்பது ஆண்டுகள் என்ன? முந்நூறு வருடங்கள் பருவநிலை மாநாடு நடத்தினாலும், லாபவெறிக்காக இயற்க்கையை அழிக்கும் முதலாளித்து கார்பரேட் நிறுவனங்களால் இயற்கை பேரழிவிலிருந்து இவ்வுலகைக் காப்பாற்ற முடியாது.

இயற்கையும், மனித குலமும் பிழைத்திருக்க வேண்டுமாயின் முதலாளித்துவம் ஒழிக்கப்பட வேண்டும்.

முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றுவதன் மூலமே இப்புவியை நாம் பாதுகாக்க முடியும்,  

இயற்கையுடணான மனித சமுதாயத்தின் போராட்டத்தை சரியான திசையில் செலுத்தி, நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை எற்படுத்துவதற்கு ஒரே  வழிதான் இருக்கிறது அது இயற்கையை தன் உயிராகவும், உடலாகவும், உழைப்பை தனது சாரமாகவும் மகிழ்ச்சியாகவும் கருதும் சோசலிச சமுதாயத்தைப் படைப்பதால் மட்டுமே சாத்தியம்.

 

தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன