கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தமிழக போலீசு விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே, இச்சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூப்பாடு போடுகிறார், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியோ, தேசிய புலனாய்வு முகமையிடம் வழக்கை உடனடியாக ஏன் ஒப்படைக்க வில்லை? இதற்கு ஏன் நான்கு நாட்கள் தாமதம்? என கேட்கிறார். இதை தொடர்ந்து தமிழக முதல்வரும்ம் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை -என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரை செய்தார்.
கோவை சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் என்.ஜ.ஏ கூப்பாடுகள் அதிகரிக்க தொடங்கிய வேளையில், மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடு, சிந்தனை முகாம் என்ற பெயரில் ஹரியானாவின் சூரஜ்கண்ட்டில் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. ஆகஸ்டு 15 உரையின்போது நரேந்திர மோடி அறிவித்த “தொலைநோக்கு திட்டம் 2047”-ஐ அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்க கூட்டப்பட்ட இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், செயலாளர்கள், போலீசு டி.ஜி.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் பேசிய அமித்ஷா, வரும் 2024-க்குள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ கிளைகளை ஏற்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் சட்டம் – ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது, ஆனால் குற்றங்கள் மாநில எல்லைகளுக்கு உட்பட்டவையாக இருப்பதில்லை என்று பேசியுள்ளார்.
தற்போது என்.ஐ.ஏவின் தலைமையிடமாக புதுதில்லி இருக்கிறது. இதையும் சேர்த்து நாடு முழுவதும் தற்போது 15 என்.ஐ.ஏ கிளைகள் இருக்கின்றன
இந்த மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக பேசிய மோடியோ,. ஒரே நாடு, ஒரே போலீசு சீருடை என்ற யோசனையை தெரிவித்திருக்கிறார். மேலும், சட்டம் ஒழுங்கு என்பது ஒரு மாநிலத்துடன் நின்றுவிடக் கூடியது அல்ல, அதனையும் தாண்டியதாக மாறிவிட்டது என்றும். குற்றங்கள் உள்ளூர் அளவில் நடப்பதாக இனி கருதப்படமாட்டாது என்றும் பேசியிருக்கிறார்.
**************
சட்டம் ஒழுங்கு மாநில உரிமைகளை சார்ந்தது, அந்தந்த மாநில அரசுகளே அந்தந்த மாநில சட்ட ஒழுங்கை நிலைநாட்ட முடியும், காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசியல் சாசனம் வரையறுக்கிறது. ஆனால் நாடு முழுவதும் என்.ஐ.ஏ கிளைகள் என்பதன் மூலம் மாநில அரசிடமிருந்து போலீசு அதிகாரத்தை பறிக்கும் வேலையில் பா.ஜ.க இறங்கியிருக்கிறது. இதுதான் மோடியின் தொலைநோக்குத்திட்டம் 2047 போலும்!.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வித் திட்டம், ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே ரேசன் கார்டு ஆகியவற்றின் வரிசையில் ஒரே போலீசைக் கொண்டுவருவதற்கே நாடு முழுவதும் என்.ஐ.ஏ கிளைகளை அமைக்க திட்டமிடுகிறது பா.ஜ.க அரசு.
இதனை மாநில அரசுகள் எதிர்க்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றன. பெயரளவுக்கு கூட தங்களின் எதிர்ப்பை ஓட்டுக்கட்சிகள் காட்டவில்லை. போலிக்கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனோ தேசிய உள்துறை மாநாட்டில் கலந்து கொண்டு அமைதியாக திரும்பியுள்ளார்.
தேசிய புலனாய்வு முகமைச் சட்டம், 2008 – மும்பை 26/11 தாக்குதலைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமைக்கு சிபிஐ-யை விட அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்படி எந்த மாநிலத்திற்குள் நுழைவதற்கும், யார் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த தேசிய புலனாய்வு முகமைக்கு முழு அதிகாரமும் உண்டு. இதற்கு குறிப்பான மாநில அரசிடமோ, நீதிமன்றத்திடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்குத் தேவையான போலீசுப் படையை அனுப்பவேண்டியது மாநில அரசின் கடமையாகும்.
இதன் பிறகு 2019ல் பா.ஜ.க என்.ஐ.ஏ சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தது . இச்சட்டத்திருத்தத்தின் மூலம், இனி ஒரு மாநில போலீசு ஆய்வாளருக்கு உள்ள அதிகாரத்தை என்.ஐ.ஏ.-வின் ஆய்வாளரும் பெறுகிறார். இதுவன்றி, இதுகாறும் மாநில போலீசு அதிகார வரம்புக்குள் இருந்த ஆட்கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதங்கள் தயாரித்தல், வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66(f) ஆகியவை அனைத்தையும் இனி மாநில போலீசு அனுமதியின்றி நேரடியாக என்.ஐ.ஏ. விசாரிக்கும். மேலும், வெளிநாடுகளுக்குச் சென்று விசாரிப்பதற்கான அதிகாரம், என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றங்களை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள்தான் நியமிக்க வேண்டும் என்பதை மாற்றி, குறிப்பிட்ட அமர்வு நீதிமன்றங்களைச் சிறப்பு நீதிமன்றங்களாக மைய அரசு நேரடியாக அறிவிப்பதற்கான அதிகாரம் ஆகியன உள்ளிட்ட கூடுதல் அதிகாரங்கள் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டன.
அப்போது, இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் பேசினாலும் காங்கிரஸ் கட்சி, தி.மு.க, பிஎஸ்பி, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இச்சட்ட திருத்தத்தை ஆதரித்தன. இரண்டு போலிக்கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டுமே எதிர்த்தன.
***************************
தற்போது நடைப்பெற்றுள்ள இந்த உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் காணொளி காட்சியில் பேசிய மோடி “துப்பாக்கி அல்லது பேனாவால் தூண்டிவிடப்படும் நக்சல் தீவிரவாதத்தின் ஒவ்வொரு வடிவமும், நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதைத் தடுக்க, அவை வேரோடு அழிக்கப்பட வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
காவி பாசிசத்தை எதிர்த்து யாரும் பேசினாலோ, எழுதினாலோ அவர்கள் நக்சலைட்டுகள் என முத்திரை குத்தப்பட்டு கொடிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதே மோடி கூற வரும் செய்தி.
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் என்ற கூப்பாடு மற்றும் என்.ஐ. ஏ விசாரனை போன்றவற்றை ஆயுதமாக பயன்படுத்தி. சமூகத்தில் பதட்டத்தையும், வெறுப்பணர்வையும் விதைத்து தங்களின் பாசிச செயல்திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க பாசிச கும்பல் முனைகின்றது.
இதற்கு பல உதாரணங்களை கூற முடியும். அசாமைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளியான அகில் கொகோய்க்கு நெருங்கியவரான, பிட்டூ சோனோவால் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், லால் சலாம் (செவ்வணக்கம்), காம்ரேட் (தோழர்) போன்ற பதங்களைப் பயன்படுத்தியுள்ளதைக் காரணம் காட்டி அவரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது என்.ஐ.ஏ. முகநூலில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தினாலே ஊபாவில் கைது செய்ய முடியும் என்றால் அதன் அதிகார வரம்பை எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்
என்.ஐ.ஏ மூலம் ஒருவர் மீது ஐயம் இருந்தாலே போதும் கைது செய்து நெடுங்காலம் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கலாம். சம்பந்தப்பட்ட நபர் எப்படி கைது செய்யப்பட்டார், யார் சொல்லி கைது செய்யப்பட்டார் என்பதெல்லாம் முதல் தகவல் அறிக்கையில் கூட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விசாரணை மூடுண்ட நீதிமன்றத்தில் நடைபெறுவதற்கும் இச்சட்டம் உதவுகிறது. ஒருவர் ஒரு பென்டிரைவ் வைத்திருந்தார் அதில் இந்தியாவிற்கு எதிரான முழக்கம் இருந்தது என்று கூட அவரைக் கைது செய்ய முடியும். இவையெல்லாம் என்.ஐ.ஏவில் இருக்கும் அம்சங்கள்.
நாட்டின் பாதுகாப்பு, தீவிரவாதத்தாக்குதல் என இவர்கள் கூப்பாடு போடுவதெல்லாம், என்.ஐ.ஏ. போன்ற அபாயகரமான ஆள்தூக்கிச் சட்டங்களையும், போலீசுப் படையையும் நாடு முழுவதும் உருவாக்கி தங்களது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, தங்களுக்கு எதிராக பேசுபவர்களையும், தங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துபவர்களையும் அடக்கி, ஒடுக்கிவைத்திடவே அன்றி வேறெதற்கும் அல்ல.
தாமிரபரணி