ஜிஎஸ்டி வரி உயர்வு: உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக் கயிறு.

தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம், பிரச்சார இயக்கம்!

 

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

இதுவரை வரிவிதிக்கப்படாமல் இருந்த பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை வரி வலைக்குள் இழுத்துள்ளதோடு, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளை பாசிச மோடி கும்பல் உயர்த்தியுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே இந்திய மக்களின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கும் சுருக்குக் கயிற்றை மேலும் ஒரு சுற்று இறுக்கியுள்ளது.

தயிர், மாவு, மோர், உணவு தானியங்கள், அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு 5 சதவீதம் விதித்தும், பென்சில், பேனா, ரப்பர், நோட்டுப் புத்தகங்கள் முதலான கல்வி சார்ந்த உபகரணங்கள், எல்.இ.டி விளக்குகள், கத்திகள், போன்ற பொருட்களுக்கான வரியை 12 சதவீத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தியும், வங்கி காசோசலைகளுக்கு 18 சதவீத வரி விதித்தும், எரியூட்டும் தகன இயந்திரத்திற்கும் கூட வரி விதித்து காவி கார்ப்பரேட் கும்பல் உத்திரவிட்டுள்ளது.

அத்துக்கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், எங்கும் நிரந்தரமற்ற வேலையில் உழலும் மக்கள், வேலைகளிலிருந்து தூக்கியெறியப்பட்ட தொழிளாளர்கள், வேலை தேடி அலையும் இளைஞர்கள், படிப்புக்கு ஏற்ற வேலைகிடைக்காமல் போட்டி தேர்வு எழுதி எழுதி சோர்வுற்றிருக்கும் படித்த இளைஞர்கள், மோடியின் மக்கள் விரோத பொருளாதார கொள்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு வணிகர்கள், சிறு தொழில் முனைவோர்கள் என ஆகப் பெரும்பான்மை மக்கள் வாழமுடியாமல் தவித்துவரும் நிலையில் தான் இந்த வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் சிறிதும் இரக்கமின்றி ஜிஎஸ்டி வரி உயர்வை அறிவித்துள்ளனர்.

நாட்டின் முன்னேற்றத்திற்கும் சுபிட்சத்திற்கும் இந்த வரி உயர்வு தவிர்க்க முடியாதது என்று மோடி கும்பல் கூறுகிறது. இதில் துளியளவேனும் உண்மை இருக்கிறதா?

நாட்டின் நலன் என்று கூறிக்கொண்டு உழைக்கும் மக்களின் முதுகில் வரிச்சுமையை ஏற்றும் இவர்கள்தான் அதானி, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு 2019 ஆண்டில் 1.45 லட்சம் கோடி ருபாய் வரித் தள்ளுபடி செய்துள்ளனர். மேலும் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் மூலம் 10 இலட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட்டுகளின் வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த லாபம் 2020-21 ல் 5.5 இலட்சம் கோடியிலிருந்து 2021-22ல் 9.3 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேவேளையில் அடித்தட்டில் உள்ள 20% மக்களின் வருமானம் 53 சதவீதமாக சரிந்துள்ளது. 2021க்கான பட்டினி பட்டியலில் இடம்பெற்ற 116 நாடுகளில் இந்தியா 101 வது தரவரிசையில் உள்ளது. கொள்ளை லாபமடிக்கும் பெருமுதலாளிக்கு வரித்தள்ளுபடி வழங்கிவிட்டு, சுரண்டலுக்கும், பட்டினிக்கும் ஆளாக்கப்படும் உழைக்கும் மக்கள் உண்ணும் உணவுப் பொருட்களுக்கு கூட வரிவிதிப்பது தான் நாட்டின் சுபிச்சத்திற்கு உகந்து என்று கதையளக்கிறார்கள்.

கொரொனா சூழலை சமாளிக்க கார்ப்பரேட்டுகள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த ‘பாவத்திற்காக’ 50 இளம் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை தூக்கியடித்து, தன் எஜமானர்களுக்கு விசுவாசத்துடன் வாலை ஆட்டியது, மோடி கும்பல். முதலாளிகள் மீது வரியை உயர்த்துவதைப் பற்றிக் கனவிலும் சிந்திக்காத மோடி அரசுதான், உழைக்கும் மக்களைக் கழுதைகளாக நினைத்து விலைவாசியையும் வரியையும் நம் முதுகில் சுமத்துகிறது. உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கு  தொழிலாளர் சட்டத் தொகுப்பு, வேளாண் சட்டங்கள் போன்றவற்றை கொண்டுவந்து இந்தியப் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சேவை செய்வதோடு மட்டுமல்லாமல் அம்மக்களுக்கு கிடைக்கும் அற்ப கூலியையையும் வரி போட்டு முதலாளிகளின் கஜானாக்களை நிரப்பும் இந்த காவி-கார்பரேட் கும்பல் யாருடைய நலனுக்காக சேவை செய்கிறது என்பது வெள்ளிடைமலை.

ஒருபுறம் இத்தகைய கார்ப்பரேட் பாசிச தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டு நாட்டை தீவிரமாக மறுகாலனியாக்கிவரும் பாஜக-ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பல் மறுபுறம் இஸ்லாமியர்கள் தலித்துகள் அறிவுத்துறையினர் ஜனநாயக சக்திகள் மீது கொடிய பாசிச பயங்கரவாதத்தை ஏவி நாட்டை இந்துராஷ்டிரமாக மாற்றத் துடிக்கிறது.

விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சிறு குறு முதலாளிகள், சிறுபான்மையினர், தலித்துகள் என சமூகத்தின் அனைத்துப் பிறிவு மக்களின் மீதும் காவி கார்ப்பரேட் பாசிசம் பாரபட்சமின்றி தாக்குதல் தொடுத்து நம் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது, இந்த பாசிச கும்பலுக்கு  எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்படிப் போராடினால் மட்டுமே நமக்கு எதிர்காலம்.

 

மக்கள் அதிகாரம்

தோழர் முத்துக்குமார்
மாநில செயலாளர்,
தமிழ்நாடு – 9790138614

ஜிஎஸ்டி வரி உயர்வு – உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக் கயிறு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன