இது இன்று சீன தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் என்று நாம் ஒதுக்கி விட முடியாது. நாளை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இலாப வேட்கைக்காக குறைந்த கூலி பெறும் இந்தியா போன்ற நாடுகள் நோக்கி தங்கள் உற்பத்தி தளங்களை மாற்றலாம். அப்போது மோடி அரசும் கார்ப்பரேட் கூட்டுகளும் தொழிலாளர்களை சுரண்டுவதில் ஓரணியில் நிற்பார்கள்.
கடந்த மாதம் கர்நாடக மாநில அரசும் தொழிலாளர் நலச் சட்டத்தில் இதே போன்ற திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின், குறிப்பாக ஆப்பிள் – பாக்ஸ்கான் நிறுவனங்களின், கோரிக்கைகளுக்கு இணங்கவே கர்நாடக மாநில அரசு அந்த திருத்தங்களைக் கொண்டு வந்தது. தற்போது கர்நாடகத்தின் அடியொற்றி தமிழ்நாடும் தொழிலாளர் நலனைப் பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.
கர்நாடக மாநில பாஜக அரசு, பாக்ஸ்கான் நிறுவனத்திற்காக செய்துள்ள தொழிற்சாலை சட்டத்திருத்தத்தின் படி தொழிலாளர் வேலை நேரம் 9 மணிநேரத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வேலை(over time) நேரம் மூன்று மாதத்திற்கு 75 மணி நேரம் என்று இருந்ததை 145 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பெண்களை இரவு நேர பணிக்கு அமர்த்திக்கொள்ளலாம் என்ற திருத்தமும் சேர்க்கப்பட்டுள்ளது.