தொழிலாளிகளை நவீன கொத்தடிமையாக்கும் மோடி அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களைத் தூக்கியெறிவோம்

ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடம் போராடி, உதிரம் சிந்தி நம் முன்னோர்கள் பெற்றுத் தந்த உரிமையை, மோடி அரசும் கார்ப்பரேட்டுகளும் இன்று முற்றாகப் பறித்துவிட்டனர். அரைகுறை உரிமைகளையும் பறித்து, அப்பட்டமான சுரண்டலை அரங்கேற்றி, நம்மை நவீன கொத்தடிமைகளாக்கிவிட்டனர். எனவே, இனியும் நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை! ஆனால், போராடிப் பெறுவதற்கோ ஒரு பொன்னுலகம் உண்டு!!

இந்தியாவில் உள்ள 60 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்ற புதிய தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களை அமுல்படுத்தப் போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியத் தொழிலாளி வர்க்கம் இதுவரைப் போராடிப் பெற்ற அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் பிடுங்கி, தொழிலாளர்கள் அனைவரையும் உரிமைகள் ஏதுமற்ற நவீன கொத்தடிமைகளாக, முதலாளிகளின் வரம்பற்ற சுரண்டலுக்குள் தள்ளியுள்ளது.

இச்சட்டத் திருத்தங்கள் அனைத்தும் தொழிலாளர்களின் நலனைப் பேணிப் பாதுகாப்பதற்காக அவர்களது வாழ்வில் ஒளியேற்றுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளும், காட்சி ஊடகங்களும் மோடி அரசை வானளாவப் புகழ்கின்றன. இத்திருத்தத்தின் மூலமாக இதுவரை இல்லாத வகையில் ஸ்விக்கி, ஜொமேட்டோ, ஓலா, ஊபேர் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் கிக் தொழிலாளர்களுக்கும் சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படுவதாகக் கதையளக்கின்றனர். எவ்வித சமூக பாதுகாப்பும் பெற்றிடாத, கட்டிடத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா துறையில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மற்றும் மாநில ஊழியர் காப்பீட்டுக் கழகம் (ESIC) போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இச்சட்டத் திருத்தங்கள் மூலமாகச் சென்றடையும் என்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும், அமைப்பு சார்ந்த மற்றும் சாராத துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைவருக்கும், சட்டப்பூர்வமான குறைந்தபட்ச ஊதியத்தை (Minimum Wages) உறுதி செய்வது, பாலினப் பாகுபாடின்றி, ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் உட்பட அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதை உறுதி செய்வது, குறிப்பாகப் பெண்களுக்கு, இரவு நேரங்களில் பணிபுரியும் வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்கான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆஹா ஓகோ என்று புகழ்ந்து தள்ளுகின்றனர்.

‘தொழிலாளர் நலச் சட்டத்திருத்தங்கள் தங்களுக்கு நன்மைதான் தருகிறதோ’ என்று தொழிலாளர்களே நம்பும் அளவிற்கு இப்பிரச்சாரம் திட்டமிட்டு தொடர்ந்து நடத்தப்படுகிறது.

அதேசமயம், பாசிச மோடி அரசின் இச்சட்டத் திருத்தங்கள், நிச்சயமாக தொழிலாளர் நலனுக்கு எதிரானதாகத்தான் இருக்கும் என பெரும்பாலான தொழிலாளர்கள் கருதினாலும், இதன்மூலம் தாங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படவிருக்கிறோம் என்பதைத் அவர்கள் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. சொல்லப்போனால், பலருக்கு இத்தகைய சட்டங்கள் வந்திருப்பது பற்றியே தெரியாது. இப்போது இருக்கும் அரைகுறை உரிமைகளைக் கூட நமது நாட்டுத் தொழிலாளர்கள் எவ்வாறு சுரண்டப்பட்டார்கள்; தங்களது உயிரையும், இரத்தத்தையும் சிந்திப் போராடி எவ்வாறு இந்த உரிமைகளை நிலைநாட்டினார்கள் என்பதைப் பெரும்பாலான தொழிலாளர்கள் உணரவில்லை. அந்த உரிமைகளை இந்தக் காவிப் பாசிச மோடி அரசு எவ்வாறு ஒரு நொடியில் தூக்கியெறிந்திருக்கிறது என்பதைத் தொழிலாளர்கள் இன்னமும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.

ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளின் கீழ் நம்நாடு அடிமைப்பட்டுக் கிடந்த போது நம் தொழிலாளர்கள் எவ்வித உரிமைகளும் இல்லாத கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள். உரிமைகளுக்காகப் போராடிய தொழிற்சங்கத் தலைவர்கள் தீவிரவாதிகள் எனச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போலீசாரால் அடித்து விரட்டப்பட்டார்கள்.

இவற்றையெல்லாம் எதிர்த்து இந்தியத் தொழிலாளிவர்க்கம் வீரஞ்செறிந்த போராட்டங்களை முன்னெடுத்தது. பம்பாய் மில் தொழிலாளர்கள் போராட்டம், இரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் என தொழிலாளர்களின் போராட்டங்கள் நாடு முழுவதும் பற்றிப் படர்ந்ததைக் கண்ட ஆங்கிலேயர்கள், அப்பெரும் நெருப்பில் தாங்கள் பொசுங்கிவிடுவோம் என அஞ்சி தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரித்துப் பாதுகாக்கும் சட்டங்களைக் கொண்டுவந்தனர்.

1926-ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட தொழிற்சங்க சட்டம்தான் (1926 Trade union act), இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் தொழிலாளர் நலச் சட்டமாகும். அன்று தொடங்கி கடந்த நூறு ஆண்டுகளாக சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை, கூட்டுப் பேர உரிமை, முதலாளிகள் கதவடைப்பு செய்வதில் கட்டுப்பாடு, பணியிடத்தில் பாதுகாப்பு, 8 மணிநேர வேலை, விடுப்பு எனப் பல உரிமைகளை இந்தியத் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்றிருக்கிறது.

ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராகப் போராடியது போல இந்திய ஆட்சியாளர்களுக்கும் எதிராகப் போராடி இந்த உரிமைகளைப் பாதுகாக்க 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நம் இந்தியத் தொழிலாளர்கள் கொண்டுவரச் செய்திருக்கிறார்கள்.

ஆனால், இன்றைக்கு தொழிலாளர் நலச் சட்டத்திருத்தம் என்ற பெயரில் இந்த உரிமைகள் அனைத்தையும் பறித்து, காலனியாதிக்க காலத்தில் எவ்வாறு இந்தியத் தொழிலாளர்கள் ஏகாதிபத்திய முதலாளிகளின் சுரண்டலின் கீழ் கொத்தடிமைகளாக வேலை செய்தனரோ அதேபோன்ற நிலையை, சூழலை, உருவாக்கியிருக்கிறது, பாசிச மோடி அரசு.

இருக்கின்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களை முற்றிலுமாக அழித்துவிட்டு 4 சட்டத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார்கள். 1) ஊதியத் தொகுப்பு (2019), 2) தொழிற்துறை உறவுகள் தொகுப்பு (2020), 3) சமூகப் பாதுகாப்பு தொகுப்பு (2020), 4) தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு (2020) ஆகியவைதான் அவை.

ஊதியத் தொகுப்பு

நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வதாக கூறும் இந்த ஊதியத் தொகுப்பு உண்மையில் தொழிலாளர்களை நிரந்தரமாகப் பட்டினியில் தள்ளுவதற்கே வழிவகை செய்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் போது கருத்தில் கொள்ளவேண்டிய அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது. அந்த அம்சங்களையெல்லாம் புறந்தள்ளி, முதலாளிகளின் நலனுக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய இச்சட்டத் தொகுப்பு வழிவகுத்துள்ளது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு தொழிற்துறைக்கும் அந்தந்த மாநிலங்களே குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்றிருந்த சட்டத்தை நீக்கிவிட்டு, ஒன்றிய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியத்தை அறிவிக்கும் அதனை மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது.

தங்களது மாநிலத்தில் தொழில் தொடங்க, பன்னாட்டு முதலாளிகளை ஈர்ப்பதற்காக மாநிலங்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு முதலாளிகளுக்குச் சலுகைகளை வாரி வழங்கவேண்டும் எனக் கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரும் ஒன்றிய அரசு, தொழிலாளர்களது சம்பளம் என்று வரும்போது மட்டும் அது நாடு முழுவதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றும், அதனைத் தான்தான் நிர்ணயம் செய்வேன் என்றும் கூறுகிறது. அந்தந்த மாநிலத் தொழிலாளிகள் குறைந்தபட்சம் ஊதியம் கோரிப் போராடினால், தேர்தலுக்குப் பயந்து மாநில அரசுகள் பணிந்துவிடக் கூடும் என்பதற்காகவே, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசின் பிடிக்குக் கொண்டுபோயுள்ளது, மோடி கும்பல். முதலாளித்துவ சேவையில் எவ்வளவு தொலைநோக்கு பாருங்கள்!!

தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் அம்சங்கள் அனைத்தையும் நீக்கிவிட்ட அதேசமயம், பணியிடத்தில் அவர்கள் செய்யும் தவறுகள் காரணமாக ஏற்படும் இழப்பை அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்ள அவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டப் பிரிவை மட்டும் நீக்காமல் பாதுகாத்திருப்பதுள்ளது. மேலும், 60 நாட்களுக்குள் அபராதம் விதிக்க வேண்டும் என்று இருந்ததை 90 நாட்களாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் தொழிலாளர்களை மிரட்ட முதலாளிகளுக்கு கூடுதலாக 30 நாட்களைச் சேர்த்து வழங்கியுள்ளது.

தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றும் முதலாளிகளைத் தண்டிப்பதற்கு அவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதமும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அளிக்க வகைசெய்த பழைய சட்டங்களை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக சம்பளம் கொடுக்காத முதலாளி 50,000 ரூபாய் அபராதம் கட்டினால் போதும் என்று புதிய ஊதியத் தொகுப்பு கூறுகிறது. சம்பளம் போடாமல் ஏமாற்றிவிட்டு, பலநூறு தொழிலாளர் குடும்பங்களைப் பட்டினியில் தள்ளும் முதலாளிக்கு வெறுமனே 50,000 ரூபாய் அபராதமாம்!! இதன்மூலம் போராடும் தொழிலாளர்களை ‘வழிக்குக் கொண்டுவர’ முதலாளிகள் கையில் சம்பள வெட்டு எனும் பேராயுதத்தை வழங்கியுள்ளது, மோடி கும்பல்!

சமூகப் பாதுகாப்பு தொகுப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF),  தொழிலாளர்களுக்கான மாநிலக் காப்பீடு (ESI), மகப்பேறு விடுப்புகள், பணியிட விபத்துகள் & மரணம் ஆகியவற்றில் தொழிலாளர்களுக்கான இழப்பீடுகள், ஐந்தாண்டுகள் பணிபுரிந்தாலே தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை ஆகிய சமூகப் பாதுகாப்புகளை உறுதிசெய்த 8 சட்டங்களை நீக்கிவிட்டு சமூகப் பாதுகாப்புத் தொகுப்பைக் கொண்டுவந்துள்ளது, மோடி அரசு.

இதற்கு முன்னதாக எல்லாச் சட்டங்களும் எல்லாத் தொழிலாளர்களுக்கும் பொதுவானதாக இருந்தது. எந்தத் தொழிலாளர் சட்டமும் தொழிலாளர்களைப் பிரித்துப் பார்த்ததில்லை. ஆனால் இந்தச் சமூகப் பாதுகாப்புத் தொகுப்பு தொழிலாளர்களை அமைப்பு சார்ந்த மற்றும் சாராத தொழிலாளர்கள் எனப் பிரித்துவிட்டது. மேற்கூறிய சமூகப் பாதுகாப்புகளைப் பெறுவதிலிருந்து அமைப்பு சாரா தொழிலாளர்களை விலக்கிவைத்துள்ளது.

அதற்கு பதிலாக அமைப்புச் சாராத் தொழிலாளர்கள் அரசின் நலத் திட்டங்கள் மூலமாக இச்சலுகைகளைப் பெறுவார்கள் என அறிவித்துள்ளது. அதாவது, சட்டத்தின் மூலமாக கட்டாயம் அளிக்கப்பட வேண்டிய “உரிமைகள்” என்பதற்கு பதிலாக, அரசின் நிதி ஒதுக்கீட்டை நம்பியிருக்கும் நலத் திட்டங்கள் மூலமாகப் பெறும் “சலுகையாக” சமூகப் பாதுகாப்பை மாற்றியுள்ளது. இந்த நலத் திட்டங்களுக்குத் தற்போது ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் நிதி ஒதுக்கினாலும் கூட, வரும் ஆண்டுகளில் அதனைப் படிப்படியாகக் குறைத்துவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஒருவேளை இத்திட்டங்களுக்கு நிதியே ஒதுக்காமல் கிடப்பில் போட்டாலும் தொழிலாளி வர்க்கம் அதைக் கேட்கவா போகிறது என்பதுதான் அவர்கள் சிந்தனை!!

தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு

கனரகத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆலைத் தொழிலாளர்கள் முதல் வானுயர் கட்டிடங்களைக் கட்டியெழுப்பும் கட்டிடத் தொழிலாளர் வரை அனைவரும் தங்களது உயிரையும், உடலையும்  பணயம் வைத்துதான் பணிபுரிகின்றனர். எப்போதும் தங்களது இலாபத்தில் மட்டுமே குறியாக உள்ள முதலாளிகள் தொழிலாளர்களது பாதுகாப்பை உறுதி செய்வதைத் தேவையில்லாத செலவாகவும், உற்பத்தியைப் பாதிக்கும் ஒன்றாகவுமே பார்க்கிறார்கள். உதாரணமாக, பல இடங்களில் இயந்திரங்களில் சென்சார் பொருத்த வேண்டும் என்ற கட்டாயம் இருந்தும் முதலாளிகள் பொருத்துவதில்லை. அவ்வாறு பொருத்தினால் சில நொடிகள் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதுதான் அவர்களின் ஈவிரக்கமன்ற நோக்கமாகும். இதனால் கை, கால்கள் துண்டிப்பு முதல் உயிரிழப்பு வரை சர்வசாதரணமாக நடப்பது நம் நாட்டின் தொடர்கதையாக உள்ளது.

பணியிடத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களில் பல குறைபாடுகளும், முதலாளிகளைப் பாதுகாக்கும் பல ஓட்டைகளும் இருக்கின்றன. ஆனால் அவை வழங்கிய குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களையும் கூட தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு தூக்கியெறிந்துவிட்டது.

முன்பிருந்த சட்டங்களின்படி, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக தொழிலாளர் நலத் துறையின் கண்காணிப்பாளர்கள் திடீர் சோதனைகள் நடத்துவார்கள். இக்கண்காணிப்பாளர்களது ஆய்வின் அடிப்படையில்தான் தொழிற்சாலைகளின் பணியிடப் பாதுகாப்புச் சான்றளிக்கப்படும்.

ஆனால், இப்போது புதிய சட்டத் தொகுப்புகளின் கீழ் இனி ஆய்வும் கிடையாது கண்காணிப்பாளர்களும் கிடையாது. “கண்காணிப்பாளர்களுக்குப்” பதிலாக “ஆலோசகர்கள்” பணிக்கமர்த்தப்படுவார்கள். அவர்கள் தொழிற்சாலைகளுக்கு “ஆலோசனை” வழங்குவார்கள். அவற்றைக் கேட்டு நிர்வாகம், “தங்களது தொழிற்சாலையில் தொழிலாளர்களது பணியிடப் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் உறுதிசெய்யப்பட்டுள்ளது” என தங்களுக்குத் தாங்களே சான்றளித்து அதனை இணையத்தில் பதிவேற்றினால் போதும்!!  

தொழிலாளர் நலத்துறையின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின் படியே, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியிடப் பாதுகாப்புக் குறைபாட்டின் காரணமாக மரணமடைகிறார்கள்; அல்லது விபத்துக்களில் சிக்கி, கை கால்களை இழந்து நிரந்தரமாகச் செயலிழந்து போகிறார்கள். தொழிலாளர் நலத் துறையின் கண்காணிப்பின் கீழ் ஆலைகள் இயங்கும்போதே இவ்வளவு உயிரிழப்புகள் என்றால் அக்கண்காணிப்பையு நீக்கிவிட்டு முதலாளிகள் ‘தமக்குத் தாமே சான்றளித்துக்’ கொண்டால் என்னவாகும் என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது!!

8 மணி நேர வேலையை உறுதி செய்த தொழிற்சாலைகள் சட்டம் (Factories Act) உட்பட 13 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு இத்தொகுப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் சட்டம், ஒரு தொழிலாளியை ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேலாக வேலைவாங்க கூடாது; வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு அதிகமாகவும், கூடுதல் ஊதியத்துடன் பணிபுரியும் ஓவர்டைம் வேலைநேரத்தைச் சேர்த்தால் கூட வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கு மேல் ஒரு தொழிலாளி பணிபுரியக் கூடாது – என்று கூறுகிறது. ஆனால், புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள தொகுப்பானது இக்கட்டுப்பாடுகளை நீக்கியிருப்பதுடன், அந்தந்த மாநில அரசுகள் தங்களது வசதிக்கேற்ப வேலை நேரங்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

பாசிச மோடி அரசு இச்சட்டத்தொகுப்பை அமுல்படுத்துவதற்கு முன்னதாகவே இராஜஸ்தான், ஹரியாணா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தியுள்ளன. ஃபாக்ஸ்கான், ஆப்பிள் உள்ளிட்ட பன்னாட்டு முதலாளிகளின் உத்திரவுப்படி, காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா மாநிலமும் வேலை நேரத்தை 12 மணிநேரமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் வேலை நேரத்தை அதிகரிக்கும் சட்டத் திருத்தத்தை முதலில் அறிவித்துவிட்டு, எதிர்ப்புகள் வந்ததும் பின்வாங்கியது.

தற்போது இச்சட்டத்தொகுப்பு நடைமுறைக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவித்திருப்பதால் கூடிய விரைவில் அனைத்து மாநிலங்களும் இதையே காரணமாக கூறி வேலை நேரத்தை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அதேபோல, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக அவர்களை நிரந்தரமாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைத்திருக்கும் வகையில் குறுகிய கால வேலைவாய்ப்பு (Fixed Term Employment – FTE) என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம், முதலாளியின் வசதிக்கு ஏற்ப தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதையும், தேவையில்லாதபோது வேலையைவிட்டு நீக்குவதையும் (Hire and Fire) எளிதாகியுள்ளது. அதுமட்டுமன்றி இனி நிரந்தரத் தொழிலாளர்களே தேவையில்லை, தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டே ஆலையை இயக்கிவிட முடியும் என்ற வசதி முதலாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

தொழிற்துறை உறவுகள் தொகுப்பு

பாசிச மோடி அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத் தொகுப்புகளிலேயே மிகவும் அபாயகரமான, தொழிலாளர் விரோத சரத்துகள் நிறைந்த ஒன்று இதுதான். ஏனென்றால், தொழிலாளர்களது சங்கம் அமைக்கும் உரிமை, போராட்ட உரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளையும் பறிக்கவே இத்தொகுப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரு தொழிற்சாலையை எவ்வாறு இயக்க வேண்டும், அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ஆலை நிர்வாகத்திற்குமான உறவு எப்படியிருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து ஒவ்வொரு தொழிற்பிரிவுக்கும்  மாதிரி நிலை ஆணைகளை (Model Standing Orders) அந்தந்த மாநில அரசுகள் அறிவிக்கும். இதனைப் பின்பற்றி தொழிற்சாலைகள் தங்களுக்கென நிலையாணைகளை உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நிலையாணைகளின் அடிப்படையில்தான் தொழிலாளர்களது பணிக்காலம், வேலை நேரம், விடுப்பு, ஊதியம் போன்றவை நிர்ணயம் செய்யப்படுகின்றன. தற்போது மாநில அரசின் மாதிரி நிலை ஆணைகளைப் பின்பற்றி தொழிற்சாலைகள் தங்களது நிலையாணைகளை உருவாக்கத் தேவையில்லை. அவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றபடி அதனை உருவாக்கிக் கொள்ளலாம்.

உதாரணமாக, தமிழ்நாடு அரசின் மாதிரி நிலையாணையின் படி, ஒரு தொழிலாளியை வேலைநீக்கம் செய்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே நிர்வாகம் அறிவிக்க வேண்டும். அல்லது இரண்டு மாத சம்பளத்தைக் கூடுதலாக கொடுத்த பிறகே தொழிலாளியை வேலைநீக்கம் செய்ய முடியும். இதனை நிர்வாகம் நினைத்தால் மூன்று மாதங்களாக உயர்த்தலாம்; ஆனால், இரண்டு மாதங்களுக்குக் கீழாகக் குறைக்க முடியாது. தற்போது இத்தொகுப்பு நடைமுறையானால் நிர்வாகம் தொழிலாளியை எந்த இழப்பீடும் இன்றி உடனடியாக வேலைநீக்கம் செய்யும் வகையில் நிலையாணையை மாற்றிக் கொள்ள முடியும்!

இவைமட்டுமன்றி, ஒவ்வொரு ஆலை நிர்வாகமும் தொழிலாளர்களுக்கு நடத்தை விதிகளை (Code of Conduct) வகுக்க முடியும். அதன்மூலம் தொழிலாளர்களைத் தங்களது அதிகாரத்திற்குக் கட்டுப்படும்வகையில் ஆட்டிவைக்க முடியும். ‘நடத்தை விதிகளை மீறும் தொழிலாளிகளுக்கு’ சம்பளப் பிடித்தம், கட்டாயவிடுப்பு, பணி நீக்கம் என நிர்வாகத்தின் விருப்பத்திற்கு ஏற்ற தண்டனைகளை வழங்க முடியும்.

இதையெல்லாம் எதிர்த்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் எல்லாம் செய்ய முடியாது. வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்றால், தொழிலாளர்கள் 60 நாட்களுக்கு முன்பே எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அறிவிப்பு கொடுத்த 14 நாட்களுக்குள் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது. அறிவிப்பில் குறிப்பிட்ட தேதிக்குப் பிறகும் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது. சமரச நடவடிக்கை நடைபெறும் காலத்திலும், தொழிற் தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதும், தீர்ப்பு வந்த பிறகு 60 நாட்களுக்குள்ளும் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது. சுருக்கமாகச் சொன்னால் தொழிலாளர்கள் இனி வேலைநிறுத்தமே செய்யக்கூடாது. முன்பு பால், மருந்து உற்பத்தி உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகளுக்கு மட்டுமே இருந்த இந்தக் கட்டுப்பாடு தற்போது எல்லாத் தொழிற்துறைகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. இனி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் அது சட்டவிரோதமாகக் கருதப்படும்! சட்ட ஒழுங்கை நிலைநாட்ட போலீசார் களமிறக்கப்படுவார்கள்!!

தொழிலாளர்களது சங்கம் அமைக்கும் உரிமையும் தற்போது பறிக்கப்பட்டுள்ளது. ஏழு தொழிலாளர்கள் சேர்ந்தால் சங்கம் அமைக்கலாம் என்றிருந்த உரிமை, தற்போது குறைந்தபட்சம் 100 தொழிலாளர்கள் அல்லது மொத்த தொழிலாளர்களில் 10 சதவிதம் பேர் இணைந்தால்தான் சங்கம் அமைக்க முடியும் என்று மாற்றப்பட்டுள்ளது.

சங்கம் அமைக்க விண்ணப்பிக்கும்போது தொழிலாளர் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் சங்க உறுப்பினர்களின் பட்டியலை நிர்வாகத்துடன் பகிரவும் இச்சட்டத்தொகுப்பில் வழி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சங்கம் பதிவு செய்யப்படுவதற்கு முன்னதாகவே சங்க உறுப்பினர்களான தொழிலாளர்களை முதலாளியிடம் அரசே காட்டிக் கொடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது! இதன்மூலம் புதிதாக எந்தவொரு தொழிற்சங்கமும் உருவாகிவிடாமல் தடுப்பதை இச்சட்டத் தொகுப்பு உறுதிசெய்து முதலாளிகளைக் குளிர்வித்துள்ளது!!

இருக்கின்ற தொழிற்சங்கங்களையும் கூட அழிப்பதற்கு புதிய சட்டத்தொகுப்பில் வழி செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு தொழிற்சங்கமும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் அதன் அங்கீகாரம் இரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் செய்வதே சட்டவிரோதம் என்றாகிவிட்ட பிறகு, அதில் ஈடுபடும் தொழிற்சங்கங்களின் அங்கீகாரம் கேள்விக்கிடமின்றி இரத்து செய்யப்படும். சுருங்கச் சொன்னால், இச்சட்ட தொகுப்பின் மூலம் எதிர்காலத்தில் தொழிற்சங்கங்களே இல்லாத நிலையை உருவாக்கிட அரசு விரும்புகிறது.

முதலாளிகள் நினைத்தால் தொழிற்சாலையை ஒரேநாளில் இரவோடு இரவாக மூடிவிட்டு ஓடிப்போகும் வசதியையும் இந்தச் சட்டத்தொகுப்பு வழங்கியிருக்கிறது. ‘100 தொழிலாளிகளைக் கொண்டு இயங்கினால் கூட ஆலையை மூட அரசின் அனுமதி பெற வேண்டும்’ என்றிருந்ததை மாற்றி,  ‘300 தொழிலாளர்கள் வரை பணிபுரியும் தொழிற்சாலைகள் அரசின் அனுமதியின்றி தங்களது ஆலையை எப்போது வேண்டுமானாலும் மூடலாம்’ என இத்தொகுப்பு கூறியுள்ளது.

நிர்வாகத்தின் சுரண்டலுக்கு எதிராகத் தொழிலாளர்கள், தொழிலாளர் ஆணையத்தில் முறையிடவும், தொழிலாளர் ஆணையர் இரு தரப்பினரையும் அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தவும், அதில் தீர்வு எட்டப்படாத போது தொழிலாளர் நீதிமன்றங்களுக்கு அந்த வழக்கை அனுப்பி வைக்கவும் முன்பிருந்த சட்டம் வழிசெய்தது. ஆனால், இனி சமரசப் பேச்சுவார்த்தை, முத்தரப்புப் பேச்சுவார்த்தை என்பதெல்லாம் கிடையாது. தொழிலாளர் ஆணையத்தில் முன்புபோலத் தொழிலாளர்கள் முறையிட முடியாது. தொழிலாளர் நீதிமன்றங்கள் அனைத்தும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக தீர்ப்பாயங்களில் தொழிலாளர்கள் முறையிட்டுக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர் நீதிமன்றங்களில் தொழிலாளியின் உரிமைக்காக வழக்கறிஞர்களோ, தொழிற்சங்க முன்னணியாளர்களோ வாதிட முடியும், இந்த வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள். ஆனால், தீர்ப்பாயங்களில் இதுபோன்று வழக்காடுவதெல்லாம் சாத்தியமில்லை. சுருங்கச் சொன்னால், தீர்ப்பாயங்கள் என்பது கட்டப்பஞ்சாயத்து அமைப்புகள்! அவற்றில் தொழிலாளர்களுக்கு ஒருபோதும் நியாயம் கிடைக்காது!!

000

மேற்கூறியவை எல்லாம் இச்சட்டத் திருத்தத்தின் மூலமாகத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்துக்களில் சிறுதுளியே! இவைதவிர, முதலாளிகளின் தவறுகளுக்குக் கிரிமினல் வழக்குப் பதிந்து தண்டனை வழங்க வழிசெய்த 20,000-க்கும் அதிகமான சரத்துகள் நீக்கப்பட்டுவிட்டன. 44 தொழிலாளர் நலச் சட்டங்களில் 28 சட்டங்கள் மட்டுமே இந்த நான்கு தொகுப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன; மீதமுள்ள 15 சட்டங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன.

இவை அனைத்தையும் வளர்ச்சி என்ற பெயரில் பாசிச மோடி அரசு நியாயப்படுத்துகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்தால்தான் அந்நிய முதலீடு வந்து குவியும் என்கிறார்கள். ‘தொழில் செய்வதை எளிதாக்குதல்’ (Ease of Doing Business) என்ற பெயரில் தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கும் வேலையை முன்னின்று நடத்துகிறார்கள்.

எனவே, இச்சட்டத்திருத்தங்களால் உண்டாகும் பேரிழப்பை தொழிலாளி வர்க்கம் உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தியதைப் போன்றதொரு, வீரஞ்செறிந்த போராட்டத்தைத் தொழிலாளி வர்க்கமும் நடத்த வேண்டிய அவசர, அவசியத் தேவை நம்முன் உள்ளது. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடம் போராடி, உதிரம் சிந்தி நம் முன்னோர்கள் பெற்றுத் தந்த உரிமையை, மோடி அரசும் கார்ப்பரேட்டுகளும் இன்று முற்றாகப் பறித்துவிட்டனர். அரைகுறை உரிமைகளையும் பறித்து, அப்பட்டமான சுரண்டலை அரங்கேற்றி, நம்மை நவீன கொத்தடிமைகளாக்கிவிட்டனர். எனவே, இனியும் நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை! ஆனால், போராடிப் பெறுவதற்கோ ஒரு பொன்னுலகம் உண்டு!! இந்தியத் தொழிலாளி வர்க்கம் தனது அச்சத்தை உதறியெறிந்து, ஒரு மனிதனாக எழுந்து நிற்க வேண்டிய தருணமிது!!

  • அழகு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன